×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பளபளப்பைத் தேடி: மைக்காவின் மீதான பெருநிறுவனங்களின் செயலற்ற தன்மை இந்தியக் குழந்தைகள் மரணத்தை எதிர் நோக்க வழி வகுக்கிறதா?

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 19 December 2017 11:00 GMT

A shoe belonging to 14-year-old Savita Kumari lies where her body was found after a mica mine collapsed on top of her near Kamta village in India's eastern state of Jharkhand on March 25, 2017. Handout via Kailash Satyarthi Children's Foundation

Image Caption and Rights Information

- நீதா பல்லா

கிரித், ஜார்க்கண்ட், டிச.19 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கிழக்கிந்திய பகுதியில் உள்ள சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுவது என்ற உலகளாவிய பெருநிறுவனங்களின் உறுதிமொழிகள் இதுவரை எதற்கும் வழிவகுக்கவில்லை என்பதை உணர்ந்தபோது, எட்டு மாதங்களுக்கு முன்னால் மைக்கா சுரங்கம் ஒன்றில் உயிரோடு புதைக்கப்பட்ட 12 வயதான லக்ஷ்மி குமாரியின் குடும்பத்தின் துயரம் ஆற்றமையாக மாறிப்போனது.

ஒப்பனைப் பொருட்களுக்கும் காருக்கான வண்ணங்களுக்கும் பளபளப்பைத் தரும் கனிமத்திற்கான இடிந்துவிழும் நிலையில் உள்ள சட்டவிரோதமான சுரங்கங்களின் அடியாழத்தில் இந்தியக் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. எனினும் அவர்களின் மரணங்கள் மறைக்கப்படுகின்றன என்பதை கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்புதான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் கண்டறிந்திருந்தது.

இரண்டே மாதங்களில் ஏழு குழந்தைகள் இறந்து போயின என்ற கண்டுபிடிப்பு மட்டுமே தங்களுக்குப் பொருட்களை வழங்கிவரும் சப்ளை சங்கிலித் தொடரை சுத்தப்படுத்துவோம் என்று இந்தியாவிலிருந்து மைக்காவை வாங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் உறுதியேற்கவும், இத்துறையை சட்டபூர்வமாக்கவும், ஒழுங்குபடுத்தவுமான திட்டங்களை விரைவுபடுத்துவது என அரசு அதிகாரிகள் உறுதிபூணவும் அது உறுதி செய்தது. எனினும் இந்தியாவில் பெருமளவில் மைக்கா உற்பத்தி செய்யும் பகுதிகளான ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களுக்கு சமீப வாரங்களில் மீண்டும் சென்றபோது, கண்காணாத பகுதிகளில் உள்ள, கைவிடப்பட்ட பூதமான இந்த சுரங்கங்களில் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர் என்பதை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் கண்டறிந்தது.

லஷ்மி மற்றும் இதர மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தபட்சமாக ஒன்பது பேர் ஒழுங்குபடுத்தப்படாத சுரங்கங்கள் இடிந்து விழுந்ததன்  விளைவாக இந்த ஆண்டு உயிரிழந்தனர் என்பதை உள்ளூர் பத்திரிக்கை செய்திகளோடு கூடவே உள்ளூர் மக்கள், அரசு அதிகாரிகள், பொதுநல ஆர்வலர்கள் ஆகியோரிடம் பேட்டி கண்டபோது தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரித் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் லஷ்மியும் பதின்பருவச் சிறுமி ஒருவர் உள்ளிட்ட இதர மூன்று பேரும் கடந்த மே 1 ஆம் தேதியன்று உயிரிழந்தனர்.

சுரங்கம் இடிந்து விழுந்துவிட்டது என்ற தகவல் அறிந்ததுமே தன் கிராமத்திலிருந்து அந்த தற்காலிக சுரங்கத்தை நோக்கி விரைந்த பர்வாதியா தேவி ஒரு மணி நேரம் உயரத்தை நோக்கிச் சென்றபோது காலம் கடந்திருந்தது.

