×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பிரத்யோகச் செய்தி - மைக்கா சுரங்கங்களில் நிகழும் சிறுவர்களின் மரணத்தை மூடி மறைக்கும் முயற்சி அம்பலமானதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்

by Nita Bhalla and Rina Chandran | Thomson Reuters Foundation
Wednesday, 3 August 2016 16:21 GMT

Gudiya, 13, breaks away pieces of mica from rocks in an illegal open cast mine in Koderma district in the eastern state of Jharkhand, India, June 29, 2016. REUTERS/Nita Bhalla

Image Caption and Rights Information

“ குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது சட்டவிரோதமானது; அத்தகைய நபர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.”

             - நீதா பல்லா மற்றும் ரினா சந்திரன்

தில்லி/மும்பை,, ஆகஸ்ட் 3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சட்டவிரோதமான சுரங்கங்களில் சிறுவர்கள் உயிரிழந்து வருவதையும், அவர்களது மரணங்கள் மறைக்கப்படுவதையும் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் மைக்கா சுரங்கங்களில் நிகழும் சிறுவர்களின் மரணங்கள் குறித்து புதன்கிழமையன்று இந்திய அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

அழகுசாதனப் பொருட்கள், கார்களுக்கான வண்ணங்கள் ஆகியவற்றை மேலும் ஒளிவிடச் செய்கின்ற மைக்காவை உற்பத்தி செய்து வரும் மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றில் மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு  கடந்த ஜூன் மாதத்திலிருந்து  குறைந்தது ஏழு குழந்தைகள் மரணமடைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.

Blood Mica
Deaths of child workers in India's mica "ghost" mines covered up to keep industry alive
Enter

ஆனால் இந்த மரணங்கள் வெளியே தெரிவிக்கப்படுவதில்லை. ஏனெனில், இதில் உயிரிழந்தோரின் குடும்பங்கள், இந்த சுரங்கங்களை நடத்தி வருபவர்கள் ஆகியோர் இந்த சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முடிவு கட்ட விரும்புவதில்லை. இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதிகளைச் சேர்ந்த இவர்களுக்கு இதுவே ஒரே வருமானமாக உள்ளது.

நோபல் பரிசு பெற்ற செயல்பாட்டாளரான கைலாஷ் சத்யார்த்தியின் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவான பச்பான் பச்சாவ் ஆந்தோலன் (பிபிஏ) இதுபற்றிக் கூறுகையில், ஒழுங்குபடுத்தப்படாது சீரழிந்து இருக்கும் சுரங்கங்களில் நிகழும் இத்தகைய மரணங்கள் கடலில் மூழ்கியிருக்கும் பனிமலையில் வெளியே தெரியும் ஒரு சிறு முனை போல என்று குறிப்பிட்டதோடு, மைக்கா சுரங்கங்களில் நிகழும் மரணங்களில் பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே வெளியே தகவல் தெரிவிக்கப்படுகிறது என்றும் மதிப்பிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் நல அமைச்சர் ராஜ் பலிவார் உடனடியாக இதுபற்றிய விசாரணையைத் துவக்குவதாக புதன்கிழமையன்று தெரிவித்தார்.

“ நான் ஓர் ஆய்விற்கு உத்தரவிட்டிருக்கிறேன். தொழிலாளர் நலத்துறை ஆணையரை இது குறித்து விசாரித்து ஓர் அறிக்கை தருமாறு உத்தரவிட்டிருக்கிறேன்” என பலிவார் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“ குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது சட்டவிரோதமானது; அத்தகைய நபர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்”

ராஜஸ்தான் மாநில சுரங்கத் துறை இணைச் செயலாளர் இக்பால் கான்  மைக்கா சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர் கள் இருப்பது பற்றி அதிகாரிகளுக்குத் தெரியாது என்றும், எனினும் இது குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

“இந்த விஷயத்தை நாங்கள் கவனிப்போம். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

கார் உற்பத்தி, கட்டுமானத் துறை, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் உலகத்தின் மிகப்பெரும் புகழ் பெற்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு  வரும் இந்தக் கனிமமானது சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் திகழ்வதால், சமீப காலத்தில் வெளிர் பழுப்பு நிற, கண்ணைப் பறிக்கும் இந்தக் கனிமம் அதிக அளவில் முன்னுக்கு வந்தது. இந்தச் சுரங்கங்களில் குழந்தைகளின் மரணம் குறித்து இந்தியாவின் இதர அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

Photo: Thomson Reuters Foundation/Nita Bhalla

பள்ளி கல்வி, சுரங்கம் அல்ல

உலகத்தில் மைக்காவை அதிகமாக தோண்டியெடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. எனினும் அதன் ஒட்டுமொத்த உற்பத்தியில் 70 சதவீதம் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தான் வருவதாக மதிப்பிடப்படுகிறது. காடுகள் வளர்ப்பு, மைக்காவிற்கு மாற்றாக அதைவிட விலை மலிவான பொருட்களை கண்டறியப்பட்டது, கடுமையான சட்டங்கள் ஆகியவற்றால்  1980களிலும் 1990களிலும் இந்தச் சுரங்கங்களில் பலவும் கைவிடப்பட்டன.

