×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தலுக்கு எதிரான கடுமையான புதிய சட்டம் நிறைவேறுவது தாமதமாவது குறித்து பிரச்சாரகர்கள் கவலை கொள்கின்றனர்

by அனுராதா நாகராஜ் மற்றும் ரோலி ஸ்ரீவஸ்தவா | Thomson Reuters Foundation
Thursday, 26 April 2018 08:40 GMT

Rasheed, 14, sews up a sack of plastic trash outside a recycling factory in Dharavi, one of Asia's largest slums, in Mumbai December 10, 2012. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ் மற்றும் ரோலி ஸ்ரீவஸ்தவா

சென்னை/மும்பை, ஏப். 26 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்த நவீன அடிமைத்தனத்தில் சிக்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டம் ஒன்றை இந்தியா நிறைவேற்றும் என்று பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு அதில் இருந்து மீண்டவரான லிலுஃபா பீபி நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் இந்த மாதம் முடிவடைந்த நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரிலும் கூட இந்த மசோதாவை முன்வைக்க அரசு தவறிவிட்டது.

உடனடியான நீதி கிடைக்கவும், இதில் இருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் உறுதியளிக்கின்ற ஆட்கடத்தலுக்கு எதிரான  கடுமையான சட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆவதன் விளைவாக தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக  உணர்வதாக பீபியும் இதர பிரச்சாரகர்களும் கூறுகின்றனர்.

 “இத்தகைய தாமதம் என்பதன் ஒரே பொருள் இத்தகைய வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆட்கடத்தல்காரர்கள் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து அச்சுறுத்துவார்கள் என்பதும் அவர்களில் பலரும் முறையான மறுவாழ்வுக்கான இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும்தான்” என ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் பாலியல் தொழில் மையம் ஒன்றிலிருந்து தப்பித்தவரான் 24 வயது பீபி கூறினார்.

அவரது கவலையை இதர பிரச்சாரகர்களும் எதிரொலிக்கின்றனர். அதற்கு முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 8.132 வழக்குகளை விட 2016ஆம் ஆண்டில் ஆட்கடத்தல் வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளன என்பதை அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

2019ஆம் ஆண்டில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலின் மீது அரசியல் ரீதியான கவனம் திரும்பி விடுமானால் இதன் மீதான கவனம் சிதறிவிடும் என இதிலிருந்து தப்பித்தவர்களும், இது குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவோரும் கருதுவதோடு, இந்த மசோதாவை நாடாளுமன்றம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும்கோருகின்றனர்.

“ஆட்கடத்தல்காரர்களுக்கு கடுமையான தண்டனையையும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமும் வழங்க உறுதியளிக்கும் இந்த புதிய சட்டம் ஆட்கடத்தல் குறித்த சித்திரத்தை முற்றிலுமாக மாற்றிவிடும் தகுதியுடையதாக உள்ளது” என கல்கத்தாவில் இருந்து தொலைபேசி மூலமாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் பீபி தெரிவித்தார்.

கட்டாய உழைப்பு, பிச்சை எடுத்தல், கட்டாயத் திருமணம் ஆகியவற்றில் உலகத்தில் மிகவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான தெற்கு ஆசியாவில் இத்தகைய குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில்  தலைமை இடத்தை  இந்தியாவிற்குப் பெற்றுத் தருவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

“இந்த மசோதாவிற்கு மிகவும் அவசரம் இருக்கிறது” என மக்களை கடன் மீதான அடிமைத்தனத்தில் ஆழ்த்தி, பெரும்பாலான நேரங்களில் செங்கற்சூளைகளில் அவர்களை சிக்க வைக்கும் ஆட்கடத்தலை கடந்த பல ஆண்டுகளாகவே  அதிகாரிகள் பதிவு செய்து வரும் கிழக்குப் பகுதி மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தத்தகத்தா சத்பதி கூறினார்.

“வங்கிசேவை  தொடர்பான சட்டங்களை அரசு மாற்றி வருகிறது; நிதி தொடர்பான மசோதாக்களை அறிமுகம் செய்கிறது. ஆனால் மிகவும் முக்கியமான இதைப் போன்ற சமூக ரீதியான மசோதாக்கள் கிடப்பில் போடப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டார்.

கடுமையான சட்டம்

மிக முக்கியமாக இந்த புதிய சட்டமானது பாலியல் தொழிலுக்கு வெளியே கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படுவோர் மீது கவனத்தை விரிவுபடுத்தும் என்று இது குறித்த பிரச்சாரகர்கள் கூறுவதாக மும்பையில் உள்ள டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தின் பேராசிரியரும் ஆட்கடத்தல் குறித்த நிபுணருமான பி.என். நாயர் கூறினார்.

“முதல் முறையாக இந்த சட்டம் வெறும் பாலியல் தொழிலுக்காக ஆட்களை கட்த்துவதிலிருந்து சற்றே விலகி கட்டாய உழைப்பு, பிச்சை எடுத்தல், திருமணம் ஆகியவற்றுக்காக ஆட்களை கடத்துவதையும் அங்கீகரிக்கிறது” என இந்த மசோதாவை உருவாக்குவதில் உதவி செய்த நாயர் கூறினார்.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஆட்கடத்தலில்  ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ரூ. 1, 00,000 அபராதமும் விதிக்கப்படும்.

