×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வைரங்கள் வரவழைக்கும் மரணங்கள்: இந்திய வைர வர்த்தகத்தின் பெருமையை துடைத்தழிக்கும் தற்கொலைகள்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Tuesday, 10 July 2018 00:01 GMT

Wasanben stands inside the house where her son set himself on fire in Bhavnagar, India, January 30, 2018. Thomson Reuters Foundaiton / Roli Srivastava

Image Caption and Rights Information

 - ரோலி ஸ்ரீவஸ்தவா

சூரத், ஜூலை 10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – இந்தியாவின் மேற்குப் பகுதியில் நெரிசல் நிரம்பிய ஒரு தொழிற்கூடத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு நியூயார்க் நகரிலிருந்து ஹாங்காங் நகரம் வரையில் விரிந்திருக்கும் அலங்கார கடைகளுக்குப் போகவிருக்கும் வைரங்களை மெருகேற்ற முடித்த விக்ரம் ராவ்ஜிபாய் வீட்டிற்குத் திரும்பினார். தனது குடும்பத்தினர் வெளியே போவதற்காக காத்திருந்து அவர்கள் சென்றது வீட்டின் முன்பக்க கதவை தாழிட்டுக் கொண்டார்.

கெரசினை தன் மேல் ஊற்றிக் கொண்ட பிறகு ராவ்ஜிபாய் ஒரு தீக்குச்சியைக் கொளுத்தினார்.

திரும்பி வந்த அவரது குடும்பத்தினர் அந்த 29 வயது இளைஞனின் கருகிப் போன உடம்பைத்தான் கண்டார்கள். இந்தியாவின் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் வைரத் தொழிலில் மிகக் குறைந்த ஊதியம், மோசமான வேலை நிலைமைகளுடன் வேலை செய்து வருகின்ற தொழிலாளிகளிடையே தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் தற்கொலைகளின் வரிசையில் இது மிகச் சமீபமானது என்பதை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் விற்பனையாகும் வைரங்களில் 90 சதவீத வைரங்களை உடைத்து, மெருகேற்றித் தரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பலரும் ஒரு கல்லுக்கு என்ற அடிப்படையில்தான் ஊதியம் பெற்று வருகின்றனர்.  இந்தத் தற்கொலைகள் ஒரே மாதிரியானவையாக இருப்பதை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான குஜராத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட  விசாரணைகள்  தெரியப்படுத்தியுள்ளன.. இவற்றில் பலவும்  மவுனம் சூழ்ந்தவையாகவே உள்ளன.

இத்தொழிலில் ஈடுபடும் ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர ஊதியம் பெறுகின்றனர். அவர்களில் சிலர் மாதத்திற்கு ரூ. ஒரு லட்சம் அல்லது அதற்கும் மேலாகப் பெறுகின்றனர். எனினும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மொத்தத் தொழிலாளர்களில் 80 சதவீதத்திற்கும்  அதிகமானோர் தாங்கள்  மெருகேற்றும் ஒவ்வொரு கல்லுக்கும் ரூ 1 முதல் 25 வரை  மட்டுமே பெறுகின்றனர் என்பதோடு அவர்களுக்கு வேறு எந்தவித சமூகரீதியான பயன்களும் கிடைப்பதில்லை.

இத்தொழிலாளர்களில் பெரும்பான்மையோர்  சௌராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள். இத்தொழிலின் மையமாக விளங்கும் சூரத் நகரில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை  9 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பதை வைர தொழிலகங்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள், தொழிலாளர்களுக்கான குழுக்கள், அவர்களின் குடும்பங்கள், காவல்துறை ஆகியோரிடம் மேற்கொண்ட பேட்டிகளிலிருந்து தெரியவருகிறது.

எனினும் நமது கண்ணுக்குத் தென்படும் ஒரு சிறு பகுதியாகவே இது இருக்கக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வைரத்தைப் பட்டை தீட்டும் இச்செயல்முறையில் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான சான்றளிக்கும் ஏற்பாடு எதுவும் இல்லாத இந்த வைர  ஏற்றுமதித் தொழில் கடந்த பத்தாண்டுகளில் 70 சதவீதத்திற்கு மேலாக வளர்ச்சி பெற்றுள்ளதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளித்துவரும் - இவர்களில் பெரும்பகுதியினர் வறட்சி மிகுந்த சௌராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள் - இந்த வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், வேறு வேலைகளுக்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே உள்ள நிலையில், இந்த வைரத்தை மெருகூட்டும் தொழில்மீது  இதற்கான குற்றத்தைச் சுமத்த இதைச் சார்ந்த குடும்பங்கள் அஞ்சுகின்றன.

