×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தலுக்கு எதிரான இந்தியாவின் சட்டத்தை ஆதரிக்க அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் ஒன்றுதிரள்கின்றனர்

by Kieran Guilbert | KieranG77 | Thomson Reuters Foundation
Thursday, 8 March 2018 00:30 GMT

- கீரன் குய்ல்பெர்ட்

புதுதில்லி, மார்ச் 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை புனரமைத்துக் கொள்ள உதவும் நோக்கத்துடன் ஆட்கடத்தலுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கடுமையான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த நவீன அடிமைத்தனத்தில் இருந்து மீண்டெழுந்த பெண்கள் இந்திய தலைநகரில் ஒன்று திரள்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், அவர்களின் மறுவாழ்விற்குத் தேவையான நிதி ஏற்பாட்டை நிறுவவும், பாலியல் தொழில் மையங்களில் மேற்கொள்ளப்படும் அதிரடிச் சோதனைகளில் கண்டெடுக்கப்படும்  பெண்கள், சிறுமிகள் போன்ற கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் ரீதியான சுரண்டல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவதைத் தடுக்கவும் முன்னுரிமை அளிக்கின்ற ஒரு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் தனது ஒப்புதலை வழங்கியிருந்தது.

2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களில் அரசியல் கவனம் திரும்பிவிடும் என்பதால் இந்தச் சட்டம் கவனத்திலிருந்து விலகிவிடக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இதிலிருந்து மீண்டவர்கள், இதுகுறித்த செயல்பாட்டாளர்கள் பலரும் இந்த வாரம் டெல்லியில் அரசியல்வாதிகளை சந்தித்து இந்த மசோதாவை நாடாளுமன்றம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டு, கொத்தடிமை உழைப்பில் சிக்கித் தவித்து, கட்டாய திருமணத்திற்கு ஆட்பட்டு பாதிப்பிற்கு ஆளான பலரும் இவ்வாறு தப்பிப் பிழைத்த பிறகு உயிர் வாழ்வதற்கும் தங்கள் குடும்பங்களை நடத்திச் செல்வதற்கும் போராடி வருவதாகவும், உயிர் பிழைக்க மீண்டும் அடிமை உழைப்பிற்கு திரும்பிச் செல்லவேண்டிய சூழ்நிலையில் மீண்டும் சிக்கி விடுவோமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

 “வெறும் பணம் மட்டுமல்ல.. எங்களுக்கு தங்க இடமும், ஆதரவும், எங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் தேவைப்படுகிறது...” என மூன்றாண்டுகள் ஒரு செங்கற்சூளையில் சிக்கிக் கொண்டு வேலை செய்து வந்த நான்கு குழந்தைகளுக்குத் தாயான, 50 வயது மீனா கூறினார்.  செங்கற்சூளையில் அவர் வேலை செய்து வந்த காலத்தில் அவர் கொடுமைப்படுத்தப்பட்டதோடு, தனக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என்றும் வெறும் ரூ. 5,000 மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

தனக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் தனது  உண்மைப் பெயரை தருவதற்கு மறுத்துவிட்ட மீனா இத்தகைய கொத்தடிமைகள் குறித்த இயக்கத்தினரால் கடந்த மாதம் மீட்கப்பட்டார். எனினும் அரசிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில் தனது குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தான் ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்  ஆட்கடத்தல் குறித்து நடத்திய பயிற்சியரங்கில் ஒன்றில் பேசிய இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரான மீனா “நாங்கள் ஏழைகள்... எனவே நீதியையும் மறுவாழ்வுக்கான உதவியையும் பெறுவதென்பது மிகவும் கடினமானதாக உள்ளது” என குறிப்பிட்டார்.

ஆட்களைக் கடத்திச் செல்வது குறித்த மசோதா தற்போதுள்ள ஆட்கடத்தலுக்கு  எதிரான சட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பதோடு, கட்டாய உழைப்பு, பிச்சை எடுப்பது, கட்டாயத் திருமணம் ஆகியவற்றில் உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக விளங்கும் தெற்காசியப் பகுதியில் இத்தகைய குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில்  இந்தியாவை முன்னணியில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டதும் ஆகும்.

