குவைத்தில் வேலைக்கு உறுதியளிக்கப்பட்ட உத்திரப் பிரதேச தொழிலாளர்கள் போலி பயணச்சீட்டுகளுடன் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Wednesday, 1 November 2017 10:19 GMT

Air India passenger planes are seen parked at the Chhatrapati Shivaji International airport in Mumbai, India, February 7, 2017. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

 

மும்பை, நவ. 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - போலி பயணச் சீட்டு, போலியான அரசு நுழைவுச் சான்றிதழ் ஆகியவற்றை வைத்துக் கொண்டு குவைத்திற்கு பயணம் செய்ய முற்பட்ட 30 பேரை மும்பை காவல்துறை கைது செய்ததோடு, அந்த வளைகுடா நாட்டில் வேலை செய்ய அவர்களின் பயணத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி  அவர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ. 1, 00,000 வசூலித்துள்ள அனுமதி பெறாத வேலைவாய்ப்பு முகவர்களையும் தேடி வருகிறது.

 

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த நபர்கள் போலி பயணச்சீட்டுகளுடன் விமான நிலையத்தில் சென்று பயணத்திற்குப் பதிவு செய்ய முயன்றபோது செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர் என காவல்துறை தெரிவித்தது. போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதாகவும், ஏமாற்ற முயற்சித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

போலியான ஆவணங்களுடன் இந்த நபர்களை ஏமாற்றிய அங்கீகாரமற்ற வேலைவாய்ப்பு முகவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையின் ஒரு குழு உத்திரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றுள்ளதாக மும்பை காவல்துறையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் லதா சிர்சாத் கூறினார்.

 

“சுமார் 30 வயதான இந்த நபர்கள் அனைவருமே ஏழைகள்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அந்த பெண் அதிகாரி தெரிவித்தார்.

 

வளைகுடா நாடுகளில் நல்ல சம்பளத்துடன் துப்புரவாளர்களாகவும், இதர வேலை  செய்பவர்களாகவும் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிப்பதோடு கூடவே ஊதியம் தராமல் இருப்பதிலிருந்து உடல்ரீதியாக துன்புறுத்தப்படுவது வரையிலான புகார்களும் எழும் வகையில் மக்களை ஏமாற்றி வருகின்ற அங்கீகாரமற்ற முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவர்கள் இதற்கென அனுமதி பெற்ற முகவர்களின் மூலமாக மட்டுமே செல்லுமாறு அறிவுறுத்தும் விளம்பரங்கள் தினமும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

இத்தகைய மோசடிகள் மிகவும் அபூர்வமாகவே நடக்கிறது என உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்களுக்கான பாதுகாவல் அதிகாரியான விவேக் சர்மா தெரிவித்தார்.

 “இவ்வாறு 30 நபர்கள் சம்பந்தப்பட்ட வகையில் போலிப் பயணச் சீட்டு மோசடியை இப்போதுதான் நான் முதல் முறையாக எதிர்கொள்கிறேன்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் சர்மா தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள மிகவும் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்று உத்திரப் பிரதேசம் ஆகும். இந்த மாநிலத்தில் நிலவும் வறுமை, வேலைவாய்ப்பற்ற நிலை ஆகியவற்றால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடம் பெயர்வது வழக்கமானதாக உள்ளது. எனினும் வளைகுடா நாடுகளில் வேலை தேடிச் செல்வது என்பது புதியதொரு போக்காக உள்ளது என இது குறித்த சமூக ஆர்வலர்கள் கூறினர்.

“இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இத்தகைய போக்கு துவங்கியது. இப்போது வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் பரம ஏழைகள் என்பதோடு அவர்களது கிராமங்களும் சாலை வசதிகள் ஏதுமற்றவையாகவே இருக்கின்றன” என  புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகளுக்கான ஆர்வலர்  பீம் ரெட்டி கூறினார்.

பஹ்ரைன், குவைத், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் இந்தியாவிலிருந்து வேலைக்காகக் குடியேறிய சுமார் 60 லட்சம் பேர் உள்ளனர் என அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.