×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்திய பாலியல் தொழில் மையத்தின் உரிமையாளர்களுக்கு குழந்தைகளை கடத்திய வழக்கில் முதல் தடவையாக ஆயுள் தண்டனை விதிப்பு

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 28 March 2018 09:20 GMT

A child of a sex worker plays in the red light area of Kalighat in the eastern Indian city of Kolkata October 31, 2009. REUTERS/Parth Sanyal

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, மார்ச் 28 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆட்கடத்தல் குறித்து தொடுக்கப்படும் ஐந்து வழக்குகளில் இரண்டுக்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்படும் ஒரு நாட்டில் இது வரை கண்டிராத வகையில் இந்தியாவைச் சேர்ந்த பாலியல் தொழில் மையத்தின் இரண்டு உரிமையாளர்களுக்கு குழந்தைகளை கடத்தியதற்காகவும், வன்புணர்ச்சி மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் துணிவான” சாட்சியங்களின் அடிப்படையில் இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் உள்ள கயா நகரில் பாலியல் தொழில் மையம் ஒன்றை நடத்தி வந்த பாஞ்ச்சோ சிங் மற்றும் அவரது மனைவி சாயா தேவி ஆகிய இருவருக்கும் தற்போதுள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டங்களின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் சுனில் குமார் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் காவல் துறை மேற்கொண்ட ஓர் அதிரடிச் சோதனையின்போது இந்த பாலியல் தொழில்மையத்திலிருந்து மீட்கப்பட்ட ஒன்பது இளம்பெண்களில் நான்கு பேரின் சாட்சியங்களை கயா நகரில் இருந்த நீதிமன்றம் கேட்டறிந்தது.

 “பெரும்பாலான வழக்குகளில் இவ்வாறு பெண்கள் மீட்கப்பட்ட பிறகு, அவர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். இவ்வாறு சாட்சியம் அளிப்பதற்கு அவர்கள் திரும்பி வரவே மாட்டார்கள்” என தொலைபேசி மூலம் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் குமார் குறிப்பிட்டார்.

“ஆனால் இந்த விஷயத்தில், ஒரு சில இளம் பெண்கள் திரும்பி வந்து தாங்கள் அனுபவித்த கொடுமைகள் அனைத்தையும் மிக விரிவாக விவரித்தனர். கட்டாயக் கருக்கலைப்புகள், பாலியல் வன்புணர்ச்சி ஆகியவை பற்றியும் ஒரு சில பெண்கள் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றியும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.”

இவர்களில் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்திலிருந்து 11 வயதில் கடத்தி வரப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு தினமும் குறைந்தது 20 ஆண்களுடன் உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட பதின்பருவச் சிறுமி ஒருவரும் இதில் அடங்குவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு ரயில் நிலையத்தில் இந்த இரண்டு ஆட்கடத்தல்காரர்களில் ஒருவரை கண்டறிந்து துப்பு கொடுத்து அந்த நபர் கைதாவதற்கு உதவி செய்ததற்காக 2017ஆம் ஆண்டில் துணிவிற்கான விருதைப் பெற்ற அந்த பதின்பருவச் சிறுமியும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர்களில் ஒருவர் ஆவார்.

இவ்வாறு சாட்சி சொல்ல முன்வந்த அவர்களின் துணிச்சலைப் பாராட்டிய நீதிமன்றம், மீட்கப்பட்டு சாட்சியம் வழங்கிய நான்கு பெண்களுக்கும் தலா ரூ. 4,50,000 இழப்பீடும், இவ்வாறு மீட்கப்பட்ட மற்ற பெண்களுக்கு தலா ரூ. 3,00,000 இழப்பீடும் நீதிமன்றம் வழங்கியது.

 

அரசு முறை சாரா அமைப்புகளின் கருத்துப்படி இந்தியாவில் வணிகரீதியாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி பேரில் 1 கோடியே 60 லட்சம் பெண்களும், சிறுமிகளும் பாலியல் ரீதியான நோக்கங்களுக்கான ஆட்கடத்தலுக்கு ஆளானவர்கள் ஆகும்.

இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2016ஆம் ஆண்டில் வெளிவந்த 8,000க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்குகளில் பாதிக்கும் குறைவான வழக்குகளே காவல்துறையால் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகளில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்குகளில் 28 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2017 ஆட்கடத்தல் குறித்த அறிக்கையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவை “போதுமானதாக இல்லை என்பதோடு, தொடர்ச்சியானதாகவும் இல்லை” என குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை இது குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்வோர் வரவேற்றுள்ளதோடு, இத்தகைய தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்கள் சாட்சி சொல்ல முன்வருவதற்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தனர்.

“இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் அதிகமான அளவில் முன்வந்து நீதிக்காகப் போராடுவதையும், அதன் விளைவாக மேலும் அதிகமான குற்றவாளிகள் தண்டனை பெறுவதையும் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என ஆட்கடத்தலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அறக்கட்டளையான ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பின் சட்டப் பிரிவுத் தலைவரான அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.

செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->