×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

அடிமைகளால் அறுவடை செய்யப்பட்ட கரும்பை பயன்படுத்தியதற்காக கர்நாடக சர்க்கரை ஆலை ஒன்று கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Tuesday, 14 November 2017 08:41 GMT

- அனுராதா நாகராஜ்

சென்னை, நவ. 14 (தாமஸ்ன் ராய்ட்டார்ஸ் ஃபவுண்டேஷன்) – கர்நாடக மாநில கரும்புப் பண்ணை ஒன்றிலிருந்து 28 கொத்தடிமைகளை மீட்பது குறித்த விசாரணை இந்தப் பகுதியில் மிகப்பெரியதொரு சர்க்கரை நிறுவனத்தை நோக்கி இட்டுச் சென்றுள்ளது என இது தொடர்பான புலனாய்வில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கின்றனர்.

கரும்புப் பண்ணை ஒன்றின் மேற்பார்வையாளர், அவரது உதவியாளர், பன்னாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் நடத்தப்படும் ஒரு தொழிற்சாலை ஆகியவற்றின் மீது தொழிலாளர்களை கடத்தி வந்ததாகவும், குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியதாகவும், கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டத்தின்  விதிமுறைகளை மீறியதற்காகவும் தாங்கள் ஒரு புகாரை பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாங்கள் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என்று மறுத்ததோடு, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்கை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பன்னாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.

தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையிலோ அல்லது வேறெந்த பொறுப்பின் விளைவாகவோ தங்கள் உழைப்பைச் செலுத்தும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் பற்றிய புகாரில் ஓர் உற்பத்தியாளரை சேர்த்துக் கொள்வதென்பது மிகவும் அரிதான ஒன்று எனவும், இத்தகைய புகார்களில் பொதுவாக இடைத்தரகர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் இதற்குப் பொறுப்பாக்கப்படுவது வழக்கம் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

“கொத்தடிமைக்கான தெளிவான ஆதாரங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்; குறைந்தபட்ச கூலி இந்தத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பதோடு, கரும்பை வெட்டுவதற்காக 14வயதிற்கும் கீழான குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளனர்” என இந்தத் தொழிலாளர்களை மீட்டு வந்த மைசூரு மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த சவுஜன்யா கார்த்திக் தெரிவித்தார்.

அக்டோபர் 12ஆம் தேதியன்று மாநில தொழிலாளர் நலத் துறைக்கு தங்கள் நிறுவனம் தனது தரப்பைத் தெளிவாக்கி கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கும் மேலாக வேறெந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் பன்னாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.

கரும்பை வெட்டுவது, அதை தொழிற்சாலையின் நுழைவு வாயில் வரையில் எடுத்து வருவது ஆகியவற்றுக்கு கரும்பு விவசாயிகளே பொறுப்பு என்றும் இதற்கான விலையை மத்திய, மாநில அரசுகள்தான் நிர்ணயிக்கின்றன என்றும் அந்தக் கடிதம் தெரிவித்துள்ளது.

ஏன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது என பதிலளிக்குமாறும் தொழிலாளர் நல ஆய்வாளர் அனுப்பியுள்ள அறிவிப்பு “முழுமையற்ற தகவலின்” அடிப்படையில் அமைந்த ஒன்று எனவும், இந்த வழக்கை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதம் கேட்டுக் கொண்டுள்ளது.

நஞ்சன் கூடு நகரத்திற்கு அருகிலுள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை தொழிலாளர்களை தவறாக நடத்துவதிலோ அல்லது அவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதிலோ  ஈடுபடவில்லை என மறுத்துள்ளது. இந்தத்  தொழிற்சாலைக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் அருகிலுள்ள வயல்களிலிருந்து பெறப்படுகிறது.

 “வயல்களில் சட்டத்தைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வது எங்களுடைய வேலை அல்ல. இந்தக் கரும்பை சப்ளை செய்யும் ஒப்பந்தக்காரருடன் மட்டுமே நாங்கள் தொடர்பு வைத்துக் கொள்கிறோம்” என தன் முழுப்பெயரை தெரிவிக்க மறுத்து விட்ட  தொழிற்சாலையின் பொது மேலாளர் வேலுசாமி கூறினார்.

“தொழிற்சாலைக்குள் தொழிலாளர் நலன் குறித்த சட்டங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். எங்களது நிலைபாட்டை தொழிலாளர் நலத் துறைக்கும் தெரிவித்துள்ளோம். இந்தியா முழுவதிலும் இவ்வாறுதான் இந்த வேலைகள் நடைபெறுகின்றன.”

1976ஆம் ஆண்டிலேயே இந்தியா கொத்தடிமை உழைப்பிற்குத் தடை விதித்தபோதிலும் இந்த செயல்பாடு பரவலாக நீடித்தே வருகிறது. தொழில் முதலாளிகளிடமிருந்தோ அல்லது கடன்காரர்களிடமிருந்தோ வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட தலித் மற்றும் ஆதிவாசி இனங்களைச்  சேர்ந்த பல லட்சக்கணக்கானவர்கள் வயல்களிலும், செங்கல் சூளைகளிலும், ஆலைகளிலும், பாலியல் தொழில் மையங்களிலும் அல்லது வீட்டு வேலைகளிலோ ஈடுபட்டு வருகின்றனர்.

செப்டெம்பரில் மைசூருவிற்கு அருகேயுள்ள வயலில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களின் ஒருவர்தான் கவுரம்மா ராஜா.

இவ்வாறு மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் அளித்த அறிக்கைகளில் அவர்களது செலவுகளுக்காகவும், உணவுக்காகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வாரத்திற்கும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது என்றும் தாங்கள் கரும்பை வெட்டுவது, அதைக் கட்டாகக் கட்டுவது, அந்தக் கட்டுகளை எடுத்துச் செல்வது என நாளொன்றுக்கு 12 மணிநேரம் வரை வேலை செய்வதாகவும் தெரிவித்திருந்தனர்.

“நான் கற்பனை கூட செய்திராத  ஒரு வாழ்க்கையாகவே அது இருந்தது “ என மீட்கப்பட்டதற்குப் பிறகு ஒரு தொலைபேசி மூலமான பேட்டியில் அவர் தாம்ஸன் ராய்ட்டார்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“நாங்கள் ரூ. 20,000 கடன் வாங்கியிருந்தோம். அதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் நாங்கள் உழைத்திருக்கிறோம். ஆனால் எனது மகன் இறந்தபோது வீட்டுக்குப் போவதற்குக் கூட எனது மேற்பார்வையாளர் என்னை அனுமதிக்கவில்லை. ஒரு சில நாட்கள் விடுப்பு கொடுக்குமாறு நான் அவரிடம் பிச்சை கேட்க வேண்டியதாயிற்று.”

வயல்களில் சுரண்டல், மோசமாக நடத்தப்படுவது ஆகியவை தொடர்ந்து நிகழ்கின்றன என்பதற்கான தெளிவான ஆதாரம் இருக்கிறது என இந்த மீட்புப் பணியில் அரசுடன் ஒத்துழைத்த இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற லாபநோக்கற்ற அமைப்பைச் சேர்ந்த வில்லியம் கிறிஸ்டோஃபர் தெரிவித்தார்.  

போதிய கழிப்பறை இல்லாமல் , குடிநீர் இல்லாமல், விளக்கு வசதி இல்லாமல் தார்ப்பாலின் குடிசைகளுக்குள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைமைகளில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->