கண்ணைக் கவர்ந்திழுக்கும் இந்திய சுற்றுலா மையத்தில் உலகச் சந்தைக்காக காலணிகளை தைக்கும் குழந்தைகள்

Tuesday, 19 December 2017 12:49 GMT

ARCHIVE PHOTO: Pairs of shoes are symbolically placed on the Place de la Republique, after the cancellation of a planned climate march following shootings in the French capital, ahead of the World Climate Change Conference 2015 (COP21), in Paris, France, November 29, 2015. REUTERS/Eric Gaillard

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, டிச. 19 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரில் எட்டு வயதே ஆன இளம் குழந்தைகளும் கூட பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, உலகச் சந்தைக்கென மிகவும் மோசமான சூழ்நிலைகளில் காலணிகளை தயாரித்து வருகின்றனர் என குறிப்பிட்ட இயக்கத்தினர் தங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலித் தொடரை தூய்மைப்படுத்த உள்ளூர் அரசுடன் இணைந்து செயல்பட புகழ்பெற்ற காலணி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அதே நேரத்தில் ஆக்ரா நகரம் மிகப் பெரும் காலணி தயாரிப்பு மையமாகவும் திகழ்கிறது. ஃபேர் லேபர் அசோசியேஷன் (எஃப் எல் ஏ) மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கால்பகுதியினர் பணிபுரியும் இத்தொழில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 20 கோடி ஜோடி காலணிகளை தயாரித்து வருகிறது.

இந்தக் காலணி தயாரிப்பு செயல்முறையில் பெயரளவிற்கான தொழிலகங்கள், வீடுகளில் கையாலும் இயந்திரத்தினாலும் தைக்கும் வேலையிலிருந்து துவங்கி பசைபோட்டு காலணிகளை ஒட்டுவது, பெட்டிகளில் அடுக்குவது போன்ற வேலைகள் வரை சிறுவர்கள் ஈடுபடுவதைக் காணமுடிகிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

“அவர்கள் வசிக்கும் இடங்களில் பள்ளிகள் ஏதுமில்லாத நிலையில் அவர்களை வேலைக்கு அமர்த்துவது எளிதாக உள்ளது” என லாப நோக்கற்ற அமைப்பான எம் வி ஃபவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த, இந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ஸ்டாப் சைல்ட் லேபர் கோயலிஷன் அமைப்பின் உறுப்பினருமான வெங்கட் ரெட்டி கூறினார்.

 “ இவர்களில் பெரும்பாலோர் வீட்டிலிருந்தே வேலையை செய்து வருவதால் இந்தக் குழந்தைகள் குறிப்பிட்ட வேலை நேரம் எதையும் பின்பற்றுவதில்லை. செய்யும் ஒவ்வொரு காலணிக்கும் ஊதியம் பெறுவதால் அவர்கள் வேலையில் இடைவெளி எதையும் விடுவதில்லை” என  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ரெட்டி கூறினார்.

 “நாங்கள் சந்தித்த குழந்தைகள் மிகச் சிறிய, போதுமான காற்றுவசதியில்லாத அறைகளில் குழுக்களாக அமர்ந்து நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்தோம். இது அவர்களின் உடல்நலத்திற்குத் தீங்கானது. அவர்கள் எப்போதுமே விளையாடுவதில்லை.”

ஆக்ரா நகரம் உள்ள உத்திரப் பிரதேசத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து, காலணிகளை உருவாக்கிக் கொண்டிருந்த சிறுவர்களில் பாதிப்பேர் மட்டுமே பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆக்ராவிலிருந்து இந்தக் காலணிகளை வாங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரும் காலணி நிறுவனங்களின் ஆதரவுடனேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தியா கமிட்டி ஆஃப் த நெதர்லாந்து (ஐசிஎன்) அமைப்பின் ஓர் அறிக்கையின்படி காலணிகள், தோலால் ஆன பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் காலணி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்கிறது.

தோல் தொழிலில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் விஷமிக்க வேதிப் பொருட்களுடன் நீண்ட நேரம் மிகக் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர் என இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட ஐசிஎன் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

ஆக்ராவில் எஃப் எல் ஏ மேற்கொண்ட ஆய்வு காலணி ஏற்றுமதியில் ஈடுபடும் தொழிற்சாலைகள் குழந்தைத் தொழிலாளர் முறையை தவிர்க்க நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன என்றபோதிலும், இதற்கான வேலையில் ஈடுபட்டு வரும் சிறு உற்பத்தி நிறுவனங்கள், அல்லது வீடுகள் ஆகியவற்றுக்கு  துணை ஒப்பந்த முறையில் விட்டுவிடுவதன் மூலம் இத்தகைய வேலை நடைபெறும் இடங்கள் சோதனைகளில் இருந்து தப்பித்து விடுகின்றன. 

இந்த முறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அதிகமான ஊதியம், குழந்தைத் தொழிலாளர் முறையை தவிர்ப்பதற்கு சமூகம் சார்ந்த முயற்சிகள், மேலிருந்து கீழ்மட்டம்வரை செயல்படுத்தப்படும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது என ஸ்டாப் சைல்ட் லேபர் கோயலிஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சோஃபி ஓவா குறிப்பிட்டார்.  

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.