 “வெறும் கைகளால்தான் நாங்கள் இடிபாடுகளைத் தோண்டியெடுத்தோம். என் இளைய மகள் கைகளால் சுரண்டியபடியே, கால் ஒடிந்துபோன நிலையிலும் தவழ்ந்தபடி தன்னை இழுத்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம்” என துபா கிராமத்தில் இருக்கும் தன் மண் குடிசைக்கு வெளியே இன்னமும் கூட நடக்க முடியாத நிலையில் இருந்த 10 வயது மகளுக்கு அருகில் அமர்ந்தபடி பர்வாதியா கூறினார்.

 “ஆனால் நாங்கள் அவளைக் கண்டுபிடித்தபோது லஷ்மி இறந்துபோயிருந்தாள். அவளிடம் மூச்சும் இல்லை; உயிரும் இல்லை.”

அதிகமாகவே இருக்கும் இறப்புகள்

இத்தகைய சம்பவங்களில் உயிரிழப்பு இந்த ஒன்பது பேரை விட அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் இறந்து போனவர்களின் சடலங்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்படுவதில்லை; அல்லது இந்தச் சுரங்கங்களை நடத்துபவர்களால் சந்தடியின்றி காடுகளில் உடனடியாக எரிக்கப்பட்டுவிடுகின்றன எனவும் இதுகுறித்த இயக்கத்தினர் அஞ்சுகின்றனர்.

இருந்தபோதிலும் குழந்தைகள் தங்களை அபாயத்திற்கு ஆளாக்கிக் கொள்கின்றனர் என்ற நிலையில் 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து மைக்காவை சப்ளை செய்து வரும் சங்கிலித் தொடரில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுவதற்கென கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெரு நிறுவனங்களின் உதவியோடு உருவான முன்முயற்சி நடைமுறையில் எந்தவிதமான சாதகமான விளைவையும் ஏற்படுத்தவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Local residents dig through the rubble to find the body of 14-year-old Savita Kumari who was buried alive after a mica mine collapsed near Kamta village in India's eastern state of Jharkhand on March 25, 2017. Handout via Kailash Satyarthi Children's Foundation

ஒப்பனைப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களான எஸ்டீ லாடர், லா ஓரியல் மற்றும் ஜெர்மனியின் மருந்து மற்றும் வேதியியல் பொருட்களுக்கான குழுமமான மெர்க் கேஜிஆ உள்ளிட்ட 39 உறுப்பினர்களை உள்ளடக்கிய பொறுப்பான மைக்காவிற்கான முன்முயற்சி (ஆர் எம் ஐ)  மிகக் குறைவான நிதியையே இதுவரை திரட்டியுள்ளது என்பதோடு, குழந்தைத் தொழிலாளர் முறையை தடுப்பதற்கான கிராம அளவிலான நடவடிக்கைகளும் கூட இதுவரை துவங்கப்படவில்லை.

 “ஏராளமான உறுதிமொழிகள் நிரம்பியதொரு முன்முயற்சியாகவே ஆர் எம் ஐ இருந்தபோதிலும், அந்த உறுதிமொழிக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள அது கடந்த வருடத்தில் தவறியுள்ளது” என இந்த முன்முயற்சிக்கு துவக்கம் முதல் ஆதரவளித்து வந்து, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மைக்கா சுரங்க குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டச் செயல்பட்டு வரும் அறக்கட்டளையான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன்ஸ் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த சுஷாந்த் வர்மா கூறினார்.

 “இந்த நிறுவனங்கள் இன்னும் கொஞ்சம் கூடவே செய்திருக்க முடிந்திருக்குமோ? ஆம் என்பதே இதற்கான பதில். அவர்களிடம் ஓர் ஆண்டு கால அவகாசம் இருந்தது. எனினும் காண்பிக்கும் அளவிற்கு கீழே இருந்த விஷயங்கள் மிகக் குறைவே. இந்தச் சுரங்கங்களில் குழந்தைகள் இறந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனையை உண்மையிலேயே சமாளிப்பதற்கான அவசர உணர்வு எதுவும் கண்ணில் தென்படவில்லை.”