மறுவாழ்வு ஏற்பாடுகளில் கவனம்

இத்தகைய ஆட்கடத்தல் குறித்த வழக்குகள் 2016ஆம் ஆண்டில் 8,132 வழக்குகளாக, அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமானதாக உயர்ந்துள்ளது என்பதை இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

“(இச்சட்டத்தின்)முக்கிய பகுதியாக மறுவாழ்விற்கான ஏற்பாடு இருக்க வேண்டும். இத்தகைய சேவைகளுக்கென அரசு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்” என குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுப்பதிலும், அவர்களின் கல்வி பெறுவதற்கான உரிமைக்காகவும் போராடியதற்காக 2014ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை கூட்டாகப் பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குறிப்பிட்டார்.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் பேசிய இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட ஐந்து பேருமே  அரசிடமிருந்து எந்தவித உதவியும் பெறவில்லை என்று குறிப்பிட்டனர்.

ஆட்கடத்தலை தடுப்பது, பாதுகாப்பிற்கான முயற்சிகள் மற்றும் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு ஆகிய நடவடிக்கைகளை மேற்பார்வை இடுவதற்கென ஆட்கடத்தலுக்கு எதிரான குழுக்கள்  மாவட்ட, மாநில, மத்திய அளவில் உருவாக்கப்படுவதற்கும் வகை செய்கிறது.

ஆட்கடத்தலுக்கு எதிரான குழுவான சக்தி வாஹின் என்ற அமைப்பின் நிறுவனரான ரவி காந்த் குறிப்பிடுகையில் இந்தச் சட்டம் டெல்லியில் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதென்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறினார்.

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக நீதியைக் கோரும் முயற்சியில் தாங்கள் மிகவும் மனமுடைந்து விட்டதாகவும் தாங்கள் மேலும் எதிர்பார்ப்பதாகவும் இத்தகைய அடிமைத்தனத்திலிருந்து மீண்ட பலரும் குறிப்பிட்டனர்.

“நீதியைப் பெறுவதென்பது முக்கியமானதுதான். என்றாலும் (இச்சட்டத்தின்கீழ்) மறுவாழ்வு ஏற்பாடுகள் என்பது அதைப் போன்றே முக்கியமானதாகும்.  ஏனெனில் இந்தப் பெண்கள் பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கே தேவையான உணவு பெற இயலாதவர்களாக… பாதுகாப்பு இல்லாதவர்களாக இருக்கின்றனர்” என இந்தியாவில் இத்தகைய ஆட்கடத்தலில் இருந்து மீண்டவர்களின் கூட்டமைப்பான ராஷ்ட்ரீய கரீமா அபியான் அமைப்பைச் சேர்ந்த க்ரந்தி கோடே கூறினார்.

கடத்திச் செல்லப்பட்டு ஒருவருக்கு விற்கப்பட்டு, அந்த நபரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பல மாத காலத்திற்கு பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 28 வயது சுனிதா இந்த அடிமைத்தனத்தில் இருந்து கடந்த ஆண்டுதான் தப்பித்தார். என்றாலும் அவரைக் கடத்திச் சென்றவர்கள் அவரது குடும்பம் வசிக்கும் பகுதிக்கு மிக அருகிலேயே வசித்து வருவதால் அவரது சுதந்திரம் பயம் நிரம்பிய ஒன்றாகவே இருப்பதோடு, அன்றாடம் அவர் துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்.

தனக்கும், பாலியல் வன்முறையின் விளைவாகப் பிறந்த தனது மூன்று மாத கால குழந்தை ஆகியோரின்  எதிர்கால வாழ்வில் இந்தச் சட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாகவும் சுனிதா கூறினார்.

 “என்னைப் போன்ற பெண்களுக்கும் மற்ற அனைவருக்குமே  இந்தச் சட்டம் நல்லதாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன் ” தனது உண்மையான பெயரை வெளியிட மறுத்துவிட்ட சுனிதா கூறினார்.

(செய்தியாளர்: கீரன் குய்ல்பெர்ட்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->