×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வங்க தேச பண்ணைகளில் குழந்தைத் தொழிலாளிகள் பற்றி விசாரிக்க உறுதியளித்தது பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோ நிறுவனம்

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Thursday, 30 June 2016 11:33 GMT

Boy carrying metal pot with tobacco seedlings as part of contract farming for British American Tobacco in Chittagong, Bangladesh on November 25, 2015. HANDOUT/SWEDWATCH

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புதுடெல்லி, ஜூன் 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -  ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரச்சாரக் குழு வங்க தேசத்தில் புகையிலை பயிரிடுதல்; பதப்படுத்தல் ஆகிய வேலைகளில் குழந்தைத் தொழிலாளிகளை பயன்படுத்தி வருவதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து வங்க தேசத்தில் தங்களுக்கு புகையிலை வழங்கிவரும் ஒரு சில பண்ணைகள் குறித்து விசாரிப்பதாக உலகத்தின் இரண்டாவது மிகப்பெரும்  சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோ(புகையிலை)  நிறுவனம் வியாழனன்று  உறுதியளித்தது.

     பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோ மற்றும் அதன் உள்ளூர் துணை நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோ பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு புகையிலை சப்ளை செய்து வரும் பண்ணைகளில்  ‘விரிவான அளவில்’ குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதையும், இதன் மூலம் அவர்களது உடல்நலம், கல்வி ஆகியவற்றுக்கு தீங்கு ஏற்படுத்தப்படுவதையும் வங்கதேசத்தில் புகையிலை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மூன்று மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட ஸ்வெட்வாட்ச்  கண்டறிந்தது.

    ”அனைத்து வயதையும் சேர்ந்த சிறுமிகளும் சிறுவர்களும் வயலுக்கு நீர் பாய்ச்சுவது; வயலை சமப்படுத்துவது ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்களாக இருக்கின்றனர். அவர்களில் சிலர்  பெரும் பாரங்களை சுமப்பதோடு, நாற்று வயலிலிருந்து வயலுக்கு நாற்றுக்களையும் எடுத்து வருகின்றனர்” என்று  2015 ஜூலை மற்றும் 2016 மே மாதங்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    ”அறுவடை முடிந்தபிறகு, அவர்கள் இலைகளை பறிப்பது; தண்டுகளை வெட்டுவது ஆகிய வேலைகளில் மட்டுமின்றி புகையிலையை உலரவைக்கும்போது சூளைகளின் சூட்டை கண்காணிப்பதிலும் உதவுகின்றனர்.”

    அறுவடைக் காலத்தில் இந்தக் குழந்தைகள் பள்ளியிலிருந்து கொண்டு வரப்பட்டு நாளொன்றுக்கு 16 மணி நேரம் வரை செய்ய நேர்கிறது என்றும் பச்சை புகையிலை பயிர்கள், புகையிலிருந்து வெளிப்படும் தூசி மற்றும் புகையிலை காயவைப்பதற்காக பயன்படுத்தப்படும் சூளையிலிருந்து வெளிப்படும் புகை ஆகியவற்றால் பாதிக்கப்படும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என ஸ்வெட்வாட்ச் தெரிவித்தது.

    பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோவின் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான குழுத் தலைவர்  சைமன் க்ளெவர்லி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் பேசுகையில் இந்த ஆய்வு முடிவுகள் குறித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்கள் உள்ளிட்டு தங்கள் நிறுவனம் விசாரணை மேற்கொண்டதாகவும், மனித உரிமை மீறலுக்கான எவ்விதமான ஆதாரமும் காணப்படவில்லை என்றும் கூறினார்.

    வங்க தேசத்தில் புகையிலை பயிரிடுதல் மற்றும் கிராமப்புற வாழ்க்கை நிலைமைகள் ஆகியவற்றை ஆராய்வதற்காக பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோ நியமித்த  பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகள் சாதகமான சமூக-பொருளாதார தாக்கத்தை நிறுவனம் பெற்றுள்ளது என்று தெரிவித்த முடிவுகளை ஒத்ததாகவே பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோவின் இப்போதைய விசாரணையும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

    எனினும் லக்கி ஸ்ட்ரைக், டன்ஹில் போன்ற சிகரெட்களை தயாரிக்கும் பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோ நிறுவனம், குழந்தைகள் வேலை செய்வதாகச் சொல்லப்படும்  வயல்கள் இருக்குமிடம் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ஸ்வெட்வாட்ச் அமைப்பிடம் கோரியுள்ளது என்றும், அதன் மூலம் இது பற்றி தமது நிறுவனம் மேலும் விசாரணை மேற்கொள்ளும் என்றும், தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் க்ளெவர்லி தெரிவித்தார்.