எனினும் முதல் ஆண்டு என்பது அமைப்பை உருவாக்கவும், உறுப்பினர்களைச் சேர்ப்பது, நிதி திரட்டுவது ஆகியவற்றுக்கான ‘தயாரிப்பு ஆண்டு’தான் என்று பாரீஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர் எம் ஐ அமைப்பு கூறியது. கிராமப்புற மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அடுத்த ஆண்டில்தான் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

“வேறெந்த முன்முயற்சிகளையும் ஒப்பிடும்போது, ஏற்கனவே சுமார் 40 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் சேருவது எனவும்,கூட்டாக நடவடிக்கை எடுப்பது, உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஓர் ஐந்தாண்டு திட்டத்தை  மேற்கொள்வது எனவும் முடிவு செய்துள்ளனர்” என ஆர் எம் ஐயின் நிர்வாக இயக்குநரான ஃபேனி ஃப்ரெமோண்ட் கூறினார்.

“இதைவிட விரைவாக எதுவும் நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை. இதில் தொடர்புடைய அனைவரையும் ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை உள்ளது. இதே போன்ற அமைப்புகளை ஒப்பிடுவீர்களேயானால் இது உண்மையில் மிகக் குறுகிய கால அவகாசமே ஆகும்.”

இந்த அமைப்பிற்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட்டான 12 மில்லியன் அமெரிக்க டாலர்களில் சுமார் 4 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது என்ற நிதி திரட்டலின் மோசமான நிலை பெரு நிறுவனங்களிடையே இது குறித்த உறுதிப்பாடு இல்லை என்பதையே பிரதிபலிக்கிறது என்ற கருத்தை மெர்க் கேஜி ஆ போன்ற ஆர் எம் ஐ உறுப்பினர்கள் மறுக்கின்றனர்.

இந்த நிறுவனங்கள் பலவும் ஊழியர்களின் நேரம், தனித்திறமை போன்ற ஆதாரங்களை பிரத்தியேகமாக இதற்கென ஒதுக்கியுள்ளன என்றும் இவற்றை பண மதிப்பில் எடைபோட முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

“2017ஆம் ஆண்டு என்பது ஆர் எம் ஐ அமைப்பை உருவாக்குவதற்கான தயாரிப்புக் கட்டமே ஆகும்; பங்களிப்புகளை சேகரிப்பதற்கு ஓர் ஆண்டு கூட இன்னும் நிறைவு பெறவில்லை” என தற்போது ஆர் எம் ஐ அமைப்பின் உதவித் தலைவர் பொறுப்பில் உள்ள, 2018ஆம் ஆண்டில் ஆர் எம் ஐ அமைப்பின் தலைவராக செயல்படவுள்ள மெர்க் கேஜி ஆ நிறுவனத்தைச் சேர்ந்த மத்தியாஸ் லெர்கன்ம்யூலர் தெரிவித்தார்.

“2017ஆம் ஆண்டு நிறைவிற்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், தனிப்பட்ட உறுப்பினர்கள் அதிகமாக பங்களிப்பு செலுத்துவதும் இருக்கும். இது ஆர் எம் ஐ யின் திட்டம் முழுவதற்குமான பட்ஜெட் முழுவதையும் எட்டுவதையும், 2018ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தும் கட்டம் துவங்குவதையும் நிச்சயமாக உறுதிப்படுத்தும்.”

