×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆயத்த ஆடைத் தொழிலில் நிலவும் சுரண்டலை இந்திய மொழியில் வெளிவந்த மர்ம நாவல் சிறப்பாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 8 March 2018 07:54 GMT

ARCHIVE PHOTO: Employees work at a garment factory in the southern Indian state of Tamil Nadu June 19, 2013. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

  - அனுராதா நாகராஜ்

சென்னை, மார்ச் 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – தென் இந்தியாவில் உள்ள ஆயத்த ஆடை மற்றும் நெசவாலைகளில் மிக மோசமாக சுரண்டப்படும் பெண்களை விடுவிப்பதில் ஈடுபடும் ஒரு செயல்பாட்டாளரின் மரணம் குறித்து வெளியாகியுள்ள மர்ம நாவல் ஒன்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்துவருவோரிடையே நன்கு விற்பனையாகும் நூலாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் எழுத்தாளரின் 300 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் சுமார் 4 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு தொழிலில் நிலவி வரும் கட்டாய உழைப்பை புரிந்து கொள்வதற்கான ‘கையேடாக’ பயன்படுத்தப்படுகிறது.

 “வாசகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த நூல் உள்ளது என்பதோடு, அதன் ஒவ்வொரு அத்தியாயமுமே நூற்பாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் நிலவிவரும் சுரண்டலின் வரலாற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது” என தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்  ஆயத்த ஆடைத் தொழிலாளர்களிடையே பணியாற்றிவரும் ஓர் அறக்கட்டளையான ரீட் அமைப்பின் இயக்குநரான கருப்புசாமி கூறினார்.

“பிரச்சனையின் அடியாழத்திற்கு அது உங்களைக் கொண்டு செல்கிறது. நமது தொழிலாளர்களும் இதுகுறித்த பிரச்சாரத்தை மேற்கொள்வோரும் இதைப் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதன் மூலம் இந்தத் தொழிலின் செயல்பாட்டுத் தன்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.”

ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களில் வர்த்தகம் நடைபெற்று வரும் இந்தியாவின் ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழிலின் பெரும்பகுதி வரம்புகளுக்கு வெளியேயிருந்து செயல்படுவதோடு, மிக மோசமாகவே ஒழுங்குமுறைக்கு ஆட்படுகிறது.

இந்தத் தொழிலாளர்கள், இவர்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பகுதியினர் பெண்களாக உள்ளனர்,  மிகவும் பலவீனமானவர்களாக, மிகக் குறைந்த அல்லது சட்டப் பாதுகாப்பு என்பதே இல்லாதவர்களாக, மிகச் சிறிய அளவிற்கே முறையாக புகார்களை வழங்கவும், தீர்வு காணவுமான ஏற்பாடுகள் கொண்ட பிரிவினராக உள்ளனர் என இது குறித்த இயக்கங்களை மேற்கொள்வோர் தெரிவிக்கின்றனர்.

வழக்கறிஞரான இந்த எழுத்தாளர் முருகவேள்  ‘செம்புலம்  (வறண்ட நிலம்)’ என்ற பெயருள்ள இந்த நாவலை எழுதுவதற்கு அமர்ந்தபோது, தங்களின் ஊதியத்தைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த தனது வாடிக்கையாளர்களில் சிலரே தம் நினைவுக்கு வந்ததாகக் கூறுகிறார்.

இந்தத் தமிழ் நாவல் ஒரு நூற்பாலைக்கு அருகே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் ஒருவரின் மரணம் குறித்த விசாரணையிலிருந்து துவங்குகிறது.

இந்த விசாரணைக்கென சாட்சிகள் அழைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரியவர்கள் விசாரிக்கப் படும்போது, இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் தொழிலாளர்கள் உலகப் புகழ்பெற்ற ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கான துணியை நெய்வதிலும், தைப்பதிலும்  எதிர்கொள்கின்ற கொடுமைகளை, குறைந்த ஊதியத்தை, நீண்ட வேலை நேரத்தை சித்தரிப்பதாக அமைந்துள்ளன.

தான் படித்து இப்போது வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கோயம்புத்தூர் நகரைச் சுற்றி இருக்கும் ‘சுரண்டல் நிரம்பிய’ தொழிற்சாலைகளின் வளர்ச்சியை கண்டபடியேதான் முருகவேளும் வளர்ந்திருக்கிறார்.

“இந்தப் பகுதியில் நீங்கள் வளரும்போது, இந்தத் தொழிலை உங்களால் புறக்கணிக்கவே முடியாது. இங்குள்ள ஒவ்வொருவருமே இந்த ஆலைகளோடு தொடர்புடைய யாராவது ஒருவரை தெரிந்தவர்களாக, அங்கு நிலவும் சுரண்டலைப் பற்றித் தெரிந்தவர்களாகவும் தான் இருப்பார்கள்” என தொலைபேசி மூலமான பேட்டி ஒன்றில் முருகவேள் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “உயிரைக் குடிக்கும் இத்தகைய தொழிற்கூடங்களில் வேலை செய்ய இந்தச் சிறுமிகள் ஏன் போகிறார்கள் என்று நான் எப்போதுமே வியப்படைந்தது உண்டு.”

ஓரளவிற்கு நினைவலைகளை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ள இந்த நாவல் “நல்ல ஊதியம் வழங்குகின்ற, வாழ்நாள் முழுவதற்கும் வேலை தருகின்ற’ தொழில் என்பதில் இருந்து கொத்தடிமை தொழிலாக ‘ அந்த இடத்திலேயே தங்கியிருந்து கூலி வேலை செய்யும்’ தொழிலாக மாற்றம் பெற்றுள்ளதையும் இந்த நூல் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

“மூன்றாண்டுகால வேலையின் முடிவில் ஒரு பெரும் தொகை வழங்கப்படும் என்று ஆலை நிர்வாகங்கள் வாக்குறுதி அளித்த போதிலும் இதிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பையே வழங்காமல் வேலை செய்யும்படி இந்த இளம்பெண்களை கட்டாயப்படுத்துகிறது.” எனவும் முருகவேள் குறிப்பிட்டார்.

‘இந்தியாவின் நெசவாலைப் பள்ளத்தாக்கு’ என்று குறிப்பிடப்படும்  நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் இந்த நூல் பரவலாக படிப்பதற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

“இந்த நூலைப் படிக்க வேண்டுமென இது குறித்த இயக்கத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.” என சாமி கூறினார்.

 “இன்று இந்தத் தொழிலில் வேலை செய்து வரும் பலரும் இந்தச் சுரண்டலின் ஊற்றுக் கண்ணைப் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர். அதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்றால், இதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் அவர்கள் கண்டறிந்து கொள்வார்கள்.”(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->