போனஸ் கோரிய தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டனர் தேயிலைத் தோட்ட முதலாளிகள்

Monday, 18 December 2017 12:25 GMT

ARCHIVE PHOTO: A tea garden worker plucks tea leaves inside a tea estate in Assam, India, April 21, 2015. REUTERS/Ahmad Masood

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, டிச. 18 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - போனஸ் கோரிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இரண்டு தேயிலை தோட்ட முதலாளிகளை அஸ்ஸாம் மாநில காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் உலகத்தின் மிகப்பெரிய தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் தொழிலாளர்கள் எத்தகைய சுரண்டலுக்கு ஆட்பட்டு வருகின்றனர் என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது என இது குறித்த இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

துர்கா பூஜா திருவிழா சமயத்தில் கொடுத்திருக்க வேண்டிய இந்த ஆண்டிற்கான போனஸ் தொகையைக் கொடுப்பதில் ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து தொழிலாளர்களின் ஒரு குழு கிளர்ச்சி செய்தபோது அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள போகிதோலா தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில்  குறைந்தது 15 தொழிலாளர்கள் காயமுற்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

“இந்த உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய திருவிழா போனஸை டிசம்பர் 12ஆம் தேதிக்குள் தருவதாக தொழிலாளர் நலத்துறையிடம் எழுத்துபூர்வமாக உறுதியளித்திருந்தனர்” என காவல்துறை அதிகாரி சங்கர் தயாள் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

  “டிசம்பர் 13ஆம் தேதியன்று இதுபற்றி மேலும் பேசுவதற்காக உரிமையாளரின் பங்களாவிற்கு தொழிலாளர்கள் அழைக்கப்பட்டபோதுதான் இந்த துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.”

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலைத் தொழில் கடந்த பல ஆண்டுகளாகவே நெருக்கடியில் இருந்துவருகிறது. கொத்தடிமை முறை, மிகவும் சுரண்டல் நிரம்பிய வேலை நிலைமைகள் ஆகியவற்றின் விளைவாக தொழிலாளர்கள் குறித்த சச்சரவுகள் அதிகரித்து தேயிலைத் தோட்டங்கள் மூடப்படும் நிலைக்கு வழிவகுத்துள்ளது.

தேயிலைத் தோட்ட இனத்தவர் என்று அழைக்கப்படும் இவர்களின் முன்னோர்களான  பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அன்றைய பிரிட்டிஷ் முதலாளிகள் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தினர். கடந்த சில காலமாகவே இவர்களிடையே அமைதியின்மை நிலவி வருகிறது என இது குறித்த இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இத்தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோரின் வருமானம் சாப்பிடுவதற்கும், அவர்களது குடும்பங்களின் மருத்துவ தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கவில்லை என தொண்டு அமைப்பினர் தெரிவித்தனர்.

“மற்றவர்களைப் போலவே, போகிதோலா தேயிலைத் தோட்ட நிர்வாகமும் கூட மிகக்  குறைந்த ஊதியமே தந்து வருகிறது என்றும், குறைந்தபட்ச தினசரி ஊதியமான ரூ. 137-ஐ வழங்குவதற்கு அந்த நிர்வாகம் மிகச் சமீபத்தில்தான் ஒப்புக் கொண்டது என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின்  உரிமைகளுக்காகப் போராடி வரும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு அமைப்பான பஜ்ரா வைச் சேர்ந்த ஸ்டீஃபன் எக்கா கூறினார்.

“இந்தத் தொழிலாளர்கள் மனிதர்களாகவே நடத்தப்படுவதில்லை. முதலாளிகள் அவர்களோடு நடந்து கொள்ளும் முறையிலேயே ஒருவிதமான அகங்காரம் இருந்து வருகிறது.

திருவிழா போனஸான 14 சதவீத போனஸை தருவது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற போகிதோலா தேயிலைத் தோட்ட முதலாளிகள் தயங்கிய நிலையில், கிளர்ச்சியுற்ற தொழிலாளிகள் கடந்த புதன்கிழமையன்று தங்களுக்குச் சேர வேண்டிய பாக்கித் தொகையைக் கோரி முதலாளிகளின் பங்களாவை சூழ்ந்து கொண்டனர்.

இதற்குப் பதிலடியாக, தேயிலைத் தோட்ட முதலாளிகள் ஒரு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி ஆகியவற்றை க் கொண்டு அவர்களைச் சுட்டனர் என காவல்துறை அதிகாரி தயாள் கூறினார். கொலை செய்ய முயற்சித்ததாகவும், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாகவும் தேயிலை த் தோட்ட முதலாளிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 “செப்டெம்பர் மாதத்தில் போனஸ் தரப்பட வேண்டிய துர்கா பூஜா நேரத்தில் அவர்களின் இல்லத்தில் விளக்குகள் எரியவில்லை; புதிய ஆடைகள் வாங்கப்படவில்லை; விழாக்கோலம் ஏதுமற்றதாகவே அந்த விழா அவர்களுக்குக் கழிந்தது” என இந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதால் பெயர் சொல்ல விரும்பாத அஸ்ஸாம் மாநிலத்தின் அகில ஆதிவாசி மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

“தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு தொழிலாளர்கள் சட்டபூர்வமான வழிகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களில் அவர்களது பொறுமைக்குப் பதிலாக நம்பிக்கையைத் தான் அவர்கள் இழந்தார்கள். கடந்த வாரம் செய்த வேலைக்கான ஊதியத்தைக் கோரியதற்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.