×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

மியான்மர் பாஸ்போர்ட்டின் மூலம் கடத்தப்பட்ட இந்திய பணிப் பெண்கள் வீடு திரும்ப போராடுகின்றனர்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Tuesday, 7 November 2017 12:20 GMT

In this 2012 archive photo a 16-year-old girl was working as a maid and was later rescued stands inside a protection home on the outskirts of New Delhi. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

அய்ஸ்வால், நவ. 7 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – வடகிழக்கு இந்தியாவில் உள்ள தனது வீட்டிலிருந்து எல்லைப்பகுதி வழியாக மியான்மருக்குள் செல்வதற்குத் தான் மேற்கொண்ட கார் பயணம், பேருந்துப் பயணம் ஆகியவை தனக்கு மிகுந்த கிளர்ச்சியூட்டியதாக அந்த 17வயதுப் பெண் நினைவு கூர்ந்தார்.

ஆனால் யாங்கோன் நகரில் அவர் தங்கியிருந்த ஒரு சில வாரங்களுக்குள்ளேயே கலக்கமடைந்த அவரது தாயாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர அவரை திடீரென்று பயம் கொள்ளச் செய்தது.

 “நான் சட்டவிரோதமாக வேறொரு நாட்டிற்குள் புகுந்திருக்கிறேன் என்று அவர் சொன்னார்” என அவர் குறிப்பிட்டார். “நான் உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டுமென்று என் குடும்பத்தினர் என்னிடம் கூறினார்கள். அவர்கள் அதை என்னிடம் கூறிய விதம் என்னை மிகவும் பயம் கொள்ளச் செய்தது.”

அவர் குடியிருந்த பகுதியில் முன்பே பார்த்தவர்தான் என்றாலும், “(அவரை) நன்றாகத் தெரியும் என்று கூறிவிட முடியாத” ஒரு ஏஜெண்ட் அவரை யாங்கோன் நகரில் இருந்த ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்திருந்தார். தனக்கு போலியான ஒரு மியான்மர் பாஸ்போர்ட் எடுத்துத் தருவதாகவும், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கித் தருவதாகவும் அந்த ஏஜெண்ட் எனக்கு உறுதியளித்திருந்தார் என அந்தப் பெண் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரிலிருந்து அவரும் வேறு ஏழு இளம் பெண்களும் ஜூன் மாதத்தில் எல்லையைக் கடந்த அவர்கள் பயணத்திற்கான புதிய ஆவணங்களுடன் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்குப் போவதற்கு முன்பாக மூன்று மாதங்கள் அவர்கள் யாங்கோன் நகரில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

வீட்டுப் பணிப்பெண்களாக மாறுவதற்கென தென்கிழக்கு ஆசியாவிற்கு இந்தியப் பெண்களை அனுப்பி வைக்க ஆட்கடத்தல்காரர்களுக்கான ஒரு மையமாக உருப்பெற்று வரும் மியான்மரின் பெரிய நகரத்தைக் கடந்து செல்லும் நூற்றுக் கணக்கானோரில் அவர்களும் அடங்குவர் என இவ்வாறு கடத்தப்பட்ட பலரையும் மீண்டும் அவர்களின் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவி செய்து வரும் ஓர் அறக்கட்டளையான இம்பல்ஸ் என் ஜி ஓ நெட்வொர்க்-ஐச் சேர்ந்த ஹசீனா கர்பி கூறினார்.

ஏற்கனவே பலவீனமான இந்த இளம்பெண்கள் சட்டவிரோதமான ஆவணங்களின் மூலம் பயணம் செய்வதென்பது அவர்களை மிகக் குறைந்த பாதுகாப்புள்ளவர்களாக ஆக்கி விடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டில் மியான்மரின் ஜனநாயக அரசு பதவியேற்ற பிறகு, அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்வது மிகவும் எளிதாக ஆகிவிட்டது. ஆட்கடத்தல்காரர்கள் தங்களின் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் என வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரம் மாநிலத்தின் ஆட்கடத்தலுக்கு எதிரான பிரிவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

“தென் கிழக்கு ஆசியாவிற்குச் செல்லும் மியான்மர் வழி சமீப காலத்தில் ஆட்கடத்தல்  அதிகரித்திருப்பதைக் கண்டு வருகிறது. ஏனெனில் எல்லையின் இரு பக்கங்களிலும் பல மைல்கள் தூரத்திற்கு வசிக்கும் மக்கள் எல்லாம் ஒரே மாதிரியானவர்களாக, அதே மொழியைப் பேசுபவர்களாக, ஒரே மாதிரியான தோற்றமளிப்பவர்களாக இருக்கின்றனர்” என மிசோரம் காவல் துறையைச் சேர்ந்த தியாங்லிமா பச்சுவா கூறினார்.

