×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வளைகுடா நாடுகளிலிருந்து வரும் ஆண்களுக்கு இந்திய குழந்தை மணப்பெண்கள் ‘ மொத்த பேரமாக’ விற்கப்படுகின்றனர்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Tuesday, 10 October 2017 11:38 GMT

A teenager who was married to a 62-year-old Omani in Hyderabad, India, enters the office of a charity, Shaheen, that works with victims of such marriages, Sept 26, 2017. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

ஹைதராபாத், அக். 10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – வயது முப்பதுகளில் இருக்கும் உயரமான, ஒல்லியான ஹாஜி கான் ஹைதரபாத் நகரின் பழைய நகரில் இருக்கும் சந்து பொந்துகளில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் நுழைந்து அங்குள்ள தெருக்களில் வளைகுடா நாடுகளில் இருந்து வந்திருக்கும் மூத்த வயது ஆண்களுக்கான குழந்தை வயது மணப்பெண்களை தேடிக் கண்டுபிடித்து, அவ்வாறு ஏற்பாடு செய்த ஒவ்வொரு சிறுமிக்கும் ரூ. 10,000/- -ஐ பெறுவது கடந்த பல  வருடங்களாகவே வழக்கமாக இருந்தது.

 

கான் இரண்டு விதமான பேரங்களை செய்வதுண்டு. ‘பக்கா’ அல்லது உறுதி எனில் நீண்ட காலத்திற்கான திருமணத்திற்கான பெண்கள். இந்தப் பெண்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்ட கணவர்களுடன் அவர்களின் தாய்நாட்டிற்குச் சென்று விடுவார்கள். மற்றொன்று ‘டைம் பாஸ்’  அல்லது பொழுது போக்கிற்கான திருமணம். இது அந்த நபர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் வரை மட்டுமே நீடிக்கும்.

 

“ஒவ்வொரு அரேபியருக்கும் ஓட்டலில் நாங்கள் 20 அல்லது  30 சிறுமிகளை கொண்டு சென்று நிறுத்துவோம். அவர் அவர்களில் ஒருத்தியைத் தேர்ந்தெடுப்பார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படாத சிறுமிகளுக்கு ரூ. 200/- கொடுத்து திருப்பி அனுப்புவார்கள்” என இப்போது காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பவராக செயல்படும் கான் குறிப்பிட்டார்.

“இந்த நபர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சிறுமிகளுக்காக ஏற்கனவே பயன்படுத்திய பழைய திருமண உடைகள், சோப்புகள், இரவு அணிவதற்கான உடை போன்றவற்றையும் தங்களோடு எடுத்து வருவார்கள். இதில் பெரும்பாலான திருமணங்கள் ‘வெறும் பொழுது போக்கிற்காக’ செய்யப்படுவதே” என கான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

தொழில்நுட்ப நிறுவனங்களின்  மையமாக உள்ள இந்த தென்னிந்திய பெருநகரத்தில் ஓமான், துபாய் போன்ற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பணக்கார ஆண்கள்  அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்திற்கு  ஹைதரபாத் நகரில் உள்ள டீன்ஏஜ் முஸ்லீம் சிறுமிகளை  ‘திருமணம்’ செய்து கொள்ளும் மோசடியைக் காவல்துறை கடந்த மாதம் கண்டுபிடித்தது.

 

திருமணம் நடைபெறும்போதே, இந்த ஆண்கள் பின் தேதியிட்ட விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திடுவார்கள். இந்த சிறுவயது மணப்பெண்களின் புதிய கணவர்கள்  நாட்டை விட்டுச் சென்ற பிறகு இந்த ஆவணங்கள் அவர்களிடம் கொடுக்கப்படும்.

