×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுவதற்கான இணைய தள தொழிற்நுட்பத்தை நோக்கி இந்தியா திரும்புகிறது

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 26 September 2017 15:41 GMT

- நீதா பல்லா

புது டெல்லி, செப்.26 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பல லட்சக்கணக்கான சிறுவயதினர் மீதான சுரண்டலை தடுப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக குழந்தைத் தொழிலாளர்கள் குறித்துப் பதிவு செய்யவும், அவர்களை மீட்டெடுக்கவும், மறுவாழ்வளிக்கவும் இந்திய அரசு செவ்வாய்க்கிழமையன்று ஓர் இணைய தளத்தை துவக்கியுள்ளது.

உலகம் முழுவதிலும் ஐந்து வயதிற்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 16 கோடியே 80 லட்சம் பேர் எனில் இதில் 40 லட்சம் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளதாக 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. எனினும் மேலும் பல லட்சக்கணக்கானவர்கள் வறுமையின் விளைவாக அத்தகைய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

ப்ளாட்ஃபார்ம் ஃபார் எஃபெக்டிவ் என்ஃபோர்ஸ்மெண்ட் ஃபார் நோ சைல்ட் லேபர் – சுருக்கமாக பென்சில் – என்றழைக்கப்படும் இந்த இணையதளம் குழந்தைத் தொழிலாளர் தொடர்பான வழக்குகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கென அதிகாரிகள், அறக்கட்டளைகள், மாவட்ட, மாநில, மத்திய அளவிலுள்ள காவல்துறையினரை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

“அனைத்து மட்டத்திலும் உள்ள இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் இந்த பென்சில் இணைய தளம் ஒன்று திரட்டுகிறது. இதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் குறித்த எந்தவொரு வழக்கையும் எவரொருவரும் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் இது குறித்த விசாரணையை உடனடியாக நடத்திவிட முடியும்” என இந்த இணைய தளத் துவக்க நிகழ்ச்சியின்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

“எனினும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்ட பென்சில் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. இதைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு மட்டத்திலும் இது குறித்த விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதுதான் இப்போது நமக்குத் தேவைப்படுவதாகும்.”

2014ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பிரதமர் நரேந்திர மோடியின் அரசு 2025ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகத்தில் குழந்தைகள் மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதன் மொத்த மக்கள் தொகையான 120 கோடி பேரில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 18 வயதிற்கும் குறைந்தவர்கள் ஆவர்.

குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான முறை, புகார்கள் பகுதி, அதிகாரிகள், காவல்துறையினர், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கான செயல்பாட்டு தர முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இணைய தளம் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு தடைவிதிக்கும் சட்டங்களின் பலவீனமான அமல்படுத்தலுக்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்ட குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை 48 மணி நேரத்திற்குள் விசாரிக்கும் வகையில் மாவட்டங்கள் ஒரு அதிகாரியை இதற்கென தனியாக பொறுப்பளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் உள்ளூர் காவல்துறையுடன் சேர்ந்து குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது.

மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இதில் பாதிப்புற்றவர்களுக்கு வழங்கப்படும் உதவி, அதாவது பள்ளியில் சேர்த்து விடுவது, அல்லது கைத்தொழில் பயிற்சி அளிப்பது போன்றவற்றையும் இந்த இணைய தளம் கண்காணிக்கும்.

உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான முகமை (யுனிசெஃப்) ஆகியவற்றின் கருத்துப்படி கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கானோரை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. எனினும் உலகத்தின் 38 கோடியே 50 லட்சம் மிகுந்த ஏழையான குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது.

வேலை, நல்ல வாழ்க்கை என்ற உறுதிமொழிகள்  அவர்களிடையே அள்ளி வீசப்பட்ட போதும் பெரும்பாலும் கட்டாய வேலைக்கு ஆளாகும் தொழிலாளர்களாக ஆகிவிடும் இவர்கள் ஆட்கடத்தல்காரர்களுக்கு மிக எளிதாக இரையாகின்றனர்.

இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கால் பகுதிக்கும் மேற்பட்டோர் துணிகளில் எம்ப்ராய்டரி செய்வது, தரைவிரிப்புகளை நெய்வது அல்லது தீக்குச்சி செய்வது போன்ற உற்பத்தித் தொழில்களில் உள்ளனர்.

உணவு விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவற்றிலும் வீட்டுப் பணியாளர்களாகவும் கூட சிறுவர்கள் வேலை செய்கின்றனர். சிறுமிகள் பலரும் பாலியல் ரீதியான அடிமைத்தனத்தில் உழல பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்.
(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla, எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->