Parwatiya Devi is consoled by neighbours after the death of her daughter Laxmi Kumari, 12, who was buried alive when a mica mine collapsed in Duba village in India's eastern state of Jharkhand on May 1, 2017. Handout via Kailash Satyarthi Children's Foundation

மூடிமறைப்பும், நஷ்ட ஈடும்

ஒப்பனைப் பொருட்கள், கார்களுக்கான வண்ணங்களிலிருந்து தொடங்கி, மின்னணுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் வரையிலான நுகர்வுப் பொருட்களில் இடம்பெறும் இந்த வெள்ளி நிறக் கனிமத்தை உலகிலேயே அதிகமான அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஒரு காலத்தில் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்து வந்த 700க்கும் அதிகமான சுரங்கங்களைக் கொண்ட இத்தொழில் வனங்களை அழிப்பதைத் தடை செய்த 1980ஆம் ஆண்டுச் சட்டம், இயற்கையான மைக்காவிற்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிப்பு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள் ஆகியவற்றின் விளைவாக பெரும்பாலான சுரங்கங்கள் மூடப்படும் நிலை உருவானது.

எனினும் சீனாவில் பொருளாதார எழுச்சியின் விளைவாக மைக்காவின் மீதான ஆர்வம் மீண்டும் உருவானதும், ‘இயற்கையான’ ஒப்பனைப் பொருட்கள் மீதான உலகளாவிய ஆர்வம் ஆகியவை சட்டவிரோதமான சுரங்கங்களை நடத்துவோர் இவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்களை நோக்கி விரையவும், அதன் மூலம் பணம் கொழிக்கும் கருப்புச் சந்தை உருவாகவும் வழிவகுத்தது.

இந்தியாவின் மிகவும் வறுமை நிரம்பிய பகுதிகளில் ஒன்றான கிரித் பகுதியின் சிதலமடைந்த சுரங்கங்களில் இருந்து ஐந்து வயது சிறுவர்களிலிருந்து தொடங்கி வெளியே கொண்டுவரும் இந்த வெளிர் நிறக் கனிமத்தின் சப்ளை சங்கிலித் தொடர் பாரீஸ் நகரில் மணம் சூழ்ந்த அழகுசாதனக் கடைகள் வரையில் நீள்கிறது.

சுரங்கங்கள் மற்றும் இதர அபாயகரமான தொழில்களில் 18 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்கள் வேலை செய்வதற்கு இந்தியச் சட்டம் தடை செய்கிறது. எனினும் தினமும் சுமார் ரூ. 200 வரை சராசரியாக வருமானத்தை வீட்டுக்குக் கொண்டு வருகின்ற நிலையில் மிகவும் கொடூரமான வறுமையில் உழலும் குடும்பங்கள் தங்கள் குடும்ப வருமானத்தைப் பெருக்க தங்கள் குழந்தைகளையே நம்பியிருக்கின்றன.

 “எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோது எனது பெற்றோர்களுடன் நான் சுரங்கங்களில் வேலை செய்யத் துவங்கினேன்” என பீகார் மாநிலத்தின் நவாதா மாவட்டத்தில் ஃபாகுனி கிராமத்தில் 40 குடும்பங்கள் கொண்ட மண்ணாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட ஒரு குடியிருப்பில் வசிக்கும் 22 வயது முன்னாள் குழந்தைத் தொழிலாளி வசந்த் குமார் குறிப்பிட்டார்.

“அப்போதெல்லாம் கிராமத்தில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லை. எனவே என்னைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் நான் என் பெற்றோருடன் சென்றேன். … அது மிகவும் அபாயகரமானது என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் வேறு வழியேதும் இல்லை.”

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் மேற்கொண்ட ஆய்வு இத்தகைய குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது காயம்படுதல், மூச்சுவிடுதல் தொடர்பான தொற்றுநோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கொல்லப்படும் அபாயத்தையும் எதிர்நோக்குகின்றனர். இந்த மரணங்களும் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன.

சில நேரங்களில் இந்த மரணங்களைப் பற்றி தகவல் தெரிவிக்கக் கூடாது என சுரங்கத்தை நடத்துபவர்களால் அல்லது இந்த கனிமத்தை விலைக்கு வாங்குபவர்களால் அச்சுறுத்தப் படுகின்றனர்; அல்லது அவர்கள் மவுனம் காப்பதற்கென ‘நஷ்ட ஈட்டுப் பணம்’ கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பணத்தை ஈட்டுவதற்கான வேறு பல வழிகளும் உள்ளதால் இந்த சட்டவிரோதமான தொழில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

உலகளாவிய மைக்கா உற்பத்தியில் இந்த சட்டவிரோதமான வர்த்தகத்தின் பங்கு சுமார் 25 சதவீதம் இருக்கும் என்றும் இந்தியாவில் 50,000 குழந்தைத் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் பிரச்சாரகர்கள் மதிப்பிடுகின்றனர்.

