×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்திய தொழிற்சங்கம் நியாயமான ஊதியம், வேலை கேட்டு உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுக்குக் கோரிக்கை

Thursday, 15 February 2018 09:15 GMT

ARCHIVE PHOTO: Employees work at the production line of a textile mill in the western Indian city of Ahmedabad September 10, 2013. REUTERS/Amit Dave

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, பிப்.15 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தொழிலாளர்களின் மிகவும் அரிதானதொரு நடவடிக்கையாக புகழ்பெற்ற ஆயத்த ஆடை நிறுவனத்திற்கு லேபிள்களை சப்ளை செய்யும் முக்கியமான நிறுவனத்துடன் ஏற்பட்ட சச்சரவில்  தலையிட்டு உதவி செய்ய இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்கம் உலகத்தின் மிகவும் புகழ்பெற்ற 130 ஆயத்த ஆடை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சப்ளை செய்யும் சங்கிலித் தொடரில் இதுவரை வரையறுக்கப்படாத பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இந்த முயற்சி அமைந்துள்ளது என இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவோர் தெரிவிக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் தென்பகுதியில் செயல்பட்டு வரும் ஏவரி டென்னிசன் தொழிற்சாலையிலிருந்து சமீப மாதங்களில் வேலைநீக்கம் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை திரும்பப் பணியில் அமர்த்தவேண்டும் எனவும், நியாயமான ஊதியம் வழங்கவேண்டும் என்றும் எழுப்பப்பட்ட கோரிக்கை ‘கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்களிடமிருந்து’ வந்ததாகும்  என கார்மெண்ட் அண்ட் டெக்ஸ்டைல் ஒர்க்கர்ஸ் யூனியன் தெரிவித்தது.

இந்த நிறுவனங்கள் தங்களுக்குச் சப்ளை செய்யும் சங்கிலித் தொடர்களை வரையறுக்க முன்வந்துள்ள நிலையில் மிகவும் சிக்கலான உற்பத்தி மற்றும் விநியோக வலைப்பின்னல்களில் நிலவும் தொழிலாளர்களின் நலச் சட்டங்களை மீறிவருவதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என தொழிற்சங்கங்களும் செயல்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.

 “அவர்களுக்கு சப்ளை செய்யும் சங்கிலித் தொடரின் ஒரு பகுதியாகவே இந்தத் தொழிலாளர்கள் இருப்பதோடு அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்ற நிலையிலேயே நாங்கள் இந்தப் புகழ்பெற்ற ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதினோம்” என  கார்மெண்ட் அண்ட் டெக்ஸ்டைல் ஒர்க்கர்ஸ் யூனியனின் ஓர் ஆலோசகரான ஜெயராம் கோட்டகரஹள்ளி ராமையா கூறினார். இந்தத் தொழிற்சங்கத்தில் கர்நாடகத்தில் மட்டுமே 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

“சமீப மாதங்களில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்துடன் பேசுவதற்குத் தொழிலாளர்கள் முயற்சி செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கறுப்பு பட்டையை அணிந்து கொண்டதோடு, ஒரு சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றனர். எனினும் அதனால் எந்தவிதப் பலனுமில்லை” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

உலகத்தின் மிகப்பெரும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு லேபிள்கள், விவரிப்பு அட்டைகள், விலை அட்டைகள் ஆகியவற்றை வழங்கி வருகின்ற கலிஃபோர்னியா நகரை தலைமையகமாகக் கொண்டு  செயல்பட்டு வரும் ஏவரி டென்னிசன் நிறுவனம் இந்தப் புகார்கள் அனைத்தையும் மறுதலித்தது.

ஏவரி டென்னிசன் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், உலகப் புகழ்பெற்ற ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்கள், மாநில தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கு அனுப்பிய புகார் ஒன்றில் இந்தத் தொழிலாளர்களில் பலரும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்த முறையிலான ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்றும், அவர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கம் குறிப்பிட்டது.

இத்தகைய வேலைநீக்கங்கள் சட்டவிரோதமானவை என்று குறிப்பிட்ட கார்மெண்ட் அண்ட் டெக்ஸ்டைல் ஒர்க்கர்ஸ் யூனியன், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்குவதில்லை என்றும், ஒப்பந்த ஊழியர்கள் சங்கமாகத் திரண்டார்கள் எனில் ஆலையை மூடிவிடுவோம் என்றும் இந்த நிறுவனம் அச்சுறுத்தி வருகிறது என்றும் குற்றம் சாட்டியது.