 

இத்தகைய திருமணங்கள் முஸ்லீம்களின் திருமணங்களை அதிகாரபூர்வமாக நடத்தி வைக்கும் காஜிக்களால் நடத்தி வைக்கப்படுகின்றன.  இந்தச் சிறுமிகளின் வயதை திருமணத்திற்கான வயதை எட்டியவர்கள் என இவர்கள் போலியாக திருத்தி விடுவார்கள்.  ஹைதராபாத் நகரில் இத்தகைய திருமணங்களை நடத்தி வைத்த முக்கிய காஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

 

“இந்தச் சிறுமிகளில் பெரும்பாலானோருக்கு தாங்கள் திருமணமான 15 அல்லது 20 நாட்களில் கைவிடப்படுவோம் என்பது தெரியாது. இந்த ஆண்கள் சுற்றுலா பயணிகளுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டு இந்தியாவிற்கு வந்து இத்தகைய ஒப்பந்த முறையிலான திருமணத்தை செய்து விட்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு  தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று விடுகின்றனர்” என இந்தப் பிரச்சனை பற்றி விசாரணை நடத்தி வரும் காவல்துறை துணைஆணையரான வி. சத்யநாராயணா கூறினார்.

 

People who have daughters at home keep their doors and windows shut during namaz time at a nearby mosque (not in the picture) in the Old City of Hyderabad, India, Sept 26, 2017. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

அடிமைப்பணி 

 

ஒரு சில இளம் மணப்பெண்கள் தங்கள் கணவர்களோடு அவர்களது தாய்நாட்டிற்குச் சென்ற தருணங்களில் அவர்கள் வீடுகளில் அடிமைகளாக சேவகம் செய்யவோ அல்லது  பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்கோ ஆளாக்கப்படுகின்றனர்  என காவல்துறை தெரிவிக்கிறது.

 

இடைத்தரகர்கள், காஜிக்கள், மணம் செய்து கொள்ளத் தயாராக இருந்த ஓமன், கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மணமகன்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டு சுமார் 30 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது ஆட்கடத்தல், சிறுவயதினரை பாலியல் ரீதியாக சுரண்டலுக்கு ஆட்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன  என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த அதிரடி சோதனையில், 14 சிறுமிகள், இவர்கள் அனைவருமே 18 வயதிற்குக் குறைந்தவர்கள், இவ்வாறு திருமணம் செய்து கொடுக்கப்படுவதற்கு முன்பாக மீட்கப்பட்டனர். இதில் கைதான இடைத்தரகர்களில் கிட்டத்தட்ட  பாதிப்பேர் பெண்கள். இவர்கள் இத்தகைய குற்றங்களால் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது.

 

“ஹைதராபாத் நகரின் இந்தப் பகுதியில் இத்தகைய ஒப்பந்தத் திருமணங்கள்  கடந்த  பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன.  என்றாலும் இப்போது அது நன்கு ஒழுங்கமைந்த, (பெண்களுக்கான) சர்வதேச வர்த்தகமாக மாறியுள்ளது. இதில் வளைகுடா நாடுகள் உள்ளிட்டு பல்வேறு இந்திய நகரங்களைச் சேர்ந்த முகவர்கள், காஜிக்கள் ஈடுபட்டுள்ளனர்” என சத்யநாராயணா தெரிவித்தார்.

 

இதற்கான பெண்கள் மிக எளிதாகவே கிடைக்கின்றனர் என்பதோடு, இத்தகைய திருமணங்கள் பெரும்பாலும் முஸ்லீம்களின் முக்கிய பண்டிகையான ஈத் பெருநாளுக்குப் பிறகே நடைபெறுகின்றன. கடந்த பல நூற்றாண்டுகளாகவே வளைகுடா நாடுகளிலுள்ள அரேபிய அரசுகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த  ஹைதராபாத் நகருக்கு  சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இக்காலப்பகுதியை ‘பருவ காலம்’ என முகவர்கள் வர்ணிக்கின்றனர்.

