×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வளைகுடா நாடுகளில் இந்தியா குழந்தைகளை திருமணத்திற்காக கடத்தும் ஆட்கடத்தல் கும்பலை காவல்துறை கண்டறிந்தது

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Thursday, 21 September 2017 15:33 GMT

Schoolgirls walk past a police barricade during a protest in the southern Indian city of Hyderabad January 28, 2013. REUTERS/Krishnendu Halder

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

 

மும்பை, செப். 21 – (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – ஆட்கடத்தலுக்கு ஆளான பன்னிரெண்டு பதின்பருவ சிறுமிகளை ஹைதராபாத் நகரக் காவல்துறை மீட்டதோடு, வளைகுடா நாடுகளில் பணக்கார ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து தருவதற்காக விற்கும் ஒரு பெரும் வலைப்பின்னலைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்துள்ளது.

வியாழக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் ஓமானியர்கள், கட்டார் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஓட்டல் அதிபர்கள், இடைத்தரகர்கள், இஸ்லாமிய முறையில் திருமணங்களை நடத்தித் தரும் காஜிகள்  ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வர்த்தகத்தை தடுத்து நிறுத்த இந்த நடவடிக்கை உதவக் கூடும் என இது குறித்த பிரச்சாரகர் ஒருவர் தெரிவித்தார்.

“அப்பாவியான முஸ்லீம் சிறுமிகள் திருமண வலையில் இழுத்து வரப்பட்டு அரபு நாடுகளில் உள்ள பணக்கார ஷேக்குகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்” என ஹைதராபாத் காவல் துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“புதிய நாட்டிற்கு அவர்கள் சென்று சேர்ந்ததும், மற்றவர்களாலும் அவர்கள் சுரண்டலுக்கு ஆட்படுகின்றனர்.”

இந்த நடவடிக்கையில் மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் திருமணம் செய்து கொடுப்பதற்குத் தயாராக இருந்தவர்கள் ஆவர் என காவல்துறை தெரிவித்தது.

ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய திருமணங்கள் எண்ணற்ற வகையில் நடத்தப்படுகின்றன என்றும் பெரும்பாலான தருணங்களில் இதில் சம்பந்தப்பட்ட சிறுமிகள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் அல்லது வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர் என இது குறித்த பிரச்சாரகர்கள் கூறினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு, ஆட்கடத்தல் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஹைதராபாத் நகருக்கு மேற்கே 700 கிலோ மீட்டர் தூரத்தில் ( 435 மைல்கள்) உள்ள மும்பை நகரின் தலைமை காஜியான ஃபரீத் அஹமத் கானும் ஒருவர் ஆவார்.

இத்தகைய திருமணங்கள் குறித்து பேரம் பேசுவது மட்டுமின்றி, போலியான திருமண சான்றிதழ்களை வழங்குவது ஆகியவற்றிலும் கான் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு உதவியாக இடைத்தரகர்கள், முகவர்கள், இவர்களில் பலரும் பெண்கள், போலி அடையாள அட்டைகளை ஏற்பாடு செய்வது, பயண ஏற்பாடுகளை செய்வது போன்றவைகளைச் செய்து வந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்தது.

தொழில்நுட்ப மையமாக கருதப்படும் ஹைதராபாத் நகரில் கடந்த பல பத்தாண்டுகளாகவே செல்வச் செழிப்புள்ள - பெரும்பாலான நேரங்களில் இவர்கள் வயதானவர்களாகவே இருந்து வந்துள்ளனர் - அராபியர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பது பரவலாக இருந்து வந்துள்ளது. இத்தகைய திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு ரொக்கமாக பணம் கிடைக்கும்.

ஹைதராபாத் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தை திருமணங்கள் விஷயத்தில் காவல்துறை தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது.  எனினும் இத்தகைய திருமணங்கள் பலவும் ரகசியமாக நடைபெறுகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

16வயது சிறுமியை  65 வயதுடைய ஓமன் நாட்டைச் சேர்ந்தவருக்கு ரூ. 5,00,000 வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. மஸ்கட் நகரில் இருந்து அந்தப் பெண் உதவி கோரி தன் தாயைத் தொடர்பு கொண்டு கதறி அழுததைத் தொடர்ந்து ஹைதராபாத் போலீஸ் கடந்த மாதம் விசாரணையை மேற்கொண்டது.

“இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தங்கள் பெண்களை இவ்வாறு திருமணம் செய்து கொடுப்பதற்கு குடும்பத்தினருக்கு அச்சம் ஏற்படுத்தும். ஏனென்றால் பணத்தை காட்டியே இவர்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்” என ஷாஹீன்ஸ் வுமன்ஸ் ரிசோர்ஸ் அண்ட் வெல்ஃபேர் அசோசியேஷனின் நிறுவனரான ஜமீலா நிஷாத் தெரிவித்தார்.

“இது மிகப்பெரியதொரு கண்டுபிடிப்பு. இந்தப் பழக்கத்தையும் அது தடுக்கும்.”

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->