தற்போதுள்ள இந்தியச் சட்டங்களின்படி, நிறுவனங்கள் ‘அவர்களது முக்கியமான வேலைகளின்’ ஒரு பகுதியாக இல்லாத வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றாலும், குறைந்தபட்ச ஊதியம், சலுகைகளைப் பெறுவது ஆகியவற்றுக்கு அவை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு எடுப்பது மிகவும் பொதுவானதொரு வழக்கம் என்றும் அது சட்டபூர்வமானது என்றும் ஏவரி டென்னிசன் நிறுவனத்தின் தெற்கு ஆசியாவிற்கான மனித வளத்திற்கான இயக்குநர் ஆன சவுரவ் குமார் கூறினார். நிறுவனத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன.

“தற்போது வேலையில் சேர்க்கும் நடவடிக்கை நிகழ்ந்து வருகிறது. இதற்கென வெளியிலிருந்து வேலைக்கு விண்ணப்பத்தவர்களை விட  ஏவரி டென்னிசன் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை கையாளுவதில் அனுபவம் பெற்ற ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது” என்றும் மின்னஞ்சல் மூலமாக அவர் தெரிவித்தார்.

புகழ்பெற்ற நிறுவனங்களின் கவலைகள்

சுமார் 4 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள, பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வியாபாரத்தைக் கையாண்டு வருகின்ற இந்தியாவின் ஆயத்த ஆடைத் தொழிலின் நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வரிசையாக தொடர்ந்து நீடித்து வரும் சச்சரவுகளில் இந்த சச்சரவு மிகவும் சமீபத்திய நிகழ்வாகும்.

சங்கங்களில் சேர்ந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயோ அல்லது சங்கத்தின் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலோ இந்த சப்ளை வலைப்பின்னலில் உள்ள நிறுவனத் தொழிலாளர்கள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்படுவது அல்லது வேலையிலிருந்து நீக்கப்படுவது ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என இது குறித்த இயக்கங்களை நடத்திவருவோர் புகார் எழுப்பினர்.

தொழிற்சங்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான இந்த பாரபட்சம் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து உலகின் புகழ்பெற்ற ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்கள் கவலை தெரிவித்தன என்று உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், ஆலை உரிமையாளர்கள், சமூகத்தின் நலன்களுக்காகப் பாடுபடும் குழுக்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் எதிக்கல் ட்ரேடிங் இனிஷியேட்டிவ் அமைப்பைச் சேர்ந்த மார்ட்டின் பட்டில் கூறினார்.

ஏவரி டென்னிசன் இந்த எதிக்கல் ட்ரேடிங் இனிஷியேட்டிவ் அமைப்பில் உறுப்பினராக இல்லை எனினும், எச் அண்ட் எம், எச் எம் பி ஸ்ட்ரீட், கேப், இண்டிடெக்ஸ் உள்ளிட்ட எதிக்கல் ட்ரேடிங் இனிஷியேட்டிவ் அமைப்பில் உறுப்பினராக உள்ள பல நிறுவனங்களுக்கு லேபிள்களை சப்ளை செய்து வரும் நிறுவனமாகும்.

 “சங்கம் அமைப்பதற்கான, கூட்டுப் பேரத்திற்கான சுதந்திரத்திற்கான தொழிலாளர்களின் உரிமைகள் உள்ளிட்டு தொழிலாளர்களின் மனித உரிமைகளை எதிக்கல் ட்ரேடிங் இனிஷியேட்டிவ் அங்கீகரிப்பதோடு, இவை மதித்துப் போற்றப்பட வேண்டும்”என ஒரு மின்னஞ்சல் செய்தியில் பட்டில் கூறினார்.

“தங்களது நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தகவலை தெரிவிக்க” ஏவரி டென்னிசன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பட்டில் கூறினார்.

இனிமேல் தனது  சேவை தேவைப்படாது என ஏவரி டென்னிசன் நிறுவனம் தன்னிடம் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தெரிவித்ததாக புள்ளிவிவரங்களைப் பதிவு செய்பவராக மாதம் ரூ. 12,000 ஊதியம் பெற்று வந்த 32 வயதான கவுரிஷ் வேங்கடகவுடா கூறினார்.

 “அதன் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக நான் செய்து வந்த வேலையைச் செய்வதற்கு தினக்கூலி அடிப்படையில் அவர்கள் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொண்டனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராபர்ட் கார்மைக்கேல் மற்றும் பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->