×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைகளைக் கடத்திச் செல்பவர்களை நிறுத்த சிவப்புக் கொடியை அசைக்கும் இந்திய ரயில்வே

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Tuesday, 26 September 2017 14:36 GMT

Passengers make use of a signal light pole to climb atop an overcrowded train at a railway station in Ajmer, India, October 23, 2016. REUTERS/Himanshu Sharma

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, செப். 26 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சேலம் ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்ஃபாரத்தில் பயணிகள், சுமைகூலிகள், பொருட்களை கூவி விற்பவர்கள் ஆகியோரின் சந்தடிக்கிடையே வண்ணமயமான சாவடி (பூத்) ஒன்று தனியாக நிற்கிறது.

ரயில்வே சில்ட்ரன் என்ற  அறக்கட்டளையினால் இந்தியாவின் சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டு சாவடிகளில் ஒன்றுதான் அந்த குழந்தைகளின் உதவிக்கான அந்தச் சாவடி. காணாமல் போன அல்லது வீட்டிலிருந்து ஓடிவந்து விட்ட, கடத்திச் செல்லப்படும் நிராதரவான பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் பயணங்களை பதிவு செய்வதற்கான ஊழியர்கள் அங்கே அமர்ந்திருக்கின்றனர்.

இவ்வாறு குழந்தைகளைக் கடத்திச் செல்பவர்களின் விருப்பமான பயண வழியாக இருக்கும் ரயில் பயணத்திற்கான வலைப்பின்னலில் அபாயத்திற்கு ஆளாக நேரிடும் குழந்தைகள் யாராவது தென்படுகின்றனரா என பளிச்சென வண்ணமடிக்கப்பட்டிருக்கும் அந்தச் சாவடியிலிருந்து சேலம் சந்திப்பு வழியாகச் செல்லும் கிட்டத்தட்ட 200 ரயில்களை அதிகாரிகள் கண்காணித்த வண்ணம் உள்ளனர்.

நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி குழந்தைகளை நகரங்களுக்கு கவர்ந்து வந்து பின்பு அவர்களை வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக, சிறு உற்பத்தி நிலையங்களில் வேலை செய்பவர்களாக, விவசாய வேலைகளில் வேலை செய்பவர்களாக அல்லது பாலியல் தொழில் மையங்களில் பாலியல் அடிமைத்தனத்திற்கு ஆட்படுபவர்களாக ஆக்கிவிடும் குழந்தைக் கடத்தல்காரர்களின் வந்துபோகும் வழியாக இந்தியாவின் ரயில் நிலையங்கள் மாறியுள்ளன என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“சேலம் சந்திப்பிலிருந்து 45 நிமிடங்கள் நீங்கள் பயணம் செய்தாலே குழந்தைத் தொழிலாளர்களால் செழுத்து வளர்ந்து வரும் தொழில் மையங்களைக் காணலாம். அல்லது மாநிலத்தில் எல்லையைக் கடந்து முற்றிலும் புதியதொரு மொழி பேசும், கலாச்சாரத்தைக் கொண்ட பகுதிக்குச் சென்று விடலாம்” என ரயில்வே சில்ட்ரன் அமைப்பைச் சேர்ந்த வளவன் வசந்த சித்தார்த்தா கூறினார்.

“இவ்வாறு கடத்தப்படுகின்ற, நிராதரவான சிறுவர்களின் பயணத்தை ரயில் நிலையங்களிலேயே நாம் நிறுத்தவில்லையெனில், அவர்கள் சென்றடைய வேண்டியிருந்த இடத்தை அடைந்ததும் அந்தக் குழந்தைகளை நம்மால் காணவே முடியாது.”

இந்திய ரயில்வே துறையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ள இந்த இரண்டு 24 மணிநேர சாவடிகளும் இத்தகைய அபாயத்திற்கு ஆட்பட்டுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து அவர்களுக்கு தங்குமிடம் வழங்கி, அவர்களின் குடும்பத்துடன் மீண்டும் சென்று சேர்வதற்கான வேலைகளில் ஈடுபடுகின்றன.

2016ஆம் ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியாவில் இவ்வாறு கடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி அதற்கு முந்தைய ஆண்டிலிருந்து 27 சதவீதம் அதிகமாகும்.

இந்தியா முழுவதிலும் தனியாகப் பயணம் செய்கின்ற, கடத்தப்படுகின்ற குழந்தைகள் பெரும் எண்ணிக்கையில் ரயிலில் பயணிக்கின்றனர். இவர்களில் பலரும் ரயில் நிலைய ப்ளாட்ஃபார்ம்களை தங்குமிடங்களாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்; அல்லது பொருட்களை விற்பவர்களாக வேலை செய்கின்றனர்; அல்லது குப்பை பொறுக்குபவர்களாக மாறுகின்றனர் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது; அல்லது ரயில்களிலும் ப்ளாட்ஃபார்ம்களிலும் கைவிடப்பட்ட சிறுவர்கள் என எங்களது அதிகாரிகள்  இவர்களை எல்லா நேரங்களிலும்  பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்” என சேலம் ரயில் நிலையத்தின் மூத்த ரயில்வே அதிகாரியான  ஏ.எஸ். விஜுவின்  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“2014 லிருந்து 2017 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடத்தலுக்கு ஆளான 1,502 குழந்தைகள் உள்ளிட்டு 28,057 குழந்தைகளை மீட்டுள்ளது என திங்கட்கிழமையன்று வெளியான ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. [http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=0]

