×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களின் நிலையை அவர்களின் மரணம் வெளிக் கொண்டுவருகிறது

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 30 October 2017 01:01 GMT

Laxmi Malaya sits with her two children outside her house in Kalleda village in Telangana state, India, September 28, 2017. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

ஜக்தியால், அக். 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்லேடா கிராமத்தில் வெயில் தகிக்கும் ஒரு நாளின் மந்தமான மதிய நேரத்தில் லஷ்மி மாலயா அவரது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார். துபாயில் தினக்கூலியாக வேலை செய்து வந்த அவரது கணவர் சித்தம் மாலயாவின் உடல் நாளை அங்கே கொண்டுவரப்பட இருந்தது.

 

செப்டம்பரில் மரணம் அடைந்த 45வயதே ஆன சித்தம் மாலயா அந்த ஊரிலிருந்து துபாய் போய் உயிரிழந்த இரண்டாவது இடம்பெயர் தொழிலாளி ஆவார். 2014ஆம் ஆண்டிலிருந்து மூடிய உறைகளில் சடலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 450 இடம்பெயர்ந்த தொழிலாளிகளில் அவரும் ஒருவராவார்.

“கடந்த ஆண்டில் (அந்த கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்) மூன்று பேர் மரணம் அடைந்தனர். திடீர் மாரடைப்பால் சித்தம் மாலயா இறந்து விட்டார் என்று எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த மாதம் அவர் வீட்டுக்கு வந்திருந்தபோது நல்ல உடல்நலத்துடன்தான்  இருந்தார்” என கல்லேடா கிராமத்தின் முன்னாள் தலைவரான அங்கதி கங்காதர் கூறினார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றொருவரும் துபாயில் கடந்த மாதம் மாரடைப்பால் காலமானார் என கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

மன அழுத்தம், உடல்நலக் குறைவு, தகிக்கும் வெயிலில் வேலை செய்வது ஆகியவை இத்தகைய மரணத்திற்கு பெரும்பாலும் காரணமாக அமைகின்றன என்றும் மாநிலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்யும் இடம் பெயர் தொழிலாளிகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரே மாதிரியாக இருந்து வருகிறது என்றும் தெலுங்கானா மாநில அரசின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 “இத்தகைய மரணங்கள் குறித்து மக்கள் ஒரு வார காலத்திற்குப் பேசி கொண்டிருப்பார்கள். பின் (இங்கே வேலை கிடைப்பதற்கு) எந்தவிதமான முன்முயற்சியும் இங்கு இல்லாத நிலையில் அவர்கள் தொடர்ந்து இங்கிருந்து சென்று கொண்டேதான் இருக்கின்றனர்” என கங்காதர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

பெரும்பாலும் கிராமப்புறப் பகுதியான, தொழில்நுட்ப மையமான ஹைதராபாத் நகரை தனது தலைநகராகக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திலிருந்து கடந்த பல பத்தாண்டுகளாகவே மக்கள் குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக விவசாயம் செய்து வாழமுடியாத நிலையில் மும்பை போன்ற இந்திய நகரங்களுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் சென்று வருகின்றனர்.

அரசின் புள்ளிவிவரங்களின்படி, தெலுங்கானா மாநிலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 பேர் வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர்.  இதில் சராசரியாக சுமார் 200 பேர் கல்லெடா கிராமத்திலிருந்து செல்பவர்கள் ஆவர்.

ஒரு சில ஆண்டுகளிலேயே நல்ல பணத்தை தங்களால் சம்பாதிக்க முடியும் என்று இவ்வாறு இடம்பெயர்பவர்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். இது ஏமாற்றுத் தனமான முகவர்கள் உருவாக்கும் ஒரு மாயைத் தவிர வேறெதுவுமில்லை.

(1980களில்) வளைகுடா நாடுகளுக்கு மக்கள் செல்லத் துவங்கியபோது இந்தப் பகுதி பல வருட கால வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வந்தது. இடம்பெயர்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை” என இடம்பெயர்ந்தவர்கள் பிரச்சனையில் செயல்பட்டு வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியான சுரேஷ் ரெட்டி கூறினார்.

