×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வார்த்தை வலைகள்: பெண்களைக் கவர்ந்திழுக்க இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்கடத்தல்காரர்கள்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Friday, 13 July 2018 00:01 GMT

A woman speaks on the phone outside her house in a village in Jalore, India, April 11, 2018. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

 

மும்பை, ஜூலை 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வெளியூரில் போய் வேலை செய்யும் தனது கணவர் இருவரும் தொடர்பில் இருக்க உதவியாக இருக்கும் என கடந்த நவம்பர் மாதம்  அவளுக்கு முதல் ஸ்மார்ட் ஃபோனை வாங்கிக் கொடுத்தபோது  தனு அதைப் பார்த்து வியந்து போனாள். மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றுவது, வாட்ஸப்பில்  தகவல்களை அனுப்புவது என அவள் முன்னேறிப் போனாள்.

 அதன்பிறகுதான் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நபர் அவளுக்கு ஃபேஸ்புக்கில் நண்பனாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.

தனுவும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாள்.  அந்தப் புதிய நண்பன்  சிறந்த வாழ்க்கைக்கான உறுதிமொழிகளுடன் செய்திகளை அனுப்பியபோது அவள் அவனை நம்பினாள்.  அவனை சந்திக்கவும் ஒப்புக்கொண்டாள்.  அது இறுதியில் பாலியல் தொழிலுக்காக அவளை தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாதிற்கு கடத்திச் செல்வதில் சென்று முடிந்தது.

 “அவன் என்னை த் தொடக்கூட இல்லை. மற்றவர்களிடம் என்னை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டான்” என 21வயதான தனு கூறினாள். சட்டபூர்வமான காரணங்களுக்காக அவளது முழுப் பெயரை இங்கே பயன்படுத்த இயலாது.

“கைபேசியை பயன்படுத்தும்போது நான் எதுகுறித்தும் பயப்படவில்லை” என  கடந்த வாரம் அவர் மீட்கப்பட்ட கேரள மாநிலத்திலிருந்து வியாழக்கிழமையன்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

 “இவ்வாறு சிக்கிக் கொள்ளக் கூடும் என்பது குறித்த அச்சம் எனக்கு இருக்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. இது போன்ற ஒரு சம்பவம் நடக்கக் கூடும் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை.”

பாலியல் நோக்கங்களுக்காக கடத்தல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் இவ்வாறு வீழ்த்தக்கூடிய நபர்களை குறிவைத்து வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை அதிகமான அளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்  என்றும் கண்ணுக்குத் தென்படாத குற்றமாக இது உள்ளது என்றும்  இந்தியாவிலுள்ள காவல்துறையினரும் இது குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்வோரும் கூறுகின்றனர்.  மிகவும் விலைமலிவான கைபேசிக் கருவிகள், தகவல் பெறுவதற்கான வசதி ஆகியவை இருக்கும் நிலையில் இந்தியாவில் கைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிகை பல மடங்கு அதிகரித்துள்ளது.  சுமார் 100 கோடி கம்பியில்லா இணைப்புகள் கொண்ட நாடாக இந்தியா உள்ள நிலையில் உலகத்திலேயே மிகஅதிகமான அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நாடுகளில் ஒன்றாகவும் நமது நாடு உருவெடுத்துள்ளது.

இந்த அம்சமும் பொது இடங்களில் இலவச வைஃபை வசதிகள்  நிலவுவதும்  இத்தகைய ஆட்கடத்தல்காரர்கள் செயல்படுவதற்கு மிக எளிதாகவும்  அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களை கண்டுபிடிப்பதற்கு  இயலாத ஒன்றாகவும்  மாற்றி விடுகின்றன.

 “இது போன்ற வழக்குகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் எழுந்து வருகிறது; குறிப்பாக நகர வாழ்க்கையை இதுவரை காணாத நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சிறுவயதுப் பெண்கள்தான் இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்” என டெல்லி காவல்துறையின் இணை ஆணையரான ராபின் ஹிபு கூறினார்.

மறைந்து நிற்கும் சுனாமி

ஆட்கடத்தலுக்கு எதிராக ஒரு நடவடிக்கையை ஹிபு கடந்த ஆண்டு துவக்கியிருந்தார். தொலைதூர வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலிருந்து  ஃபேஸ்புக்கில் ஓர் ஆணுடன் நட்பு பாராட்டிய ஒரு  சிறு பெண்ணின் வழக்கை அவர்தான்  கையாண்டிருந்தார்.