வைரத்தை மெருகேற்றும் தொழிலில் வேலை செய்து பத்தாண்டுகளுக்கு முன்பாக மாரடைப்பால் காலமான தன் கணவருக்குப் பிறகு குடும்பத்தைக் காப்பாற்றி வந்த தன் மகனின் இழப்பிலிருந்து ராவ்ஜி பாயின் தாயான வாசன் பென்னால் இன்னும் மீள முடியவில்லை.

“விக்ரம் ராவ்ஜி பாய் வைரங்களுக்கு மெருகேற்றத் தொடங்கியபோது அவனுக்கு பதினாறு வயது. மேலும் அதிகமான வேலையை பெறுவதற்காக அவன் போராடிக் கொண்டிருந்தான்.”  ஜனவரி மாதத்தில் அவரது மகன் இறந்து போன அறையின் திரைச்சீலைகளை ஒதுக்கிய படியே வாசன் பென் கூறினார்.

சௌராஷ்ட்ரா பகுதியில் உள்ள பவநகரில் இருக்கும் ஒரு குடிசைப் பகுதியில் தூசு படிந்த அறைக்கு வெளியே அமர்ந்தபடி தன் மகன் அதிகரித்துக் கொண்டே போன செலவுகள், திருமணம் செய்து கொண்டு அன்பைப் பெற முடியாத நிலை ஆகியவை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்ததாக வாசன் பென் கூறினார்.

“அவர்  மாதத்திற்கு ரூ. 6,000 சம்பாதித்துக் கொண்டிருந்தார் என்றும் எனினும் ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கு அது எப்போதுமே போதுமானதாக இல்லை" என அவர் கூறினார்.

“நிலைமை நல்லவிதமாக மாறும் என்றும் உண்பதற்காவது நம்மால் முடிகிறது. தன்னை மாய்த்துக் கொள்வதற்காகவே நாங்கள் திருமணத்திற்குப்போவதற்காக அவன் காத்துக் கொண்டிருந்தான்.”

A worker uses a magnifying glass to check the diamond he is polishing in a small diamond factory in Surat, India, April 6, 2017. Thomson Reuters Foundation/Roli Srivastava

அதிகரித்து வரும் தற்கொலைகள்

இந்திய மெருகேற்றும் தொழிலாளிகளின் தனித்திறமைகள், இத்தொழிலில் பல தலைமுறைகளாக நீடித்திருப்பது, மிகக் குறைவான ஊதியம் ஆகியவை மதிப்பீட்டளவில் உலகின் மிகப்பெரும் வைர உற்பத்தியாளர் என்று கருதப்படும் டி பியர்ஸ்லிருந்து துவங்கி ரஷ்யாவின் அல்ரோஸா வரை பெரும் வைரச் சுரங்கங்கள் இந்தியாவில் மெருகேற்றப்பட்ட கச்சா வைரங்களை பெறுகின்றன. 

இத்தகைய தொழிலாளர்களின் தற்கொலைகளைப் பற்றிக் கேட்டபோது, மெருகேற்றப்படாத வைரங்களை தாங்கள் விற்கும் நிறுவனங்கள் எதிலும் இதுபோன்ற எதையும் தாங்கள் எதிர் கொள்ளவில்லை என ஆங்கிலோ-அமெரிக்க தனியார் குழுமத்தைச் சேர்ந்த டி பியர்ஸ், உலகின் இரண்டாவது பெரிய வைரச் சுரங்க நிறுவனமான ரியோ டிண்ட்டோ. ரஷ்யாவின் அல்ரோஸா  ஆகியவை கூறின.

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்றும், பள்ளிகளை, மருத்துவ மனைகளை நிறுவுவது, இறந்து போன அல்லது தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்களின் உறவினர்களுக்கு வேலை அளிப்பது என இந்த தொழிலும் சாதகமான வகையில்தான் நடந்து கொள்கிறது என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெரும்பாலான பெரும் நிறுவனங்கள் குளிரூட்டப்பட்ட வேலைப்பகுதிகள், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் ஆகியவற்றை செயல்படுத்தி வந்த போதிலும் சிறு நிறுவனங்கள் பலவும் கழிப்பறைகளோ, காற்றோட்டமோ இல்லாத வகையில்தான் இயங்கி வருகின்றன என்றும் இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்ற நிலைமைகளில் இந்த வேலைப் பகுதிகளில் உண்டு, உறங்கி, வாழ்ந்து வருகின்றனர் என இது குறித்த பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவோர் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பட்டைத்தீட்டப்படாத வைரங்கள் கிம்பர்லி செயல்முறை திட்டத்தினால் “மோதல்களுக்கு அப்பாற்பட்டவை” என சான்றிதழ் பெற்றவையாக இருக்க வேண்டும். அதாவது உள்நாட்டுப் போர்களை நடத்துவதற்கான நிதியுதவி செய்யப் பயன்படுவதாக இல்லை என்பதையும், மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதையும், ப்ளட் டைமண்ட் என்று அழைக்கப்படும் ‘ரத்தக் களரியின் மூலம் பெறப்பட்ட வைரங்கள்’ அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவே இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. உலக அளவில் பட்டைதீட்டப்படாத கச்சா வைரங்களை உற்பத்தி செய்பவர்களில் 99.8 சதவீதம் பேர் இந்த கிம்பர்லி செயல்முறை திட்டத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