 

19ஆம் நூற்றாண்டில் இப்போது சவூதி அரேபியா, ஓமன் என அழைக்கப்படும் பகுதிகளில் இருந்து ஆண்கள் அப்போது தென்னிந்தியாவின் அரச பரம்பரையினரால் ஆளப்படும் பகுதியாக இருந்த ஹைதராபாத் அரசரான நிஜாமினால் போர்வீரர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

 

அவர்களது பரம்பரையினர் இப்போதும் இந்த நகரில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். 1970களிலும் 1980களிலும் நகரிலுள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக வந்த அரேபிய இளைஞர்களுக்கும் ஹைதராபாத் இளம் பெண்களுக்கும்  நடைபெற்ற  ‘மிகச் சிறப்பான திருமணங்கள்’ பற்றி பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நினைவுகூர்கின்றனர்.

 

இத்தகைய ‘அரேபிய திருமணங்களை’ நடத்தி வைப்பதற்காகவே அரசாங்கத்தினால் ஒரு காஜி நியமிக்கப்பட்ட பிறகு  சமீப ஆண்டுகளில் இந்தப் போக்கு ஒரு வியாபாரமாக மாறிவிட்டது.

 

“ ஒரு அரேபியரைத் திருமணம் செய்து கொண்டால் (துபாயின் மிகப் புகழ்பெற்ற அடுக்குமாடிக் கட்டிடமான) புர்ஜ் கலிஃபாவை பார்க்கலாம்; அட்லாண்டிஸ் (ஓட்டலைப் போன்ற) பெரும் மாளிகைகளில் வசிக்கலாம் என்று அவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். இதன் விளைவுகள் குறித்து ஏதும் அறியாதவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்” என சத்யநாராயணா கூறினார்.

Qadir Ali, a fourth generation qazi who performs marriages in the Muslim community has been speaking against the trend of marrying underage girls with old Arabs, at his office in the Old City of Hyderabad, India, September 26, 2016. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

பாலியல் சுற்றுலா

 

தன்னை யாரென்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத, ஒரே ஒரு அறையுள்ள வீட்டில் ஐந்து சகோதர-சகோதரிகளோடும் பெற்றோருடனும் வசிக்கும் ஏழாவது படிக்கும் பெண்ணுக்கு பணக்காரர் ஒருவரை  திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு என்பது மிகச் சிறந்த விடுதலைக்கான ஒரு வாய்ப்பாகவே தோன்றுகிறது.

“பணக்கார அரேபிய இளைஞர் ஒருவர் மணப்பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று எனது அண்டைவீட்டுக்காரர் எங்களிடம் சொன்னபோது எனக்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. நாங்கள் அவரைப் பார்க்கச் சென்றோம். அவர் ஒன்றும் இளைஞரல்ல. அவருக்கு வயது 62.” என்று அந்தப் பெண் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“நான் அவரை த் திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கையே மாறிவிடும் என்று அந்த இடைத்தரகர் என்னை நம்பச் செய்தார்.  தங்கம், பணம், எனது பெற்றோர்களுக்கு ஒரு வீடு எல்லாம் கிடைக்கும் என என்னிடம் உறுதி அளிக்கப்பட்டது. நானும் அவர் சொன்னதை நம்பினேன்.”

அவரது தாய்க்கு ரூ. 30,000 கொடுத்த அந்த மனிதருடன் எந்தவித ஜோடனைகளும் இல்லாத திருமணத்தில் அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். அந்த நபர் இடைத்தரகர்களுக்கும், ஐந்தே நாட்களில் தனக்கு இரண்டாவது முறையாக திருமணத்தைச் செய்து வைத்த காஜிக்கும் இன்னுமொரு ரூ. 50,000-ஐ கொடுத்தார்.

 

“ அந்த நபரின் முதல் மனைவி – அந்தப் பெண்ணும் கூட டீன்-ஏஜ் சிறுமிதான் – காவல்துறையை எச்சரிக்கை செய்ததை அடுத்து நாங்கள் அந்தப் பெண்ணை மீட்கச் சென்றபோது அந்தப் பெண்ணும் அந்த நபரும் ஏற்கனவே ஒரு ஓட்டலில் ஒரு நாளைக் கழித்திருந்தனர்” என ஹைதராபாத் மாவட்ட சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் சட்ட அதிகாரியான ரஃபியா பானோ கூறினார்.

