×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

அடிமைத்தனத்தை எடுத்துக் காட்டும் குழந்தையின் மரணம், இந்திய நெசவுத் தொழிலின் ‘மோசமான ரகசியம்’

Friday, 12 January 2018 11:29 GMT

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஜன. 12 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பெற்றோர்கள் கொத்தடிமைத் தொழிலாளார்களாக வேலை செய்து வந்த நெசவாலை ஒன்றில் மின்சாரத் தாக்குதலில் ஒரு சிறுமி மரணமடைந்ததை அடுத்து அச்சிறுமியின் பெற்றோருக்கு  தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

நெசவாலைகள் குவிந்து கிடக்கும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதிலும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக கிட்டத்தட்ட  அடிமைகளாகவே வேலை செய்து வரும் பல லட்சக்கணக்கான மக்களின் நிலைமையை வெளிப்படுத்துவதாகவே கடந்த வியாழக்கிழமையன்று வெளியான உத்தரவு உள்ளது என இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் தெரிவிக்கின்றனர்.

 

 “இந்தப் பகுதியில் உள்ள நூற்பாலைகளில் பலரும் அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கின்றனர்” என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு இந்த வழக்கை எடுத்துச் சென்ற அறக்கட்டளையான விழுதுகள் (வேர்கள்) அமைப்பைச் சேர்ந்த தங்கவேல் மாறன் கூறினார்.

 

“அவர்களை அங்குள்ள யாருக்குமே தெரியாது. இத்தகையதொரு சம்பவம் நிகழும்போதுதான் இந்த வழக்குகள் வெளியே வருகின்றன. இது இந்தத் தொழிலின்  இழிவானதொரு ரகசியமாகும்” என அவர் குறிப்பிட்டார்.

 

பெற்றோர்கள் திருமணங்களிலோ அல்லது இறுதிச் சடங்குகளிலோ பங்கு கொள்ள பயணம் செய்யும்போது அவர்களின் குழந்தைகளை முதலாளிகள் தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர்.

 

2014ஆம் ஆண்டில் ஒரு நாள் பயணமாக தாங்கள் வீட்டிற்குச் சென்றபோது அவர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் தங்கள் ஆறுவயதான மகள் நளினியை விட்டுச் செல்லுமாறு தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக கருணையம்மாளும், பாலசுப்பிரமணி பத்ரனும் கூறினர்.

 

“நாங்கள் அதிகாலையிலேயே ஊருக்குக் கிளம்பினோம். மாலையில் நாங்கள் திரும்பி வந்தபோது அவள் இறந்து போயிருந்தாள்.” என பாலசுப்பிரமணி கூறினார்.

“அவள் தற்செயலாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒரு மின்கம்பியைத் தற்செயலாகத் தொட்டு விட்டாள் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். வேறு எந்த விளக்கமும் எங்களுக்குத் தரப்படவில்லை; எந்தவொரு உதவியும் செய்யவில்லை” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

 

1976ஆம் ஆண்டிலேயே இந்தியா கொத்தடிமை உழைப்பைத் தடை செய்துவிட்டது. எனினும் செங்கற்சூளைகள், அரிசி ஆலைகள் மற்றும் இதர தொழில்களில் அது இன்னும் பரவலாக நீடித்தே வருகிறது.

 

கொத்தடிமைகளில் பலரும் அடிப்படையில் அடிமைகளாகவே வைக்கப்பட்டுள்ளனர்.  கூட்டு வட்டியில் கணக்கிடப்படுகின்ற, சந்தேகத்திற்குரிய வகையில் கணக்கு வைக்கப்படும் பெரும் கடன்களை அடைப்பதற்காகவே அவர்கள் வேலை செய்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வாங்கிய கடனைப்போல பத்து மடங்கு தொகையை திருப்பிச் செலுத்த நேரிடுகிறது என இதற்கான இயக்கங்களை நடத்தி  வருவோர் தெரிவிக்கின்றனர்.

 

எஜமானர்கள் பொதுவாகவே இந்தக் கொத்தடிமைத் தொழிலாளர்களின் நடமாட்டத்தையும்  கட்டுப்படுத்துவதோடு, அவர்கள் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கியிருக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

 

இந்தக் குழந்தையின் மரணத்தின்போது, அவளது பெற்றோர்கள்  தாங்கள் வாங்கியிருந்த ரூ. 60,000 கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.

 

இந்தத் தம்பதிகள் கொத்தடிமைத் தொழிலாளிகளாக இருந்தனர் என அங்கீகரித்து, சட்டப்படி அவர்களுக்குச் சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

அடிமைத்தனத்திற்கு எதிரான ஓர் அமைப்பான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனின் மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில்  பல கோடிக்கணக்கான டாலர் கொழிக்கும் நெசவுத் தொழில் உட்பட 11 தொழில்களில் சுமார் 5,00,000 உடல் உழைப்பாளிகள் கடனுக்கான கொத்தடிமைத் தனத்தில் சிக்கியிருக்கின்றனர்.

 

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->