ஆட்கடத்தல் குறித்த வழக்குகளை விரைவாக நடத்துவதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவேண்டும் என்றும் இந்தச் சட்டம் கோருகிறது. மேலும் இதில் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட உதவி, ஆலோசனை, நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் எனில் உடனடியாக அவர்களை சொந்த இடத்திற்கு  அனுப்புவதற்கான ஏற்பாடு ஆகியவற்றுக்கான மறுவாழ்வு நிதிக்கும் இந்தச் சட்டம் வகை செய்துள்ளது.

ஆதாரங்கள் எவ்வாறு சேகரிக்கப்பட வேண்டும்; அவற்றை எவ்வாறு நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும்; அதைப் போன்றே சாட்சிகளுக்கான பாதுகாப்பு ஆகியவை குறித்த வழிகாட்டுதலையும் உள்ளடக்கியதாகவும் இந்த மசோதா அமைந்துள்ளது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான அமைச்சகத்தின் இணைச் செயலாளரான சேட்டன் சங்கி கூறினார்.

“மேலாளர்களையும், செயல்படுவோரையும் கைது செய்வதற்கும் மேலாக இந்தச் சட்டம் செல்கிறது. தங்களுக்குச் சொந்தமான இடங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்புடைய இந்த சம்பவ இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றியும் இந்தச் சட்டம் பேசுகிறது” என இந்த மசோதா உருவாக்கத்திற்கு தலைமை வகித்த சங்கி கூறினார்.

இந்த மசோதா குறித்த ஆலோசனைகளை வரவேற்றும், அவ்வாறு வரும் கருத்துக்களை ஒருங்கிணைக்கவும் 2016ஆம் ஆண்டில் அவரது அமைச்சகம் இந்த மசோதாவின் முதல் நகலை வெளியிட்டது என்று குறிப்பிட்ட சங்கி இந்த சட்டம் நீண்ட நாட்களுக்கு முன்பே நிறைவேறியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இதன் அவசரத்தை நாம் உணர்வதில்லை; ஆனால் இதில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாகும்” என அவர் குறிப்பிட்டார்.

வீணாகிப் போன முயற்சிகள்

கடன் அடிப்படையில் அடிமைப்படுத்தலில் ஈடுபடும் இடைத்தரகர்கள், முதலாளிகள் ஆகியோரின் மீதும், அதைப் போன்றே பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும்  வழக்குகளில் இடைத்தரகர்கள், பாலியல் தொழில் மையங்களின் மேலாளர்கள் ஆகியோரின் மீதும் வழக்கு தொடுக்க இந்தியாவில் ஏற்கனவே சட்டங்கள் உள்ளன.

எனினும் இத்தகைய வழக்குகளின் விசாரணைகள் மிகவும் நீண்டுகொண்டே போவதோடு, இதிலிருந்து மீண்டவர்களுக்குரிய பண இழப்பீடு, வீட்டுவசதி, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி போன்ற சலுகைகள் பெறுவதற்கான உரிமைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன என ஆட்கடத்தலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடும் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அடிமையாக்கப்பட்ட தொழிலாளர்களுடன் உடலுறவு கொள்ள இடைத்தரகர்களுக்கும் பாலியல் தொழில்மையங்களின் மேலாளர்களுக்கும் பணம் கொடுப்பவர்களின் மீது அதிகாரிகள் மிக அரிதாகவே நடவடிக்கை எடுக்கின்றனர் என்று குறிப்பிடும் இந்த பிரச்சாரகர்கள், இத்தகைய வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தப் புதிய சட்டமும் கடுமையானதாக இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

ஆட்கடத்தலை  தடுப்பதற்காக தற்போதுள்ள பல சட்டங்களுடன் இந்தப் புதிய சட்டமும் நடப்பில் இருக்கும் என்ற நிலையில், இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் “மேலும் குழப்பத்தை ஏற்படுத்தவே” இது உதவி செய்யும் என்றும் நாயர் கூறினார்.

அடிமைத்தனமான நிலைமைகளில் இன்னமும் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்பதற்கு இந்தப் புதிய சட்டம் நம்பிக்கை தருகிறது என பீபியைப் போன்ற பலரும் நம்புகின்றனர்.

இதிலிருந்து மீண்டவர்களுக்கான வலைப்பின்னலான உத்தான் என்ற அமைப்பின் உறுப்பினரான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மசோதாவிற்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளதோடு அது விரைவில் அமலாக்கப்படவேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

“நாங்கள் கடிதங்களை எழுதினோம்; நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தோம்; இந்த மசோதாவின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் சிறிய வீடியோக்களையும் உருவாக்கினோம்; நடைமுறைக்கு உகந்த ஆலோசனைகளையும் அனுப்பி வைத்தோம்” என பீபி கூறினார்.

பல கட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த மசோதா இறுதியாக கடந்த  பிப்ரவரியில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. எனினும் மத்திய அரசுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையேயான சச்சரவுகளில்  சிக்கிக் கிடக்கும் நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என  சேஞ்ச் மந்த்ராஸ் என்ற லாபநோக்கற்ற குழுவைச் சேர்ந்த ரூப் சென் கூறினார். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதன் மீது விவாதம் நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இந்த மசோதா 2021ஆம் ஆண்டுவரை தாமதம் ஆகவும் கூடும் எனவும் அவர் கூறினார்.ச்

இத்தகைய சூழ்நிலை பீபியைப் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“எங்களது முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். “நான் வாழும் பகுதியில் இதிலிருந்து மீண்டவர்களை தினம் தோறும் பார்க்கிறேன்; அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தையும் பார்த்துத்தான் வருகிறேன்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ் மற்றும் ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->