 “அதிகபட்ச முன்னுரிமை”

கடந்த ஆண்டில் இந்தத் தொழிலை சட்டபூர்வமாக்கவும், ஒழுங்குபடுத்தவுமான திட்டங்களை ஜார்க்கண்ட் மாநில அரசு மேற்கொண்டது.

பூமிக்கடியில் இருக்கும் மைக்காவின் அளவை நிர்ணயிக்க புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட நிலப்பகுதிகள் அடுத்த ஆண்டில் ஏலம் விடப்படும்.

கைவிடப்பட்ட மைக்கா பாறைகளிலிருந்து மைக்கா துகள்களை சிறு உளிகளைக் கொண்டு சிறுவர்கள் அமர்ந்தபடி உடைத்தெடுக்கும் பழைய மைக்கா குவியல் பகுதிகளையும் இந்த மாநிலம் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான நியாயமான  ஊதியம், உடல்நலம் மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தரநிலைகள் ஆகியவற்றையும், குழந்தைத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்துவதற்கான சோதனைகள் ஆகியவற்றை இது குறித்த சட்டம் உறுதிப்படுத்தும் என்றும் சுரங்கங்களுக்கான ஜார்க்கண்ட் மாநில அரசு செயலாளர் சுனில் குமார் பர்ன்வால் கூறினார்.

“இத்தொழிலை சட்டபூர்வமாக்குவது என்பது எங்களின் அதிகபட்சமான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது” என ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் இருந்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு தொலைபேசி மூலம் பர்ன்வால் குறிப்பிட்டார்.

“இந்த நடவடிக்கை ஓரளவிற்கு குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை தீர்க்கும். ஏனெனில் இது ஒழுங்குபடுத்தும் ஏற்பாட்டின் கீழ் வரும். இதன் மூலம் அமலாக்கப் பிரிவினர் சட்டத்தை  அமலாக்கவும், சுரங்கங்களில் நடைபெறும் எந்தவொரு வேலையும் தொழிலாளர் நலச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும்.”

மைக்கா தொடர்பான வேலைகளிலிருந்து விடுபட்டு ஆடு மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற வருமானம் தரும் இதர தொழில்களில் மக்கள் ஈடுபடுவதற்கு உதவும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதே நேரத்தில் சுரங்கங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் ‘மைக்கா கும்பல்’மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனினும் இந்தியாவின் சட்டவிரோதமான மைக்கா வர்த்தகத்தின் மூலம் மிகக்  குறைந்த விலைக்கு இந்தக் கனிமத்தை வாங்கி பல பத்தாண்டுகளாக லாபம் ஈட்டி வந்த பன்னாட்டு நிறுவனங்களும் இந்த முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“இந்த நிறுவனங்களுக்கும் பொறுப்புள்ளது. இதில் அடங்கியுள்ள பிரச்சனை என்னவெனில், இவை அனைத்துமே சட்டவிரோதமான செயல்பாடாகவே இருந்து வந்துள்ளது. இதற்கு முன்னால் அவர்களை எங்களால் ஈடுபடுத்த முடியாமல் இருந்தது” என கிரித் மாவட்ட ஆட்சியரான உமா சங்கர் சிங் குறிப்பிட்டார்.

“எனினும் மைக்கா சுரங்கப் பணிகளுக்கு சட்டபூர்வமான ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புக்கான நடவடிக்கைகளில் அவை ஈடுபட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.”