 “அவர்கள் இங்கிருந்து சென்றபோது, ஓரளவிற்கு பொருளாதார ரீதியான லாபம் கிடைத்தது என்பது உண்மைதான். என்றாலும் அதற்காக மிக மோசமான வேலை நிலைமைகளில் பணியாற்றுவது; தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்திருப்பது என அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.”

சித்தம் மாலயா வருடம் தோறும் சேமித்தது  மிக அபூர்வமாகவே ரூ. 12,000க்கும் அதிகமாக இருந்தது. சில மாதங்களுக்கு ஒரு முறை அவர் ரூ. 4,000 லிருந்து ரூ. 5,000 வரை வீட்டுக்கு அனுப்புவார். அவர் துபாயில் 13 வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்தக் காலப்பகுதியில் தன் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்ப்பதற்காக ஐந்தே முறைதான் அவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

“இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்தபிறகு அடுத்த ஆண்டு முழுமையாகவே நாட்டிற்குத் திரும்பி விடுவது என்று அவர் திட்டமிட்டிருந்தார்.” என கங்காதர் கூறும்போது சித்தம் மாலயாவின் மனைவி லஷ்மி மரத்துப் போன நிலையில், உணர்ச்சியற்றவராக வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்.

போலியான உறுதிமொழிகள்

தெலுங்கானாவில் உள்ள ஒரு சிறு நகரமான ஜக்தியாலுக்கு கடந்த ஆண்டு திரும்பி வந்தபோது ராமண்ணா சித்லா துபாயில் 16 ஆண்டுகள் வேலை செய்திருந்தார்.  முகவர்களால் மற்றவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கப் பாடுபட வேண்டும் என்றும் அவர் உறுதியோடு இருந்தார்.

 “அங்கே நான் ஏராளமான துயரத்தைக் கண்டேன். தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே கொடுக்கப்பட்டது. அவர்கள் மிக மோசமாகவும் நடத்தப்பட்டனர். அவர்களது முகவர்களால் போலியான உறுதிமொழிகளைக் கொண்டு ஏமாற்றப்பட்டனர்.  எனவே திரும்பி வந்து இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நான் நினைத்தேன்.” என்று சித்லா கூறினார்.

இவ்வாறு இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ஊதியம் கொடுக்கப்படாததில் இருந்து துவங்கி துன்புறுத்தப்படுவது, மோசமாக நடத்தப்படுவது என்பது போன்ற தொடர்ச்சியான புகார்கள்  கடந்த பல வருடங்களாகவே இந்திய அரசுக்கும் அரசு முறை சாரா குழுக்களுக்கு வந்து கொண்டே இருந்தன.

இந்த முகவர்களுக்குக் கொடுப்பதற்காக தொழிலாளர்கள் பெரும்பாலும் ரூ. 50,000 லிருந்து ரூ. 1, 00,000 வரை கடன் வாங்குகின்றனர். துப்புரவாளர்களாக, கட்டுமானப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து அந்தக் கடனை அடைக்க போதுமான ஊதியத்தை ஈட்ட முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த உறுதிமொழிகளுக்கு இணையாக அவர்களது ஊதியம் இருப்பதில்லை.

“அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர்கள் பணத்தை சேர்க்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் மருத்துவர்களிடம் போவதில்லை” எனக் கூறிய சித்லா, இந்த மரணங்களுக்கு காரணமாகக் கூறப்படும் உடல்நலக் குறைவு என்பது படுமோசமான சுரண்டல் நிரம்பிய வேலை நிலைமைகளின் காரணமாகவே பெரும்பாலும் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஆறு வளைகுடா நாடுகளான பஹ்ரைன், குவெய்த், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஓமான் ஆகியவற்றில் சுமார் 60 லட்சம் இந்திய தொழிலாளர்கள் குடியேறி வசிக்கின்றனர் என அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி 2005க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய குடிமக்கள் 30,000க்கும் மேற்பட்டோர் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர்களை மோசமாக நடத்தும்  பழக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு கடந்த சில ஆண்டுகளில் வளைகுடா நாடு சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும் இதில் ஒப்பந்தங்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது, வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான ஊதிய பாதுகாப்பு முறை மற்றும் ஐந்து மொழிகளில் “உங்களுக்கான உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்ற பிரச்சாரம் உள்ளிட்டவை அடங்கும் என மின் அஞ்சல் மூலமான ஓர் அறிக்கையில் புதுதில்லியில் உள்ள ஐக்கிய அரபுக் குடியரசுகளின் தூதரகம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு இடம்பெயர்வோர் தங்களது வேலைக்கான ஒப்பந்தங்களைப் புரிந்து கொள்வது, வேலை குறித்த விதிமுறைகளை வேலை தருவோர் பின்னார் மாற்றாமல் இருப்பதை, மனுச்செய்பவரின் ஆவணங்கள் அனைத்தும் முறையாக இருப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகவர் என்ற முறையில் சித்லாவின் வேலை ஆகும்.

என்றாலும் சட்டவீரோதமான முகவர்கள் கவர்ந்திழுக்கும் அளவிற்கு தொழிலாளர்களை கவர்ந்திழுக்க அவரால் இயலவில்லை.

Villagers flock the house of Laxmi Malaya, whose husband died in Dubai, in Kalleda village in Telangana state, India, September 28, 2017. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

“இங்கே அனுமதி பெறாத முகவர்கள் குறைந்தபட்சம் 50 பேராவது இருப்பார்கள். அவர்கள் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் அதே நேரத்தில் என்னால் இதுவரை 48 தொழிலாளர்களை மட்டுமே வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடிந்தது” என  சித்லா குறிப்பிட்டார்.

ஆளெடுப்பதற்கான செயல்முறை,தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது ஆகியவற்றை ஒழுங்குபடுத்த இந்திய வெளியுறவுத் துறை பல முயற்சிகளை செய்து வந்துள்ளது. அதிகாரபூர்வமான முகவர்களின் மூலமாக மட்டுமே வேலைக்குச் செல்லுமாறு ஒவ்வொரு நாளும் ரேடியோவில் சிறு விளம்பரப் பாடல்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டபோதும் அதிகாரபூர்வமற்ற முகவர்கள் வழங்கும் வாக்குறுதிகளால் பலரும் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான 26 வயதான சந்திரசேகர் பொரகல்லா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 800 கிலோமீட்டர் (500 மைல்கள்) தூரத்தில் உள்ள மும்பைக்குச் செல்ல ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்த போதுதான் முதல் முறையாக ஜக்தியாலில் இருந்து வெளியே சென்றார்.  துபாயில் ஒரு துப்புரவாளர் வேலைக்காக கடற்கரை ஓரத்தில் இருந்த ஓர் அலுவலகத்தில் அவருக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

“இந்த வேலைக்காக நான் முகவருக்கு ரூ. 70,000 கொடுத்திருந்தேன். நான் அங்கே போனபோது எனக்கு உறுதிமொழி அளிக்கப்பட்ட சம்பளத்தை விட மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய இரண்டு ஆண்டு ஒப்பந்தப் பத்திரத்தில் அவர்கள் என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.  மூன்று மாதங்களுக்கு எனக்கு சம்பளமே தரவில்லை. நான் வீட்டுக்குச் செல்ல விடுப்பு எடுப்பதற்காக ரூ, 85,000 கொடுக்கவேண்டுமென்று என்னிடம் சொன்னார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.

பொரகல்லா கையில் காசு ஏதுமில்லாமல் மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஜக்தியால் திரும்பினார். அவர் இப்போது ஒரு வெல்டராக (இணைப்பாளராக) வேலை செய்வதுடன், முகவருக்கு முன்பணம் கொடுக்க அவர் வாங்கியிருந்த கடனுக்காக தான் வாங்கும் ரூ. 400 தினக்கூலியில் ஒரு பகுதியை இன்னமும் திருப்பித் தந்து வருகிறார்.