அந்த நபர்  மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்ய ஒரு டிக்கட்டை வாங்கி பின்பு அந்த சிறு பெண்ணை பாலியல் தொழில் மையத்திற்கு விற்றுவிட்டார்.

 “அந்தச் சிறு பெண் உயர்நிலைப் பள்ளி மாணவி மட்டுமல்ல; மிகவும் ஏழையும் கூட. இருந்தாலும் அவளிடம் இணைய வசதி கொண்ட ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தது. இதுதான் கண்ணுக்குத் தெரியாத சுனாமி எனலாம். இன்று கைபேசிகளின் விலை  ஒன்றும் உயர்ந்ததாக இல்லை” என ஹிபு கூறினார்.

உலகம் முழுவதிலும் நிலவுகின்ற வருத்தமளிக்கும் அம்சத்தை இப்போது எதிர்கொள்ளும்  நாடாகத்தான் இந்தியா உள்ளது.  ஆட்கடத்தல்காரர்கள்  தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த கவலையும் அதிகரித்து வருகிறது.  அவர்களை பாலியல் தொழிலுக்கு விற்றுவிடுவதற்கு முன்பாக, எளிதில் வசப்படக் கூடிய பதின்பருவப் பெண்களை சமூக ஊடகங்களின் மூலம் அவர்கள் தொடர்புகொள்கின்றனர். இந்தியாவின் இணைய தளம் மற்றும் கைபேசி வசதிகளுக்கான நிறுவனங்களின்  ஓர் அறிக்கையின் படி கிராமப்புறப் பகுதிகளில் இணைய வசதி  இப்போது வெறும் 18 சதவீதம் மட்டுமே உள்ளது என்ற நிலையில்  இந்த சேவைகளுக்கான வாய்ப்பு மிகப் பெரிதாகவே உள்ளது.  கைபேசி மூலமாக இணைய வசதியை  பெருமளவிற்கு இளம் வயதினரே பயன்படுத்துகின்றனர் என்றும் இதில் நகரங்களில் பயன்படுத்துவோர் 46 சதவீதம் என்றும் கிராமப்புறத்தில் இத்தகைய வசதியை பயன்படுத்துவோரில் 57 சதவீதம் பேர் 25 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது..

இதற்கான கட்டணங்களை செலுத்துவதும் கூட இணையவழியாகவே மாறியுள்ள நிலையில்  இதற்கான பணம் செல்லும் பாதையை காணாமல் அடித்துவிடுகிறது என இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்  என்ற ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையை சேர்ந்த கசாந்திரா ஃபெர்னாண்டஸ் கூறினார்.

“இதற்கு முன்பெல்லாம் ஆட்கடத்தல்காரர்கள் வீட்டிற்கு வந்து நகரத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை எல்லாம் எடுத்துச் சொல்லி குடும்பத்தினரை நம்பவைத்து வந்தனர். அந்தக் குடும்பங்கள் நம்பும்படியான நபர்களாகவே அவர்கள் இருந்தனர்” என பெண்கள், சிறுமிகள்  ஆகியோருடன் இணைந்து செயல்படும் மை சாய்சஸ் ஃபவுண்டேஷன்  என்ற அமைப்பின் திட்ட இயக்குநரான விவியன் ஐசாக் கூறினார்.

“இப்போது அவர்கள் தங்கள் அறைகளுக்குள்ளே அமர்ந்தபடி, ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் செய்திகளை அனுப்பி வருகின்றனர். சிறு பெண்களும் தாங்களாகவே அவர்களின் வலையில் போய் விழுந்து விடுகின்றனர். அவர்கள்  எப்போதுமே அவசரப் படுவதில்லை. படிப்படியாக, முறையாக தங்கள் வேலையை செய்கின்றனர்.”

சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று வேலை பார்க்கும் குடும்பங்களுக்கோ, தங்கள் மனம் விரும்பியவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழியாக இந்த கைபேசிகள் இருக்கின்றன.

இப்போது தனு தனது கைபேசி எண்ணை மாற்றிவிட திட்டமிட்டிருக்கிறாள். என்றாலும் தன் ஸ்மார்ட்ஃபோனை வைத்திருப்பேன் என்றும் அவள் கூறுகிறாள்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: க்ளேர் கோசன்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->