×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – ஒடிசாவின் “புலம்பெயர் விரைவுவண்டி”யின் முகவர்கள் கடன் அடிமைத்தனத்திற்கு ஒருவழி பயணச்சீட்டை விற்கிறார்கள்

Thursday, 10 November 2016 00:00 GMT

Agents have found ways to bypass the law, pay off officials and keep up the steady supply of cheap labour - an industry worth an estimated $150 billion a year

- அனுராதா நாகராஜ்

காந்தபாஞ்சி, ஒடிசா, நவ. 10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) நிஜாம் கான் ஆட்களை சேர்ப்பதில் மும்முரமாக இருக்கிறார். இந்த இலையுதிர் காலம் முழுவதும் ஒடிசா மாநிலத்தின் கந்தபாஞ்சி நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொழிலாளர்களைத் தேடி சுற்றிக் கொண்டிருந்தார்.

ஏழைக்குடும்பங்கள், வேலையில்லான நபர்கள், ஆர்வத்தோடுள்ள தம்பதிகள் ஆகியோரையே அவர் குறிவைத்துத் தேடிவருகிறார்.  உள்ளூரில் நடைபெறும் அறுவடைத் திருவிழாவிற்கு முன்பாக உணவு, துணிமணிகள் வாங்குவதற்கான பணத்தை அவர் கொடுக்கிறார். இதற்கு பதிலாக அவர்கள் தங்கள் சுதந்திரத்தை அவருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டத்திலுள்ள ரயில்வே வசதியுள்ள ஒரு நகரமான காந்தபாஞ்சியில் அவராகவே உருவாக்கிக் கொண்ட போக்குவரத்து நிறுவனத்தின் அலுவலகத்தில் அமர்ந்தபடி “இங்கே வேலை எதுவுமே இல்லை” என்கிறார் கான்.

“இந்தக் கடனையும் வேலையையும் நாங்கள் வழங்கவில்லையெனில் இந்த மக்கள் பட்டினிதான் கிடக்க வேண்டியிருக்கும்.”

 உரிமைகளுக்கான அமைப்புகள் ‘கடன் – வேலை’ என்று கான் சொல்வதை கடனுக்கான அடிமைத்தனம் என்றுதான் கூறுகின்றன. வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள உலகளாவிய அடிமைத்தனம் குறித்த சமீபத்திய அட்டவணையின்படி, 1 கோடியே 80 லட்சம் பேர் ஏதாவதொரு வகையில் நவீன அடிமைத்தனத்தில் ஆட்பட்டவர்களாக உள்ள ஒரு நாட்டில் மிகவும் பரவலாக இருக்கும் கட்டாய வேலையில் ஈடுபடுபவர்களாக  இவர்கள் உள்ளனர்.

22,000 பேர் வசிக்கும் காந்தபாஞ்சியில் இது மிகவும் பரவலான ஒன்றாக உள்ளது. இங்குள்ள இருவரில் ஒருவர் ‘சர்தார்’ அல்லது தொழிலாளர் முகவராகவே இருக்கிறார்.

“கந்தபாஞ்சியின் செழிப்பான பொருளாதாரம் என்பது வேறொரு வகையில் நிராதரவான, மோசமான நில அமைப்பைக் கொண்ட பலாங்கீர் மாவட்டத்தில் உள்ள பாலைவனச் சோலையைப் போன்றதே ஆகும்” என ஒடிசா மாநிலத்தில் எய்ட் எட் ஆக்‌ஷன் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் புலம்பெயர்வோர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளரான உமி டேனியல் குறிப்பிட்டார்.

“நல்ல ஊதியம் கிடைக்கும் என்ற உறுதிமொழியுடன் அனுப்பப்படும்  புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டுதான் இந்த ரயில்வே சந்திப்பு வளம்பெற்று வருகிறது. ஆனால் அவர்களை வெளிப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் தொழிலாளர் முகவர்கள் மட்டும்தான் இதனால் லாபம் பெறுபவர்களாக இருக்கின்றனர்.”

இந்தியா முழுவதும் வேலையைத் தேடி “வருடாந்திர புலம்பெயர்வு” என்று அழைக்கப்படும் வெகுஜன இயக்கத்தில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் ஒடிசாவின் மேற்குப் பகுதியிலிருந்து தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி வரும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களையே இந்த முகவர்கள் குறிவைக்கின்றனர். இந்த நிகழ்வு இளவேனில் காலத்தில் நடைபெறும் நாற்று நடும் பருவம் வரை தொடர்கிறது.