    ”இந்த அறிக்கையானது வங்க தேசத்தில் புகையிலை வயல்கள் மூலமாக எங்கள் நிறுவனத்திற்கு வழங்கும் சப்ளை ஏற்பாடு பற்றி தவறான வழிகாட்டக் கூடிய, சரியில்லாத பார்வையைக் கொண்டதாக உள்ளது என்றே நாங்கள் நம்புகிறோம். வங்க தேசத்தில் எங்கள் செயல்பாடு  என்பது பரஸ்பர நலன் கருதி விவசாயிகளுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து நீண்ட நாட்களாகப் பணியாற்றுகின்ற வரலாற்றைக் கொண்டதாக   இருந்து வந்துள்ளது” என்றார் க்ளெவர்லி.

            நான் சோர்வாகக் கருதுகிறேன்

    சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்துப்படி, வங்கதேசத்தில் 5 வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய 50 லட்சம் சிறுவர்-சிறுமியர் எதாவதொரு வகையான வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    வேலை செய்வதற்கான குறைந்தபட்ச வயது 14 என வங்கதேச சட்டங்கள்  கூறிவரும் போதிலும், வறுமையின் விளைவாக பல குடும்பங்களும் தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.

    இத்தகைய குழந்தைத் தொழிலாளர்களில் 93 சதவீதம் பேர் முறைசாரா துறையில்தான் வேலை செய்கிறார்கள் என்று, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) மதிப்பிட்டுள்ளதோடு, இந்த நிலையானது தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்துவதை இயலாத ஒன்றாக மாற்றுகிறது என்றும்  கூறுகிறது.             பணி தொடர்பான உயிரிழப்பு மிகவும் அபாயகரமானது எனவும், கூர்மையான கருவிகளை பயன்படுத்துவது, அபாயகரமான இயந்திரங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த இராசாயனப் பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றால் தொழில் சார்ந்த நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்புள்ள துறை எனவும் கருதப்படும் . வேலை செய்யும் குழந்தைகளில் பண்ணைத்துறையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வேலைக்கு  அமர்த்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

            வங்க தேசத்தின் பந்தர்பன், சகோரியா, லால்மோனிர்ஹாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள புகையிலை பண்ணைகளில் வேலை செய்யும் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்றும்,  நிகோடின் என்ற நச்சுப் பொருள் தோலின் மூலமாக அவர்களின் உடலில் படிகிறது என்பதோடு, முறையான பாதுகாப்பு கருவிகள் இல்லாததால் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விளைவுகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது என்றும் ஸ்வெட்வாட்ச் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

            அந்த அறிக்கையில் 16 வயதுடைய ஒரு சிறுவன் கூறியுள்ளதாவது: ”என்னால் ஒழுங்காகத் தூங்கவோ அல்லது சாப்பிடவோ  முடியாது. வேறு பல உடல்நலக் குறைவுகளுக்கு அது இட்டுச் செல்கிறது. நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன்.” 

            ஒரு சூளையில் சூடுபடுத்துவதையும் உள்ளடக்கிய புகையிலை பதப்படுத்தும் செயல்முறையை விளக்குகையில் “சூளைக்கு முன்னால் நின்று நான் வேலை செய்யும்போது, என் கண்களெல்லாம் எரியும்; நெஞ்சு வலிப்பதாக உணர்வேன். அதிகமாகவே இருமுவேன்” என்று அந்தச் சிறுவன் குறிப்பிட்டிருந்தான்.

            விவசாயிகள், அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளின் அடிப்படையில் அமைந்த அந்த அறிக்கையானது, வேலை செய்வதற்காக வகுப்பறைகளிலிருந்து சிறுவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு ஈடுபடுத்தப்படும் இந்த புகையிலை தொடர்பான வேலையானது இத்தகைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, அவர்களின்  எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றின் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் கண்டறிந்துள்ளது.

            ”தாக்கம் குறித்த மதிப்பீடுகள் மற்றும் மூன்றாம் தரப்பு மூலமான தணிக்கைகள் ஆகியவற்றை வெளியிடுவதன் மூலம் தங்களுக்கு சப்ளை ஏற்பாட்டில் மேலுள்ள ‘மூடுபனிகளை’ விலக்குமாறும் மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாகோ மற்றும் இதர புகையிலை நிறுவனங்களை இந்த ஆய்வு வலியுறுத்துவதாக” ஸ்வெட்வாட்ச் அமைப்பு தெரிவித்தது. 

(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->