×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு தொழிலாளர்கள் ஆயத்த ஆடை நிறுவன முதலாளிகளுடன் மோதி வருகின்றனர்

Thursday, 1 February 2018 01:00 GMT

A boy sleeps under the shade of clothes hung to dry in Mumbai, India April 25, 2017. REUTERS/Shailesh Andrade

Image Caption and Rights Information

-அனுராதா நாகராஜ்

சென்னை, பிப். 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – செல்வி முருகேசன் கடந்த 13 ஆண்டுகளாக சட்டைகளுக்கான பட்டன் துளைகளைப் போடுவது, சட்டைக்கான பட்டன்களை தைப்பது ஆகிய வேலைகளை இந்தியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றில் ‘வாயே திறக்காமல்’ செய்து வந்தார். இப்போது வாயைத் திறந்து பேசியதற்காக தன் வேலையையே இழக்கும் அபாயத்தை அவர் எதிர்நோக்கி வருகிறார்.

இந்தியா முழுவதிலும் நவநாகரீகத் தொழிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தொழிற்சங்கங்கள் இதற்கென தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பணியிலிருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்ததற்காக தனது முதலாளிக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக அவர்  ‘ ஒரு யுத்தத்தை’  நடத்தி  வருகிறார்.

அந்த ஆண்டு போனஸை தான் முழுமையாகப் பெறவில்லை என்றும் வேலைக்கு வந்து போகும் பேருந்துக்கான செலவை  தனது முதலாளி சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யத் துவங்கினார் என்பதை கண்டித்தே தான் குரல் எழுப்பியதாக 35 வயதான செல்வி முருகேசன் கூறினார்.

“நான் வேலை செய்து வந்த இத்தனை ஆண்டுகளில் நான் எந்தவித பிரச்சனையையும் எழுப்பியதே இல்லை” என தொலைபேசியிலும் நேரிலுமாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“எனக்குரிய போனஸை நான் கேட்டபோதும், கடந்த அக்டோபரில் தொழிற்சாலைக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேறு சில தொழிலாளர்களுடன் சேர்ந்துகொண்ட போது, நான் வழியை மீறிச் செல்கிறேன் என்று கூறி எனது மேலாளர்கள் என்னை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர்.”

சென்னைக்கு வெளியே புறநகரில் இருந்து செயல்பட்டு வரும் தங்கள் தொழிற்சாலைக்குள் நுழையவிடாமல் ஊழியர்களைத் தடுத்ததற்காக அவரையும் இதர 13 தொழிலாளர்களையும் தற்காலிக வேலைநீக்கம் செய்துள்ளதாக  சென்னையில் இருந்து செயல்படும் மேற்கத்திய நாடுகளின் புகழ்பெற்ற பல்வேறு ஆடை வியாபார நிறுவனங்களுக்கு ஆடைகளை சப்ளை செய்து வரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனமும் செல்வி முருகேசனின் முதலாளியுமான செலிப்ரிடி ஃபேஷன்ஸ் லிமிடெட் தெரிவித்தது.

14 தொழிலாளர்களின் குறைகள் குறித்து விசாரிக்க உள்மட்ட விசாரணை ஒன்று நடந்து வருகிறது என்றும், இவ்வாறான ஊழியர்களின் புகார்களை கையாளுவதற்காக உள்ள உள்மட்ட குழுக்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு தமது நிறுவனம் நடந்து கொள்ளும் என இந்த நிறுவனத்தின் மனித வளத்துறையின் அதிகாரபூர்வ செய்தியாளரான சார்லி ராய் மின் அஞ்சல் மூலமாகத் தெரிவித்தார்.

“முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாமல் தொழிற்சாலை வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக  இந்தத் தொழிலாளர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“பெரும்பான்மையான தொழிலாளர்களின் புகார்களின் அடிப்படையிலும், ஊழியர்களையும் நிறுவனத்தையும் பாதுகாக்கவும், மோசமான எண்ணங்களால் தூண்டிவிடப்பட்ட எங்களது ஊழியர்களையே நாங்கள் தற்காலிக வேலைநீக்கம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டோம்.”

இந்தச் சச்சரவானது சுமார் 4 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட, இவர்களில் பெரும்பாலோர் பெண்கள், பல கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்தியாவின் நெசவு மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலில் முதலாளிகளுக்கு தொழிலாளிகளுக்கும் இடையே உருவாகும் தகராறுகளில் மிகச் சமீபகால சச்சரவாகும்.

இந்தப் பெண்களில் பலரும் மிகக் குறைவான ஊதியமே பெறுகின்றனர் என்றும், அவர்களில் சில 14 மணிநேரத்திற்கு வேலை செய்கின்றனர் என்றும், அவர்களில் சில வாய்மொழியாக வசவுகளை எதிர்கொள்ள நேர்வதோடு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது என இதற்கான இயக்கங்களை நடத்தி வருவோர் தெரிவிக்கின்றனர்.