அவர்கள் ஏற்கனவே வாங்கியதற்காகவோ அல்லது அவ்வாறு கடன் பெற்ற உறவினர் ஒருவருக்காகவோ அந்தக் கடனுக்கான பாதுகாப்புத் தொகையாக இந்த வேலைகளைச் செய்ய முன்வர வேண்டிய நிலையில் உள்ள இவர்களில் பெரும்பாலோர் ஏமாற்றப்பட்டே வருகின்றனர் என உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.  இந்தக் கடனைத் திருப்பித் தருவதற்காக வேலை செய்வதிலேயே அவர்களின் அடுத்த ஆறுமாத காலம் கழிந்து விடுகிறது.

இவர்களில் 90 சதவீதம் பேரைப் பொறுத்தவரையில், இந்தியாவின் கட்டுமானத் தொழிலுக்கு சப்ளை செய்து வரும் செங்கற்சூளைகளில் வேலைசெய்வதற்காக இத்தகைய முகவர்களால் கடத்திச்  செல்லப்படுகின்றனர்.

அதிகாரிகளையும் மீறி நடக்கும் கடத்தல்

பெரும்பாலும் 30 வயது அல்லது  40 வயதுகளின் துவக்கத்தில் உள்ள இந்த முகவர்கள் சட்டத்தை  சுற்றிவளைத்துச் செல்வதற்கான வழிகளையும் கண்டுபிடித்துள்ளதோடு, அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துவிட்டு, மலிவான ஊதியத்திற்குத் தொழிலாளர்களை தொடர்ந்து அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான வகையில் வேலைக்கு சேர்க்கும் இந்தத் தொழிலானது ஆண்டுக்கு 150 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ளதாகும் என்றும் இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சர்தார்களோடு கூடவே கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து கணக்குத் தீர்க்கவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவும் என அடியாட்களும் இருக்கின்றனர்.

இவ்வாறு ஏற்பாடுகளைச் செய்வோர் திருமணத்திற்காக கும்பலாகச் செல்பவர்களைப் போல் கூட்டமாக கடனுக்கு அடிமைப்பட்ட தொழிலாளர்களை அழைத்துச் செல்வது அல்லது குடும்பங்களை சிறுசிறு குழுக்களாக பிரித்து அதிகாரிகளைக் கடந்து அழைத்துச் செல்கின்றனர் என மூத்த காவல் அதிகாரியான அசிஷ் குமார் சிங் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையே தொழிலாளர்கள் செல்வதற்கான சட்டத்தின் கீழ் பாலங்கீர் மாவட்டத்தில் மட்டுமே சட்டபூர்வமாக தொழிலாளர்களை சேர்ப்பதற்கென 2015ஆம் ஆண்டில் சுமார் 230 முகவர்கள் அனுமதி பெற்றிருக்கின்றனர் என அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முகவர்கள் தொழிலாளர்களை பதிவு செய்து 17,988 தொழிலாளர்களை நாடு முழுவதிலுமுள்ள செங்கற்சூளைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு 130 முகவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 13,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே நவம்பர் மாதத்தில் தங்கள் வீடுகளை விட்டு கிளம்ப வேண்டியிருக்கும்.

காந்தபாஞ்சியில் உள்ள செயல்பாட்டாளர்கள், முகவர்கள் தெரிவிக்கும் விவரங்களின்படி உண்மையில் இந்த மாவட்டத்திலிருந்து இவ்வாறு வேலை தேடி ஆண்டுதோறும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையான சுமார் 5,00,000-ஐ ஒப்பிடும்போது இந்த கணக்கு மிகமிகச் சிறியதே ஆகும்.

“அவர்கள் சட்டவிரோதமாகவே வெளியேறுகின்றனர். அதாவது அவர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர் என்பதே அதன் பொருளாகும்.” என மாவட்ட தொழிலாளர் நல அலுவலரான மதன் மோகன் பைக் தெரிவித்தார். “இதைச் சிறப்பாகத் தடுப்பதற்கான வழிவகைகள் எதுவும் எங்களிடம் இல்லை. நீண்ட நாட்களாகவே இப்படித்தான் இருந்து வருகிறது.”

