ஆட்கடத்தல் மன்னர்களை குறிவைக்கிறது இந்தியா

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Wednesday, 13 December 2017 13:59 GMT

In this file photo, a homeless girl, covered with a blanket, sleeps on a road divider along a street in Mumbai May 30, 2011. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

 

மும்பை, டிச. 14 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் கிராமத்திலிருந்து பாலியல் தொழில்மையத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பதிவு செய்து, பணம் கொழிக்கும் இத்தொழிலை நடத்திவரும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக தொடர்ந்து வழக்குகளை வளர்த்தெடுப்பது போன்ற புதிய முன்முயற்சிகளின் மூலம் பாலியல் தொழிலுக்காக ஆட்களை கடத்தும் முக்கிய நபர்களை இந்தியா குறிவைக்கிறது என புதன்கிழமையன்று இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

இத்தகைய கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள வலிமையானவர்களுக்கு எதிராக போதிய சான்றுகளை திரட்டுவதற்கான முயற்சி ஆட்களை கடத்தி  விற்பனை செய்யும் சட்டவிரோதமான வர்த்தகம் மிகவும் சுறுசுறுப்பாக நடந்து வருகின்ற, இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் விட அதிகமான அளவில் ஆட்கடத்தல் குறித்த வழக்குகள் வெளிப்படும் கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் துவங்கியது.

இவ்வாறு கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டு, பாலியல் தொழில்மையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டாலும்கூட, பொதுவாகவே ஆட்கடத்தல் தொழிலை நடத்துபவர்கள் இத்தகைய கைது, வழக்கு விவகாரங்களிலிருந்து தப்பி விடுகின்றனர் என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

“ஆட்கடத்தல்காரர்கள் ஒரு பெண்ணை கிராமத்திலிருந்து கடத்தி வந்து நகரத்தில் உள்ள பாலியல் தொழில் மையங்களில் எப்படி விற்பனை செய்கிறார்கள் என்ற செயல்முறையின் புள்ளிகளை இணைக்க புலனாய்வு நடவடிக்கைகளுக்கு ஆதாரங்கள் தேவைப்படுகின்றன” என இத்தகைய ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பணிபுரிவதோடு, இந்த ஆய்விற்கும் உதவி செய்து வரும் சஞ்ஜோக் அறக்கட்டளையின் திட்ட மேலாளரான போம்பி பேனர்ஜி கூறினார்.

 “பெரும்பாலான வழக்குகளில் பாலியல் தொழில்மையங்களின் மேலாளர்கள் தாங்கள் எந்தப் பெண்ணையும் விலைக்கு வாங்குவதில்லை என்றும், அவர்களாகவேதான் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர் என்றும் கூறுகின்றனர். எனவே ஆட்கடத்தல்காரர்களைப் பற்றிய  பேச்சை யாருமே எடுப்பதில்லை. ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான இந்த ஆதாரத்தை உருவாக்கி நாங்கள் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறோம்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் பேனர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்கடத்தலில் இரண்டு முக்கிய மையங்களாக விளங்கும் வடக்கு 24 பர்காணா மாவட்டம், தெற்கு 24 பர்காணா மாவட்டம் ஆகியவற்றில் பாலியல் தொழிலுக்காகக்  கடத்தப்பட்டு, பின்பு அங்கிருந்து மீட்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஒன்பது அரசு முறை சாரா அமைப்புகள் அடுத்த வாரத்தில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்டவர்களிடம் தங்கள் கிராமங்களிலிருந்து பாலியல் தொழில் மையங்களுக்கு மேற்கொண்ட பயணத்தை விவரிக்குமாறு கேட்கவிருக்கின்றன.

அவர்களை கடத்திச் சென்றவர்களின் தோற்றம், முகவரி, எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பது போன்ற விவரங்கள் அவர்களிடம் கேட்டறியப்படும்.

ஒரே நபரே அதிகமான எண்ணிக்கையில் பெண்களை கடத்திச் செல்வதில் ஈடுபட்டது  பற்றி அவர்களுக்குத் தெரியுமா என்றும் அவர்களிடம் கேட்டறியப்படும்.

 “இவ்வாறு ஆட்கடத்தல்காரர்கள் பற்றிய சித்திரத்தை நாங்கள் இப்போதுதான் முதன்முறையாக உருவாக்குகிறோம். இவ்வாறு அவர்கள் விற்ற ஒரு பெண் விடுவிக்கப்பட்டு வீட்டிற்குத் திரும்பிய பிறகும் கூட இந்த ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்து பெண்களை கவர்ந்து சென்று விற்றது பற்றிய ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன” என பேனர்ஜி கூறினார்.

கடந்த ஆண்டில் ஆட்கடத்தல் தொடர்பாக 8,132 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் 2015ஆம் ஆண்டில் இது 6,877 ஆக இருந்தது  என்றும் இதில் அதிகமான வழக்குகள் மேற்குவங்கத்திலும் அதைத் தொடர்ந்து மேற்குப்பகுதி மாநிலமான ராஜஸ்தானிலும் பதிவாகியுள்ளன என்றும் குற்றங்கள் குறித்த அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்தியாவை மையமாகக் கொண்ட தெற்கு ஆசியப் பகுதி உலகத்திலேயே மிகவேகமாக ஆட்கட்த்தல் குற்றங்கள் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு முறை சாரா அமைப்புகளின் கருத்துப்படி இங்கு உள்ளதாக மதிப்பிடப்படும் 2 கோடி வணிகரீதியான பாலியல் தொழிலாளிகளில் 1 கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகவே கடத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

கடந்த ஆண்டில் ஆட்கடத்தல் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 11,000 பேர் கைது செய்யப்பட்ட போதிலும், சுமார் 160 பேர் மட்டுமே அக்குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளனர் என்பதையும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தங்களது குற்றங்கள் குறித்த தடயங்களை அழிப்பதற்கு மிகவும் புதுமையான வழிகளை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆட்கடத்தல்காரர்கள் அவர்களை மிரட்டவும், வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என கட்டாயப்படுத்தி வரும் நிலையில்  இதிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்ந்து பயத்திலேயே வாழ்ந்து வருவதோடு, தங்களின் வீடுகளிலிருந்து ஓடி விடுகின்றனர்; அல்லது பள்ளிக்குச் செல்லாமல் நின்று விடுகின்றனர்.

“ஆட்கடத்தல்காரர்கள் தங்களுக்கு எதிரான வழக்குகளை முறையாக பின்பற்றி வரும் நிலையில் மீட்கப்பட்டவர்கள் அவர்களை கடத்தியவர்களால் அச்சுறுத்தப்படும் நிகழ்வுகள் குறித்த 100 வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன என்றும் எங்களுக்குத் தெரியும்” என பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக செயல்பட்டுவரும் லாபநோக்கற்ற அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான சுபஸ்ரீ ரப்தான் கூறினார்.

“ஆட்கடத்தல்காரர்கள் பலருக்கும் எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. எனினும் இவ்வாறு திரட்டப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் எவ்வாறு  ஆட்கடத்தல்காரர்கள் எவ்வித அச்சமும் இன்றி எப்படி வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் என்பதை தெரிவிப்பதாக இருப்பதோடு, அதிகாரிகளின் கண்களை திறப்பதற்கான ஒரு வழியாகவும் உள்ளன.”

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.