எனினும் துண்டாக்கப்பட்டு, மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கு ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி கவுன்சில் (பொறுப்புமிக்க நகை கவுன்சில்) ( ஆர்ஜேசி) என்ற லாபநோக்கற்ற அமைப்பின் சான்றிதழ் பெறுவதென்பது அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டதே ஆகும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சிறிதும் பெரிதுமான சுமார் 15,000 வைரங்களைக் கையாளும் நிறுவனங்களில் சுமார் 90 நிறுவனங்கள் மட்டுமே இந்த ஆர் ஜே சி அமைப்பின் சான்றிதழ் பெற்ற உறுப்பினர்களாக உள்ளன.

சுமார் 30 நிறுவனங்கள் மட்டுமே டி பியர்ஸ் நிறுவனத்திடமிருந்து பட்டைதீட்டப்படாத வைரங்களை வாங்குவதற்கான அங்கீகாரம் பெற்றவை ஆகும். இது  குறிப்பிட்ட வகையான தொழிலாளர் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அவற்றை கட்டுப்படுத்துகிறது.

எனினும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு சான்றிதழ் பெற வேண்டுமென இந்த நிறுவனங்களை யாரும் வற்புறுத்துவதில்லை.

இவ்வாறு சான்றிதழை பெறுவதென்பது அந்தந்த தொழில்நிறுவனங்களின் விருப்பம் என நாட்டின் வைர ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் வைர மற்றும் நகை ஏற்றுமதி ஊக்குவிப்பிற்கான கவுன்சில் கூறுகிறது.

நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலாக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதைத் தவிர வேறெந்தப் பொறுப்பும் தங்களுக்கு இல்லை என குஜராத் மாநில தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரு வைரக்கல்லை மெருகேற்றுவதற்கான ஊதியம்  என்பதைத் தவிர வேறு எந்த சமூக நல வசதிகளையும் பெறாத, தங்கள் குடும்பத்தினரின் உணவுக்காகவும் கல்விக்காகவும் பெரும்பாலான நேரங்களில் கடன் வாங்குகின்ற தொழிலாளர்களின் நலன்கள் குறித்து இதற்கான இயக்கங்களை நடத்துவோர் கவலை தெரிவிக்கின்றனர்.

“வர்த்தகம் வளர்ந்திருக்கிறது; சிறந்த தொழில்நுட்பமும் இருக்கிறது. இருந்தாலும் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்குப் போதுமான அளவிற்கு ஊதியத்தை ஈட்ட முடிகிறது” என 2007ஆம் ஆண்டில் இந்தத் தொழிலைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சூரத் நகரின் கபானி வணிகக் கல்லூரியின் வணிகத் துறை பேராசிரியரான கவுதம் கனானி கூறினார்.

இந்த வைரத் தொழிலில் வேலை செய்து வரும் ஒரு சில தொழிலாளர்களுக்கு இதன் விளைவுகள் உயிரைப் பறிப்பவையாக அமைந்துள்ளன.  காவல்துறையின் கோப்புகளிலிருந்து பார்வையிடப்பட்ட இந்த தற்கொலைகளைப் பற்றிய கதைகள் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன. கலக்கம் அடைந்தவருக்கான எவ்வித அறிகுறியும் இல்லாத ஒரு தொழிலாளி திடீரென்று தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

2010ஆம் ஆண்டிலிருந்து சூரத் நகரிலிருந்து வெளியான 5,000க்கும் மேற்பட்ட தற்கொலைகளில் அதிகமான எண்ணிக்கை இந்த வைரத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில்தான் நடந்துள்ளன என்பதை சூரத் நகர காவல் துறையினர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் பகிர்ந்து கொண்ட காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சூரத் நகரில் கடந்த ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையே தற்கொலை செய்து கொண்ட 23 பேரைப் பற்றி  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் ஆய்வு செய்தபோது இதில் ஆறு வைரத் தொழில் தொழிலாளர்கள்  சுருக்குக் கயிற்றில் தொங்கியபடியோ அல்லது விஷத்தைக் குடித்தோ தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.  சௌராஷ்ட்ரா பகுதியிலும் கூட இதே போன்ற மூன்று தற்கொலைகளை அது கண்டறிந்தது.

