ஆட்கடத்தல் பற்றி தெரியப்படுத்த வானொலியைப் பயன்படுத்துகின்றனர் இந்திய வானொலி அறிவிப்பாளர்கள்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 1 February 2018 11:22 GMT

ARCHIVE PHOTO: A homeless girl asks for alms outside a coffee shop in Mumbai, India, June 24, 2016. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, பிப்.1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – இந்தியாவில் ஆட்கடத்தல்  சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒரு சில ரேடியோ அறிவிப்பாளர்கள் ஆட்கடத்தல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆட்கடத்தல்காரர்களை அடையாளம் காணவும் நேயர்களுக்கு உதவ தங்களின் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தலைநகரான புதுடெல்லியில் ‘சுனோ நா டெல்லி’ (டெல்லியே கேள்!) என்ற தனது விருது பெற்ற நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளரான ஜின்னி மகாஜன் ஆட்கடத்தல் பற்றி இவ்வார இறுதியில் பேசவிருக்கிறார்.

“தங்களின் வீடுகளில் வேலை செய்கின்ற இந்தப் பெண்கள் அவர்களது பெற்றோர்களால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்கள் என்பதை டெல்லி (நகர மக்கள்) தெரிந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என அவர் கூறினார்.

“இந்தப் பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்பதையும் டெல்லி (நகர மக்கள்) தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.”

அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆட்கடத்தல் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 23,117 பேரில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் ஆவர்.

இத்தகைய ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் கட்டாய வேலையில் ஈடுபடுத்தும் நோக்கத்துடனும், 33 சதவீதம் பேர் பாலியல் சுரண்டலுக்காகவும் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

“நமது வாழ்க்கையிலும், சமையல் அறைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள பெண்களைப் பற்றிய விவரங்களை மட்டும் நாம் சோதித்துப் பார்த்தோமானால் உண்மையில் நம்மால் இந்தக் குற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்” என டெல்லியிலிருந்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தொலைபேசி மூலம் மகாஜன் தெரிவித்தார்.

இத்தகைய விழிப்புணர்ச்சியை பரப்புவதில் முக்கியமானதொரு கருவியாக வானொலி மாறியுள்ளது என இது குறித்த இயக்கத்தினர் தெரிவித்தனர்.

 “இத்தகைய முயற்சிகள் ஆட்கடத்தல் குற்றங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதையும், வெளியே என்ன இருக்கிறது என்பதையும், அவை நமக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன என்பதையும் மக்கள் அறிந்து கொள்ளச் செய்கிறது” என வானொலி நிலையங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பைச் சேர்ந்த அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.

மகாஜனின் நிகழ்ச்சி தலைநகரத்தில் உள்ள நகர்ப்புற மக்களை சென்றடைகிறது எனில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குழு சார்ந்த வானொலி நிலையம் ஒன்று ஆட்கடத்தலையே மையமாகக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பியது.

இந்தக் குற்றத்தின் தாக்கம் குறித்து தனது நிகழ்ச்சியை ரசிக்கும் கிட்டத்தட்ட 40,000 நேயர்களை அறியச் செய்வதும், இத்தகைய ஆட்கடத்தல்காரர்களை எவ்வாறு இனம் கண்டுகொண்டு இது தொடர்பான விஷயங்கள் மீது புகார் அளிப்பது என்பதையே தனது நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என  நம்மூர பானுலி (நமது கிராமத்து வானொலி) என்ற வானொலியில் நிகழ்ச்சியை நடத்தி வரும்  கீர்த்தி எஸ். சவுகலா குறிப்பிட்டார்.

“இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இதைப் பற்றி மிக எளிமையாக எடுத்துக் கூறி, விழிப்புணர்ச்சியை அதிகரிக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என சவுகலா கூறினார்.

வுமன்ஸ் வெல்ஃபேர் சொசைட்டி என்ற அறக்கட்டளையினால் நடத்தப்படும்  இந்த் நிகழ்ச்சி பெல்காவி மாவட்டத்தில்  உள்ள 400 கிராமங்களில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இத்தகைய ஆட்கடத்தலுக்கு  இரையான ஓர் இளம் பெண் தனது கதையை  இந்தியாவின் கிழக்குப் பகுதி நகரமான கொல்கத்தாவில் ஆகாஷ்வாணி வானொலியில் கடந்த நவம்பரில் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

வங்க தேசத்தை சேர்ந்த அவர், புகழ்பெற்ற பாடகி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தவர் இந்தியாவில் ‘நட்சத்திரப் பாடகி’யாக ஆகலாம் என்று ஆசை காட்டி, உறுதி கூறி கடத்தி வந்து பாலியல் தொழில் மையத்திற்கு தான் எவ்வாறு விற்கப்பட்டார் என்பதை நேயர்களிடம் கூறியிருந்தார்.

இத்தகைய ஆட்கடத்தல்  பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு வானொலி மிகவும் பொருத்தமானதொரு ஊடகம். ஏனெனில் தங்கள் பெயரை சொல்லாமலே இதனால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் “குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் பாதிப்பு ஏதும் வருமோ என்ற அச்சமேதுமின்றி” தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என பிலிப்ஸ் கூறினார்.

இவ்வாறு தப்பிப் பிழைத்துவந்தவர்களுடன் நேயர்கள் நெருங்கி வருவதற்கு வானொலி உதவி செய்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 “உயிருள்ள ஒரு நபர்தான் அங்கே பேசுகிறார். அதுவும் முக்கியமாக விஷயங்களை வெளியே அம்பலப்படுத்துகிறார்” என்றும் பிலிப்ஸ் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.