×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பேட்டி – நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோர் கடனுடனும், அதிகரித்து வரும் ஆட்கடத்தல் அச்சத்துடனும் போராடி வருகின்றனர்

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Tuesday, 26 July 2016 13:36 GMT

A woman and a child walk past the remains of collapsed houses damaged during the April 2015 earthquake, in Bhaktapur, Nepal March 18, 2016. REUTERS/Navesh Chitrakar

Image Caption and Rights Information

-ரினா சந்திரன் 

காத்மாண்டு, ஜூலை 26 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் வீடுகளை இழந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை புனரமைத்துக் கொள்ள கடன் வாங்கிய நூற்றுக்கணக்கான நேபாளிகள், வேறு இடங்களுக்குக் கடத்தப்படுவது அல்லது வாங்கிய கடனை திருப்பித் தரும் வகையில் தங்கள் சிறுநீரகங்களை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள் என ஒரு சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பு தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் –மே மாதங்களில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு மறு கட்டமைப்பு ஏற்பாடுகளுக்காக 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நிதியுதவி செய்வதாக நன்கொடையாளர்கள் நேபாளத்திற்கு உறுதி அளித்திருந்தனர். இமயமலை சாரலில் அமைந்துள்ள இந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 9,000 பேரின் உயிரைப் பறித்ததோடு, குறைந்தபட்சம் 22,000 பேரை காயமுறச் செய்தது; 9,00,000 க்கும் மேற்பட்ட வீடுகளை சேதமுறச் செய்தது, அல்லது முற்றிலுமாக அழித்தது.

இந்தப் பேரழிவு நிகழ்ந்து ஓராண்டு ஆன போதிலும், மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நடைபெறுகின்றன. புதிய அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பாக மக்களிடையே ஏற்பட்ட சலசலப்பும் இந்தத் தாமதத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. வேலை கிடைக்காத நிலையில், நூற்றுக் கணக்கான நேபாள நாட்டவர்கள் ஆழ்ந்த கடனில் மூழ்கியிருக்கின்றனர் என ஏஷியா ஃபவுண்டேஷன் செவ்வாயன்று தெரிவித்தது.

“கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவர்களது திறன் மிகவும் குறைவுதான். இந்தக் கடன்சுமையானது அவர்களை மேலும் மோசமான சுரண்டலுக்கு இரையாக வைக்கிறது” என காத்மாண்டுவில் உள்ள ஏஷியா ஃபவுண்டேஷனுக்கான அந்த நாட்டின் உதவி பிரதிநிதி நந்திதா பரூவா தெரிவித்தார்.

“குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவது அல்லது தங்கள் சிறுநீரகங்களை விற்பது என்ற அளவிற்குக் கூட பெருமளவிற்கு துணிவுடன் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு அவர்களது இந்த விரக்தியான நிலை தள்ளி விடுகிறது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறினார்.

“அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்ட நிலையில், சம்பாதிப்பதற்காக மக்கள் அதிகமான அளவில் இடம்பெயர இருப்பதை நாம் காணவிருக்கிறோம். அவர்களில் சிலர் ஆட்கடத்தலுக்கும் ஆளாகக் கூடும்” என்றும் பரூவா தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோர் தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணத்தையே நேபாளத்தின் பொருளாதாரம் பெரிதும் நம்பியிருக்கிறது. இந்தத் தொகையானது அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும்.

நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உதவுவதற்காக நேபாளத்திற்குத் திரும்பியிருந்தனர்.

இவர்களில் பலரும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவதற்காக தங்கள் முதலாளிகளுக்கு  பணம் கொடுத்துவிட்டே வந்திருக்க வேண்டும். அதுபோக, கடந்த பல மாத காலமாக எவ்வித ஊதியமும் இல்லாத அதே நேரத்தில் அவர்கள்  மறுகட்டுமானத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாகியுள்ளனர் என்று பரூவா குறிப்பிட்டார்.

“இந்தத் தொழிலாளர்கள் முதலில் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதற்காக 2,00,000 முதல் 5,00,000 நேபாள ரூபாயை ( அதாவது 1850 முதல் 4640 அமெரிக்க டாலர்கள்) கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்தக் கடனையே அவர்கள் இன்னமும் திருப்பிச் செலுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்” என அவர் தெரிவித்தார்.

“இந்த நிலநடுக்கங்கள் அவர்களின் கடன் சுமையை மேலும் தாங்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளன” என்றார் அவர்.

Family members work to rebuild their house a year after the 2015 earthquakes in Bhaktapur, Nepal, April 25, 2016. REUTERS/Navesh Chitrakar

எல்லைப்பகுதி சோதனைகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற பேரழிவிற்குப் பிறகு, கடத்திச் செல்லப்படும் நேபாள நாட்டுப் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்றும் செயல்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகு வந்த மூன்று மாத காலத்தில் நேபாள-இந்தியா  எல்லைப் பகுதியில் ஆட்கடத்தலுக்கு இரையானவர்கள் என சந்தேகிக்கப்படும் 745 பெண்கள்-சிறுவர்களை தாங்கள் தடுத்து நிறுத்தியதாக  ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான மைத்தி நேபாள் தெரிவித்தது.

இதை ஒப்பிடும்போது நிலநடுக்கங்களுக்கு முந்தைய மூன்று மாத காலத்தில் இவ்வாறு 615 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அவர்களது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்துப்படி ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8,500 நேபாள நாட்டவர்கள் ஆட்கடத்தலுக்கு  இரையாகின்றனர்  என்ற வகையில் நேபாளம் ஆட்கடத்தலுக்கான ஆதாரப் பகுதியாகவும், உரிய இடமாகவும் திகழ்கிறது.

பெண்கள் பெருமளவில் பாலியல் தொழிலுக்காகவும், வீட்டு வேலைக்காகவும், கட்டாய திருமணத்திற்காகவும் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றனர். அதேநேரத்தில் ஆண்கள் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் கட்டுமான வேலைகளிலும், ஊர்தி ஓட்டுநர்களாக, ஓட்டல்களில் பணிபுரிவோராக இருக்கின்றனர்.

இதில் ஒரு சிலர் தங்கள் சிறுநீரகங்களை விற்பதற்காக, மாற்று அறுவை சிகிச்சைக்கான உடல் உறுப்புகள் பெரிதும் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் சட்டவிரோதமான மாற்று அறுவை சிகிச்சைக்கான கள்ளச் சந்தை பெருகியுள்ள இந்தியாவிற்குக் கடத்தப்படுகின்றனர் என்றும் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுகட்டுமானத்தில் ஏற்பட்ட  தாமதம் மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவற்றுக்குப் பிறகு ஜூலை மாத நடுப்பகுதி வரையான இந்த நிதியாண்டில் நேபாள நாட்டுப் பொருளாதாரம் சுமார் 1.5 சதவீத அளவிற்கு மட்டும் தான் வளர்ச்சி பெற்றதாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு செய்திருந்தது. இந்த நிலையிலிருந்து மீள்வதென்பது மறுகட்டுமானத்தின் வேகத்தையே சார்ந்துள்ளது எனவும் அது கூறியிருந்தது.

“நிவாரணத்திற்காக வரும் உதவிகளும் இப்போது நின்று விடப்போகும் நிலையில், மேலும் அதிகமான அளவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது, மேலும் அதிகமான ஆட்கடத்தல் ஆகியவற்றை நாம் காணவிருக்கிறோம்” என பரூவா கூறினார்.

“கடனை வாங்கியவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை” என அவர் கூறினார்.

(ஒரு அமெரிக்க டாலர் = 107.752 நேபாள ரூபாய்)

(செய்தியாளர்: ரினா சந்திரன் @rinachandran; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->