“இந்தப் பகுதியில் நாங்கள் சோக மயமான விஷயங்களைக் கண்டு வருகிறோம். ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் சிங்கப்பூரில் இறந்து விட்டார். எனினும் அவளது உடலை வீட்டிற்கு (இந்தியாவிற்கு) கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் அவரிடம் இருந்த ஆவணங்கள் மியான்மர் குடிமகளாக அவரை அடையாளம் காட்டின. அவளது பெற்றோர் கடைசி வரை அவரது உடலைப் பார்க்கவே முடியவில்லை.”

எல்லைப் பாதைகள்

வடகிழக்கு இந்தியாவில் பல ஆண்டுகாலமாக நீடித்து வரும் இன ரீதியான வன்முறை, ஆயுதரீதியான மோதல்கள் ஆகியவை அதை ஆட்கடத்தலுக்கான வசதியான பகுதியாக மாற்றியுள்ளது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.  பாலியல் தொழில் மையங்களுக்கு அல்லது  வீடுகளில் அடிமைகளைப் போல் வேலை செய்வதற்காக பெண்கள் கடத்தப்படுவதற்கான ஆதாரப் பகுதியாக, சென்று சேரும் இடமாக, வழிப்பாதையாக இந்தப் பிரதேசம் இருந்து வருகிறது.

வளர்ச்சி காணாத இந்தப் பகுதி சீனா, நேபாளம், வங்கதேசம், மியான்மர், பூட்டான் ஆகிய நாடுகளை எல்லைப்பகுதிகளாகக் கொண்டுள்ளது.

இவற்றின் மிக எளிதாகக் கடந்து செல்லக் கூடிய எல்லைகள் ஒரே மாதிரியான இன, மத, மொழி, கலாச்சார குணாம்சங்களை  கொண்டிருக்கின்ற ஆயிரக் கணக்கான மக்களால் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லப்படுகின்றன என பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாரம்பரியமாகவே வளைகுடா நாடுகளுக்குப் பெண்களை அனுப்புவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் நேபாளத்தை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். எனினும் இப்போது மியான்மர் வழியாக அவர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது என காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியான மோரே என்ற செழிப்பான வணிக மையம்தான் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பெண்கள் கடத்திச் செல்லப்படும் பாதையில் முதல் நிறுத்தம் ஆகும்.

“இங்கு எல்லையைக் கடப்பது மிகவும் எளிது. ஏனெனில் எல்லைப் புற கிராமங்களில் குடும்பங்களையும் நண்பர்களையும் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் இந்தப் பெண்களுக்கு தங்குமிடம் அளித்து அவர்களை எல்லையைத் தாண்டி அழைத்துச் செல்ல உதவுகின்றனர்” என பச்சுவா கூறினார்.

 “அவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டபிறகு, தங்களது இந்திய அடையாளத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம் என அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் காணாமலே போய் விடுகிறார்கள்.”

இப்போது வீட்டிற்குத் திரும்பியுள்ள 17 வயதான உயர்நிலைப் பள்ளிப் படிப்பிலிருந்து நின்றுவிட்ட அந்தப் பெண் – தன்னுடைய பெயரை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை- சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்வதற்காக பாஸ்போர்ட், விமானப் பயணச் சீட்டு ஆகியவற்றுக்காக காத்திருந்த போது யாங்கோனில் தங்கியிருந்த அறையில் நாள் தோறும் மூன்று முறை பிரார்த்தனை செய்து வந்ததை நினைவு கூர்ந்தார்.

“நல்லதொரு இடத்திற்கு நான் தப்பிச் செல்வதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறானது” என அவர் குறிப்பிட்டார்.

வேலைக்கான வாய்ப்புகள்

ஜெர்விஸ் லால்ராம்காகா மிசோரம் மாநில தலைநகரான அய்ஸ்வாலில் வேலைக்கு ஆளெடுக்கும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். வீட்டு வேலைக்காக இளம் பெண்களை தேடி வரும் நகரத்தில் உள்ள மிகப்பெரும் ஏஜென்சிகளில் அவருடையதும் ஒன்றாகும்.

“பெரும்பாலான பெண்கள் தங்களின் 20களின் துவக்கத்தில் உள்ளவர்களாக, விவாகரத்து பெற்றவர்களாக உள்ளனர்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

“மாதத்திற்கு ரூ. 25,000 சம்பளமும், இரண்டு வருட வேலைக்கான ஒப்பந்தமும் நாங்கள் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். எனினும் முதல் நான்கு மாத ஊதியம் எங்களுக்கான கட்டணமாக அளிக்கப்பட வேண்டும்.”