A pile of rough and unpolished diamonds on the desk of a diamond factory owner in Mumbai, India, February 16, 2018. Thomson Reuters Foundation / Roli Srivastava

காவல்துறையின் விசாரணைகள்

விஷத்தைக் குடித்து உயிர்நீத்த இருபது வயதைச் சுற்றியிருந்த  இரண்டு வைரத் தொழிலாளர்களின் தற்கொலை குறித்து இந்த ஆண்டு காவல்துறை அதிகாரி அஷீஸ் தோதியா விசாரணை மேற்கொண்டார். 

22 வயதான பாரத்பாய் ஜாதர்பாய் பம்மார் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் சூரத் நகருக்கு இடம்பெயர்ந்து ஒரு தொழில் கூடத்தில்வைரங்களுக்குப் பட்டை தீட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த ஆண்டு ஏப்ரலில் அவர் விஷம் குடித்தபோது வேலையிடத்தில் தான் இருந்தார்.

 “வைரங்களுக்கு இறுதியாக மெருகேற்றுவதுதான் அவரது வேலையாக இருந்தது. எங்கள் எல்லோரையும் போலவே அவர் தினமும் 10 மணி நேரம் வேலை செய்து வந்தார்” என சூரத் நகரில் வைரங்களுக்கு மெருகேற்றி வரும் அவரது உறவினரான லக்‌ஷ்மண்பாய் கோடுபாய் பம்மார் கூறினார்.

 “அவரது தொழில்கூடத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது தன்னைக் காப்பாற்றுமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். "

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மற்றொருவரான ராஜேஷ்பாய் மக்வானா கடந்த ஆறு ஆண்டுகளாக சூரத் நகரில் வைரங்களுக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தார். மாதத்திற்கு சுமார் ரூ. 13,000 அவர் ஊதியம் பெற்று வந்தார்.  இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தன் மனைவியுடன் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

“அவருக்குப் பிரச்சனை என்று எதுவுமில்லை” என மக்வானாவின் சகோதரர் சந்தோஷ் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

தான் விசாரணை மேற்கொண்ட வழக்குகளில் அவர்களின் மரணத்திற்கும் வேலைக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என தோதியா மறுத்தார்.

“வைர வர்த்தகத்தின் விளைவாக அவர்கள் உயிரிழக்கவில்லை. இந்தப் பகுதியில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலேயே வைரத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

 “வைரத்தொழிலில் வேலை செய்யும் எந்தத் தொழிலாளியும் பட்டினியால் இறப்பதில்லை. அவர்களுக்கு உரிய நேரத்தில் ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கப்படுகிறது.”

சூரத் நகரில் வைரத் தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் உள்ள மற்ற காவல்துறை அதிகாரிகளும் கூட அவர்கள் விசாரணை மேற்கொண்ட வழக்குகளில் வைர வேலைக்கும் தற்கொலைக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டனர்.

“(தொழிலாளிகள்) கடன் வாங்குகிறார்கள். அதை அவர்களால் எப்போதுமே திருப்பிக் கொடுக்க முடிவதில்லை.

வைரங்களுக்கான (உலக அளவிலான) தேவை குறையும் போதும், அவர்களின் முதலாளிகள் அவர்களுக்குத் தர வேண்டிய ஊதியத்தை தராத போதும் இத்தகைய (தற்கொலை) வழக்குகளை நாங்கள் சந்திக்கிறோம்” என இந்த ஆண்டில் இரண்டு தொழிலாளர்களின் தற்கொலை பற்றி விசாரணை மேற்கொண்ட ரமேஷ்பாய் குலாப்ராவ் கூறினார்.

வர்த்தகம் மந்தமாக இருக்கும்போது ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஊதியம் ஏதுமில்லாமலேயே தாங்கள் இருக்க வேண்டியுள்ளது என்றும் வாழ்க்கையை நடத்துவதற்காக நாங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கிறது என்றும் ஒரு சில தொழிலாளர்கள் கூறினர்.