ரூ. 20,000 முன்பணத்துடன்தான் இந்தச் சுரண்டல் துவங்குகிறது. மிக மோசமான வறுமை தாண்டவமாடும் இப்பகுதியில் இது வரவேற்கத்தக்கதொரு தொகையே ஆகும். தொழிலாளர்கள் இந்தக் கடனை ஆறுமாதங்களுக்குப் பின்னர் திருப்பித் தர வேண்டும்.

செங்கற்சூளைகள் பொதுவாக 10,000 செங்கற்களுக்கு ரூ. 300லிருந்து 400 வரை ஊதியமாகத் தருகின்றன.  எனவே இந்தக் கடனை அடைக்க வேண்டுமெனில் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 7,00,000 செங்கற்களை தயாரிக்க வேண்டும்.

தாங்கள் கொடுக்கும் முன்பணத்தை திருப்பிப் பெறுவது மட்டுமின்றி  அனுப்பி வைக்கின்ற ஒவ்வொரு தொழிலாளருக்கும் இந்த முகவர்கள் கமிஷன் பெறுகின்றனர்.  மேலும் இந்தத் தொழிலாளர்கள் தயாரிக்கின்ற ஒவ்வொரு 1,000 செங்கற்களுக்கும் அவர்கள் ரூ. 20/- (30 செண்ட்கள்) கமிஷனாகப் பெறுகின்றனர்.

அவர்கள் வாங்கும் கடன் அல்லது எவ்வளவு கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய எந்தவிதமான ஆவணங்களும் இருப்பதில்லை என்றும் இந்தக் கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

“நான் கிராமத்திலிருந்து வெளியே போவதற்கு முன்பாகவே கிட்டத்தட்ட ரூ. 30,000 கடனாளியாக ஆகிவிட்டேன்” என 17 வயதான உமேஷ் மகானந்த் தெரிவித்தார்.                   “ கடுமையாக உழைத்து, விரைவாகவே இந்தக் கடனை அடைத்துவிடலாம் என்றுதான் நான் நினைத்தேன். இந்தத் தொகையை எந்தவகையிலும் திருப்பிச் செலுத்தவே முடியாது என்று நான் உணரவேயில்லை.”

புதிய சாதாரணமான நிலை

மிகச் சிறந்த செங்கல் தயாரிப்பவர் என்று அறியப்பட்ட தசரத் சுனா என்பவரிலிருந்து 1970களில்தான் இவை அனைத்துமே துவங்கின. மேற்கு ஒடிசாவிலுள்ள மிகவும் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான பாலாங்கீர் மாவட்டத்திலிருந்து  புலம்பெயர்ந்த முதல் ஆள் அவர்தான்.

“நான் நன்றாகவே வேலை செய்வேன். ஒரு நாளைக்கு 6,000 செங்கற்களை தயாரிப்பேன்” என காந்தபாஞ்சியிலிருந்து 50 கிலோமீட்டர் (30 மைல்கள்) தூரத்திலுள்ள பெல்பாடா கிராமத்தில் உள்ள வீட்டில் அமர்ந்தபடி சுனா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“செங்கற்சூளை முதலாளி இதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த முறை வரும்போது நண்பர்களையும் வேலைக்கு அழைத்து வரும்படி கூறினார். அதைத் தான் நான் செய்தேன். மெதுவாக அதுவே ஒரு தொழிலாக மாறிவிட்டது.”

நெல் அறுவடையை விவசாயிகள் கொண்டாடும் வகையில் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும் நுவாகாய்  திருவிழா காலத்தின்போது சிறு சிறு கடன்களை தருவதற்காக சுனா தூரத்தில் உள்ள கிராமங்களுக்கும் சைக்கிளில் பயணம் செய்வதுண்டு.

“நுவாகாய் காலத்தில்  துணிமணிகள் வாங்கவும், நல்ல சாப்பாடு செய்யவும், ஓரளவிற்கு குடிக்கவும், கொண்டாடவும் என  ஒவ்வொருவருக்குமே கொஞ்சம் கூடுதலாகவே பணம் தேவைப்படும்” என்றார் அவர்.

நம்பிக்கையளிக்கும்படியான வேலைவாய்ப்பு என்பது அரிதாக உள்ள, இந்த வறட்சியில் ