×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைத் தொழிலாளர் மரணங்களை தடுத்து நிறுத்த, சுரங்கங்களை சட்டபூர்வமாக்கி, ‘மைக்கா மாஃபியா’வை நசுக்க ஜார்க்கண்ட் மாநில அரசு உறுதி

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 8 August 2016 14:29 GMT

A girl shows some of the mica flakes she has collected whilst working in a open cast illegal mine in Giridih district in the eastern state of Jharkhand, India, January 22, 2016. REUTERS/Nita Bhalla

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, ஆகஸ்ட் 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -  சட்டவிரோதமான சுரங்கங்களில் நிகழும் குழந்தைத் தொழிலாளர்களின் மரணங்கள் மறைக்கப்பட்டு வருவதை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் ஒரு புலனாய்வு அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஒரு சில மைக்கா சுரங்கங்களை சட்டபூர்வமாக்குவதைத் துவங்குவதன் மூலம், இத்தொழிலில் செயல்பட்டு வரும் ‘மைக்கா மாஃபியா’க்களை ஜார்க்கண்ட் மாநில அரசு நசுக்கவிருக்கிறது என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மைக்கா உற்பத்தி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று மாத கால புலனாய்வில் ஒப்பனைப் பொருட்களையும், கார்களுக்கான வண்ணங்களையும் பளிச்சிடச் செய்யும் மதிப்பு மிக்க இந்தக் கனிமத்தை, சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுப்பதில் கொடி கட்டிப் பறக்கும் கறுப்புச் சந்தையின் விளைவாக, கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறைந்தபட்சம் ஏழு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்தது. 

இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான மைக்கா தொழிலை மட்டுமே தங்கள் வருமானத்திற்கான ஒரே ஆதாரமாகக்  கொண்டுள்ளன.  இதனால் உயிரழந்த சிறுவர்களின் குடும்பங்களும், சட்டவிரோத சுரங்கங்களை நடத்துவோரும் இத்தகைய மரணம் பற்றிய செய்திகள் சட்டவிரோத மைக்கா தொழிலுக்கு முடிவு கட்டிவிடக் கூடும் என்ற அச்சத்தாலேயே இந்த மரணங்கள் பற்றிய தகவலை வெளியிடுவதில்லை.

Blood Mica
Deaths of child workers in India's mica "ghost" mines covered up to keep industry alive
Enter

மைக்கா தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று தமக்குத் தெரியும் என்றாலும், இந்தியாவின் வருடாந்திர மைக்கா உற்பத்தியில் 70 சதவீதத்தை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அறிந்து தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக ஜார்க்கண்ட் மாநில சுரங்கங்களுக்கான செயலாளர் சுனில் குமார் பார்ன்வால் கூறினார்.

2017ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து ஒரு சில சுரங்கங்களை சட்டபூர்வமானவையாக மாற்றவும், ஏழைகளை சுரண்டுவதன் மூலம் இந்த சட்டவிரோதமான தொழிலில் லாபம் ஈட்டிவரும் வியாபாரிகள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், வனப்பகுதிக் காவலர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டணியான உள்ளூர் மாஃபியாக்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை என்ற அணுகுமுறையை மேற்கொள்ள தாம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அது யாராக இருந்தாலும் சரி, அவர்கள் எந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அல்லது எந்தவொரு அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, எந்தவொரு சட்டவிரோதமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டார்கள் எனில், அவர்களை விடமாட்டோம்” என ஞாயிறன்று அளித்த ஒரு பேட்டியில் பார்ன்வால் தெரிவித்தார்.

“இத்துறையை நீங்கள் சட்டபூர்வமான ஒன்றாக மாற்றி விட்டீர்களெனில், சட்டவிரோதமான நடவடிக்கைகளில் விருப்பமுள்ள குழுக்கள் நிச்சயம் பாதிக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கையை நன்றாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  அரசு மேற்கொள்ளும்.”  

கார் உற்பத்தி, கட்டுமானத் துறை, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ’’இயற்கை’’ ஒப்பனை பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும்  இந்தக் கனிமம், சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் திகழ்வதால், வெள்ளி நிறத்தைக் கொண்ட, கண்ணைப் பறிக்கும்படியான இந்தக் கனிமம் சமீபத்தில் சில வருடங்களாக பிரபலமாகியுள்ளது. மைக்கா உற்பத்தி செய்யும் உலகத்தின் பெரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

ஒரு காலத்தில் 700க்கும் மேற்பட்ட சுரங்கங்களைக் கொண்டது என்ற பெருமை பெற்றிருந்த இந்தியாவில், 1980களில் காடுகளை வெட்டுவதைக் கட்டுப்படுத்த  கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டது; இயற்கையான மைக்காவிற்கு மாற்றாக செயற்கை பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டது ஆகியவற்றால் இந்தச்  சுரங்கங்களில் பெரும்பாலானவை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது..