இதுபோன்ற ஒரு வழக்கில் பம்மார் இருக்கும் இடத்திலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சூரத்தில் மிக நெரிசலான ஒரு குடியிருப்புப் பகுதியில்  22 வயதே ஆன மிதேஷ்பாய் ஹிதேஷ்பாய் கன்சாரா இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தன் பெற்றோருடனும் தம்பியுடனும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்த  ஓர் அறைக் குடியிருப்பின் சமையல்பகுதி மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை விட்டார்.

“பெரிய வைரங்களை அவர் கையாண்டு வந்தார். மாதத்திற்கு நிரந்தர ஊதியமாக ரூ. 10,000 ஈட்டியும் வந்தார். சூரத் நகரைப் பொறுத்தவரையில் இது நல்லதொரு ஊதியம்தான்” என கன்சாராவின் தம்பி வத்சல் கூறினார்.

“அவர் நன்றாகப் படிப்பார். 12வது வரையில் அவர் படித்தார். கல்லூரிக்குப் போகவும் அவர் திட்டமிட்டிருந்தார். வைரங்களை மெருகேற்றும் வேலையில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை.”

 அடிமைத் தனமும் மறைத்தலும்

இந்த வைரத் தொழிலில் கடனுக்காக கொத்தடிமையாக வைத்திருப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என்பது கடந்து போன ஒன்றாக இருந்தபோதிலும் அடிமைத்தனமும் மறைத்தலும் இன்னமும் தொடர்ந்து வருகிறது என தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 2013ஆம் ஆண்டில் ராஜ்கோட் நகரில் வைரத் தொழிலாளர்களுக்கான சங்கம் ஒன்றை உருவாக்கிய ரமேஷ் ஜிலிரியா கூறினார்.

“வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைவான ஊதியத்தை எதிர்த்துப் பேசுவதில்லை” என முன்பு வைரங்களுக்குப் பட்டை தீட்டி வந்த அவர் கூறினார்.

சூரத் நகரில் வைரத்தொழிலாளர்களின் நலனுக்கான அமைப்பான ரத்னா கலாகார் விகாஸ் (வைரங்களுக்குப் பட்டைதீட்டுவோரின் மேம்பாட்டிற்கான அமைப்பு)  2016க்கும் 2017க்கும் இடையே கிட்டத்தட்ட 2,000  தொழில் தகராறுகளை பதிவு செய்துள்ளது. இவற்றில் பெரும்பாலானாவை வேலையிலிருந்து தொழிலாளர்கள் நீக்கப்படுவது தொடர்பானதே ஆகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் வைரத் தொழிலகம் ஒன்றின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரிக்க இந்த அமைப்பு முயற்சித்தது. 

எனினும் அந்தத் தொழிலாளியின் குடும்பத்தினர் புகார் எதையும் தரவில்லை. எனவே இந்த விசாரணை கைவிடப்பட்டது என இந்த தொழிலாளர் நல அமைப்பிற்குத் தலைமை தாங்கும் ஜெய்சுக்பாய் நான்ஜபாய் கஜேரா  கூறினார்.

ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தையில் வடிவமைக்கப்பட்ட கைப்பைகள், சீருந்துகள், சொகுசுக் கடல் பயணங்கள் ஆகியவற்றோடு வைரங்கள் போட்டிபோட்டு வரும் நிலையில் தேவையில் எந்தவொரு தொய்வு ஏற்பட்டாலும் அது தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதிப்பதாக அமைந்து விடுகிறது எனவும் அவர் கூறினார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார மந்தநிலையின்போது  சூரத் நகரில் தொழில் கூடங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் 50 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதை பொருளாதார நிபுணரான இந்திரா ஹிர்வே கண்டறிந்தார்.

அந்த நேரத்தில் 300 தொழிலாளர்கள் வரை தற்கொலை செய்து கொண்டனர் எனவும், இத்தகைய தற்கொலைகள் இன்று வரை தொடர்கின்றன. எனினும் அவர்களது குடும்பங்கள்  இந்த மரணங்களையும் அவர்களது வேலையையும் இணைத்துப் பார்க்கத் தயங்குகின்றன என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவோ அல்லது கல்வியளிக்கவோ இயலாமல் அவர்களை தடுத்து நிறுத்துகின்ற திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மற்றும் குறைந்த ஊதியங்கள் ஆகியவற்றோடு பெரும்பாலான தற்கொலைகள் தொடர்புடையவை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

 “வைரத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் புகார் எதையும் கூறுவதில்லை. ஏனெனில் குடும்பத்தில் யாராவது ஒருவரிடமிருந்தோ அல்லது  தங்கள் இனத்தவரிடமிருந்தோ தான் அவர்கள் பெரும்பாலும் இந்த வேலைகளைப் பெறுகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டவர்கள் ஆவர்” என வைரத்தொழிலாளர்கள் மீது 2008 ஆம் ஆண்டின் பொருளாதார மந்தநிலை ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மேற்கொண்ட ஓர் ஆய்வுக்கு தலைமை வகித்த இந்திரா ஹிர்வே கூறினார்.

