×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பாலியல் தொழிலுக்கான ஆட்கடத்தலை முறியடிக்க தென் இந்தியாவின் ‘டோலிவுட்’ திரைப்பட உலகம் முனைப்பு

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 9 April 2018 10:21 GMT

ARCHIVE PHOTO: Cinema goers watch a movie in a theatre in Mumbai December 12, 2014. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஏப். 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -‘டோலிவுட்’ என பரவலாக அறியப்பட்ட  தென் இந்தியாவின் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்படத் துறை ஆட்கடத்தலுக்கு  எதிரான ஆறு குறும்படங்களை தயாரித்துள்ளது. நடிகைகளாக மாறுவதற்கு விழைபவர்களை பாலியல் தொழில்மையங்களுக்குள் சிக்க வைக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு துறையிலிருந்து இத்தகைய முயற்சி எடுக்கப்படுவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.

டோலிவுட் திரைப்படத்துறையானது உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற சக திரைப்படத் துறையான பாலிவுட்-ஐ விட அதிகமான திரைப்படங்களை தயாரித்துவருவதாகும். இது தெலுங்கு மொழி பேசப்பட்டு வரும் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் முக்கிய செல்வாக்கு வகித்து வருவதுமாகும்.

இளைஞர்கள் பணத்தைக் கொண்டு உடலுறவுக்காக பெண்களை அணுகுவதிலிருந்து தடுப்பதை நோக்கமாகக் கொண்ட நாடகங்கள் வடிவிலான ஆறு குறும்படங்கள் டோலிவுட் டின் மிகப்பெரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் சிலவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளன. இது ஆட்கடத்தலுக்கு எதிரான ப்ரஜ்வாலா மற்றும் ஹைதராபாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகியவற்றின் ‘ஸ்டாப் டிமாண்ட்’ என்ற கூட்டு முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.

“இவ்வாறு பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் பெண்களில் கிட்டத்தட்ட 30 சதவீத பெண்கள் மாடல் பெண்களாக அல்லது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளால் கவர்ந்திழுக்கப்படுபவர்களே ஆவர் என ப்ரஜ்வாலா அறக்கட்டளையின் நிறுவனரான சுனிதா கிருஷ்ணன் கூறினார்.

“இந்த முயற்சியில் டோலிவுட்-ஐ சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள்தான் மக்களிடையே கருத்துக்களை உருவாக்குபவர்களாக இருக்கின்றனர்” என இந்த திரைப்படங்கள் திரையிடப்பட்ட ஆட்கடத்தலுக்கு எதிரான மாநாட்டின் போது அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் அச்சுறுத்தலின் மூலமாகவும், வற்புறுத்தலின் மூலமாகவும் இந்தியாவில் உள்ள 2,00,000 பெண்களும் சிறுவர்களும் விபச்சாரத்தில் கட்டாயமான வகையில் தள்ளப்படுகின்றனர் என ப்ரஜ்வாலா மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இதற்கென பிரச்சாரம் செய்து வருகின்ற, உதவி செய்து வருகின்ற குழுக்களின் கருத்துப்படி  இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி வணிகரீதியான பாலியல் தொழிலாளிகளில் 1 கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் நோக்கத்திற்காக கடத்தப்படுகின்றனர்.

இதற்கென மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்திச் செல்லப்படும் பெண்களில் பெரும்பகுதியினர் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தே வருகின்றனர். இந்தப் பெண்கள் அதிகமாகச் சென்றடையும் இடங்களாக மகாராஷ்ட்ரா, டெல்லி, கோவா ஆகியவை உள்ளன.

இத்தகைய ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் திரைப்படத் துறை முக்கிய பங்களிப்பாளராக உள்ளது என இந்த ஆறு குறும்படங்களில் மூன்று படங்களைத் தயாரித்த பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராமோஜி குழுமத்தின் ஈநாடு டெலிவிஷன் நெட்வொர்க் அமைப்பின் தலைமை தயாரிப்பாளரான பவன் குமார் மான்வி கூறினார்.

“இந்தத் துறைக்கே கூட இது தெரியாது…. என்றாலும் கூட தனது பங்கு குறித்து அதற்கு குற்ற உணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்” என ஹைதரபாத் நகரிலிருந்து தொலைபேசி மூலம் மான்வி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“குறைந்தபட்சம் இப்போதாவது இத்துறை இத்தகைய முயற்சியை மேற்கொள்ள முன்வந்துள்ளது. வேறு சில தயாரிப்பு நிறுவனங்களும் கூட இத்தகைய பொதுச் சேவை அறிவிப்புகளை தயாரித்துள்ளன. மெதுவாக இத்துறையும் கூட தனது பங்கு குறித்து அறியத் துவங்கியுள்ளது.”

இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த குறும் படங்கள் திரைப்பட அரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்படவுள்ளன.

“இந்தக் குழுவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம், பாலியல் தொழிலுக்காக (பெண்கள்) கடத்திச் செல்லப்படுவது குறித்த முக்கியமான செய்தியை  இந்தப் பகுதியில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களிடம், குறிப்பாக ஆண்கள், பையன்கள் ஆகியோரிடம்,  எங்களால் கொண்டு செல்ல முடிந்துள்ளது” என ஹைதராபாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அதிகாரியான கேத்தரின் ஹட்டா கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->