அவர் இளம் பெண்களை சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கும், சில நேரங்களில் மக்காவ் தீவிற்கும்  இந்திய பாஸ்போர்ட்-ஐ வைத்துக் கொண்டு அனுப்பி வருகிறார். எனினும் மியான்மரில் போலி ஆவணங்களை பெற்றுக்  கொண்டு அனுப்பி வைப்பதை ஒப்பிடும்போது மிகவும் சிக்கலானதாக, அதிகார செயல்முறை நிரம்பியதாக உள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

அய்ஸ்வால் நகரத்தினை சுற்றி வளைத்துச் செல்லும் முக்கிய சாலைகளில் “வீட்டுப் பணிப்பெண் வேலைகள்- நல்ல சம்பளம்” என்று விளம்பரம் செய்யும் போஸ்டர்களை எங்கு பார்த்தாலும் காண முடிகிறது. அவை ஒவ்வொன்றின் கீழேயும் அந்த ஏஜென்சியின் தொடர்பு எண்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இத்தகைய பதிவுபெறாத ஏஜென்சிகள் பெண்களுக்கு ஓரளவிற்கு ஆங்கிலம் பேசவும், சில அடிப்படையான வீட்டு வேலைகளுக்கான திறன்கள் ஆகியவற்றை கற்றுத் தந்து துள்ளிக் குதித்துச் செல்வதற்கான இடமாக மியான்மருக்கு அவர்களை அனுப்பி வைக்கின்றன என மிசோரம் மாநிலத்தின் ஆட்கடத்தலுக்கு எதிரான பிரிவின் தலைவரான லாலியன்மாவியா மாவிடியா குறிப்பிட்டார்.

 “இந்த ஏஜெண்டுகளுக்கு மியான்மரில் பாஸ்போர்ட், பயணத்திற்கான ஆவணங்களை வாங்குவது மிகவும் எளிதாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

 “வேறொரு நாட்டின் போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இன்னொரு நாட்டிற்குச் செல்லும் நிலையில் அவர்கள் அங்கு மோசமாக நடத்தப்பட்டாலோ அல்லது ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டாலோ அவர்களுக்கு உதவி செய்வது மிகவும் கடினம். எனினும் அவர்கள் இவ்வாறு பயணம் செய்யும் போது இந்தப் பெண்களை அதை உணர்வதில்லை.”

இருதரப்பு உறவுகள்

யாங்கோன் நகரிலிருந்து செப்டெம்பர் மாதத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்த 17 வயது பெண்ணையும், அவரோடு கூடவே மற்ற ஏழு மணிப்பூர் பெண்களையும் மீட்டு, அவர்களது தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைப்பதென்பது இரு நாடுகளையும் சேர்ந்த அதிகாரிகளுக்கு, ஒரு சோதனை முயற்சியாக இருந்தது.

 “மணிப்பூரிலிருந்து சென்றிருந்த பெண்களை மீட்பது எளிதாகவே இருந்தது. ஆனால் அவர்களை திரும்பவும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவதென்பது உண்மையிலேயே எங்களுக்கு நல்லதொரு படிப்பினையாகவே இருந்தது” என யாங்கோனில் உள்ள யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன் – ஐச் சேர்ந்த மவுங் மவுங் வின் கூறினார்.

மியான்மருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 1947ஆம் ஆண்டின் பர்மா குடியேற்ற உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்த இந்தப் பெண்களை விடுவிப்பதற்குத் தேவைப்பட்ட மீட்புறுதிப் பத்திரங்களுக்கான தொகையைச் செலுத்த அந்த அறக்கட்டளை தங்கள் சொத்தை அடமானம் வைக்க வேண்டியிருந்தது எனவும் அவர் கூறினார்.

இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையே உருவாகியுள்ள புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்த ஆட்கடத்தல் பாதையில் உள்ள ஓட்டைகளை அடைப்பதை நோக்கமாகக்  கொண்டுள்ளது.

ஒப்புதலுக்கான கடைசி கட்டத்தில் உள்ள இந்த ஒப்பந்தம் இத்தகைய கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, விரைவில் தாய்நாட்டிற்கு திரும்ப அனுப்பி வைப்பதை உறுதிப்படுத்துவது, இத்தகைய ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் மீது வழக்கு தொடுப்பது ஆகியவற்றுக்கான வழிகளை கண்டறிந்து வருகிறது.

“இத்தகைய கடத்தலால் பாதிக்கப்படுபவர்களை மீண்டும் தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்த  இரு நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள அமைப்புகளின் கூட்டணி மிகவும் அவசியமாகும்” என இந்த இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற கர்பி கூறினார்.

“மணிப்பூர் மாநிலப் பெண்களைப் பொறுத்தவரையில் யாங்கோனில் இருந்த எங்களின் கூட்டாளிகளுடன் நாங்கள் ஒத்துழைத்து, அவர்களை திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மிகவும் கடினமாக முயற்சித்தோம். வரைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இருந்திருக்குமானால் இது மிகவும் எளிதாக முடிந்திருக்கும்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->