×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தல் குறித்த இந்தியாவின் புள்ளிவிவரங்கள் அக்குற்றத்தின் உண்மை நிலையை மூடி மறைப்பதாக உள்ளது என பிரச்சாரகர்கள் கருத்து தெரிவிப்பு

by Anuradha Nagaraj and Nita Bhalla | Thomson Reuters Foundation
Monday, 4 December 2017 13:54 GMT

ARCHIVE PHOTO: A 16-year-old girl with her hand decorated with henna stands inside a protection home on the outskirts of New Delhi November 9, 2012. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

  - அனுராதா நாகராஜ் மற்றும் நிதா பல்லா

சென்னை/புதுதில்லி, டிச. 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – இந்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டை விட 2016ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன. எனினும் அரசின் இந்தப் புள்ளிவிவரங்கள் இக்குற்றத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கத் தவறியுள்ளது என இதுகுறித்த பிரச்சாரகர்கள் திங்கட்கிழமையன்று கருத்துத் தெரிவித்தனர்.

குற்றங்கள் குறித்த பதிவுகளுக்கான தேசிய குற்ற ஆவணப் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் கடந்த ஆண்டில் ஆட்கடத்தல் தொடர்பாக 8,132 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் 2015 ஆம் ஆண்டில் இது 6,877 ஆக இருந்தது என்றும் இதில் அதிகமான வழக்குகள் மேற்கு வங்கத்தில் பதிவாகியுள்ளன என்றும் அதைத் தொடர்ந்து அதிகமான வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கின்றன.

பொது மக்களிடையே அதிக அளவிலான விழிப்புணர்ச்சி, அதிகரிக்கப்பட்ட காவல்துறையினருக்கான பயிற்சி ஆகியவற்றின் விளைவாக ஆட்கடத்தலுக்கு எதிரான  சட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என இது குறித்த செயல்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனினும் ஆட்கடத்தல் தொடர்பான பல சம்பவங்கள் வெளியே தெரிவிக்கப்படுவதில்லை. மேலும் மக்களில் பலரும் இக்குற்றம் குறித்து இன்னமும் அறியாதவர்களாகவே உள்ளனர்  அல்லது இத்தகைய குற்றங்கல் குறித்து காவல்துறையின் உதவியை நாடுவதற்கான நம்பிக்கை இல்லாத நிலை உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்ற போக்கு மிகவும் சரியானதாகவே உள்ளது. ஆட்கடத்தல் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான அனைவரும் கவலை கொள்வதற்கான விஷயமாகவும் இது அமைகிறது” என  அடிமைத்தனத்திற்கு எதிரான அறக்கட்டளையான த ஃப்ரீடம் ப்ராஜெக்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த அனிதா கன்னையா கூறினார்.

 “எனினும் இந்த எண்ணிக்கையே அடித்தளத்தில் உள்ள யதார்த்த நிலையிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையானது தேசிய குற்ற ஆவணப் பணியகம் அறிக்கை கூறும் புள்ளிவிவரங்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.”

கடந்த ஆண்டில் சுமார் 4 கோடி பேர் நவீன அடிமைகளாக – அதாவது கட்டாய உழைப்பில் தள்ளப்பட்டவர்களாக அல்லது கட்டாயத் திருமணத்திற்கு ஆட்பட்டவர்களாக- உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு  மற்றும் உரிமைகளுக்கான குழுவான வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் ஆகியவை தெரிவித்திருந்தன.

இந்தியாவை மையமாகக் கொண்ட தெற்காசியப் பகுதிதான் உலகத்திலேயே ஆட்கடத்தல்  மிகவேகமாக வளர்ந்து வருகின்ற பகுதியாக உள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் கிராமப்புற ஏழைப்பிரிவிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். நல்ல வேலை தருவதாக உறுதியளித்து ஆட்கடத்தல்காரர்களால் இவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டு, இறுதியில் அவர்களோ அல்லது அவர்களது குழந்தைகளோ வயல்களில், அல்லது செங்கல் சூளைகளில், வீடுகளில் வேலை செய்பவர்களாக அடிமையாக்கப்பட்டோ அல்லது பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படும் நிலையை எதிர்கொள்கின்றனர்.

நவம்பர் 30ஆம் தேதியன்று குற்றங்கள் குறித்த பதிவுகளுக்கான தேசிய குற்ற ஆவணப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட 23,117 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குழந்தைகள். பெண்கள், சிறுமிகள் இதில் 55 சதவீதம் பேராக உள்ளனர். http://ncrb.nic.in/

இத்தகைய ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் கட்டாய வேலைக்காக கடத்தப்பட்டவர்கள். 33 சதவீதம் பேர் விபச்சாரம், குழந்தைகளை வைத்து ஆபாச படங்களையும் திரைப்படங்களை உருவாக்குதல் போன்ற பாலியல் ரீதியான சுரண்டலுக்காக கடத்தப்பட்டவர்கள் ஆவர்.

வீட்டு வேலைக்காக அடிமைத்தனத்தில் ஆழ்த்துவது, கட்டாயத் திருமணம், பிச்சையெடுத்தல், போதைப் பொருட்களை விற்றல், அவர்களது உடல் உறுப்புகளை அகற்றி விற்பனை செய்வது ஆகியவற்றுக்காகவும் இக்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்படுகின்றனர் என்பதையும் தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இளம் பெண்கள், குறிப்பாகப் பாலியல் ரீதியான அடிமைத்தனத்தின் மூலம் பெருமளவிற்கு ஆபத்தில் உள்ளனர் என்ற தங்களின் சொந்த ஆய்வு முடிவுகளை வலுப்படுத்துவதாகவே இந்தப் புள்ளிவிவரங்கள் உள்ளன என ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சாரகர்கள் குறிப்பிட்டனர்.

“கிட்டத்தட்ட கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் வழக்குகள் குறித்த எங்களின் வேலையிலிருந்து இளம் பெண்கள், குறிப்பாக 15 முதல் 18 வயது வரையிலான இளம் பெண்களே பெரும்பாலும் அதிகமான எண்ணிக்கையில் எப்போதும் கடத்தப்பட்டு வருகின்றனர் என்பதை நாங்கள் பார்த்து வந்திருக்கிறோம்” என ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞரான அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.

“அவர்கள் மிகவும் இளமையோடு உள்ளனர் என்பதால் பாலியல் வர்த்தகத் தொழிலில் அவர்களுக்கான ‘தேவை’ அதிகமாக உள்ளது” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமீப ஆண்டுகளில் ஆட்கடத்தல்  தொடர்பான குற்றங்களில் அரசின் பதில் நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன  என்ற போதிலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு,  நீதி, உதவி ஆகியவை இன்னமும் கைக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது எனவும் இதுகுறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கென அரசு இணைய வழியிலான மேடை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, வங்கதேசம், பஹ்ரைன் போன்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களையும் செய்து கொண்டுள்ளது. இதற்கான சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு இது குறித்த பயிற்சி அளிப்பதற்கென அறக்கட்டளைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆட்கடத்தல்  குறித்த  இந்தியாவின் முழுமையானதொரு முதல் சட்டத்தை கொண்டுவரவும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தச் சட்டமானது தற்போதுள்ள சட்டங்களை ஒன்றுபடுத்தி, இதில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் என்பதோடு இந்த வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்களுக்கும் ஏற்பாடு செய்யும்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ் மற்றும் நிதா பல்லா; எழுதியவர்: நிதா பல்லா, எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->