சட்டப்படி 18 வயதிற்குக் குறைவான வயதுடையவர்கள் சுரங்கங்களிலும், இதர அபாயகரமான தொழில்களிலும் வேலை செய்ய முடியாது. என்றாலும் கடுமையான வறுமையில் வாடும் குடும்பங்கள் தங்கள் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்காக குழந்தைகளையே நம்பியிருக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடபகுதி, பீகாரின் தென் பகுதி, இந்தியாவின் வடமேற்கில் உள்ள ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள மைக்கா சுரங்கங்களில் குழந்தைகள் வேலை செய்து வருவதை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் உள்ள மைக்கா சுரங்கங்களில் 20,000 குழந்தைகள் வரை வேலை செய்து வருவதாக டச்சு நாட்டைச் சேர்ந்த பிரச்சாரக் குழுவான சோமோ மதிப்பிட்டுள்ளது.

சுரங்க அமைச்சகத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஒய்.எஸ். கட்டாரியா மைக்கா சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர் என்பது மிகவும் அபாயகரமான ஒரு பிரச்சனை என்று குறிப்பிட்டார். “ இவ்வாறு குழந்தைகள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

“சட்டவிரோதமான அனைத்து சுரங்கங்களையும் நிறுத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. சட்டபூர்வமான சுரங்கங்களை கண்காணிக்கவும், விண்கலங்களின் உதவியுடன் சட்டவிரோதமான சுரங்கங்களை கண்டறியவும் தேவையான தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்”

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினரான கரியா முண்டா தனது கவலையை தெரிவித்ததோடு, பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலையில் இந்த சட்டவிரோத சுரங்கங்கள் பற்றிய பிரச்சனையை சமாளிப்பதில் உள்ள நெருக்கடியையும் தெரிவித்தார்.

“சட்டவிரோதமான வகையில் சுரங்கங்கள்  செயல்பட்டு வருகின்றன என எனக்குத் தெரியும். என்றாலும் கூட, இந்தப் பகுதிகளில் வேறு மாற்று வழி எதுவும் இல்லாத நிலையில் பல பேரின் வாழ்வாதாரமாக இது இருப்பதையும் நான் அறிவேன்.”  என அவர் தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சனையை சமாளிக்க மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும்”

மைக்கா தொழிலில் நிலவி வரும் கறுப்புச் சந்தை, குழந்தைத் தொழிலாளர் ஆகியவற்றின்மீது தாக்குதல் தொடுக்கவும், இதர தொழில்களில் பயிற்சி அளிக்கவும், கல்விக்கு ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டவிரோதமான சுரங்கங்களுக்கு அனுமதி  வழங்க வேண்டுமென்று இந்தியாவிலுள்ள மாநில அரசுகள் மீது சுரங்க நிறுவனங்களும் செயல்பாட்டாளர்களும் நிர்ப்பந்தம் கொடுத்து வருகின்றன.

இந்த ஆய்வானது சட்டவிரோத சுரங்கங்களைச் சுற்றி நடைபெற்று வரும் உரிமை மீறல்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் சந்திக்கும் அபாயம் ஆகிய இரண்டைப் பற்றிய கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தெற்காசிய பகுதி இயக்குநரான மீனாட்சி கங்குலி குறிப்பிட்டார்.

“ மிக மோசமான வடிவங்களில் வேலை செய்வதற்குப் பதிலாக குழந்தைகளை பள்ளிகளில் வைத்திருப்பதில் ஏற்பட்டுள்ள தோல்விகளை மதிப்பிடுவதோடு, இந்த உரிமை மீறல்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரிப்பதோடு, சட்டவிரோத சுரங்கத் தொழிலை மூடவும் வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

சேவ் த சில்ட்ரன் இந்தியாஸ் அட்வகசி அமைப்பின் இயக்குநர் பிதிஷா பிள்ளை குறிப்பிடுகையில் மைக்கா சுரங்க வேலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமான அளவில் உள்ளனர் என்பதை இத்தகைய அறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில்,  இதற்கான மாற்று ஏற்பாடுகளை உடனடியாக எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

“எந்தவிதமான முன் எச்சரிக்கை நடைமுறைகளும் இன்றி, எவ்வித ஒழுங்குமுறையுமின்றி, பாதுகாப்பையும், தாங்கள் சட்டவிரோதமான வேலைக்கு அமர்த்தும் சிறுவர்களின் நலனையும் பாதிக்கின்ற இந்தச் சுரங்கங்களில்  குழந்தைகள் வேலையில் ஈடுபடுத்தப்படுவதை அரசு சோதனை செய்து உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார். (கூடுதல் செய்தியாளர்: ஜடேந்தர் டாஷ், நிகம் புருஷ்டி; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->