 “இவ்வாறுதான் உலகமயமாக்கல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. வர்த்தகர்களும் ஏற்றுமதியாளர்களும் பெருமளவில் பணம் ஈட்டி வருகின்றனர். ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள மக்களோ மிகக் குறைந்த ஊதியம் பெறுவதோடு, மிக மோசமாகவும் சுரண்டப்படுகின்றனர்” என  அகமதாபாத் நகரில் உள்ள செண்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஆல்டர்நேடிவ்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநரான ஹிர்வே கூறினார்.

தினசரி ஊதியங்கள்

சூரத் நகரில் உள்ள ஸ்ரீ  டைமண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் அலுவலகத்தில் வைரத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மாநில அதிகாரிகளுக்கு தான் எழுதிய கடிதங்களை அலசிக் கொண்டிருந்தார் முகேஷ்பாய் வால்ஜிபாய் கஞ்சாரியா.

“முன்பெல்லாம் கல் ஒன்றுக்கு எட்டு ரூபாய் வீதம் ஒரு தொழிலாளி 50 வைரங்களுக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தார். இப்போது இயந்திரங்கள் இருக்கும் நிலையில் அவரால் நாளொன்றுக்கு 500 கற்களுக்கு மெருகேற்ற முடியும். ஆனால் அவரது ஊதியமோ இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.”

மற்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் பெறுகின்ற ஓய்வூதியங்கள், சலுகை விலையில் மருத்துவ வசதி போன்ற  சமூக பாதுகாப்பு வசதிகளை இந்த தொழிலாளர்கள் பெறுவதில்லை என அத்தொழிற்சங்கத்தின் தலைவரான கஞ்சாரியா கூறினார்.

ஆனால் குறைந்த பட்ச ஊதியமான ரூ. 8,300க்கும் மேலாகவே வைரத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர் என குஜராத் மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

“இந்தத் தொழிலாளர்களும் அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களும் பெரும்பாலான நேரங்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக உள்ள நிலையில் இது ஆவணங்களை உருவாக்க வேண்டிய தேவையிருப்பதால் இத்தகைய சமூகப் பாதுகாப்பு முறைகளில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை” என தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையரான அசீஷ் காந்தி கூறினார். 

“ (தேவையில்) ஏற்ற இறக்கம் இருக்கும்போதும் ஆட்களைக் குறைக்க வேண்டியிருக்கும்போதும் அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனினும் அவர்களின் நலன் என்பது அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களின் உலகக் கண்ணோட்டத்தையே பெரிதும் சார்ந்துள்ளது.”

ஒரு சில தொழிலாளர்கள் தங்களுக்கே சொந்தமான வியாபாரத்தைத் துவங்குவதற்காக மெருகேற்றும் வேலையிலிருந்து நின்று விடுகின்றனர். எனினும் ஒரு சிலரால் மட்டுமே மேலே ஏறி வர முடிகிறது.  அவர்களில் பலரும் உள்ளூரில் உள்ள வட்டிக் காரர்களிடம் செல்வதன் விளைவாக தங்கள் கடனை மேலும் அதிகரித்துக் கொள்கின்றனர்.

தனக்கே சொந்தமாக ஒரு தொழில் கூடத்தை துவங்குவது என முடிவு எடுப்பதற்கு முன்பாக பாரத் பாய் ராதோட் பவநகரில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வைரத்தை மெருகேற்றுபவராகத்தான் பணிபுரிந்து வந்தார்.

அவரது வர்த்தகம் மிகக் குறைந்த காலத்திற்கே நீடித்தது.

“நாங்கள் வயலுக்குப் பயன்படுத்துகின்ற பூச்சிக் கொல்லி மருந்தை அவர் ஒரு நாள் அருந்தி விட்டார்” என சூரத் நகரிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பவநகரில் ஒரு கிராமமான தம்ராலாவில் ஒரு பருத்தி வயலில் வேலை செய்து வரும் ராத்தோடின் மனைவி ஷோபா பென் கூறினார்.

“அவரை சங்கடப்படுத்துகின்ற விஷயம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர் எதைப்பற்றியும் சொல்லவும் இல்லை. கச்சாப் பொருளுக்காக ( பட்டை தீட்டாத வைரங்கள்) அவர் கடன் வாங்கியிருந்தார் என்பதையும் அதன் பின்னணியில் அவர் அச்சுறுத்தப்பட்டு வந்தார் என்பதையும் பின்னர் தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்”என பருத்தியை பறித்துக் கொண்டபடியே கண்ணீரை மறைத்துக் கொண்டு சொன்னார் ஷோபா பென்.

