×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைகள் காப்பகங்கள் தவறாகச் செயல்படுவது கண்டறியப்பட்ட பின் பீகார் மாநிலம் அவற்றை கையகப்படுத்துகிறது

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 3 September 2018 10:29 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, செப். 3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – அறக்கட்டளைகளால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகள் வாய்மொழியாகவும், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை ஓர் கள ஆய்வு கண்டறிந்ததைத் தொடர்ந்து, பீகாரில் உள்ள காப்பகங்கள் அனைத்தையும் அரசு அதிகாரிகள் கையகப்படுத்த உள்ளனர் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசின் நிதியுதவி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய பீகார் மாநில அரசு இந்த ஆண்டு துவக்கத்தில் நியமித்த ஓர் ஆய்வுக் குழு இத்தகைய அறக்கட்டளைகள் நடத்தும் 15 காப்பகங்களில் உள்ள சிறுவர்கள் மோசமாக நடத்தப்படுவதோடு, உணவு, உடை, மருந்துகள் போன்றவையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதையும் கண்டறிந்தது.

மாநில அரசின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த தணிக்கை அறிக்கையின்படி கொத்தடிமை அல்லது பாலியல் ரீதியான அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள், தத்தெடுப்பதற்காகக் காத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் ஆகியோரும் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இந்தக் காப்பகங்களில் காப்பாளர்களே குற்றம் இழைப்பவர்களாக மாறியுள்ளனர்” என பீகார் மாநிலத்தின் சமூக நலத்துறை இயக்குநர் ராஜ்குமார்  கூறினார்.

“அடுத்த இரண்டு-மூன்று மாதங்களில் மாநிலத்தில் உள்ள அனைத்து காப்பகங்களையும் நாங்கள் கைக்கொள்ளவிருக்கிறோம்” என தொலைபேசி மூலம் அவர் தெரிவித்தார்.

இந்தத் தணிக்கை அறிக்கையின் மீதான மாநில அரசின் நடவடிக்கையை இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

“இத்தகைய தணிக்கையை மேற்கொள்ள முன்வந்ததோடு, அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் பீகார் மாநிலம் முன்வந்துள்ளது” என இந்த தணிக்கையை மேற்கொண்ட மும்பை நகரின் ஒரு பல்கலைக்கழகமான டாடா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் உடன் இணைந்து செயல்படும் ஓர் அறக்கட்டளையான கோஷிஷ் அமைப்பின் இயக்குநரான முகமது தாரிக் கூறினார்.

“இத்தகைய அறிக்கைகளின் மீது அரசுகள் மிகவும் அபூர்வமாகவே நடவடிக்கை எடுக்கும். ஆனால் இந்தக் காப்பகங்களுக்கு எதிராக மாநில அரசு அதிகாரிகள் காவல்துறையில் புகார் பதிவு செய்துள்ளனர்” எனவும் அவர் கூறினார்.

இத்தகைய காப்பகங்களில் குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவது பற்றி சமீபத்தில் வெளியான  செய்திகள் நாடு முழுவதிலும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புணர்வை உருவாக்கி, இந்தப் பிரச்சனை எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தையும் மத்திய அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் நோக்கங்களுக்காக விற்கப்பட்ட 20 சிறுமிகளையும் மூன்று சிறுவர்களையும் கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் காப்பகம் ஒன்றிலிருந்து தாங்கள் விடுவித்ததாக உத்திரப்பிரதேச மாநிலம் தேவ்ரியா நகரில் உள்ள காவல்துறை தெரிவித்தது.

பீகார் மாநிலத்தில் காப்பகம் ஒன்றிலிருந்து 29 சிறுமிகளை விடுவித்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்படும் 10 நபர்களை காவல்துறை கைது செய்ததை அடுத்த சில வாரங்களுக்குப் பிறகுதான் இந்த அதிரடி சோதனை நிகழ்ந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 9,000 காப்பகங்கள் தணிக்கைக்கு ஆளாக்கப்படுகின்றன என்றும் அவற்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு காப்பகங்கள் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனின் தலைவரான ஸ்துதி காக்கர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷன் கடந்த வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் இடைக்கால அறிக்கையின்படி, மொத்தம் 2, 30,000 குழந்தைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பாதுகாப்பகங்களில் மிகச் சொற்பமானவை மட்டுமே திருப்தியளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனின் கருத்துப்படி சுமார் 1,300 காப்பகங்கள் இதுவரை பதிவு செய்யப்படவேயில்லை என்றும், எனவே அவை சட்டவிரோதமான வகையிலும் , எவ்வித கண்காணிப்பும் இன்றியும் செயல்பட்டு வருகின்றன.

பீகார் மாநிலத்தில் இத்தகைய ஆய்வினை மேற்கொண்ட குழு இவ்வாறு மோசமாக செயல்பட்ட காப்பகங்களில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்விற்கான திட்டம் ஒன்றை தற்போது உருவாக்கி வருகிறது.

“அரசாங்கம்தான் இந்தக் குழந்தைகளுக்கான உள்ளூர் பாதுகாவலர்கள் ஆகும். சமூக ரீதியான தணிக்கை ஒன்றை மேற்கொண்டதன் மூலம் ஒரு வகையான முன் உதாரணத்தை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். நிலைமையை மேலும் மேம்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” எனவும் ராஜ்குமார் தெரிவித்தார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->