×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஃபேஷன் ஆடை தொழிற்சாலை பேரிடர் பங்களா தேஷ் தொழிலாளர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 25 April 2016 15:54 GMT

Former garment workers study during an English class at the Asian University for Women in Chittagong, Bangladesh on February 4, 2016. The women are part of a group of 22 ex-garment workers who quit their factory jobs in January to pursue an fully sponsored undergraduate degree in a first-of-its-kind course offered by the AUW. HANDOUT/MARLIN BISWAS/THOMSON REUTERS FOUNDATION

Image Caption and Rights Information

நீதா பல்லா

புது டெல்லி, ஏப்ரல் 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - உலக ஃபேஷன் தொழிலை உலுக்கிய பேரிடர் அது. மேற்கத்திய நாடுகளில் மின்னுகிற உயர்தர கடைகளில் விற்கப்படும் ஆடைகளைத் தைக்கும் லட்சக்கணக்கான பங்களாதேஷிகள் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆபத்தான நிலைமைகளின் எதார்த்த நிலைமையினை தோலுரித்துக் காட்டியது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் புறநகர்ப்பகுதியில், மிகப்பெரிய அளவிலான சில்லரை ஃபேஷன் நிறுவனங்களுக்கு  ஆடைகள் தயாரித்து அளித்துவந்த, ரானா பிளாசா என்னும்  எட்டு அடுக்குமாடி தொழிற்சாலை வளாகம் இடிந்து விழுந்தபோது, அதன் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருந்த 1,136 ஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்களின் சடலங்கள் மொத்தத்தில் வெளியே எடுக்கப்பட்டன.

விபத்து நடந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. அரசாங்கமும், சில்லரை வணிகர்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் மற்றும் நுகர்வோர்களும்  தொழிலாளர்களைப் பாதுகாத்திட, அநேகமாக எதுவுமே செய்யவில்லை என்று வல்லுநர்கள் புலம்புகிற அதே சமயத்தில், ஒரு சிறிய அதிசயமும் இந்தத் துயரார்ந்த சம்பவத்திலிருந்து உருவெடுத்திருக்கிறது. நாட்டின் தென்கிழக்கு மூலையிலிருந்து அது இப்ப மெல்ல வடிவம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

தொழிற்சாலையின் தளங்கள் வகுப்பறைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. தையல் இயந்திரங்கள் இருந்த இடத்தில் கணினிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆடை தயாரிப்புகளில் இருந்த 22 பெண் தொழிலாளர்கள், இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்பைப் படிக்கத் தொடங்கியுள்ளனர்.  ஆடை தொழிலுக்கு ஆசியன் மகளிர் பல்கலைக் கழகத்தில் (ஏஸியன் யுனிவர்சிட்டி ஃபார் வோமேன்) பெண்களுக்கு இதுவே முதலாவதான பட்டப்படிப்பாகும்.

பேரிடர் விபத்திற்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ள ஆசியன் மகளிர் பல்கலைக் கழகத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள பாடத் திட்டங்களுக்கான  பாதைகள் பெண் தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய விதத்திலும், அவர்களைத் தலைவர்களாக மாற்றக்கூடிய விதத்திலும் உயர் கல்வியைப் பயன்படுத்திடுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன மற்றும் பங்களாதேஷின் இலாபகரமான ஆடைஅணிகலன் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்திடும் வலுவான குரலை வடிவமைத்திடும் விதத்திலும் அமைந்திருக்கின்றன.

“ராணா பிளாசா பேரிடர் விபத்து என்பது தொழிற்சாலை அதிபர்கள் எந்த அளவிற்குத் தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்து உணர்வற்று இருந்தார்கள் என்பதற்கான அடையாளமாகும். இந்தப் பேரழிவு ஏற்படும்வரை இந்தத் தொழிலாளர் குடும்பங்களின் கதைகளும் அவர்களது கனவுகளும் வெளி உலகுக்குத் தெரியாமல்தான் இருந்தன,’’ என்று ஆசியன் மகளிர் பல்கலைக் கழக ஆதரவு பவுண்டேசன் தலைவரும், முதன்மை நிர்வாக அதிகாரியுமான கமல் அகமது,  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேசனிடம் கூறினார்.

“கணக்கற்ற ஆணைய அறிக்கைகள் உரிய முறையில் தொகுக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டன, ஆனால் தொழிலாளர்கள் தங்கள் குரலை, தேசிய அளவிலோ அல்லது புதிய சட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்திலோ எழுப்ப இயலாதிருந்தார்கள்.’’

ஐந்தாண்டு பட்டப் படிப்பு, இளம் பெண்களை ஆயத்த ஆடை தொழிலை தலைமை ஏற்று நடத்தி செல்பவர்களாக மாற்ற உதவும்  அல்லது அவர்கள் இதர துறைகளுக்கு தொடரவு உதவும் என்று அகமத் கூறினார்.   

முழுமையாக கல்வி உதவிப் பணம், மாதாந்திர ஊதியங்கள்

சீனாவிற்கு அடுத்து பங்களா தேஷ் உலகின் இரண்டாவது பெரிய ஆடை உற்பத்திசெய்திடும் நாடாகும். பங்களாதேஷின் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இந்தத் தொழில் இருந்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 25 பில்லியன் டாலர் ஏற்றுமதியை ஈட்டிக் கொண்டிருக்கிறது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் 20 சதவீதத்தை உருவாக்கிக் கொடுக்கிறது.

நாட்டிலுள்ள 5,000 ஆடை தொழிற்சாலைகளில் நாற்பது லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள்  ஷார்ட்ஸ், டீ-சர்ட்டுகள், ஜீன்ஸ்கள் போன்றவைகளை ஹை ஃபேஷன் நிறுவனங்களான மேங்கோ, ஷாரா, எச் & எம், நெக்ஸ்ட், கேப், மார்க்ஸ் & ஸ்பென்சர்,டார்கட் போன்றவைகளுக்கு ஆடைகளை உற்பத்தி செய்கிறார்கள்.

ஆயினும், ஆடை உற்பத்தி செய்திடும் தொழிலாளர்களில் 60 சதவீதத்தினர் பெண்கள் பெரிய அளவில் கீழ்நிலையிலான தையல் வேலைகளை செய்வதற்குப் பணிக்கப்படுகிறார்கள், முதுநிலை மேலாண்மை நிலைகளில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.

ஆண்களைவிட பெண்கள் கல்வித்தகுதியில் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  பலர் கிராமப்புறங்களிலிருந்து வரும் ஏழைகளாகும். இவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக தொழிற்சாலை வேலைகளை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கலாம்.

பங்களாதேஷ் துறைமுக நகரான சிட்டகாங்கில் அமைந்துள்ள ஆசியன்  மகளிர் பல்கலைக் கழகம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகின்ற, வசதிகள் அற்று பிந்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிரகாசமான  இளம் பெண்களுக்கு இலவசமாகவே பட்டப்படிப்புகளை நல்கிடத் தன் கதவுகளைத் திறந்து விட்டது.

ஐகேஇஏ பவுண்டேசன் உட்பட பலரது நன்கொடைகள் மூலம் நடத்தப்படும் இப்பல்கலைக் கழகத்தில் 500 மாணவர்கள்  பொருளாதாரம், பொது சுகாதாரம், தத்துவம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் அரசியல் போன்ற பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பினை மேற்கொள்கிறார்கள்.

ஜனவரியில், ஆசியன் மகளிர் பல்கலைக் கழகம், ஒருபடி மேலே சென்று, ஆடைகள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களுக்காக, முதன் முதலாகப்  பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

“ஆடைகள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த அறிவிற் சிறந்த நிலையிலிருந்த ஆனால் அதேசமயத்தில் வறுமையின் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாது இருந்த  பெண்தொழிலாளர்களுக்கு, படிப்புடன் வருமானமும் ஈட்டக்கூடிய விதத்தில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர நாங்கள் விரும்பினோம்,’’ என்று பாடத் திட்டங்களை வழிவகுத்திய ஒருங்கிணைப்பாளர் மவ்மிதா பாசக் கூறினார்.

“ஆடைகள் உற்பத்தி செய்த 22 தொழிலாளர்கள் ஐந்தாண்டு கால படிப்புக்கு  முழு கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெறுகிறார்கள். ஆனால், இதில் நிகரற்ற அம்சம் என்னவெனில், படித்துமுடித்தபிறகு, இவர்கள் மீண்டும் பழைய வேலைக்கே திரும்புவார்கள் என்ற உத்தரவாதம் இல்லை இருப்பினும் வேலைசெய்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இவர்களுக்கு ஊதியத்தை வழங்குவதும் தொடரும்.’’

இவர்களின் குடும்பத்தினர் இவர்கள் வருமானத்தையே சார்ந்திருப்பதாலும், ஊதியம் இன்றி படிக்கச் செல்வதற்கு அவரது குடும்பத்தார் அனுமதி மறுக்கலாம் என்பதாலும், இவர்கள் படிக்கக்கூடிய காலம் முழுவதற்கும் அவர்கள் வாங்கி வந்த  மாதாந்திர ஊதியமான சுமார் 100 டாலர் என்பது தொடர்ந்து நீடிக்கும் என்பது இத்திட்டத்தின் வெற்றியின் சிறப்பம்சமாகும் என்று பாசக் மேலும் கூறினார்.

வாழ்க்கையையே மாற்றியமைத்திடும் வாய்ப்பு

ஆயினும்கூட, இந்தப் படிப்பு அவ்வளவு எளிதாக விற்பனையாகிவிடவில்லை என்று பாசக் கூறினார். சென்ற ஆண்டு, இந்த ஐந்தாண்டு பட்டப் படிப்பில் சேர்வதற்காக, முழு ஊதியத்துடன், பிரகாசமான பெண் தொழிலாளர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்வதற்காக எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு அவர் சென்று, அத்தொழிற்சாலைகளின் வேலையளிப்பவர்களை திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறார்.

“ராணா பிளாசா விபத்திற்குப்பின் மிகவும் சேதமடைந்துள்ள பங்களா தேஷ் ஆடைகள் துறையின் சர்வதேச அளவில் இருந்த நற்பெயரை மீளவும் நிலைநிறுத்திட இந்தப் படிப்பு உதவும் என்று நான் வேலையளிப்பவர்களிடம் கூறினேன். அவர்களின் தொழிற்சாலைகளுக்கு ஓர் ஆக்கபூர்வமான விளம்பரமாகவும் இது அமைந்திடலாம் என்றும் கூறினேன்,’’ என்று அவர் கூறினார். பல தொழிற்சாலை வேலையளிப்பவர்கள் ஆர்வமின்றி இருந்த அதே சமயத்தில், ஐந்து நிறுவனங்கள் -- ஆனந்தா குழுமம், சன்மான் குழுமம், பௌ சென் குழுமம், முகமதி குழுமம் மற்றும் நிட் கன்செர்ன்  ஆகிய ஐந்து நிறுவனங்கள் -- இப்படிப்பைத் தொடங்கி வைப்பதில் தங்களை இணைத்துக் கொண்டன.

ஒன்பதாயிரம் தொழிலாளர்களைப் பணியமர்த்தி இருக்கின்ற மற்றும் எச் & எம் பிராண்டுக்கு ஆடைகளை உற்பத்தி செய்து வழங்குகிற,  டாக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிடும் முகமதி குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ரூபானா ஹக், பங்களா தேஷ் நல்லது செய்வதற்கு இது சரியான தருணம் என்று கூறினார்.

“பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான மிகவும் பயனுள்ள முயற்சி இது என்றே நான் நினைக்கிறேன்.  துணிகளைத் தைப்பதற்கும் மேல் ஏதேனும் நம்பிக்கைகளோ அல்லது கனவுகளோ நம் பெண்களிடம் இருந்ததா என்று நாம் எப்போதும் ஆச்சர்யப்படுவது வழக்கம்,’’ என்று ஹாக் கூறினார்.

“ஆகையால், உங்களைப் பரிசோதிப்பதற்குத் தயாராயிருக்கிறீர்களா என்று கேட்டபோது பெண்களில் சிலர் தங்கள் கைகளை உயர்த்தியபோது நான் இனிய அதிர்ச்சி அடைந்தேன், மிகவும் சந்தோஷப்பட்டேன்.’’

ஹாக், இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்திட, தங்கள் நிறுவனம் இரு பெண்களை அனுமதிக்கிறது என்றார்.  அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர்களுடைய ஊதியத்தை அளிப்பதும் தொடரும், அடுத்த புதிய செமஸ்டரில் மேலும் பெண் தொழிலாளர்களைச் சேர ஊக்குவித்திடவும் திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.

ஆசியன் மகளிர் பல்கலைக்கழகத்தின் கடுமையான தேர்வில் தேர்ச்சி அடைந்த பின்னர், ஆடைகளை உற்பத்தி செய்துவந்த இளம் பெண் தொழிலாளர்களில் சிலருக்கு, பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பு என்பது இதுவரை கனவாக இருந்துவந்தது இப்போது நிஜமாக மாறி இருக்கிறது.

“நான் அதிகம் படிக்க வேண்டும் என்று எப்போதுமே விரும்பிவந்தேன். ஆனால் என்னால்  முடியவில்லை. என் பெற்றோர் வயதானவர்கள். எனக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள். ஆகையால், எங்கள்குடும்பத்தில் நான் ஒருத்திதான் சம்பாதிக்கும் நபர்,’’என்று 28 வயதுள்ள சோனியா கோம்ஸ் கூறினார். ஆனந்தா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலை ஒன்றில் இவர் தரக் கட்டுப்பாட்டு முன்னாள் ஆய்வாளராவார்.

“ஆசியன் மகளிர் பல்கலைக் கழகம் குறித்து கேள்விப்படும் வரை நான் நம்பிக்கையிழந்து தான் இருந்தேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் மிகவும் மகிழ்ந்தேன். இது என் வாழ்க்கையை மாற்றிடும் என நான் எதிர்பார்க்கிறேன். ஒரு தொழில்முனைவோராக மாறவும்,   ஆடை உற்பத்தித் தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திட அவர்களுடன் ஒத்துழைத்திடவும் திட்டமிட்டிருக்கிறேன்.’’ (செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.) 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->