×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்திய நீதிமன்றங்கள் ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை துரிதப்படுத்துகின்றன

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 26 July 2018 09:52 GMT

ARCHIVE PHOTO: A rescued bonded labour survivor poses for a picture at her residence on the outskirts of New Delhi November 2, 2012. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஜூலை 26 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்கடத்தல்  வழக்குகளில் துரிதமான உத்தரவுகள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வருவது நீண்டு கொண்டே போகும் வழக்குகளை எதிர்நோக்கி வரும் இக்குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே இத்தகைய வழக்குகளில் நீதிமன்றங்கள் மிகவும் அரிதாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை ஆட்கடத்தல்காரர்களுக்கு விதித்தும், இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்கி வரும் மற்றொருவருக்கு பிணை வழங்க மறுத்தும், இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டும் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

இத்தகைய ஆட்கடத்தல் தொடர்பான வழக்குகள் – அவை நீதிமன்றத்தை எவ்வகையிலாவது அடையுமெனில் - பெரும்பாலும் தொடர்ந்து நடைபெறுவது தடுக்கப்பட்டு வரும் ஒரு நாட்டில் இத்தகைய சட்டரீதியான முடிவுகள் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தூண்டுதலாக நீதிபதிகள் உள்ளனர் என்பதற்கான அறிகுறிகள் என்பதாகவே சிலர் கருதுகின்றனர்.

“இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சிறப்பான வழியை நீதித்துறை சுட்டிக் காட்டுகிறது” என ஆட்கடத்தலுக்கு எதிரான  அறக்கட்டளையான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனைச் சேர்ந்த சாஜி பிலிப் கூறினார்.

“சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் முன் உதாரணங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, விசாரணை முறையை வலுப்படுத்துவதற்கு அழுத்தம் தருகிறது; மேலும் ஆட்கடத்தல்காரர்கள் மிக எளிதாகப் பெற்று வந்த பிணையை மறுத்துள்ளதோடு, இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டையும் வழங்கியுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

ஆட்கடத்தலுக்கான  விசாரணைகள், வழக்கு தொடுத்தல், தண்டனை வழங்குதல் ஆகியவை இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.

அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 2016-ம் ஆண்டில் வெளிப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்குகளில் பாதிக்கும் குறைவானவையே காவல்துறையினரால் நீதிமன்றங்களில் வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டன; இவ்வாறு நீதிவிசாரணைக்கு உள்ளாகும் வழக்குகளில் தண்டனை வழங்கப்படும் வழக்குகள் என்பது வெறும் 28 சதவீதமாகவே உள்ளது.

நாடுமுழுவதிலும் நடைபெற்று வரும் ஆட்கடத்தல்  சம்பவங்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே இத்தகைய வழக்குகளாக வெளியாகின்றன என இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் தெரிவிக்கின்றனர்.

அதைப் போன்றே சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட அதற்குரிய வகையில்தான் காண வேண்டும் என செக்ஸ் ட்ராஃபிக்கிங் அண்ட் த லா என்ற நூலின் ஆசிரியரான சர்ஃபராஸ் அகமத் கான் கூறினார்.

“இந்தத் தீர்ப்புகள் நமக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. என்றாலும் மொத்தமுள்ள வழக்குகளில் அவை வெறும் 0.1 சதவீதம் மட்டுமே” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.

சட்டவழிப்பட்ட நிர்வாகம்

மேற்கு வங்கத்தில் உள்ள கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளான ரவி க்ரிஷன் கபூர் மற்றும் ஜொய்மல்யா பக்சி ஆகியோர்  தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கடத்தி வரப்பட்ட சிறுமிகளும் , பெண்களும் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய  ஒரு ஓட்டல் முதலாளியான  பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை இந்த மாதம் ரத்து செய்தனர்.

