ஏழாண்டுகளுக்கு தினமும் 15 மணி நேரம் வயலில் வேலை செய்து வந்த ஆதிவாசிகள் மீட்கப்பட்டனர்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 30 October 2017 09:28 GMT

In this 2012 archive photo farmers and members of India's rural communities take a nap during a protest march along the national highway at Morena district of the central Indian state of Madhya Pradesh. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, அக். 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கட்டாய வேலை அதிகமாக உள்ளது என கருதப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில்  பரான் என்ற பகுதியில் உள்ள வயல்களில் மிக அரிதான வகையில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தினமும் 15 மணி நேரம் வயலில் வேலை செய்து வந்த குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட 25 தொழிலாளர்கள்  வார இறுதியில் மீட்கப்பட்டனர்.

இந்தத் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ராஜஸ்தானில் உள்ள வயல்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு ரூ. 500லிருந்து ரூ. 20,000 வரை கடன் வழங்கப்பட்டது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

“நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளைக் கூறி இவர்கள் தங்களது சொந்த மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு வயல்களில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர். தாங்கள் வாங்கிய கடனை அடைத்து வருவதாகவே அவர்கள் எண்ணி வந்துள்ளனர்” என இந்த மீட்சி நடவடிக்கையில் பங்கேற்ற நேஷனல் கேம்பெய்ன் கமிட்டி ஃபார் எராடிகேஷன் ஆஃப் பாண்டட் லேபர் என்ற அமைப்பின்  அமைப்பாளரான நிர்மல் கொரானா தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் வயலில் வேலை செய்யும் நேரத்தில், தங்களது குழந்தைகள் எந்தவித ஊதியமும் இன்றி எஜமானர்களின் இல்லங்களில் வேலை செய்து வந்தனர் என்று குறிப்பிட்டனர்.

 “எஜமானர்கள் அவர்களுக்கு ஊதியம் எதுவும் தரவில்லை. மாறாக கோதுமை பாக்கெட்டுகளை மட்டுமே தந்தனர். அதுவும் கூட வயல்களில் அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான்” என கொரானா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் அடிமைத்தனத்தில் ஆட்பட்டிருப்போரின் எண்ணிக்கை குறித்து தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. எனினும் 2030ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை கண்டறிந்து, மீட்டு, உதவி செய்வதற்கான திட்டங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்தியாவில் பெரும்பாலான நேரங்களில் கிராமத்து மக்கள் நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டப்பட்டு, முன்பணமும் கொடுத்து ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். அவர்கள் இறுதியில் தங்கள் கடன்களை அடைப்பதற்காக வயல்களில்  அல்லது செங்கற்சூளைகளில் உழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவதும், பாலியல் தொழில்மையங்களில் அடிமைகளாக அடைத்து வைக்கப்படுவது அல்லது  வீடுகளில் பணியாட்களாக அடைத்து வைக்கப்படுவது ஆகியவற்றை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

மிகவும் சிக்கலான இந்த உழைப்பாளர் சங்கிலியில் அடித்தளத்தில் இருப்போர் நகை, அழகுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றைச் செய்யும்  வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரானில் மீட்கப்பட்டவர்களில்   பெரும்பாலோர் அவர்களது சொந்த வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என பரானில் துணைக் கோட்ட ஆட்சியர் கோபால் லால் தெரிவித்தார்.,

அவர்களில் 18 பேருக்கு விடுதலை செய்யப்பட்டது குறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்டன என்றும், இதைக் கொண்டு அவர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் ரூ. 3, 00,000 இழப்பீடு பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 “இதே போன்று மேலும் தொழிலாளர்கள் இருக்கின்றனரா என்று பார்ப்பதற்காக ஒரு ஆய்வையும் நாங்கள் துவக்கியுள்ளோம்” என லால் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கொத்தடிமைகள் நாட்டின் வயல்களில்தான் வேலை செய்து வருகின்றனர் என்றும் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வழக்கமான வேலையில் இருப்பதாகவே கருதப்படுகிறது; இதன் மீதான அரசின் நடவடிக்கைகளும் மிகவும் அபூர்வமாகவே உள்ளது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

 “இவ்வாறு வயல்களில் கொத்தடிமையாக வேலை செய்ய வைப்பது என்பதை புகார் சொல்ல வேண்டிய ஒரு குற்றமாகவோ அல்லது பிரச்சனையாகவோ பார்க்கப்படுவதில்லை. இது மிகவும் பரவலாகவே உள்ளது என்பதோடு சமூகத்தின் ஒப்புதலைப் பெற்றதாகவும் உள்ளது” என கிராமப்புற ஏழைகளுக்காக பணி செய்து வரும் அறக்கட்டளையான செண்டர் ஃபார் ஆக்‌ஷன் ரிசர்ச் அண்ட் பீப்பிள்ஸ் டெவலெப்மெண்ட் என்ற அமைப்பினைச் சேர்ந்த பாரத் பூஷண் கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.