குழந்தைகளுக்கு ஆதரவான கிராமங்கள்

ஒரு சில பெரு நிறுவனங்கள் தங்களுக்குப் பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலித் தொடரில் குழந்தைத் தொழிலாளர் முறை குறித்த பிரச்சனையை சமாளிக்க சமீப ஆண்டுகளில் முயற்சி செய்து வந்துள்ளன.

2008ஆம் ஆண்டிலிருந்தே தங்களுக்கு மைக்காவை சப்ளை செய்யும் சங்கிலைத் தொடரை முற்றிலுமாக மாற்றியமைத்திருப்பதாகவும், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சுரங்கங்களில் இருந்தே எடுக்கப்பட்டதென ஆய்வறிக்கை பெறப்பட்ட, சட்டபூர்வமான பிரிவினரிடமிருந்தே இந்தக் கனிமத்தை வாங்கி வருவதாகவும் தமக்குத் தேவையான மைக்காவில் பெரும்பகுதியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மெரெக் கேஜி நிறுவனம் குறிப்பிட்டது.

மூன்று பள்ளிகளையும், மருத்துவ மையம் ஒன்றையும் தாங்கள் நடத்தி வருவதாகவும், கிராம மக்களுக்கு தையல் மற்றும் தச்சுத் தொழில்களில் பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

தங்களது மொத்த மைக்கா தேவையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதாக தெரிவித்த ஒப்பனைப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான எஸ்டீ லாடர் கம்பெனீஸ் இங்க், தாங்கள் கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன்ஸ் ஃபவுண்டேஷனில் சகோதர அமைப்பான பாச்பன் பச்சாவ் அந்தோலனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க 2005ஆம் ஆண்டிலிருந்து மைக்கா உற்பத்தியாகும் பகுதிகளில் பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாகவும் தெரிவித்தது. “குழந்தைகளுக்கு சாதகமான 20 கிராமங்களை” உருவாக்க கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன்ஸ் ஃபவுண்டேஷனுக்கு நிதியுதவி செய்ய குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பான டெர்ரே டெஸ் ஹோம்மஸ் (டிடிஎச்) அமைப்பிற்கு 2016ஆம் ஆண்டில் 5,00,000 யூரோக்களை வழங்கியுள்ளதாக மற்றொரு முக்கிய மைக்கா இறக்குமதி நிறுவனமான சீனாவைச் சேர்ந்த வண்ண உற்பத்தியாளரான ஃபுஜியான் குன்சாய் மெட்டீரியல் டெக்னாலஜி கோ லிமிடெட் தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த ஆண்டு வரை குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுவதில் பெயரளவு மாற்றத்தையே தங்களது முயற்சிகள் ஏற்படுத்தியுள்ளன என்பதை பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமிருந்தும் கூட்டானதொரு முயற்சி என்பது இல்லை. அதன் காரணமாகவே ஆர் எம் ஐ அமைப்பு உருவாக்கப்பட்டது.

எனினும் ஆர் எம் ஐ அமைப்பின் முன்னேற்றம் திருப்தியளிப்பதாக இல்லை. களத்தில் உள்ளூர் அளவிலான அறக்கட்டளை திட்டங்களுக்கு நிதியளிக்கும் வகையில் ஆர் எம் ஐ அமைப்பின் உறுப்பினர்கள் தாங்கள் தரவேண்டிய தொகையை உரிய நேரத்தில் அளித்திருந்தால் மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னதாகவே துவக்கியிருக்க முடிந்திருக்கும் என ஒரு சில மக்கள் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆர் எம் ஐ அமைப்பு தனது முதல் ஆண்டில் 4,00,000 யூரோக்களை மட்டுமே திரட்ட முடிந்தது.

மைக்கா தொழிலில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக போராடி வரும் ஓர் அறக்கட்டளையின் மூத்த பிரதிநிதியும் தனது பெயரை தெரிவிக்க விரும்பாதவருமான ஒருவர் “இந்த அமைப்பிற்குத் தேவைப்படும்தொகை என்பது பெரும் அளவிற்கு அதிகமான லாபத்தை ஈட்டும் இந்த நிறுவனங்களைப் பொறுத்தவரையில் வெறும் சில்லரை தவிர வேறல்ல” என குறிப்பிட்டார்.