“பெண்களையும் இளம்பருவத்தினரையும் கடத்திச் செல்லும் அபாயமானது மிகவும் அபரிமிதமான அளவிற்குப் பெருகியுள்ளது” என்பதை தங்களது உத்தரவில் ஒப்புக் கொண்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காவல்துறையையும் அந்த உத்தரவில் தோலுரித்துக் காட்டியிருந்தனர்.

“ தற்போது எங்கள் முன் வந்துள்ள வழக்கைப் போலவே பெண்களையும் குழந்தைகளையும் வணிகரீதியாக பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்துகின்ற குற்றங்களை பொறுப்பற்ற வகையில் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்த எங்களது ஆழ்ந்த கவலையை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்” என கபூர் மற்றும் பக்சி தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

இத்தகைய சம்பவங்கள் குறித்த தகவல் வெளிவந்த 24 மணி நேரத்திற்குள் ஆட்கடத்தலுக்கு எதிரான  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவுகளுக்கு காவல்துறை தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியாவின் கிழக்குப் பகுதி பீகார் மாநிலம் கயாவில் இவ்வாறு குழந்தைகளை கடத்துதல்,வல்லுறவு கொள்ளுதல், பாலியல் ரீதியாக மோசமாக நடந்து கொள்ளுதல் ஆகிய குற்றங்களுக்காக  இரண்டு பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில்  ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதுபோன்ற வழக்குகளில் மிக மிக அரிதாகவே இவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த மாதம் முன்வந்த மற்றொரு வழக்கில் இத்தகைய ஆட்கடத்தலில்  பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டை தாமத்தப்படுத்துவதென்பது “முற்றிலும் மனிதத்தன்மையற்ற செயல்” என குறிப்பிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணை இன்னமும் முடிவடையாத போதிலும் பத்து நாட்களுக்குள் மாநில அரசு அதிகாரிகள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

“சட்டவிரோதமான இந்த வியாபாரம் அனைத்து வகையிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்பதாகவே நீதிமன்றத்தின் நோக்கம் இப்போது இருப்பதாக தோன்றுகிறது என  அரசின் புள்ளிவிவரங்களின் படி இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலத்தையும் விட அதிகமான ஆட்கடத்தல் வழக்குகளை பதிவு செய்துள்ள மாநிலமான மேற்கு வங்கத்தின் அரசு வழக்கறிஞரான ப்ரதீப்தோ கங்குலி கூறினார்.

சமீபத்திய ‘தனிச்சிறப்பு வாய்ந்த’ தீர்ப்புகளை அவர் பாராட்டிய போதிலும், நீதிமன்றத்தில் இத்தகைய ஆட்கடத்தல்  வழக்குகளில் போராடுவதென்பது இன்னமும் சவாலானதொரு விஷயமாகவே இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

“இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகவும் எளிதாக பிணை உத்தரவை பெற்றுவிடுகின்றனர்; இதில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; தங்களின் வாக்குமூலங்களை மாற்றுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய நிலைமைகள் தண்டனை பெற்றுத் தருவதை மிகவும் கடினமான ஒன்றாக ஆக்கிவிடுகின்றன” என தொலைபேசி மூலம் கங்குலி தெரிவித்தார்.

இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் நீதிமன்றத்திலிருந்து தங்களுக்கான நீதியைப் பெற்றவர்கள் உதவிக் குழுக்களின் ஆதாரவைப் பெற்றவர்களாகவே இருந்தனர் என  செக்ஸ் ட்ராஃபிகிங் அண்ட் த லா என்ற நூலின் ஆசிரியரான கான் சுட்டிக் காட்டினார்.

“மற்ற எல்லா வழக்குகளிலுமே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றச் செயல்முறைகளுக்கு வெளியே இருப்பவர்கள் என்பதோடு, விவரம் அறியாதவர்களாக, பெரும்பாலான நேரங்களில் மீண்டும் இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படுவோராகவும் உள்ளனர் “ எனவும் அவர் கூறினார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->