 

இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து அவர்களது அண்டை வீட்டினரின், நண்பர்களின் சங்கடமான தொடர்ச்சியான கேள்விக்களுக்கு  பதிலளிக்க முடியாமல் அந்தக் குடும்பம் வீடு மாறிவிட்டது. அந்தச் சிறுமியும் தனது படிப்பைத் தொடர்ந்தார். விவாக ரத்து பெற்ற அவர் இப்போது 11வது வகுப்பில் படித்து வருகிறார்.

 

ஹைதராபாத் நகரின் ஜனசந்தடி மிக்க பழைய நகரின் ஊடே வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய தெருக்களில் – இங்கு குடியிருப்போரில் பெரும்பாலோர் முஸ்லீம்கள் – குழந்தைகளாக இருக்கையில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, பாலியல் ரீதியாக கொடுமைக்கு ஆளாகி, ஒரு சில நாட்களுக்குப் பிறகு விவாகரத்து செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணற்ற கதைகள் நிலவி வருகின்றன.

 

ஆனால் அரசின் புள்ளிவிவரங்கள் இந்தப் பிரச்சனையை குறைத்தே மதிப்பிடுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் ரஃபியா பானோவின் அலுவலகம் இத்தகைய ஏழு வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் இதற்கான பிரச்சாரகர்களும் காவல்துறையினரும் திருமணம் என்ற போர்வையில் பாலியல் நடவடிக்கைகளுக்கான சுற்றுலாத் தொழில் செழித்து வளர்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

 

திருமண காலத்தைப் பொறுத்து ரூ. 30,000 அல்லது  அதற்கு மேலான ‘மொத்த பேரத்தில்’ மணப்பெண்களை ஏற்பாடு செய்து தரப்படுவதாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு அளித்த பேட்டிகளில் முகவர்களும், காஜிகளும் காவல்துறையினரும் தெரிவித்தனர்.

 

இந்த மொத்த பேரத்தில் திருமணத்திற்கான சான்றிதழ் ஏற்பாடுகள், மணப்பெண் தனது கணவருடன் அவரது நாட்டிற்கு பறந்து செல்வதாக இருந்தால் அதற்கான விசா ஏற்பாடுகள்  அல்லது குறுகிய காலத்திற்கு அவர் தங்கிச் செல்வதாக இருந்தால் தங்குவதற்கான ஓட்டல் ஏற்பாடு போன்றவற்றுக்கான செலவுகளும் அடங்கும்.

 

ஹைதராபாத், மும்பை நகரங்களிலிருந்து கைது செய்யப்பட்ட காஜிகளின் அலுவலகங்களிலிருந்து  பெயர் நிரப்பப்படாத திருமணச் சான்றிதழ்கள், விவாகரத்துக்கான ஆவணங்கள் போன்றவற்றை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

 

“அவர்களெல்லாம் வளைகுடாவிலிருந்து வரும் பணக்காரர்கள். ஹைதராபாத் நகரில் உள்ள மக்கள் ஏழைகள் என்றும், பெண்கள் எளிதாகக் கிடைப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். திருமண உறவுக்கு வெளியே எந்தப் பெண்ணையும் அவர்களால் தொட முடியாது என்பதால், அவர்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அதே திருமணத்தின் போது வெற்றுத் தாளில் விவாகரத்துக்கான கையெழுத்தையும் போட்டுவிடுகின்றனர்” என ஹைதராபாத் நகரில் நான்காவது தலைமுறையாக காஜியாக இருந்து வரும் காதிர் அலி கூறினார்.

“தங்களது ஆசைகளுக்காக அவர்கள் இஸ்லாமின் பெயரைக் கெடுக்கின்றனர்.”

