தாஜ்மகால் நகரம் ஆக்ராவில் கொத்தடிமைகளாக இருந்த மூன்று ரோஹிங்கியா குடும்பங்கள் விடுவிப்பு

Monday, 18 December 2017 10:30 GMT

The Taj Mahal is reflected in a puddle in Agra, India August 9, 2016. REUTERS/Cathal McNaughton

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

 

மும்பை, டிச. 18 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மியன்மரிலிருந்து வெளியேறிய 13 பேரை உள்ளடக்கிய மூன்று ரோஹிங்கியா குடும்பங்கள் கடந்த ஓராண்டாக ஆக்ராவில் குப்பை பொறுக்குபவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலிருந்து கடந்த வார இறுதியில் விடுவிக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வங்கதேசத்தில் அகதிகள் முகாமில் இருந்த ஒரு ஏஜெண்ட் அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து இந்த மூன்று குடும்பங்களும் இந்தியாவிற்கு வந்தன. எனினும் எந்தவித ஊதியமும் இன்றி நீண்ட நேரம் அவர்கள் வேலை செய்து வந்துள்ளனர் என அதிகாரிகளுக்கு இது குறித்த தகவலை வழங்கிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

வங்க தேசத்தில் உள்ள அகதிகளின் முகாம்கள் ஆட்கடத்தல்காரர்கள் தீவிரமாக செயல்படுவதற்கான களமாக உள்ளது எனவும், சமீபத்தில் மியான்மரில் இருந்து வெளியேறுவோரின் அளவும் அதிகரித்துள்ள நிலையில் மேலும் அதிகமானோர் இத்தகைய அபாயத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எச்சரித்து வந்துள்ளனர்.

 

 “இவர்களை வேலைக்கு எடுப்பவர்கள் இந்த ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்துள்ளதோடு, அவர்கள் செய்த வேலைக்காக இது சரிசெய்யப்படுகிறது என்று கூறி அவர்களுக்கு எந்தவித கூலியும் கொடுப்பதில்லை” என இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற நேஷனல் கேம்பெய்ன் கமிட்டி ஃபார் எராடிகேஷன் ஆஃப் பாண்டட் லேபர் என்ற அமைப்பின் நிறுவனரான நிர்மல் கொரானா கூறினார்.

 

“ஒரு வேலையும் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற எண்ணத்துடன்தான் அவர்கள் இந்தியாவிற்கு வந்தனர்…. எனினும் ஒரு பாலிதீன் குடிசையில்தான் அவர்கள் வசித்து வந்தனர் என்பதோடு, இதற்கான வாடகையும் கூட நடைமுறையில் இல்லாத கூலியில் இருந்து பிடித்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.”

 

இது குறித்த விசாரணை நடந்து வருவதால் இவர்களை வேலைக்கு அமர்த்தியவர் மீது காவல்துறை வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்த அதிகாரிகள் இந்த அகதிகள் கொத்தடிமைகளாக்கப்பட்டிருந்தனர் என்பதையும் உறுதி செய்தனர்.

 

“குப்பை மேடுகளிலிருந்து இவர்கள் ப்ளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வந்துள்ளனர். நாங்கள் அவர்களை விடுவிக்கச் சென்றபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தனர்” என ஆக்ராவிலுள்ள குற்றவியல் நீதிபதியான ராஜு குமார் குறிப்பிட்டார்.

 

ரோஹிங்கியா தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலும் அதைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் நடத்திய பதில்தாக்குதல் நடத்திய ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குப் பிறகு வெளியேறிய 6, 60,000 பேர் உட்பட கிட்டத்தட்ட 8, 70,000 ரோஹிங்கியா பிரிவினர் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

 

எனினும் இந்தியாவிற்குள் அவர்கள் வருவது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கியது. கடந்த பத்தாண்டு காலத்தில் மியான்மரில் இருந்து வெளியேறிய கிட்டத்தட்ட 40,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

 

தாஜ் மஹால் இருக்கும் நகரமான ஆக்ரா மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் நகரமாகும். எனவே உள்ளூர் மக்களில் இருந்து அகதிகளை வேறுபடுத்தி அடையாளம் காண்பது மிகவும் கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதேபோன்ற சூழ்நிலைகளில் மேலும் அதிகமான மக்கள் சிக்கியிருக்கின்றனரா என்பதை காண்பதற்கென இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா குடும்பங்களிடையே ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த இந்தியாவின் சட்டங்களை அவர்கள் தொடர்பான வழக்குகளிலும் பயன்படுத்த வேண்டும் எனவும் செயல்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.