கீழ்மட்ட அளவில் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதிவழங்க 2018ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் யூரோக்களை இந்த அமைப்பினால் திரட்டிவிட  முடியும் என்று தாம் நம்புவதாக ஆர் எம் ஐ அமைப்பின் ஃப்ரெமோண்ட் கூறினார்.

ஆர் எம் ஐ அமைப்பு குழந்தைகளுக்குச் சாதகமான 40 கிராமங்களை உருவாக்க கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன் ஃபவுண்டேஷனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எனினும் இந்த வேலை ஆர் எம் ஐ அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று எனவும் ஆர் எம் ஐ அமைப்புடன் இதே நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாது எனவும் கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன் ஃபவுண்டேஷன் குறிப்பிட்டது.

ஆர் எம் ஐ அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் மின்னணு நிறுவனமான பிலிப்ஸ் மற்றும் டிடிஎச் ஆகியவற்றுடன் இணைந்து நியாயமான விலையை உறுதிப்படுத்துவது போன்ற மைக்கா சுரங்க வேலைகளில் ஈடுபடுவோரின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கென டச்சு அரசிடமிருந்து கடந்த அக்டோபரில் தாங்கள் 4,50,000 யூரோக்களை பெற முடிந்தது எனவும் ஃபூஜியன் குன்சாய் குறிப்பிட்டார்.

தங்களது புள்ளி விவரங்களை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாத வகையில் பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள அவர்களை அனுமதிக்கும் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதன் மூலம் மைக்கா சப்ளை செய்யும் சங்கிலித் தொடரை வகைப்படுத்துவதில் தாங்கள் முன்னேற்றம் கண்டிருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்தன.

 “சட்டபூர்வமான வழிகளில் செயல்படும் மைக்கா சுரங்கங்களில் இருந்து” மட்டுமே தங்களின் தேவைக்கான மைக்காவில் 99 சதவீதம் பெறப்படுகிறது என்று ஆர் எம் ஐ அமைப்பின் நிறுவன உறுப்பினரும் ஒப்பனைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமும் ஆன லா ஓரியல் குறிப்பிட்டதோடு, அடுத்த ஆண்டில் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படும்போது நிறுவனங்கள் தங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலித் தொடர் பற்றிய விவரங்களை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியது.

“அடுத்த ஐந்தாண்டுகளில் நியாயமான, சட்ட விதிகளின் படி செயல்படுகின்ற மைக்கா தொழிலை இந்தியாவில்  நிறுவுவது என்பதே எங்களதுகூட்டாளிகள், ஆர் எம் ஐ அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்த எங்களின் குறிக்கோள் ஆகும்” என ல ஓரியல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் தொலைதூரத்தில் உள்ள, வனப்பகுதிகள் நிறைந்த ஜார்க்கண்ட், பீகார் மாநிலப் பகுதிகளில் உள்ள இந்த மக்களைப் பொறுத்தவரையில் மைக்கா சப்ளை சங்கிலித் தொடரின் மேல் மட்டத்தில்  இருப்பவர்களின் உறுதிமொழிகள் குழந்தைகளை சுரங்கங்களுக்குச் செல்லாதவாறு இதுவரை தடுக்கவில்லை என்பதே உண்மை.

“எந்தவொரு நிறுவனமும் இங்கு வந்து உதவி செய்வதாக எனக்குத் தெரியவில்லை. இந்த மைக்கா எதற்குப் பயன்படுகிறது என்று கூட எனக்குத் தெரியாது” என பரவாதியா கூறினார்.

 “என்றாலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த எனது குழந்தையும் மேலும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தபோதிலும், மைக்கா சேகரிப்பதற்காக இப்போதும் மக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது மட்டும்தான் எங்களிடம் இருக்கிறது. வேறெதுவும் இல்லை.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->