×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தமிழ்நாட்டில் கிறித்துவ அநாதை இல்லத்தின் தலைவர் ஆட்கடத்தல் விசாரணையில் கைது செய்யப்பட்டார்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Monday, 30 October 2017 10:00 GMT

In this 2013 archive photo children play atop a police barricade on a street in New Delhi. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

  - அனுராதா நாகராஜ்

சென்னை, அக். 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லம் குறித்த விசாரணையின்போது அதிகாரிகளால் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட கிறித்துவ அநாதை இல்லத்தின் மூலம் பதின்பருவச் சிறுமிகளைக் கடத்தியதாக குற்றம் சாட்டி போதகர் ஒருவரை காவல்துறை கைது செய்தது.

கடந்த சனிக்கிழமையன்று போதகர் கிடியன் ஜேக்கப் ஜெர்மனியிலிருந்து திரும்பி வந்தபோது தாங்கள் கைது செய்ததாகவும், ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம்  மற்றும் சிறுவர்களுக்கான நீதி குறித்த சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஜேக்கப்பின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தானாகவே முன்வந்து காவல்துறையின் முன் ஆஜரானதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

ஜெர்மனியிலிருந்து செயல்படும் கிறிஸ்டியன் இனிஷியேடிவ் ஃபார் இந்தியா என்ற அமைப்பினால் திருச்சியில் நடத்தப்பட்டு வந்த த மோசஸ் மினிஸ்ட்ரீஸ் ஹோம் 1989ஆம் ஆண்டில் ஜேக்கப்பினால் துவக்கப்பட்டதாகும். இதில் உள்ள 89 குழந்தைகளும் அருகில் உள்ள மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் பெண் குழந்தைகளைக் கொல்லும் முயற்சியிலிருந்து தடுத்து காப்பாற்றப்பட்ட குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

எனினும் இந்தக் குழந்தைகள் இல்லம் தற்போது 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய இந்த பெண்கள் அனைவர் குறித்தும் முறையான பதிவேடுகளை வைத்திருக்கவில்லை.

2015 டிசம்பரில் இந்த இல்லம் நீதிமன்றத்தின் ஓர் உத்தரவுக்குப் பிறகு சமூக நலத்துறையினால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாங்கள் தான் அந்தக் குழந்தைகளின் பெற்றோர் என்று தொடர்ச்சியான  உரிமைக் கோரிக்கைகள் மக்களிடமிருந்து எழுந்ததைத் தொடர்ந்து இந்தக் குழந்தைகளின் உண்மையான குடும்பத்தை உறுதிப்படுத்துவதற்காக இவர்களுக்கு மரபணுச் சோதனை நடத்தப்பட வேண்டும் என  உள்ளூர் நீதிமன்றம்  உத்திரவிட்டது.

2016ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மரபணுச் சோதனைகள் குறைந்தபட்சம் 32 பேரின் அடையாளங்கள் ஒத்துப்போவதைத் தெரிவித்தன. எனினும் இந்தப் பெண்கள் எவருமே இன்னமும் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணையவில்லை.

 “கைக்குழந்தைகளாக இருந்த காலத்திலிருந்தே வேறெந்த வாழ்க்கையையும் கண்டிராத  இந்தப் பெண்களுக்கு நாங்கள் அறிவுரை கூறித்தான் வருகிறோம்.” என  இத்துறையின் திருச்சி மாவட்ட தலைவர் குப்பண்ண கவுண்டர் ராஜாமணி தெரிவித்தார்.

“தங்கள் பெண்களை திரும்ப அழைத்துக் கொள்ள விரும்பும் பெற்றோரை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சனிக்கிழமையன்று நிகழ்ந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு, இந்த விஷயம் மேலும் வேகமாகும். அந்தப் பெண்களை மீண்டும் அவர்களது குடும்பங்களோடு விரைவில் இணைத்து விட முடியும் என்றும் நம்புகிறோம்.”

அரசின் குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்களின்படி 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான ஆட்கடத்தல் வழக்குகளில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவை விலைக்கு வாங்கப்பட்ட, விற்கப்பட்ட, நவீன கால அடிமைகளாக சுரண்டப்பட்ட குழந்தைகள் தொடர்பானவை ஆகும்.

 

அறக்கட்டளைகள் நடத்திவரும் குழந்தைகளுக்கான இல்லங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மூலம் தத்தெடுப்பதற்காக கைக்குழந்தைகளும் சிறுவர்களும் கடத்தப்படுவது குறித்த தகவல்கள் சமீப காலத்தில் வெளிவந்த வண்ணமாக உள்ளன.

தமிழ்நாட்டில் 2011க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் தவறான நிர்வாகம், பதிவு செய்யாமல் இருப்பது, தவறான நடத்தை ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதிகாரிகள் 500 இல்லங்களை மூடியுள்ளனர்.

இந்தியாவிலுள்ள குழந்தைகளுக்கான இல்லங்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றன; அவை அடிக்கடி சோதனை செய்யப்படுவதில்லை; தனியாரால் நடத்தப்படும் நிறுவனங்கள் பலவும் முறையான அனுமதியின்றி செயல்பட முடிகிறது; இதன் விளைவாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது என குழந்தைகளின் உரிமைகளுக்கான குழுக்கள் நீண்ட காலமாகவே புகார் தெரிவித்து வந்துள்ளன.

“இந்தக் கைது நடவடிக்கை நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது” என  சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள ஒரு மனுவில் இந்தப் பிரச்சனையின் நோக்கம் குறித்து விளக்கியிருந்த சேஞ்ச் இந்தியா என்ற ஆலோசனைக் குழுவின் இயக்குநரான ஏ. நாராயணன் கூறினார்.

“எங்களின் உண்மையான கவலை எல்லாம் இந்தப் பெண்களெல்லாம் எப்போது, எப்படி மறுவாழ்வு பெறுவார்கள் என்பதுதான். இப்போது ஒரு நிறுவனத்தின் இல்லத்தில் வாழ வேண்டிய நிலையில் எந்தவித மாற்றமும் இருக்கப் போவதில்லை என்ற நிராசையுடன் ஆயுள் தண்டனைக் கைதியைப் போல அவர்கள் வாழ்வதாகவே தோன்றுகிறது.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->