×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தல்காரர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ சட்டத் திருத்தத்திற்கு இந்திய அரசு ஒப்புதல்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 28 February 2018 17:58 GMT

A labourer is silhouetted against the backdrop of an induction furnace inside a steel factory on the outskirts of Jammu June 24, 2014. REUTERS/Mukesh Gupta

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, பிப்.28 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மிக வேகமாக அதிகரித்துவரும் குற்றத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆட்கடத்தல்காரர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கக் கூடிய கடுமையான புதிய சட்டம் ஒன்றுக்கு புதன்கிழமையன்று இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூடிய பிறகு அதன் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆட்கடத்தல் மசோதா இக்குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதையும், பாலியல் தொழில்மையங்களில் மேற்கொள்ளப்படும் அதிரடிச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்படும் பெண்கள், சிறுமிகள் ஆகிய இக்குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு தான் ஏற்பாடு செய்திருந்த ஒரு மாத கால நடைபயணத்தை ஓர் அறிக்கையில் குறிப்பிட்ட நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி “இந்தக் கோரிக்கையை முன்வைத்து 11,000 கிலோமீட்டர் நீள பாரத் யாத்ரா (இந்தியா பேரணி)வில் பங்கேற்ற 12 லட்சம் பேரின் வெற்றி இது” எனக் குறிப்பிட்டார்.

“மாநிலங்களுக்கு இடையே குழந்தைகளைக் கடத்திச் செல்வது திட்டமிட்ட குற்றமாக மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஆட்கடத்தலுக்கு எதிரான வலுவான சட்டம் என்பது இத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை தருவதாக இருக்கும்”

ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சாரத்திற்குக் கிடைத்த ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ சாதனை என இதனைக் குறிப்பிட்ட சத்யார்த்தி, இதைச் சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

இந்த முழுமையான மசோதா தற்போதுள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டங்களை ஒன்றுபடுத்துவதோடு, கட்டாய உழைப்பு, பிச்சையெடுத்தல், கட்டாயத் திருமணம் ஆகிய குற்றங்கள் உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான தெற்காசியா பகுதியில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியாவை மாற்றியமைக்கும்.

இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பல ஏழைகளும் நல்ல வேலை வாங்கித் தருகிறோம் என்ற உறுதிமொழிகளுடன் ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, வயல்களில் அல்லது செங்கல் சூளைகளில் கட்டாயமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவதோடு, வீடுகளில் வீட்டு வேலைக்காரர்களாக அடிமையாக்கப்படுகின்றனர்; அல்லது பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்.

2016ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள 8,132 வழக்குகள் அதற்கு முந்தைய ஆண்டை விட ஆட்கடத்தல்  குறித்த பதிவுகள் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்தக் குற்றம் மிகப் பெருமளவிற்குப் பரவியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ளும் அரசின் ஓர் அறிக்கையானது “மிகவும் பலவீனமானவர்களை, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஆகிய பிரிவினரை பெரிதும் பாதிக்கின்ற, மிகப் பரவலான, எனினும் கண்ணுக்குத் தெரியாத குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மசோதா முன்வந்துள்ளது” எனக் குறிப்பிடுகிறது.

இந்தப் புதிய சட்டம் ஆட்கடத்தல்காரர்களுக்கு பத்து ஆண்டுகள் அல்லது ஆயுளுக்கும் சிறைத்தண்டனை வழங்க வகை செய்கிறது. குறைந்தபட்சமாக ரூ. 1,00,000 அபராதமும் இந்தச் சிறைத் தண்டனையில் அடங்கும்.

“நாடு தழுவிய அளவிலும், சர்வதேச அளவிலும் திட்டமிட்ட வகையில் நிலவில் வரும் கூட்டணியை உடைத்து நொறுக்கும் நோக்கத்துடன்  கைது செய்யப்பட்டவரின் சொத்தை கைப்பற்றுவது; மேற்கொள்வது; இக்குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கைப்பற்றுவது ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இந்தச் சட்டம் உள்ளது” என அரசு தெரிவித்தது.

இத்தகைய ஆட்கடத்தல் குறித்த வழக்குகளை விரைவாக நடத்துவதற்கென சிறப்பு நீதிமன்றங்களுக்கு இந்த சட்டம் வகை செய்வதோடு, இதுகுறித்த விசாரணை மற்றும் மீண்டும் தாயகத்திற்கு அனுப்புவதற்கான கால அளவு ஓர் ஆண்டு என்றும் காலக்கெடு விதிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் புனரமைத்துக் கொள்வதற்கென மறுவாழ்வு நிதி ஒன்றும் ஏற்படுத்தப்படும். மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாத வகையில் காணொலிக் காட்சியின் மூலம் சாட்சி சொல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இத்தகைய குற்றங்களைத் தடுப்பது, இதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது,, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது  ஆகியவற்றுக்கென மாவட்ட, மாநில, மத்திய அளவில் ஆட்கடத்தலுக்கு எதிரான குழுக்கள் உருவாக்கப்படும்.

 

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->