இந்தியா ஆட்கடத்தல் தொடர்பாக ஓர் ஒருங்கமைந்த வரைவு சட்டத்தை முதன்முதலாக கொண்டுவந்திருக்கிறது

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 31 May 2016 05:34 GMT

- நீதா பல்லா

புது டெல்லி, மே 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) -  ஓர் ஒருங்கமைந்த விரிவான ஆட்கடத்தல் வரைவு தடைச் சட்டத்தை நாட்டில் முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். இந்தச் சட்டவரைவின் கீழ் மீட்கப்பட்டவர்களைக் கிரிமினல்களாகக் கருதாமல் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி உரிய உதவியும் பாதுகாப்பும் அளித்திட வழிவகை செய்கிறது. 

போதை மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கூற்றின்படி, தென் கிழக்கு ஆசியாவிற்கு அடுத்ததாக,  இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள தெற்கு ஆசியா, உலகில் ஆட்கடத்தல் அல்லது மனிதவியாபாரம் தொழில் மிக வேகமாக அதிகரித்து வரும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பிராந்தியமாகும்.

தெற்கு ஆசியாவிற்குள்ளேயே கடத்தப்படும் மக்களின் எண்ணிக்கை குறித்து துல்லியமான விவரங்கள் இல்லை. ஆனால், இந்தியாவிற்குள்ளிருந்தும் அதே போன்று  ஏழை அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பங்களா தேஷிலிருந்தும் ஆயிரக்கணக்கான  அளவில் பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படுவதாக  ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

பலர் கட்டாய திருமணத்திற்காக விற்கப்பட்டுவிடுகிறார்கள், அல்லது மத்திய தர குடும்பங்களில் வீட்டுவேலைக்காரர்களாகவும், சிறிய கடைகளில் மற்றும் ஓட்டல்களில் கொத்தடிமைகளாகவும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள், அல்லது விபச்சார விடுதிகளில் அடைக்கப்பட்டு அங்கே திரும்பத் திரும்ப வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இச் சட்டமுன்வடிவு குறித்துக் கூறுகையில், இந்த வரைவு சட்டம் தற்போது நடைமுறையில்இருக்கும் ஆட்கடத்தல் சட்டங்களை ஒருங்கிணைத்திடுவதையும், மீட்கப்பட்டோரின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடியதையும், விபச்சார விடுதிகளிலில் கண்டெடுக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவதைத் தடுத்திடுவதையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்றார். 

 

‘‘இந்தச் சட்டமுன்வடிவானது கடத்தப்பட்டோருக்கும் கடத்துபவருக்கும் இடையேயான வேறுபாட்டை மிகவும் தெளிவாகக் காட்டுவதுடன், கடத்தப்பட்டோர்மீது மேலும் அதிகமான அளவில் இரக்க உணர்வை காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது’’ என்றும். ‘‘இந்த நுட்பமான வேறுபாட்டை 60 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்’’ என்றும் திங்கள் அன்று வரைவு ஆட்கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு) சட்டமுன்வடிவு, 2016 வரைவை வெளியிட்டு மேனகா காந்தி கூறினார். 

இந்த வரைவு சட்டமுன்வடிவு, ஆட்கடத்தல் வழக்குகளை விரைவாக விசாரிக்கக்கூடிய விதத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்திடவும், பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கள் வாழ்க்கையைப் புனரமைத்துக்கொள்வதற்கு உதவக்கூடிய  விதத்தில் புனர்வாழ்வு மையங்கள் அமைத்திடவும். புனர்வாழ்வு நிதியம் ஏற்படுத்திடவும் வகை செய்கிறது.

இது மேலும் ஆட்கடத்தல் எதிர்ப்புக் குழுக்கள், மாவட்ட. மாநில மற்றும் மத்திய அளவில் அமைத்திடவும் வகை செய்கிறது. அவை ஆட்கடத்தலைத் தடுத்திடவும். கடத்தப்பட்டோருக்கு பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வினையும் மேற்பார்வை செய்திடும்.

தேசிய குற்றப் பதிவேடுகள் பீரோ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, 2014இல் 5,466 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது சென்ற ஐந்தாண்டுகளைக் காட்டிலும் 90 சதவீதம் அதிகம் ஆகும். இதையும் கூட ஆர்வலர்கள் குறைந்த மதிப்பீடு என்கிறார்கள். 

ஒவ்வொராண்டும் பெரும் நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் -- இவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், கிராமப்புறப் பெண்கள் மற்றும் குழந்தைகள் - கடத்தப்படுபவர்களால் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துவரப்பட்டு. வந்தபின்னர் வீட்டு வேலை செய்வதற்கு அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்கு அல்லது ஜவுளிப் பட்டறைகள் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதற்கு விற்கப்பட்டுவிடுகிறார்கள்.  

பல வழக்குகளில், அவர்களுக்கு எதுவும் ஊதியம் தரப்படுவதில்லை அல்லது கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். சிலர் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களது குடும்பத்தாரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

வரைவுச் சட்டமுன்வடிவு அரசுத்தரப்பிலான புலனாய்வுகளை வலுப்படுத்திடும் என்றும், ஆட்கடத்தல் குற்றங்கள் மீதான வழக்குகள் குறித்து மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைந்து புலனாய்வுகளை மேற்கொண்டு, ஒரு சிறப்பு புலனாய்வுதுறையை அமைத்து, தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இவ்வழக்குகளில் தண்டனைகளை அதிகரித்திடவும் முடியும் என்று மேனகா காந்தி கூறினார். 

மேலும், இந்த வரைவுச் சட்டமுன்வடிவில், தண்டனைக்கு உள்ளாகிறவர்களிடமிருந்து அபராதத்தொகையை வசூலிப்பதற்கும் வகைசெய்யப்பட்டிருக்கிறது என்றும் மேலும் அடிமைப்பணிகளின்போது ஊதியம் வழங்கப்படாமல் இருந்தால் அவர்களுக்கு ஊதியத்தை வழங்கிடவும் வகைசெய்யப்பட்டிருக்கிறது என்றும் அதிகாரிகள் கூறினார்கள். 

இந்த வரைவு சட்டமுன்வடிவு ஆட்கடத்தலுக்காகவும் மற்றும் குற்றங்களைப் புரிவதற்காகவும் போதை மருந்துகள் அல்லது ஆல்கஹால் அளிக்கப்படுவது தொடர்பாகவும், மற்றும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஹார்மோன்கள் பயன்படுத்தல் தொடர்பாகவும்  பல பிரிவுகளை உள்ளடக்கி இருக்கிறது.

இந்தச் சட்டமுன்வடிவின் வரைவினை மேலும் எந்த அளவிற்கு மேம்படுத்திட வரும் ஜூன் 30 வரை, ஆலோசனைகளை அளிக்கலாம் என்றும் அதனை தன் அமைச்சகம் பரிசிலனைக்கு ஏற்றுக்கொள்ளும் என்று மேனகா காந்தி கூறினார். 

அதன்பின்னர் இது அனைத்து அமைச்சகங்களுக்கும் அவற்றின் கருத்துக்கள் கோரி அனுப்பி வைக்கப்படும். இறுதிச் சட்டமுன்வடிவு இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்திய நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட முடியும் என்றும் அவர் மேலும் கூறினார். 

(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: : அலிசா டாங். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.