‘’ நான் வீட்டிற்கு போக முடியாது’’: பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டுத் தப்பிப் பிழைத்தவருக்கு திகிலூட்டும் மரண அச்சுறுத்தல்கள்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 8 November 2017 13:01 GMT

A woman walks along a road during heavy rains in Agartala, India May 18, 2016. REUTERS/Jayanta Dey

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, நவ. 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கடத்தப்பட்டு, ஆறு ஆண்டுகள் விபச்சாரத் தொழிலுக்கு விற்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பதின்பருவப் பெண் அவரைக் கடத்தியவர் கொன்றுவிடுவதாக மிரட்டியதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள தன் இல்லத்தில் இருந்து வெளியேற நேர்ந்துள்ளது. இத்தகையோரின் நீதிக்காக பிரச்சாரம் செய்துவருவோருக்கு அதிகரித்து வரும் பிரச்சனையை சித்தரிப்பதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

பெற்றோருடனும் உடன்பிறந்தோருடனும் மீண்டும் இணைந்த சில நாட்களிலேயே தன்னைக் கடத்திச் சென்றவரின்  குடும்பத்தினர் மும்பையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தன் சுயவிருப்பத்துடனேயே தான் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்ல வேண்டும் என மிரட்டியதாக அந்தப் பெண் கூறினார்.

 “என்னைக் காணாமலே செய்து விடுவோம் என்று அவர்கள் சொன்னார்கள்” என தெற்கு 24 பர்காணா மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் இருந்து சில மணி நேரப் பயண தூரத்தில் உள்ள கொல்கத்தாவில் தனது பாட்டியின் வீட்டில் இருந்தபடி ஒரு தொலைபேசி பேட்டியில் அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“உறவினர் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது என்னைக் கடத்திச் சென்றதையும், என்னை விற்றதையும், அடித்ததையும், மோசமாக நடத்தியதையும் நான் மறந்து விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். என்னால் முடியாது என்று நான் அவர்களிடம் சொல்லி விட்டேன். இப்போது  என்னால் வீட்டுக்குத் திரும்பிப் போக முடியவில்லை.”

ஆட்கடத்தல்காரர்கள்  அவர்களை மிரட்டுவது, வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆகியவற்றால் இத்தகைய சூழ்நிலைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து ஓடி விடுவது, பள்ளிகளில் இருந்து நின்று விடுவது என தொடர்ந்து பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

 “கிராமங்களில், ஆட்கடத்தல்காரர்கள் எப்படி மிகவும் வெளிப்படையாக இந்தப் பெண்களை அச்சுறுத்துகிறார்கள் என்பதையும், குடும்ப உறுப்பினர்களைத் தாக்குவதையும், அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதையும் நாங்கள் பார்த்து வருகிறோம்” என இவ்வாறு பிழைத்தவர்களுக்கு மறுவாழ்வு உருவாக்கித் தரும் லாபநோக்கற்ற அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளரான சுபஸ்ரீ ரப்தான் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களில் அரை டஜனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேற்கு வங்கத்தில் உள்ள அறக்கட்டளையான கொரான்போஸ் க்ராம் பிகாஷ் கேந்திரா (ஜிஜிபிகே) விடம் பாதுகாப்பு கோரியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி வணிகரீதியான பாலியல் தொழிலாளிகளில் 1கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் இத்தகைய பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டவர்கள் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளில் ஐந்தில் இரண்டு வழக்குகளை விட குறைவானவற்றில் தான் அவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது.

இந்தப் பெண்ணின் சொந்த மாவட்டமான தெற்கு 24 பர்காணா மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பகுதியாக இருக்கிறது. 2010க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறை பதிவு செய்த ஆட்கடத்தல்களின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்த மாவட்டத்தில்  இவ்வாறு தப்பிப் பிழைத்து வந்த மற்றொருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றங்கள் சுமத்தப்படும் என அவரைக் கடத்தியவர்களால் அச்சுறுத்தப்பட்டதோடு அவரது குடும்பத்தினர் மீது போலியான இரண்டு  எதிர் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் ரப்தான் கூறினார்.

 “தொடர்ச்சியான ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தப் பெண் மீண்டும் பள்ளியில் சேர்ந்தார்” என அவர் கூறினார். “எனினும் தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட பிறகு அவர் மேலும் அதிகமான தாக்குதல்கள் வரும் என்று அஞ்சி பள்ளியிலிருந்து நின்று விட்டார்.”

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி அமைப்புகள் சிறப்பானவையாக இருப்பதில்லை; நீதிக்காக அவர்கள் தனியாகவே போராட வேண்டியிருக்கிறது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

“இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மீதான நெருக்கடி மிக அதிகமாகவே உள்ளது” என மும்பை டாட்டா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தில் பேராசிரியராக உள்ள, ஆட்கடத்தல் தொடர்பான விஷயங்களில் நிபுணரான பி.எம். நாயர் குறிப்பிட்டார்.

“அரசு தரப்பு வழக்கறிஞர்கள்  இவர்களின் சாட்சியத்தையே நம்பியிருக்கின்றனரே தவிர பாலியல் தொழில் மையங்களில் மேற்கொள்ளப்படும் அதிரடி சோதனைகளின் போது சேகரிக்கப்படும் வேறெந்த தடயவியல் ஆதாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொண்டு இவர்களை பயமுறுத்தி வழக்கிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.