×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – கடத்தி வரப்பட்ட இந்தியப் பெண்கள் குரல் பெற்றதும் தங்களை கொடுமைப்படுத்தியவர்களுக்கு எதிராக சாட்சியம் சொல்ல முன்வருகின்றனர்

Wednesday, 10 January 2018 00:01 GMT

Trafficking survivor "Pinki" strums a guitar at her home in Jagannadhapuram in southern India, November 29, 2017. TRF/Anuradha Nagaraj

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

விஜயவாடா, ஜன. 10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தென் இந்தியாவின் ராக் இசைக்குழு ஒன்றில் முன்னணி பாடகராக இருக்கும் பிங்க்கி இந்த ஆண்டில் கிடார் வாசிக்கக் கற்றுக் கொள்ள விரும்புகிறார்.

 “ஒரு பையனைப் போல கிடாரை மேடையில் மீட்ட வேண்டும்” எனவும் பாலியல் தொழில் மையம் ஒன்றிலிருந்து திருமணங்களிலும் விழாக்கேளிக்கைகளிலும் இசைப்பதற்காக ஈடுபடுத்தப்படும் இந்த இசைக் குழுவிற்கு வந்த தான் மேற்கொண்ட பயணத்தை மறக்க இந்த இசையை பயன்படுத்திக் கொள்ள தான் விரும்புவதாகவும் 19 வயதான அந்தப் பெண் கூறினார்.

கர்நாடகா மாநிலத்தில் பெண்களை விலைக்கு வாங்குவது, விற்பது ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த 40 பேருக்கு நீதிமன்றம் ஒன்று தண்டனை  வழங்கிய ஓராண்டிற்குப் பிறகுதான், - இவர்களில் பிங்க்கியை கொடுமைப்படுத்தியவர்களும் அடங்குவர்- அவரது இந்தப் புத்தாண்டு தீர்மானம் வந்துள்ளது.

அவரது வீட்டிலிருந்து விபச்சாரத் தொழிலுக்காக அவரைக் கடத்திச் சென்ற பெண், மீட்கப்படுவதற்கு முன்பு எட்டு மாதங்கள் அவர் வேலை செய்து வந்த பெல்லாரி நகரத்தில் பாலியல் தொழில் மையத்தை நடத்தி வந்த நபர் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க அவரது வாக்குமூலம் உதவி செய்திருந்தது.

 “பத்தாண்டு சிறைத்தண்டனைக்குப் பதிலாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருக்க வேண்டும்” என படுக்கையில் அமர்ந்தபடி, கையில் கிடார் ஒன்றை வைத்துக் கொண்டு, அருகில் ஒரு கரடி பொம்மை இருக்க, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இருந்தபடி அவர் கூறினார்.

“நான் அதைப் பற்றி நினைக்கவே விரும்பவில்லை. அதற்குப் பதிலாக இசையைப் பற்றியும் எனது காதலரைப் பற்றியும்தான் நினைக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அவரை நான் மணந்து கொள்வேன் என்றும் நம்புகிறேன்.”

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலில் இருக்கும் கொல்கத்தாவில் மற்றொரு 19 வயதுப் பெண்ணும் 2018ஆம் ஆண்டை ஆவலோடு எதிர்நோக்கி வருகிறார்.

தனது பள்ளியிறுதித் தேர்வுக்கான தயாரிப்புகளைச் செய்து வரும் அவர் தான் படிக்க விரும்பும் தத்துவ இயல் பாடத்தை வழங்கும் கல்லூரிகளை தேடி வருகிறார்.

பெல்லாரி நகரில் இருக்கும் பாலியல் தொழில் மையத்திலிருந்து காவல்துறையினரால் இந்தப் பெண்கள் 2013ஆம் ஆண்டில் மீட்கப்பட்டபோது அவர்கள் தங்களின் பதின்பருவத்தை இன்னும் கடக்காதவர்களாக இருந்தனர்.

தங்களை சுரண்டிக் கொழுத்தவர்கள் தண்டிக்கப்பட்டதை இறுதியாகப் பார்க்க முடிந்த அவர்கள் நீதிமன்றத்தில் தங்களின் மீதான கொடுமைகள், வன்புணர்ச்சி ஆகிய வலிமிகுந்த விவரங்களை விரிவாக எடுத்துக் கூற நான்காண்டுகள் காத்துக் கொண்டிருந்தபோது, கடந்த காலத்தை அவர்களால் எளிதாக மறக்க முடியவில்லை.

இப்போது இந்த இரண்டு பேருமே தங்களின் எதிர்காலம் குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.