அபாயத்தின் அறிகுறி

சூரத் நகரின் சந்தடி மிகுந்த ஒரு தெருவின் நடைபாதையில் கடுமையான வெயில் அடித்துக் கொண்டிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் ஒரு குழுவினர் அமர்ந்தபடி  மடியில் வைத்திருந்த நீல நிற ட்ரேயில் பரப்பி வைக்கப்பட்டிருந்த வைரங்களை மண் துகள்களை பொறுக்குவது போல பொறுக்கி எடுத்து பூதக் கண்ணாடியில் சோதித்துக் கொண்டிருந்தனர்.

சூரத் நகரின் வைர வர்த்தக மையமான மஹிதாபுராவில் ஆப்ரிக்க, இஸ்ரேல், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் சுரங்கங்களிலிருந்து வாங்கி வந்திருந்த மெருகேற்றப்படாத வைரங்களை வர்த்தகர்கள் இத்தகைய தொழிலகங்களின் உரிமையாளர்களுக்கு விற்கின்றனர்.  நகை உற்பத்தியாளர்களுக்கு விற்பதற்கு முன்பாக அவை வெட்டப்பட்டு மெருகேற்றப்படுகின்றன.

சூரத் நகரில் பட்டை தீட்டப்படும் வைரங்கள் கடைவீதியில் உள்ள நகை உற்பத்தியாளர்களுக்கு விற்கப்படுகின்றன. எனினும் கிட்டத்தட்ட 90 சதவீத வைரங்கள் உலகின் மிகப்பெரும் வர்த்தக மையங்களில் ஒன்றான மும்பை நகருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பின்பு அங்கிருந்து அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெட்டவெளிச்சமானதாகத் தோற்றமளிக்கும் இந்த வைர வர்த்தகத்திற்குப் பின்னால் பல படிநிலைகளைக் கொண்ட மிகவும் சிக்கலான பரிவர்த்தனைகள் உள்ளன. எனவே இந்த வைரங்களின் உண்மையான மதிப்பு மற்றும் அவை எங்கே போய் சேருகின்றன என்பதைப் பற்றியெல்லாம் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையே உள்ளது. 

கடந்த 12 ஆண்டுகளாக வைரங்களுக்கு மெருகேற்றி வரும் அசீஷ் தன்சங் பவால்வா தான் மெருகேற்றிவரும் வைரங்கள் வைக்கப்பட்டிருந்த சிறு துணிப்பைக்குள் இருந்த காகிதத்தில் ஒரு நாணயத்தின் அடையாளத்தை பார்க்க நேர்ந்தது.

“அது டாலருக்கான அடையாளம். டாலர்களில் விற்கப்படும் வைரங்களை மெருகேற்றத்தான் எங்களுக்கு ரூபாயில் ஊதியம் தரப்படுகிறது என்பதை அந்த நாளில்தான் நான் உணர்ந்தேன்” என தன் குடும்பத் தேவைகளை சமாளிக்க முடியாததால் சூரத் நகரை விட்டு வெளியேறிய பவால்வா கூறினார்.

“அதாவது இந்த நிறுவனங்கள் ஏதோ இலவசமாகவே இந்த வைரங்களை வெட்டி மெருகேற்றிக் கொள்கின்றன என்பதைப் போலத்தான் தோன்றுகிறது” என சூரத் நகரில் இருந்தபோது வாங்கியிருந்த சுமார் ரூ. 1,50,000 வரையிலான கடனை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையான வேலைகளைச் செய்து வரும் பவால்வா கூறினார்."

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதோடு, சலுகை விலையில் மருத்துவ வசதியையும் வழங்கி வருகின்றன என வைரங்கள் மற்றும் நகை ஏற்றுமதி கவுன்சிலைச் சேர்ந்த தினேஷ் நவாடியா கூறினார்.

தொழிலாளர்களின் தொடர்ச்சியான தற்கொலைகள் பற்றிக் கேட்டபோது அதில் பிரச்சனை உள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். மோசமான உற்பத்தித் திறன் ஊதியத்தை குறைப்பது, சூரத் போன்ற விலை உயர்வான  நகரில் வாழ தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது போன்றவற்றோடும் அவர் இதை  ஒப்பிட்டார்.

“(அந்த தொழிலாளர்களின் மறைவிற்குப் பிறகு) வைர நிறுவனங்கள் அவர்களின் மனைவிகளுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ வேலை தருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். “இது மிகவும் நேர்மறையான ஒரு தொழில்."

இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் சுரண்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மிகப்பெரும் சுரங்கங்களை சொந்தமாக வைத்துள்ள நிறுவனங்கள் உண்மையிலேயே முயற்சிகளை எடுத்து வருகின்றன என பெல்ஜியத்தை தலைமையிடமாகக் கொண்ட வைர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான  ழீன் மார்க் லீபெரர் கூறினார்.

எனினும் இத்தகைய தொழில்கூடங்கள் தொலை தூரங்களிலும் ஒதுக்குப் புறமான இடங்களிலும் செயல்பட்டு வரும் நிலையில் குஜராத் மாநிலம் முழுவதிலும் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கண்காணிப்பதுஎன்பது மிகவும் கடினமானதொரு வேலையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான முழுமையானதொரு திட்டம் தங்களின் நிறுவனத்திடம் உள்ளது என்றும் தங்கள் வாடிக்கையாளர்களும் ஒப்பந்ததாரர்களும் இதற்கு இணங்கவே நடக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் குறித்த தங்களது தரத்தை மீறுபர்களுடன் வர்த்தகம் செய்வதை தங்கள் நிறுவனம் நிறுத்திக் கொள்கிறது என்றும் டி பியர்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான பேச்சாளர் தெரிவித்தார்.

அதை போன்றே ஆர்ஜேசியின் நிறுவன உறுப்பினரான ரியோ டிண்ட்டோ தொழிலாளர்கள், பாதுகாப்பு ஆகியவை குறித்த விதிமுறைகள் உள்ளிட்ட இந்த வர்த்தகத்தில் மிகச் சிறந்த தரத்தை பின்பற்றி வருகிறது. ருஷ்யாவின் அல்ரோசாவும் கூட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென  தங்களிடமிருந்து மெருகேற்றப்படாத வைரங்களை வாங்குகின்ற நிறுவனங்களுடன் கூட்டணிக்கான விதிமுறைகளை பின்பற்றி வருகிறது என இந்த இரு நிறுவனங்களின் அதிகாரபூர்வமான பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

கனடா நாட்டிலிருந்து செயல்பட்டு வரும் வைரச் சுரங்க நிறுவனமான லுகாரா ஆர் ஜே சி சான்றிதழ் பெற்ற நிறுவனம் என்பது மட்டுமின்றி மெருகேற்றப்படாத கச்சா வைரங்களை ஒப்பந்தப் புள்ளிகள் மூலமாக மட்டுமே விற்கிறது. மேலும் தனது வாடிக்கையாளர்கள் அனைவரைப் பற்றியும் தீர விசாரித்தே செயல்படுகிறது எனவும் அதன் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.

டி பியர்ஸ் மற்றும் ஆர் ஜே சி ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுகின்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தாங்கள் வைரங்களை வாங்குவதாக இந்திய நிறுவனங்களில் பெரும்பாலானவை தங்களது மெருகேற்றப்பட்ட வைரங்களை  விற்கின்ற  சோவ் டாய் ஃபூக் என்ற மிகப்பெரும் நகை உற்பத்தி நிறுவனம் தெரிவித்தது.

எனினும் வைர வியாபாரத்தின் ஏற்ற இறக்கங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், இந்த வியாபாரம் பெருமளவிற்கு ஒழுங்குபடுத்தப்படாத ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வருகிறது என்றும்  இத்தகைய நிலையான தொழிலாளர்களின் வாழ்விலும் இந்தியாவில் செயல்பட்டு வரும் வைரங்களை மெருகேற்றும் தொழிலின் எதிர்காலத்தின் மீதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என தொழிலாளர் நல குழுக்கள் கூறுகின்றன.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் சந்தித்த பெரும்பாலான தொழிலாளர்கள் அதிலும் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பெறுபவர்கள் உட்பட இந்த வைரங்களை மெருகேற்றும் தொழிலில் தங்களின் குழந்தைகள் சேரமாட்டார்கள் என்பதில் மிகவும் உறுதியாகவே உள்ளனர்.

தன் மகன் உயிரைப் போக்கிக் கொண்ட பிறகு தனது மற்ற மூன்று மகன்களில் எவருமே வைரங்களை மெருகேற்றுவதற்கு எந்த நேரத்திலும் செல்லமாட்டார்கள் என்று வாசன் பென் தீர்மானம் செய்திருந்தார். 

“வைரத் தொழிலில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. ஒரு மனிதனால் வாழ்க்கையில் எதையும் செய்ய முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: கீரன் குய்ல்பெர்ட் மற்றும் பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->