×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பேட்டி - குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு இந்தியா மரண தண்டனை விதிப்பது ஆட்கடத்தலில் ஈடுபடுவோரை தடுத்துவிடாது என இது குறித்த இயக்கத்தினர் கருத்து

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Tuesday, 24 April 2018 07:42 GMT

 - ரோலி ஸ்ரீவஸ்தவா

 மும்பை, ஏப். 24 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவின் பாலியல் தொழிலுக்கு குழந்தைகளை விற்போரை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்குதண்டனை விதிக்க ஒப்புதல் அளிக்கும் புதிய உத்தரவு தடுத்துவிடாது; ஏனெனில் ஆட்கடத்தல் வழக்குகளில் சட்டங்கள் மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன என இது குறித்த இயக்கத்தில் ஈடுபடும் முன்னணி செயல்பாட்டாளர்  கருத்து தெரிவித்தார். 

குழந்தைகளின் மீது பாலியல் ரீதியான தாக்குதல் தொடுப்போருக்கும் ஆயுள்தண்டனை விதிப்பதை அனுமதிக்கும் இந்தியாவின் பாலியல் ரீதியான குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் 12 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளின் மீது பாலியல்ரீதியான வன்கொடுமைக்கு தூக்கு தண்டனையை அறிமுகப்படுத்தும் வகையில் திருத்தப்படுகிறது. 

எனினும் பாலியல் தொழிலுக்கென குழந்தைகளைக் கடத்திச் செல்வோரை கைது செய்ய சட்டத்தைப் பயன்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து தவறிவருகின்றனர் என புகழ்பெற்ற அரோரா மனிதநேயப் பரிசுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள செயல்பாட்டாளரான சுனிதா கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 “ஆட்கடத்தல் வழக்குகளில் இந்த போஸ்கோ சட்டத்தை பயன்படுத்துவதும் இந்த வழக்குகளை  விரைவாக விசாரித்து நீதிவழங்கினாலும்தான் தூக்குதண்டனை என்பது குற்றங்களை தடுக்க உதவுவதாக இருக்கும்” என சுனிதா கிருஷ்ணன் கூறினார். ‘’ ஆனால் போஸ்கோவில் ஒரு சில ஆட்கடத்தல் வழக்குகளில் தான் பயன்படுத்தப்படுகிறது’’.

 குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக வெளிவருவதைத் தொடர்ந்து நாடுமுழுவதிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 21 அன்று நடத்திய அவசரக் கூட்டத்தில் இந்த சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 எனினும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளை, கைக்குழந்தைகளை கடத்துவது அதிகரித்து வருவது இதே போன்று நாடுதழுவிய அளவில் எதிர்ப்பலை எதையும் தூண்டிவிடவில்லை என இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் தெரிவித்தனர்.

 அரசின் புள்ளிவிவரங்களின்படி 2016ஆம் ஆண்டில் ஆட்கடத்தல் குறித்து வெளியான தகவல்கள் அதற்கு முந்தைய ஆண்டில் வெளிவந்த 8,000க்கும் அதிகமான சம்பவங்களை விட கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகமாகும். இதில் அரசு தரவுகள் படி அறுபது சதவிகிதத்திற்கு அதிகமாக கிட்டதட்ட 24 ஆயிரம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த வீடியோக்கள் பரவி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்த சுனிதா கிருஷ்ணன், சிறு குழந்தைகளுடனான பாலியல் செயல்கள் அடங்கிய வீடியோக்களுக்கான தேவைகள் இணையத்தில் அதிகரித்து வரும் அதேநேரத்தில் இதற்காகக் குழந்தைகளைக் கடத்துபவர்கள் தங்களின் அடையாளங்களை மறைத்துக் கொள்ளவும் அனுமதிக்கும் நிலையில் உள்ளது என்றார்.

“தற்போது சிறுவர்கள், குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் பதிவேற்றப்படுகின்றன; அல்லது சமூக ஊடகத்தில் சுற்றுக்கு விடப்படுகின்றன” என ப்ரஜ்வாலா என்ற ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையின் கூட்டு நிறுவனரான சுனிதா கிருஷ்ணன் கூறினார்.

 ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரான சுனிதா கிருஷ்ணனின்  ஹைதராபாத் அறக்கட்டளையானது கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்ட எண்ணற்றவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளது. இந்தக் குற்றம் பற்றி அதிகாரவட்டங்கள் இப்போது மேலும் அதிகமாக அறிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். எனினும் அது செயலுக்கு உதவுவதாக அமையவில்லை என்றும் அவர் கூறினார்.

“இந்தப் பிரச்சனை விரிவடைந்து கொண்டே போகும் விகிதத்திற்கும்   அதற்குரிய பதில் நடவடிக்கைக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி உள்ளது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

பாலியல் தொழிலில் உள்ள இடைத்தரகர்கள், பாலியல் தொழில் மையங்களின் மேலாளர்கள், இத்தொழிலுக்காக ஆட்கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்கள் ஆகியோரை கைது செய்ய தற்போதுள்ள சட்டங்களை அதிகாரிகள் பயன்படுத்தி வந்த போதிலும், இத்தகைய பாலியல் தொழிலில் அடிமையாக்கப்படுவதற்காக கடத்தி வரப்படும் குழந்தைகளை தாக்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் அபூர்வமாகவே கைது செய்யப்படுகின்றனர் எனவும் சுனிதா கிருஷ்ணன் கூறினார்.

“நாம் ஒன்று சேர்ந்து ஏதாவது நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பாக பல உயிர்களும் பலியாகியிருக்கும்” என இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருப்பவரான சுனிதா கிருஷ்ணன் கூறினார்.

அரோரா விருதுக்கான இறுதித் தகுதிப் பட்டியலில் மியான்மரில் பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ள ரோஹிங்கியா இனத்தலைவரும் வழக்கறிஞருமான க்யா லா அங், அமெரிக்காவை நோக்கிச் செல்லும் இடம்பெயர்வோருக்கு இருப்பிட வசதியை செய்து தரும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஃப்ரான்சிஸ்கா வழிப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த மதத்தலைவரான ஹெக்டர் தாமஸ் கோன்சால்ஸ் கேஸ்டிலோ ஆகியோரும் அடங்குவர்.

ஆர்மினியாவிலிருந்து செயல்படும் 100 லைவ்ஸ் என்ற அமைப்பின் நிதியுதவியுடன் மனித குலத்தை விழிப்புறச் செய்வதற்கான விருதாக ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த அரோரா விருது, ஆட்டமான் முஸ்லிம்களால் 15 லட்சம் வரையிலான அர்மீனிய கிறித்துவர்கள் படுகொலை செய்யப்பட்ட 1915 ஐ நினைவு கூரும் வகையிலான உலக அளவிலான முன்முயற்சி ஆகும்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->