திரும்பிப் பார்க்கையில்

2013ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி நகரில் இருந்த பாலியல் தொழில் மையங்கள் பலவற்றிலும் காவல்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 21 குழந்தைகளையும் உள்ளிட்டு, 43 பெண்களை மீட்டதோடு, ரொக்கப்பணம், கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்களையும் கைப்பற்றியது.

இந்தப் பதின்பருவப் பெண்களையும் உள்ளடக்கி இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 7 பேர் வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள். மீதமிருந்தவர்கள் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பிறகு பிங்க்கி ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான பிரஜ்வாலா நடத்தி வந்த ஓர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தார். பெல்லாரியில் இவ்வாறு தப்பிப் பிழைத்து அங்கிருந்தவர்களிடம் தங்களை இவ்வாறு கடத்தி வந்தவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது.

 “மறுவாழ்வின் மிகப்பெரும் பகுதி என்பது அந்த வாழ்க்கையை மூடுவது ஆகும். இவ்வாறு சாட்சி சொல்வது அவ்வாறு மூடுவதன் ஒரு பகுதியே ஆகும். என்ன நடந்தது என்பதை மறந்து விடுங்கள் என்று நாங்கள் அவர்களிடம் சொல்லவில்லை. மாறாக, அதிலிருந்து மீண்டெழுந்து, அந்த நினைவை அகற்றுமாறு கூறினோம்” என பிரஜ்வாலாவின் நிறுவனரான சுனிதா கிருஷ்ணன் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் அச்சுறுத்தல், வலுக்கட்டாயப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் 2,00,000 பெண்களும் குழந்தைகளும் விபச்சாரத்தில் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர் என பிரஜ்வாலா மதிப்பிட்டுள்ளது. [http://www.prajwalaindia.com/]

இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி வணிகரீதியான பாலியல் தொழிலாளிகளில் 1 கோடியே 60 லட்சம் பெண்களும், சிறுமிகளும் இத்தகைய பாலியல் ரீதியான ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்  என இந்தியாவில் இதற்கான பிரச்சாரம், உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுவருவோர் தெரிவிக்கின்றனர்.

சாட்சிக் கூண்டு

இத்தகைய ஆட்கடத்தலில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு எதிராகவே நிலைமைகள் இருந்து வருகின்றன. அவர்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யும்போது ஆட்கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்படுவது, பயமுறுத்தப்படுவது ஆகியவை வழக்கமான விஷயங்களாக இருந்து வருகின்றன என்றும் இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது; அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஆகியவை இந்தியாவில் “போதுமானதாக இல்லை என்பதோடு சீரற்றதாகவும் உள்ளது” என அமெரிக்க வெளியுறவு துறையின் ஆட்களை கடத்திச் செல்வது குறித்த 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை குறிப்பிடுகிறது.

“குற்றங்கள் இழைத்ததற்காக இத்தகைய ஆட்கடத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்களை கைது செய்வதன் மூலம் அரசாங்கம் சில நேரங்களில் அவர்களை தண்டிக்கிறது” என குறிப்பிடும் இந்த அறிக்கை ஆட்கடத்தலின் அளவை ஒப்பிடும்போது தண்டனை வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது. [https://www.state.gov/j/tip/rls/tiprpt/countries/2017/271205.htm]

இந்திய அரசின் புள்ளி விவரங்களின்படி, 2016ஆம் ஆண்டில் வெளிவந்த 8,000க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல்  குறித்த தகவல்களில் பாதிக்கும் குறைவானவையே காவல்துறையினரால் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளிலும் விசாரணை நடைபெற்றவற்றில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் விகிதம் வெறும் 28 சதவீதமே ஆகும். [http://ncrb.gov.in/]

 

 “ பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக தைரியமாக நிற்பது, தங்களை கடத்திச் சென்றவர்களை, பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்களை  அடையாளம் காட்டுவது  போன்றவற்றுக்காக துணிந்து நிற்பது என்ற எண்ணமே மிக மிக அச்சத்தை ஏற்படுத்துவதாகும்” என  தற்போது மாற்றுப் பெயரில் வாழ்ந்து வரும் பிங்க்கி குறிப்பிட்டார்.

 “என்றாலும் இத்தகைய நிலைமை வேறு எவருக்கும் வரக்கூடாது என நான் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருந்தேன். அதுதான் நீதிமன்றத்தில் சென்று நிற்பதற்கான தைரியத்தை வழங்கியது.”

பர்தாவில் தன்னை ஒளித்துக் கொண்டபடி அவர் சாட்சி சொல்வதற்காக பெல்லாரியில் இருந்த நீதிமன்றத்திற்கு இரண்டு முறை சென்றார். தன்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் இருந்த, இந்த இரு பிரிவினரையும் ஒரு திரை பிரித்து வைத்த, அதே அறையில் அமர்ந்திருப்பது தனக்கு கண்ணீர் வரவழைத்தது எனவும் அவர் நினைவு கூர்ந்தார்.