“இது போதுமானதல்ல. துபாய் மிகவும் அபாயகரமானது. நான் அங்கு திரும்பிச் செல்லவே மாட்டேன்.” என்று அவர் கூறினார்.

தண்ணீர், வேலைகள்

செழுமையான வயல்கள், சோளக் கதிர்கள் பூத்துக் குலுங்கும் வயல்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு கல்லேடா கிராமத்தை வசதியான, வளமானதொரு கிராம்ம் என்று மிக எளிதாகவே தவறாக எண்ணிக் கொண்டுவிடலாம். ஆனால் விவசாயத்திலிருந்து வரும் வருமானம் குடும்பத்திற்கு மிக அரிதாகவே போதுமானதாக இருக்கிறது.

 “அவர்கள் நடுத்தர விவசாயிகள். 5 ஏக்கருக்கும் (2 ஹெக்டேர்) குறைவாகவே சொந்தமாக வைத்திருக்கின்றனர். இது அவர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற போதுமானதல்ல். இது (மழையை மட்டுமே நம்பிய) வானம் பார்த்த பூமி என்பதால் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிது” என  கிராமப்புற ஏழைகளுக்காக நில உரிமைகள் குறித்த வழக்குகளை எடுத்து நடத்தி வரும் வழக்கறிஞரான சுனில் ரெட்டி குறிப்பிட்டார்.

 “2014-இல் தெலுங்கானா தனியான ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டபோது இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஒன்று மேலும் அதிகமான வேலை வாய்ப்புகள்; பாசனத்திற்கான மேலும் அதிகமான நீர். ஆனால் நிலைமை இன்னமும் அப்படியேதான் நீடித்து வருகிறது” என ரெட்டி குறிப்பிட்டார்.

இப்போது விதவையாகி விட்ட லஷ்மி மாலயாவிடம் ஒரு சிறு துண்டு நிலம் இருக்கிறது. அதில்தான் அவர் சோளம், மஞ்சள், நெல் ஆகியவற்றை பயிரிட்டு வந்தார். வருடத்திற்கு இரண்டு மகசூல்களின் மூலம் அவர் ஆண்டுக்கு ரூ. 60,000 வரை வருமானம் ஈட்டி வந்தார். அதுதான் அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்த பணத்தையும் சேர்த்து வீட்டுச் செலவுகளை சமாளிக்க உதவி வந்தது.

இத்தகைய இடம்பெயர் தொழிலாளிகளின் உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்வோர் வளைகுடா நாடுகளுக்கு குடியேறி அங்கு இறந்து போனவர்களின் விதவை மனைவிகளுக்கு இழப்பீடு தரப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.

“இழப்பீடு அவர்களின் உரிமை. அந்தத் தொழிலாளர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு மாதந்தோறும் அனுப்பி வைத்து வந்த பணம்தான் மாநிலத்தின் பொருளாதாரத்தில் சென்று கலந்தது” என சமூக ஆர்வலர் பீம் ரெட்டி குறிப்பிட்டார்.

 

 

Villagers flock the house of Laxmi Malaya, whose husband died in Dubai, in Kalleda village in Telangana state, India, September 28, 2017. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

மாநிலத்தின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கொள்கையின் ஒரு பகுதியாக இந்த விதவைகளுக்கு நிதி இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெலுங்கானா அரசின் முதன்மைச் செயலாளரான ஜயேஷ் ரஞ்சன் கூறினார்.

ஆனால் இப்போது அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் சித்தம் மாலயா போன்ற தொழிலாளர்களின் உடல்களை ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து அவர்களது சொந்த கிராமங்கள் வரை எடுத்துச் செல்வதற்கான இலவச போக்குவரத்து வசதி மட்டும்தான்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll, கூடுதல் செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->