செழிப்பாக வளரும் இடம்

 

ஒரு காலத்தில் நன்கு மெருகேற்றப்பட்ட முத்துக்கள், புகழ்பெற்ற 16ஆம் நூற்றாண்டு நினைவுச் சின்னமான சார்மினார் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற ஹைதராபாத் நகரம் 2000களின் துவக்கத்தில் மிகப்பெரும் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்தது.  இந்திய நிறுவனங்களோடு கூடவே உலக அளவில் பெரும் நிறுவனங்களான  ஃபேஸ்புக், கூகிள் போன்றவை தங்களின் அலுவலகங்களை இந்த நகரில் நிறுவின.

 

பளபளப்பான இந்த நகரத்தின் தகவல் தொழில்நுட்ப மாவட்டத்திலிருந்து 12 மைல் தூரத்திலேயே ( 20 கிலோமீட்டர்) உள்ள பழைய நகரத்தில் குறுகிய சந்துகளில் பருவமெய்திய உடனேயே பள்ளியிலிருந்து நின்றுவிடும் சிறுமிகள் உள்ளனர்.

 

சார்மினார் நினைவுச் சின்னத்திற்கு அருகேயுள்ள கடைத்தெருவில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் கைவளையல்களின் மீது பளபளக்கும் மணிகளைப் பொருத்துவதில் உதவுவதற்காக பள்ளியை விட்டு நின்றுவிட்ட 15 வயதான தபஸும் இத்தகைய திருமண ஏஜெண்டுகளின் மிக எளிதான இரையாக மாறினார்.

 

அவளை ஒரு வயதான ஓமானி நாட்டைச் சேர்ந்தவருக்குக் காண்பிக்கும் போது தனது மகளுக்கு ஊறு செய்கிறோம் என்று அவரது தாய் ஜரீனா நினைக்கவில்லை. “ நாங்கள் ஏழைகள். இவ்வாறு சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதைப் பற்றியும், நல்ல வாழ்க்கையை பெறுவதைப் பற்றியும் நான் கேட்டு வந்திருக்கிறேன்.” என்று அவர் சொன்னார்.

 

எனினும் மிகவும் அரிதாகவே வெளிப்படும் எதிர்ப்புணர்வுடன், தபஸும் அங்கிருந்து ஓடிவிட்டாள். அந்தத் திருமணமும்  நிறுத்தப்பட்டது.

 

“இது ஒரு வியாபாரம்” என இத்தகைய ஒப்பந்த திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயல்பட்டு வரும் ஷாஹீன் என்ற அறக்கட்டளையின் நிறுவனரான ஜமீலா நிஷாத்  கூறினார்.  “ஒரு சிறுமியை விற்பது பல குடும்பங்களுக்குச் சோறு போடுகிறது.”

 

முன்னாள் முகவரான ஹாஜி கான் இந்த வியாபாரத்தின் இரண்டு பக்கங்கள் குறித்தும் நன்றாகத் தெரிந்தவர்.

 

 “கடந்த ஆண்டில் ஒரே மாதத்தில் நான் ரூ. 50,000/- சம்பாதித்தேன்.  பணவரவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்தச் சிறுமிகளுக்குத்தான் அது மிகவும் சோகமானதாகும்.”

 

அவருக்குத் தெரியும்தான். அவரது சொந்த மனைவியே இத்தகைய ஒப்பந்த திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் கான் மூலமாக மீட்கப்பட்டவர்.  அவரை விடுவிப்பதற்காக கான் ரூ. 1,00,000 கொடுக்க வேண்டியிருந்தது. சமீபத்தில் காவல் துறைக்கான தகவல்களை சேகரிக்கும் பணியில் இறங்குவதற்கு முன்பு வரை அவரும் இதர அரேபிய ஆண்களுக்கு மணப்பெண்களாக மாற்றுவதற்காக சிறுமிகளை தேடிக் கொண்டுதான் இருந்தார்.

 

  “பணத்திற்காக நாங்கள் இத்தகைய விளையாட்டைத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.” என்றார் அவர்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

${mainContent.multimediaText4}

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->