 “அப்போது அங்கிருந்த நீதிபதி ஒரு ஆண், பாலியல் தொழில் மையத்தில் நான் கடத்திய நாட்களை அவர்களிடம் விவரிக்கும் போது உடைந்து அழுததும் என் நினைவிற்கு வருகிறதுஎன தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

 “அவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று அவரை நான் கேட்டதும் நினைவுக்கு வருகிறது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் உண்மையைக் கூறுமாறு அவர் சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.”

பர்தாவிற்குப் பின்னால் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்? என்றும், அவர்களை பெல்லாரிக்கு வரவழைத்தது எது? என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர்கள் கேள்வி கேட்டனர். மேலும் சுய விருப்பத்தின் பேரிலேயே பாலியல் தொழில் மையங்களில் அவர்கள் இருந்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் இந்த இளம் பெண்கள் அனைவருமே தாங்கள் சொன்ன விஷயங்களில் மிகவும் உறுதியாக இருந்து, உண்மையைச் சொன்னார்கள் எனவும் பிங்க்கி குறிப்பிட்டார்.

பெல்லாரியில் விடுவிக்கப்பட்ட பிங்க்கியும் இதர 17 பெண்களும் வழங்கிய வாக்குமூலம் தரகர்கள், பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், ஆட்கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு தண்டனை பெற்றுத் தந்ததன் மூலம் இத்தகைய ஆட்கடத்தல் வலைப்பின்னல் முழுவதையும் மூடச் செய்தது என காவல்துறையினர் கூறினர்.

எதிர்காலத்தை நோக்கி…

இவ்வாறு தண்டனை வழங்கப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு ஏதோவொரு நேரத்தில் பிங்க்கி பெல்லாரியில் இருந்த பாலியல் தொழில் மையத்தில் தான் இருந்த நாட்களை நினைவு கூரும் வகையில் ஓராண்டு காலத்திற்கு எழுதி வந்த நாட்குறிப்பை கிழித்துப் போட்டார்.

தன்னை சமாளித்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக அது இருந்தது என்றாலும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை என்று தான் திடீரென்று அவருக்குத் தோன்றியிருக்கிறது.

 “இந்தத் தீர்ப்பு வரும்வரை, இந்தப் பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் மிகவும் கவலைப்பட்டு வந்ததோடு அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் கொண்டிருந்தனர்” என இந்த பெல்லாரி வழக்கில் காவல்துறையினருடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வந்த ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற அறக்கட்டளையில் செயல்பட்டு வரும் சமூக சேவகரான நீபா பாசு கூறினார்.

“கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்ணின் தாய் தொடர்ந்து இந்த வழக்கு பற்றி கவனித்துக் கொண்டே இருந்தார். ஏனெனில் ஆட்கடத்தல்காரர்களின் குடும்பம் அவரை அச்சுறுத்தியிருந்தது. தனது பெண்ணின் பாதுகாப்பு பற்றி அவர் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்.”

கொல்கத்தாவில் ஒரு பெரும் வணிக வளாகத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்தபடி, தன் பெயரைச் சொல்ல விரும்பாத, அந்த உயர்நிலைப் பள்ளி மாணவி, இதன் பிறகு தான் முன்பைப் போல் பயப்படவில்லை  என்று கூறினார்.

அதற்குப் பதிலாக சமீபத்தில் வரவிருக்கும் தனது வகுப்பு சோதனைத் தேர்வுகள் சிலவற்றைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். காவல் அதிகாரியாகவா அல்லது ஒரு சமூக சேவகராகவோ  எப்படி எதிர்காலத்தில் உருவாவது என்பதைப் பற்றி எவ்வாறு தன்னால் முடிவெடுக்க முடியவில்லை என்பதைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மறுபுறத்தில் பிங்க்கியோ தனது இசைப் பயணத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது அவரிடம் வேறு ஒரு நாட்குறிப்பு உள்ளது. அதில் இசைக்குழுவில் பங்கேற்று அவர் பாடும் சினிமாப் பாட்டுகள் நிரம்பிக் கிடக்கின்றன. திருமணங்களில் அல்லது இதர நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல்களைத்தான் அவர் பாடி வருகிறார்.

“இணையத்தில் பிரபலமான பாடல்கள் இருக்கிறதா என்று நான் தேடிக் கொண்டே இருப்பேன். பின்பு அவற்றை கற்றுக் கொள்ளத் துவங்குவேன். இசை என்னை விடுவிப்பதால் அதை நான் தீவிரமாக பயிற்சி செய்கின்றேன்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->