×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவின் முதல் ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம்: வரைவுச் சட்டம் எதிர்பார்ப்பிற்கு குறைவே என பிரச்சாரகர்கள் கருத்து

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Monday, 4 July 2016 12:29 GMT

Labourers carry bricks to be baked in a kiln at a brickyard on the outskirts of Karad in Satara district, about 396km (246 miles) south of Mumbai February 13, 2012. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

மும்பை, ஜூலை 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவின் முதல்முதலான ஆட்கடத்தல் வரைவு தடுப்புச் சட்டத்தை விமர்சித்துள்ள அறக்கட்டளைகளும், செயல்பாட்டாளர்களும், உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமானது குறைபாடுகள் நிறைந்தென்றும், மிக வேகமாக வளர்ந்து வரும் இக்குற்றத்தின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் வகையில் அது இல்லை என்றும் கூறியுள்ளனர்.

கடந்த மே மாதத்தில் வெளியிடப்பட்ட, ஆட்கடத்தல் மசோதாவானது தற்போது நடைமுறையில் உள்ள ஆட்கடத்தல்  தடுப்புச் சட்டங்களை ஒன்றிணைக்கவும், இதில் தப்பிப் பிழைத்தவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவும், இது குறித்த வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஏற்பாடு செய்யவும் முயற்சிப்பதாக அமைந்துள்ளது.

இந்த மசோதா குறித்த ஆலோசனைகள் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து பிரச்சாரம் செய்து வருவோர் இந்த மசோதாவில் எண்ணற்ற திருத்தங்களைக் கோரியுள்ளனர்.

“இந்தப் புதிய சட்டமானது களத்தில் செயல்பட்டு வருவோரிடையே குழப்பத்தை மட்டுமே உருவாக்கும். ஏனெனில் ஆட்கடத்தல் தொடர்பான குற்றங்கள் அனைத்தையும் இது பட்டியலிடவில்லை என்பதோடு, தற்போது நடைமுறையில் இருந்து வரும் சட்டங்களை அது கருத்தில் கொள்ளவே இல்லை” என ஆட்கடத்தல் தொடர்பான விஷயங்களில் ஒரு நிபுணரும், மும்பையில் உள்ள டாட்டா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தில் பேராசிரியருமான பி.எம். நாயர் கருத்து தெரிவித்தார்.

“தற்போதுள்ள வடிவத்தில் இந்த மசோதா என்பது மிகப்பெரிய பின்னடைவு. இது முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகத்தின் கருத்துப்படி, கிழக்கு ஆசிய பகுதிக்கு அடுத்தபடியாக, ஆட்கடத்தல் குற்றங்களில் இரண்டாவது மிகப்பெரிய பகுதியாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகவும், இந்தியாவை மையமாகக் கொண்ட தெற்காசிய பகுதி விளங்குகிறது.

தெற்காசியப் பகுதிக்குள் இவ்வாறு கடத்தப்படுவோர் குறித்து அதிகார பூர்வமான எண்ணிக்கை எதுவும் இல்லை என்ற போதிலும், ஆயிரக்கணக்கானோர், அதிலும் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் இந்தியாவிலிருந்தும், அதன் அண்மையிலுள்ள ஏழை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்தும் கடத்தப்படுகின்றனர் என செயல்பாட்டாளர் கூறுகின்றனர்.

இவர்களில் பலரும் விற்கப்பட்டு, கட்டாய திருமணத்திற்கு ஆளாவது அல்லது வயல்களிலும், தொழிற்சாலைகளிலும், செங்கல் சூளைகளிலும், வீட்டு வேலைகளிலும் கொத்தடிமைகளாக வேலை செய்வது அல்லது பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் விபச்சார விடுதிகளில் மிகக் கொடூரமான வகையில் அடைக்கப்பட்டு கிடப்பது ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள நேர்கிறது.

தேசிய குற்றங்கள் பதிவு மையத்தின் புள்ளி விவரங்களின்படி, 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5,466 ஆட்கடத்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, கடந்த ஐந்தாண்டு காலத்தை ஒப்பிடும்போது 90 சதவீதம் அதிகமாகும். எனினும் இதுவும் கூட மிக மிகக் குறைவான மதிப்பீடே ஆகும் என செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

“ஆட் கடத்தல்”, “பாலியல் ரீதியான சுரண்டல்” உள்ளிட்ட பல சொல்லாடல்களை இந்த மசோதா முறையாக விளக்கவில்லை என்பதோடு, இத்தகைய குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதை அல்லது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த போதுமான வழிமுறைகளை கொண்டதாக இருக்கவில்லை என பெண்கள் மற்றும் சிறுவர்கள் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் நேஷனல் கோயலிஷன் டு ப்ரொடக்ட் அவர்  சில்ட்ரன் (என்சிபிஓசி) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“தற்போதைய வடிவத்தில் இந்த மசோதாவானது கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவதாக அமையவில்லை” என அந்த அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்திருந்தது.

இந்த மசோதா கொத்தடிமை முறையை ஆட்கடத்தலின் ஒரு வடிவமாக சேர்க்கவில்லை என்பதோடு, இத்தகைய குற்றங்களை எதிர்த்துப் போராட, 2006ஆம் ஆண்டிலிருந்து நாடுமுழுவதும் உருவாக்கப்பட்ட, ஆட்கடத்தல் எதிர்ப்பு குழுக்களின் மிக முக்கியமான பங்கினை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது  என மனித உரிமைகளுக்கான குழுவான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (ஐஜேஎம்) தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டமானது விபச்சாரத் தடுப்புச் சட்டம், சிறார் நீதிக்கான சட்டம், பாலியல் ரீதியான குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் போன்ற, தற்போது நடைமுறையில் உள்ள ,சட்டங்களுடன்  ஒழுங்கமைவு கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் , அத்தகைய செயலே இந்தப் புதிய சட்டம்  மிகச் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தும் எனவும் ஐஜேஎம் கூறியது.

இந்த மசோதா மீது கருத்து தெரிவிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என ஒரு சில பிரச்சாரகர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், இதற்கான காலக் கெடு குறிப்பிட்ட இறுதி நாளான ஜூன் 30 ஆம் தேதியன்று முடிவடைந்தது. இப்போது இந்த மசோதாவானது அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அனுப்பி வைக்கப்படும்.

இந்த மசோதாவின் இறுதியாக்கப்பட்ட வடிவம் ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தின் முன்பாக வைக்கப்படக் கூடும் என காந்தி தெரிவித்தார்.

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->