எல்லாமே வெளிப்படையானதாக இருக்கும்

எனினும் மைக்காவின் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா, கிரித் ஆகிய மாவட்டங்களில் உள்ள காடுகளில்  இவ்வாறு மூடப்பட்டு, சிதிலமடைந்து கிடக்கும் நூற்றுக் கணக்கான சுரங்கங்களை  சட்டவிரோதமாக செயல்படுவோர் பயன்படுத்த முனைவதற்கு இது வழிவகுத்தது.

18 வயதிற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள்  சுரங்கங்களிலும், இதர அபாயகரமான தொழில்களிலும் வேலை செய்வதற்கு இந்திய சட்டங்கள் தடை விதிக்கின்றன. எனினும் கடுமையான வறுமையில் வாடும் குடும்பங்கள் தங்கள் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்காக குழந்தைகளையே சார்ந்திருக்கின்றன.

இந்தப் பிரச்சனை மீது உரிய கவனம் செலுத்த, எண்ணற்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும், மாநிலத்தின் மைக்கா சுரங்கத் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றும், இவை வருவாயை அதிகரிக்கும் என்பதோடு, இப்பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளையும் கொண்டுவரும் என்றும், குழந்தைத் தொழிலாளர் முறையை தடுக்க உதவும் என்றும் பார்ன்வால் குறிப்பிட்டார்.

முக்கிய கனிமம் என்பதிலிருந்து சிறு வகை கனிமம் என்பதாக மத்திய அரசு மைக்காவின் நிலையை தரமிறக்கியதன் விளைவாக, மைக்கா சுரங்கங்கள் குறித்த விதிமுறைகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மாற்றப்பட்டன என்றும், இதன் மூலம் சுரங்கங்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் மாநில நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள மைக்கா இருப்பை தீர்மானிக்கவும், இதற்கான பகுதிகளை பிரித்துக் காட்டவும், ஒரு புவியியல் ஆய்வு ஒன்றை நடத்த   ஜார்க்கண்ட்  மாநிலம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுரங்கங்களுக்கான அனுமதியை ஏலம் விடுவது துவங்கி விடும்.

 “ சட்டபூர்வமான குத்தகையை வழங்குவது என்பதில்தான் அரசும் எனது துறையும் கவனம் செலுத்தும். இதன் மூலம் சுரங்கங்களுக்கு தெளிவான உரிமை இருக்கும். அதன் பிறகு இத்தகைய பிரச்சனைகள் தொடராது என்றே நான் கருதுகிறேன்” என ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியிலிருந்து தொலைபேசியின் மூலம் பார்ன்வால் தெரிவித்தார்.

இயந்திர பழுதுபார்க்கும் தொழில் அல்லது கால்நடை வளர்ப்பு போன்ற மாற்று வேலை வாய்ப்புகளை மாநிலம் முழுவதுமுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக, திறன் மேம்பாட்டு மையங்களை அரசு  நிறுவி வருகின்றது என்றும் அவர்  மேலும் குறிப்பிட்டார்.

“இந்தப் பிரச்சனைகள் அனைத்திற்குமே முழுமையானதொரு தீர்வு உள்ளது. அதுதான் இந்த மைக்கா சுரங்கத் தொழிலை நமது சட்டபூர்வமான கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதாகும்” என பார்ன்வால் தெரிவித்தார். இவர் தான் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபார் தாஸின் செயலாளரும் கூட.

மைக்கா சுரங்கங்களில் பலவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அல்லது வனவிலங்கு சரணாலயங்களில் உள்ளன என்பதை ஒப்புக்கொண்ட பார்ன்வால், இந்தப் பகுதிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்பார்வை செய்து வருவதால், இந்தப் பகுதிகளில் சுரங்கங்களுக்கு குத்தகை பெறுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்தார்.

எனினும், இத்தகைய பகுதிகளில் சுரங்க வேலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் குழுவினருக்கு காடுகளுக்கு வெளியே புதிதாக ஏலம் விடப்படும் சுரங்கங்களில் வேலை  கிடைக்கக் கூடும் என்றும், இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் வளர்ச்சி மற்றும் மாற்று வேலைவாய்ப்புகளை கொண்டுவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்:நிதா பல்லா; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->