×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

“செங்கற்கள் மட்டுமே கணக்கில் வரும்”: குடும்பங்களுக்கு உதவி செய்ய செங்கற்சூளைகளில் கடுமையாக உழைக்கும் குழந்தைகள்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Tuesday, 19 September 2017 23:01 GMT

A girl carries bricks at a brick kiln in Zaheerabad, about 120 km (75 miles) west of the southern Indian city of Hyderabad March 31, 2009. REUTERS/Krishnendu Halder

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, செப். 20 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தங்களின் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்குத் தேவையான செங்கற்களை தயாரிக்க வட இந்தியாவில் உள்ள செங்கற்சூளைகளில் தங்களின் இளம் குழந்தைகளை கடுமையாக உழைக்கச் செய்ய வேண்டிய நிலைக்கு குடும்பங்கள் தள்ளப்படுகின்றன என புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கண்டறிந்துள்ளது.

செங்கற்சூளைகளில் வாழ்ந்து வரும் 5 முதல் 14 வயதான குழந்தைகளில் 80 சதவீதம் பேர் நாளொன்றுக்கு ஏழு முதல் 9 மணி நேரம் வரை வேலை செய்து தங்கள் பெற்றோர்கள் 1,000 செங்கற்களை உருவாக்க உதவுகின்றனர் என ஆன்ட்டி ஸ்லேவரி இண்டர்நேஷனல் மற்றும் வாலண்டியர்ஸ் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் ஆகிய உரிமைகளுக்கான குழுக்கள் கூட்டாக உருவாக்கிய அறிக்கை கண்டறிந்துள்ளது.

“இந்த முறையில் தயாரிக்கப்படும் செங்கற்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறதே தவிர  அதில் பாடுபடும் மனிதர்கள் அல்ல” என வாலண்டியர்ஸ் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் அமைப்பின் கங்கா சேகர் தெரிவித்தார்.

“குழந்தைகளை இந்த வேலையில் ஈடுபடுத்தவில்லையெனில், குறைந்தபட்ச ஊதியத்தை ஈட்டுவதற்குத் தேவையான உற்பத்தியை உங்களால் முடிக்க முடியாது... குழந்தைத் தொழிலாளர் முறை இவ்வாறுதான் ஊக்குவிக்கப்படுகிறது”

இந்தியாவில் குறைந்தபட்சமாக 1,00,000 செயல்படும் செங்கற்சூளைகள் சுமார் 2 கோடியே 30 லட்சம் பேரை வேலைக்கு வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்று குறிப்பிடும் இந்த அறிக்கை இந்த செங்கற்சூளைகளில் வாழ்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்றும் அது மேலும் குறிப்பிடுகிறது.

ஒன்பது வயது யசோதாவிற்கு படிப்பது பிடிக்கும்; தனது நேரத்தைப் பள்ளியில் கழிக்கவே அவள் விரும்புகிறாள்.

அதற்குப் பதிலாக, அவள் நள்ளிரவில் எழுந்து தனது தந்தையுடன் வேலைக்குப் போகிறாள். இந்த அறிக்கையுடன் வெளியிடப்பட்ட “கண்ணுக்குத் தென்படாத சங்கிலிகள்” என்ற ஆவணப்படத்தில் ஆய்வாளர்களிடம் அவள் இவ்வாறுதான் தெரிவித்திருந்தாள்.

“எப்படியிருந்தாலும் குழந்தைகள் வேலை செய்யத்தான் வேண்டும்” என்று 14 வயது, 9 வயது, 7 வயது மகன்கள் மூவரின் தாயான குஸுமா அந்த ஆவணப்படத்தில் கூறுகிறார். “அவர்கள் வேலை செய்யாவிட்டால் என்ன சாப்பிடுவார்கள்?”

நாட்டின் வளர்ந்து வரும் கட்டுமானத் தொழிலுக்கு சேவை செய்து வரும் ஒழுங்குபடுத்தப்படாத செங்கற்சூளைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் பெருமளவிலான தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர் என இது குறித்த செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செங்கற்சூளைகள் பருவ காலங்களில் இடம்பெயரும் தொழிலாளர்களை  வேலைக்கு எடுப்பது; ஊதியம் வழங்கும் முறைகள் ஆகியவற்றின் மூலம், இந்தியாவில் மிகவும் பரவலாக இருந்து வரும் வடிவமான ஒருவகையான கொத்தடிமை சுழலுக்குள் இழுத்து விடுகின்றன என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவின் வடபகுதி மாநிலமான பஞ்சாபில் உள்ள இத்தகைய தொழிலாளர்களின் மீது கவனம் செலுத்தியுள்ள இந்த அறிக்கை, இவர்களில் 96 சதவீதம் பேர் கடன் வாங்கியுள்ளனர் என்றும், எட்டு முதல் பத்து மாத காலம் வரையிலான பருவ காலம் முழுவதிலும் இவர்கள் அனைவரின் ஊதியமும் தரப்படாமல் பிடித்தம் செய்யப்படுகிறது என்றும் கோடைக்காலம் உட்பட நாளொன்றுக்கு 14 மணிநேரம் இவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதையும் கண்டறிந்துள்ளது.

பருவ காலத்தின் துவக்கத்தில் தொழிலாளர்கள் முன்பணம் பெற்றுக் கொள்கின்றனர். அதன் பிறகு இந்தப் பருவ காலம் முழுவதிலும் ஒவ்வொரு வாரத்திலுமோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ உணவு மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்காக ஒரு சிறிய தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பருவ கால முடிவில் அவர்கள் தயார் செய்த செங்கற்களின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் பெற்றுக் கொண்ட முன்பணம், அவ்வப்போது வாழ்க்கைச் செலவுகளுக்காக பெற்றுக் கொண்ட பணம் ஆகியவை அதில் பிடித்தம் செய்யப்படும். வழக்கமாக ஒரு குடும்பத்தையே குறிக்கும்படியான “வேலை செய்யும் ஒரு பிரிவு” தயாரித்த ஒவ்வொரு 1,000 செங்கற்களுக்கும் என்ற கணக்கில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

பருவ காலத்தின் துவக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊதியத்தை விட குறைவான ஊதியமே தங்களுக்கு வழங்கப்படுகிறது என 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்ததாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“இந்த பருவ காலத்திற்கு முன்பு அவர்கள் (தொழிலாளர்கள்) முழுமையாக ஊதியத்தை ஈட்டவில்லை. எனவே மீண்டும் ஒரு கடனை வாங்க தள்ளப்பட்ட நிலைக்கு அவர்கள் வருகிறார்கள்” என ஆன்ட்டி ஸ்லேவரி இண்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த சாரா மவுண்ட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். தங்களின் குறைந்தபட்சத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தங்களின் குழந்தைகளையும் வேலை செய்ய வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தொழிலாளர்களுக்கு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி குறைந்தபட்ச ஊதியம் தொடர்ந்து முறையாகவும், ஒவ்வொரு மாத முடிவிலும் கொடுக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இந்த அறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->