சராசரியாக ஒவ்வொரு நாளும் ரயில்களிலிருந்தும் ரயில்வே வளாகங்களிலிருந்தும் குறைந்தது 25 குழந்தைகள் மீட்கப்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மீட்கப்பட்டவர்கள்

இந்த உதவி மையம் கடந்த மார்ச் மாதம் சேலம் ரயில்வே நிலையத்தில் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 431 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் கால்பகுதி வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

“நாங்கள் மீட்ட குழந்தைகளில் பலரும் நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணைகளில், ஈரோட்டில் உள்ள நூற்பாலைகளில், அல்லது நெடுஞ்சாலைகளினூடே பரவியுள்ள ட்ரக் பணிமனைகளில் வேலை செய்வதற்காகச் சென்றுக் கொண்டிருந்தவர்கள்” என சித்தார்த்தா குறிப்பிட்டார்.

“நாங்கள் இந்தச் சாவடியைத் துவங்கியதிலிருந்து, கண்காணிப்பு மந்தமாக இருக்கும் நள்ளிரவிற்குப் பிறகு இங்கு வந்து சேரும் ரயில் வண்டிகளில் பலரும் பயணம் செய்யத் துவங்கியுள்ளதையும் நாங்கள் கவனித்தோம்.”   

இது குறித்த பிரச்சாரகர்களின் மதிப்பீட்டின்படி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் நிராதரவான ஒரு குழந்தை ரயில்வே நிலையத்தை வந்தடைகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பெரிதும் நிராதரவானவர்களாக உள்ளனர். அவர்கள் வந்திறங்கிய சில மணிநேரங்களுக்குள்ளேயே கடத்தல் காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டுவிடுகின்றனர்.

சேலத்தில் உள்ள சாவடியும், இதே போன்று பீகாரில் தர்பங்கா ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் சாவடியும் ரயில்வே நிலையத்திற்கு அருகே செயல்பட்டு வரும் காப்பகங்களோடு இணைக்கப்பட்டுள்ளன.

“இவர்களில் ஒரு சிலர் குளிப்பதற்காக அல்லது சுத்தமான இடத்தில் வந்து அமர்வதற்காகவே வருகின்றனர். எங்களிடம் ஆலோசகர்கள் தயாராக உள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்வது என்பது இறுதியில் நமது கருத்தாக உள்ளது” என ரயில்வே சில்ட்ரன் அமைப்பின் சித்தார்த்தா கூறினார். “பல நேரங்களில் இவர்களை அவர்களது குடும்பங்களோடு இணைத்து வைத்திருக்கிறோம்.”

கடந்த காலங்களில் மத்திய அரசு இந்தியாவின் பரந்த ரயில்வே வலைப்பின்னலின் ஊடாக பிரச்சாரங்களை நடத்திவந்த அதே நேரத்தில், அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட “ஆபரேஷன் ஸ்மைல்” என்ற காவல்துறையின் நடவடிக்கை காப்பகங்கள், ரயில், பஸ் நிலையங்கள், தெருக்கள் ஆகியவற்றில் காணாமல் போன குழந்தைகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ரயில் வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் இந்தியாவின் 82 ரயில்வே நிலையங்களில் இந்திய ரயில்வே இந்த முன்முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.

டிக்கெட் பரிசோதகர்கள், உணவு பரிமாறும் ஊழியர்கள், ரயில்களில் பயணம் செய்யும் காவல்துறையினர் ஆகியோருக்கு ஆட்கடத்தல் குறித்த அறிகுறிகளைக் காணவும்,  பெரும் குழுக்களாகச் செல்லும் குழந்தைகள், அவர்களோடு பயணம் செய்யும் பெரியவர்களின் நடத்தைகள், சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் ஆகியவை குறித்தும் விழிப்புடன்  இருக்கவும் பயிற்சி தரப்பட்டுள்ளது.

“இந்தச் செயல்முறையை நாங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து கொண்டுதான் வருகிறோம். ஏனெனில் ஆட்கடத்தல்காரர்கள் எங்களிடமிருந்து இரண்டு அடி முன்னால் இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் உணர்ந்தேயிருக்கிறோம்.” என விஜுவின் குறிப்பிட்டார்.

“இத்தகைய நடவடிக்கைகளை கண்காணிக்க பெரிய ரயில் நிலையங்கள் துவங்கியிருக்கும் நிலையில் அவர்கள் இரண்டு நிறுத்தங்களுக்கு முன்பாகவே, சிறிய ரயில் நிலையங்களில் இறங்கிக் கொள்கின்றனர். இத்தகைய ஏற்பாடுகள் மூலம் மெதுவாக ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் இந்த நடவடிக்கையில் இணைக்கமுடியும் என்றும் நம்புகிறோம்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

  

       

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->