×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வளைகுடா நாடுகளில் வேலைக்காக குடியேறியுள்ள தொழிலாளர்களுக்கு உதவி செய்ய இந்தியா அரசு மையம் ஒன்றை நிறுவியது

Tuesday, 12 September 2017 13:44 GMT

An expatriate worker looks out of his accommodation in Riyadh, Saudi Arabia August 1, 2017. Picture taken August 1, 2017. REUTERS/Faisal Al Nasser

Image Caption and Rights Information

சென்னை, செப். 12 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வளைகுடா மாநிலங்களில் வேலைக்காக வந்துள்ள இந்தியர்களுக்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆதார மையம் போலியான வேலைகளைச் சொல்லி தொழிலாளர்கள் கடத்தி வரப்படுவது, கடுமையாகச் சுரண்டப்படுவது ஆகிய தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்க உதவும் என செவ்வாயன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவில் துவங்கவிருக்கு இந்திய தொழிலாளர்களுக்கான ஆதார மையம் 24 மணிநேர உதவி சேவை, ஆலோசகர்கள் குழு ஆகியவற்றைக் கொண்டதாக, இந்தப் பகுதியில் உள்ள பல்லாயிரக் கணக்கான இந்தியத் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். இவர்கள் சுரண்டலுக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கவும் கூடும்.

“எண்ணற்ற போலியான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாக வேலைக்காக இங்கு வரும் தொழிலாளர்கள் முறையான ஆவணம் ஏதுமில்லாமலும், குறைந்த சம்பளத்திற்காக வேலை செய்யவும், அல்லது அவர்கள் இங்கு வந்திறங்கிய பிறகு வேலை ஏதுமில்லாமலும் இருக்க வேண்டிய நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” என அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் கூறினார்.

“சிக்கலில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கான உதவி ஒரே ஒரு தொலைபேசி அழைப்பிற்கான தூரத்தில்தான் இருக்கிறது.”

பஹ்ரைன், குவைத், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் சுமார் 60 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக குடியேறியுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பல ஆண்டுகளாகவே, இந்திய அரசும், அரசு முறை சாராது செயல்பட்டு வரும் குழுக்களும் இவ்வாறு வேலைக்காக குடியேறியுள்ள தொழிலாளர்களிடமிருந்து தொடர்ந்து புகார்களை பெற்று வருகின்றன. ஊதியம் கொடுக்கப்படாத நிலையிலிருந்து துவங்கி சித்திரவதை, கொடுமைப்படுத்தல் வரையில் இந்தப் புகார்கள் அமைந்துள்ளன.

இந்தப் புகார்களை பதிவு செய்வதற்காக பன்மொழி இலவச அழைப்பு எண் (800 இந்தியா) ஷார்ஜா மையத்தில் வாரத்தின் ஏழுநாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படும். வேலைக்கான நியமனக் கடிதங்கள் உண்மையானவைதானா? என்பதை சோதிக்கும் வசதியும் இந்த மையத்தில் உள்ளது.

வேலைவாங்கித் தரும் முகவர்களால் ஏமாற்றப்படுவது மட்டுமின்றி, தொழிலாளர்கள் பலரும் குறைந்த ஊதியம் வழங்கும் வேலைகளில் சிக்கித் தவிப்பதோடு, சட்டரீதியான உதவி அல்லது நிதியுதவி ஆகியவற்றை எவ்வாறு கோரிப்பெறுவது என்பது பற்றித் தெரியாதிருக்கின்றனர் எனவும் குமார் கூறினார்.

பல நேரங்களில் கலாச்சாரம், மொழி, உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் நிலவும் வேறுபாடுகள் ஏழ்மையான இந்தியக் குடும்பங்களிலிருந்து இங்கு வேலைக்காக குடியேறும் தொழிலாளர்களுக்கு  பெரும் தடையாக மாறுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“தாங்கள் இருக்கும் இடத்தில் சமாளிக்க வேண்டிய விதம் குறித்தும் தங்களின் கவலைகளைப் பற்றிப் பேசுவதற்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய இந்த மையத்தில் ஆலோசகர்கள் இருப்பார்கள்” என  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு தொலைபேசி மூலம் அளித்த ஒரு பேட்டியில் குமார் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலைக்காக பாதுகாப்பான முறையில் குடியேறுவது குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது என்ற இந்திய அரசின் திட்டத்தின் விரிவாக்கமாக உள்ள இந்த மையம், தங்கள் உரிமைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி புகட்ட ஏற்பாடு செய்யப்படும் முகாம்களுக்கும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும்.

“பெரும்பாலும் நாங்கள் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களைத் தான் கையாண்டு வருகிறோம். இவர்களில் பலரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். தங்களின் வேலைக்கான ஒப்பந்தத்தைச் சுற்றியிருக்கும் விதிமுறைகள் பற்றி ஏதுமறியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர்” என இந்த மையத்தை நடத்துவதற்காக இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வரும் அலன்கிட் நிறுவனத்தைச் சேர்ந்த அன்கிட் அகர்வால் தெரிவித்தார்.

“இந்த முகாம்களில் அடிப்படையான தகவல்களை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் ஏதாவது பிரச்சனையை எதிர்கொள்ளும்போது எவ்வாறு எங்களுடன் தொடர்பு கொள்வது என்பது பற்றியும் அவர்களிடம் சொல்கிறோம்.”

இந்திய அரசு 2010ஆம் ஆண்டில் துபாயில் தனது முதல் ஆதார மையத்தைத் திறந்தது. 2016ஆம் ஆண்டில் துபாய் மையம் தொழிலாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 25,000 தொலைபேசி அழைப்புகளையும், 2,000க்கும் மேற்பட்ட கடிதங்கள், தொலைநகல், தொலைபேசி செய்திகள் ஆகியவற்றைப் பெற்றது. தனக்குச் சேரவேண்டிய தொகை வழங்கப்படவில்லை என ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அனுப்பிய செய்தியும் இவற்றில்  அடங்கும்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->