×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்ட ஒரு கோடி பேர் காணாமல் போயுள்ளனர்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 23 July 2018 11:02 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஜூலை 23 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) இந்தியாவில் அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டுள்ளவர்கள் குறித்த மதிப்பீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடியே 80 லட்சமாக இருந்ததை அடிமைத்தனத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஒரு குழு இன்று 80 லட்சமாக குறைத்துள்ளது. இந்தக் கணக்கு மிகவும் குறைவானது என்றும், இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்தி விடும் என்றும் இதற்கெதிரான இயக்கங்களை நடத்தி வருவோர்  குறிப்பிடுகின்றனர்.

உலக முழுவதிலும் சுமார் 4 கோடி பேர் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் கடந்த வாரம் வெளியிட்ட 2018ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணை தெரிவிக்கிறது.

தனது 2016ஆம் ஆண்டிற்கான அட்டவணையில் தெரிவிக்கப்பட்ட அளவில் 1 கோடி பேர் இவ்வாறு குறைந்துள்ளதற்கு இதற்கான கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட செயல்முறையில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றே காரணமாக அமைகிறது என வாக் ஃப்ரீ அமைப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இது குறித்த இயக்கங்களை மேற்கொண்டு வருவோர் இந்தப் புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதோடு 1976ஆம் ஆண்டில் தடைவிதிக்கப்பட்ட காலத்திலிருந்தே பரவலாக தொடர்ந்து நீடித்து வரும் கொத்தடிமை முறையில் கணிசமான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்  என்றும் உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டை விட மிக அதிகமாகவே அது உள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர்.

“இந்தப் புதிய புள்ளிவிவரத்தை கையில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது என்று விளக்கமளிக்கவும் கூடும்” என இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அடிமைத்தனம் ஆகிய பிரச்சனைகளில் செயல்பட்டு வரும் மாமிடிபுடி வெங்கடரங்கய்யா ஃபவுண்டேஷனைச் சேர்ந்த வெங்கட் ரெட்டி கூறினார்.

“(இது குறித்த) சரியான புள்ளிவிவரத்தை கொடுக்காமல் இருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை நாம் நீர்த்துப் போகச் செய்கிறோம்.”

ஊடகத்திடம் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாத, பெயர் குறிப்பிட விரும்பாத தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் இந்த 80 லட்சம் என்ற அளவு “சரியில்லாத ஒன்று என்பதோடு பெருமளவிற்கு  ஒரு மதிப்பீடு என்பதைத் தவிர வேறில்லை” என்று குறிப்பிட்டார்.

செங்கற் சூளைகள், ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழிலகங்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ளனர் என்றும் விவசாயப் பண்ணைகள், அல்லது குடும்பங்கள் வசிக்கும் வீடுகளில் மேலும் அதிகமானோர் நவீன அடிமைத்தனமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இது குறித்த இயக்கங்களை மேற்கொள்வோர் தெரிவிக்கின்றனர்.

தனது ஆய்வுக்கான கேள்விக்கு கிடைத்த பதில்களை வரையறுப்பதில் மேற்கொள்ளப்பட்ட மாறுபட்டதொரு முறையே இத்தகைய புதிய, குறைந்த மதிப்பிட்டிற்குக் காரணமாக அமைகிறது என வாக் ஃப்ரீ அமைப்பு தெரிவித்தது.

2016ஆம் ஆண்டில் மட்டும் ‘எந்தவொரு நாளிலும்’ அடிமைத் தனத்தை உணர்ந்ததாக  கூறியவர்களின் பதில்கள் மட்டுமே 2018ஆம் ஆண்டிற்கான இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முந்தைய ஆய்வானது கடந்த ஐந்தாண்டுகளில் எந்தவொரு நேரத்திலும் சுரண்டலுக்கு ஆளானவர்களை பதிவு செய்திருந்தது.

மேலும் இந்தப் புதிய கணக்கீடானது இந்தியாவிற்குள் அடிமைத்தனத்தை எதிர்கொண்டவர்களை மட்டுமே உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வேலைக்காக வெளிநாடுகளில் குடியேறி வாழ்கின்ற சுரண்டலுக்கு ஆட்படுகின்ற தொழிலாளர்கள் எவரையும் இந்த கணக்கீடு புறந்தள்ளி விடுகிறது.

இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படியே குறிப்பாக 60 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக குடியேறி வாழ்கின்ற பஹ்ரைன், குவைத், கடார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் மோசமாக நடத்தப்படுவதும், சுரண்டப்படுவதும் மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றன எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அடிமைத்தனத்தை சமாளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சமீபத்திய ஆய்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனின் உலகளாவிய ஆய்விற்கான இயக்குநர் ஃபியோனா டேவிட் தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சனை மிகப் பிரம்மாண்டமானது என்பதையே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது நம்மிடம் இந்தப் பிரச்சனை குறித்த மிகச் சிறந்த சித்திரம் கைவசம் உள்ளது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

எனினும் வாக் ஃப்ரீ அமைப்பின் கணக்கு என்பது “குறைவான மதிப்பீடு” என்றும் அது “குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்” என்றும் கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான தேசிய பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த சந்தன் குமார் கூறினார்.

“2030 ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கப் போவதாக இந்திய அரசே தெரிவித்துள்ளது.  கட்டாய திருமணத்திற்கு ஆட்படுவோர், பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்கு உள்ளாவோர் ஆகியோர் இதில் அடங்கவில்லை. எனவே  இந்த எண்ணிக்கையானது நிச்சயமாக இதைவிட மிக மிக அதிகமானதாகவே இருக்கும்” என குமார் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாகவே நவீன கால அடிமைத்தனம் குறித்த ஆய்வை மேற்கொள்வோர் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவதில் உள்ள சவால்களை சுட்டிக் காட்டி வந்துள்ளனர்.  அடிமைத்தனம் குறித்த பல்வேறு விளக்கங்கள், வளைகுடா நாடுகளில் இருந்தும், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இருந்தும் போதிய புள்ளிவிவரங்கள் கிடைக்காத நிலை ஆகியவையும் இந்தச் சவால்களில் அடங்குபவையாகும்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->