அழகுக் கலைப் பொருட்களுக்கான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் , அவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும்,குறிப்பாக வங்க தேசத்தில் 2013ஆம் ஆண்டில் 1,136 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட  ராணா ப்ளாஸா கட்டிடம் இடிந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு இத்தொழில் அழுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

சங்கங்களில் சேர்வது அல்லது திருத்தியமைக்கப்பட்ட  குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்க வேண்டும் என்று கோரி நடத்தப்படும் நிகழ்வுகளில் பங்கேற்பது போன்ற செயல்கள் நிகழ்ந்த ஒருசில நாட்களிலேயே தென்னிந்திய ஆயத்த ஆடை மையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்படுகின்றனர்;அல்லது வேலையிலிருந்தே நீக்கப்படுகின்றனர் என இதற்கான இயக்கங்களை நடத்துவோரும் தொழிற்சங்கத் தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.

2016ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பிரசித்திபெற்ற தீர்ப்பொன்று ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு பெற வேண்டும் என்றும், 2014 ஆம் ஆண்டிலிருந்தே இந்த ஊதிய உயர்விற்கான பாக்கித் தொகையை அவர்கள் கோரிப் பெறலாம் என்றும் அறிவித்திருந்தது.

 “ராஜினாமா கடிதங்களில் கையெழுத்திடுமாறு தாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை எங்கள் அலுவலகத்திற்கு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இருந்த போதிலும் தங்கள் குடும்பங்களை பாதுகாக்க வேலை அவசியம் தேவைப்படுகிறது என்று” என பெண் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுஜாதா மோடி கூறினார்.

“உடல்நலம் சரியில்லாத குடும்ப உறுப்பினரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுத்ததற்காக அல்லது தொழிற்சங்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டாலோ பெண்கள் மீண்டும் வேலையில்லாதவர்களாக மாறும் திடீர் சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் அவர்களது உரிமைகள் தொடர்பாகப் பேசும் பிரசுரம் எதையாவது கையில் வைத்திருந்தாலும் கூட அவர்கள் இத்தகைய நிலையை எதிர்கொள்கின்றனர்.”

இந்தியாவின் ஆயத்த ஆடைத் தொழிலில் குறைகளை களைவதற்கான ஏற்பாடுகள் தொழிற்சாலைகளில்“கிட்டத்தட்ட ஒன்றுமே  இல்லை” என்று குறிப்பிட்டிருந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை எழுதியவர்களில் மோடியும் ஒருவராவார்.

சென்னையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் வேலை செய்கின்ற, இத்தகைய பிரச்சனைகளை எழுப்புகின்ற தொழிலாளர்கள் ‘தனிமைப்படுத்தப்பட்டு’ மனித வள பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளின் பார்வையின் கீழ் வைக்கப்படுகின்றனர் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

சங்கம் அமைப்பதற்கான உரிமை என்பது ‘மனித உரிமை’ என்று குறிப்பிடும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தங்களுக்கென சங்கங்களை அமைக்கின்ற அல்லது அவற்றில் சேருகின்ற தொழிலாளர்களுக்கு எதிராக பாரபட்சமான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது எனவும் இந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்துகிறது.

இந்த ஆய்வு தொழிற்சாலைக் குழுக்களையும் விமர்சித்துள்ளது. இவை மிகவும் அரிதாகவே தொழிலாளர்களின் புகார்களை கையாளுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைக் கொண்டதாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெளியிலிருந்து செயல்படும் தொழிற்சங்கங்களில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்வதை தொழிற்சாலைகள் எதிர்க்கின்றன என்றும் இதற்கான இயக்கத்தில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.  மற்ற தொழிற்சாலைகளைப் போலவே செலிப்ரிடி ஃபேஷன் நிறுவனமும் செல்வி முருகேசன் உறுப்பினராக சேர்ந்துள்ள கார்மெண்ட் அண்ட் ஃபேஷன் வொர்க்கர்ஸ் யூனியன் (ஜி ஏ எஃப் ட்பிள்யூ யூ) –ஐ அங்கீகரிக்கவில்லை.

தொழிலாளர்களின் ஆதரவு இந்த சங்கத்திற்கு இல்லை என ராய் குறிப்பிட்டார்.

“எங்களது ஊழியர்களின் குறைகளை முறையான வகையில் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதை நியாயமாகவும், சரியான வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்த வெளியிலிருந்து செயல்படும் இந்த சங்கத்தினால் முடியாது” எனவும் அவர் கூறினார்.

சமரசப் பேச்சு வார்த்தைகளுக்கென இத்தகைய வழக்குகளை அரசின் தொழிலாளர் நலத் துறைக்கு முன்பாக எடுத்துச் செல்லவே இந்த நிறுவனங்களின்  நிர்வாகங்கள் விரும்புகின்றன. ஆனால் இதன் விளைவாக இத்தகைய பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கென தொழிலாளர்கள் 50 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதன் மூலம் நீடித்த வகையில் போராட்டங்களை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது என சுஜாதா மோடி  குறிப்பிட்டார்.

என்றாலும் செல்வி முருகேசன் இத்தகைய போராட்டத்திற்குத் தயாராகவே உள்ளார்.

 “என்னுடன் பேசக் கூடாது என என்னோடு வேலை செய்தவர்களிடம் – இவர்களில் பலரும் எனது நண்பர்களும் கூட- எனது மேலாளர்கள் உத்தரவு போட்டிருக்கின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“தங்களின் வேலை போய்விடுமோ என்று அவர்கள் பயப்படுகின்றனர். எனவே என் குரல் கேட்கும் என்றும் எங்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன்.”  

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->