- அனுராதா நாகராஜ்
சென்னை, ஜன. 2 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான ராஜ்குமார் கோடாலுக்கு எந்தச் சிந்தனையுமே ஓடவில்லை.
அவரது மாணவிகள் உரிய காலத்திற்கு முன்பாகவே திருமண பந்தத்திற்குள் தள்ளப்பட்டு, ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர் என்பது குறித்த செய்திகள் அவரை வந்தடையும்போது அதைத் தடுத்து நிறுத்த முடியாதவகையில் மிகவும் தாமதமாகி விடுகிறது.
எனினும் காவல்துறை அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் உள்ள ராம்கர்ஹாட் உயர்நிலைப் பள்ளியின் கண்ணுக்குத் தெரியாத மூலையில் ஒரு தபால் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தபோது இந்தப் பிரச்சனைக்கு திடீரென்று தீர்வு ஏற்பட்டது.
“அநாமதேயமான அந்தப் பெட்டி கேள்வி கேட்கவும், அதிகாரிகளை எச்சரிக்கவும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்ததோடு, குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவது, ஆட்கடத்தலை தடுத்து நிறுத்துவது ஆகிய விஷயங்களைச் சுற்றி ஓர் இயக்கத்தை நாங்கள் மெதுவாகத் துவக்கினோம்” என ஆங்கிலம் போதித்து வரும் கோடால் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான ஆட்கடத்தல் சம்பவங்களில் 44 சதவீதம் மேற்குவங்கத்தில் நடைபெறுகிறது என்பதோடு, சிறுவர்கள் காணாமல்போவது குறித்த தகவல்கள் அதிகமாகப் பெறப்படுவதும் அங்குதான்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் திருமணம் அல்லது வேலைகள் என ஆசை வார்த்தைகள் காட்டி கவர்ந்திழுக்கப்பட்டு பெரு நகரங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர். அங்கே அவர்கள் பாலியல் தொழில் மையங்களுக்கோ அல்லது வீடுகளில் கொத்தடிமைகளாக வேலை செய்யவோ விற்கப்படுகின்றனர் என இது குறித்த இயக்கங்களை மேற்கொள்வோர் கூறுகின்றனர்.
ஆட்கடத்தலை தடுப்பதற்காகச் செயல்பட்டு வரும் மாநில அரசும் அறக்கட்டளைகளும் நன்கு அறியப்பட்ட ஆட்கடத்தல்காரர்கள் குறித்த புள்ளிவிவரத் தொகுப்பை உருவாக்குவது உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தபால் பெட்டி திட்டம் என்பது மேற்கு வங்க மாநில காவல்துறையின் மிகப்பெரும் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் வெற்றிகரமானதொரு முயற்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது மாநிலத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 200 பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘ரகசியங்களை பரிமாறிக் கொள்வதோடு’ உதவியும் கோரி வருகின்றனர்.
இந்த முன்முயற்சியின் தாக்கத்தை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெஃப் இத்திட்டத்தை மாநிலம் முழுவதிலும் இந்த வாய்ப்பை விரிவுபடுத்த காவல்துறையுடன் இணைந்துள்ளது.
“இந்த மாநிலத்திலிருந்து சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டு டெல்லியின் தெருக்களில் செத்து விழுமாறு விட்டுவிடப்படுகின்றனர்” என பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவிகளை பெருமளவிற்கு இலக்கு வைக்கும் இந்த முன்முயற்சிக்குத் தலைமை தாங்கும் காவல்துறை அதிகாரியான அஜெய் ரானடே கூறினார்.
இத்தகைய ஆட்கடத்தலின் முக்கிய பகுதிகளாக அறியப்பட்ட தெற்கு 24 பர்காணாஸ் மற்றும் வடக்கு 24 பர்காணாஸ் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் மாணவர்களுடன் பேசுவதற்காக சீருடையின்றி முதலில் வருகின்றனர்.
காவல்துறையைச் சேர்ந்த பலரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, இத்தகைய ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் தப்பிப் பிழைத்தவர்களின் நிலையைக் கண்டு ‘பெரிதும் உணர்ச்சி வசப்படுகின்றனர்’ என்பதோடு, இளம் பெண்களின் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அவர்கள் நேரடியாகக் காண்கின்றனர் எனவும் ரானடே குறிப்பிட்டார்.
பள்ளிகளில் பதின்பருவத்தைச் சேர்ந்தவர்கள் துவக்கத்தில் இவர்களுடன் பேசுவதற்குத் தயங்கி வந்தனர்.
“நாங்கள் ஷேர் யுவர் சீக்ரெட் (உங்கள் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்) என்ற ஒரு விளையாட்டை விளையாடத் துவங்கினோம். திடீரென்று பார்த்தால் தகவல்கள் வந்து குவியத் துவங்கின”என இந்த மாணவர்களை காவல்துறையினர் அணுகுவதற்கு உதவி செய்து வரும் லாபநோக்கற்ற அறக்கட்டளையான பங்களாநாடக்.காம் அமைப்பைச் சேர்ந்த சுரவி சர்க்கார் கூறினார்.
இத்திட்டத்தின்கீழ் ஆட்கடத்தலுக்கான பொறிகள் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதற்கென பள்ளிகளில் காவல்துறை குழுக்களை உருவாக்கியுள்ளது.
“பெண்கள் இப்போது மேலும் அதிகமான விழிப்புடன் இருக்கின்றனர். தகவலும் வந்து குவிகின்றன” என ரானடே கூறினார்.
“தொடர்ந்து சில நாட்களுக்கு யாராவது வகுப்புத் தோழி வராமல் இருந்துவிட்டால், பள்ளிக்கு வரும் வழியில் சுற்றிக் கொண்டிருக்கும் முன்பின் அறியாதவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் இத்தகைய தகவல் கைது நடவடிக்கைக்கும் இட்டுச் சென்றுள்ளது.”
கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக இருந்துவரும் கோடால் காவல்துறையின் உதவியோடு, தனது மாணவர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ள தான் துணிவு பெற்றுள்ளதாகக் கூறினார்.
“இதற்கு முன்பெல்லாம் ஒரு சில மாணவர்கள் எங்களிடம் உதவி கேட்பார்கள்.
என்றாலும் எங்களால் பெரிதாகச் செய்ய முடிந்ததில்லை. இந்த முன்முயற்சி மாணவர்கள், சட்டத்தை நிலைநாட்டுபவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை ஒரே மேடைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது” என அவர் தெரிவித்தார்.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.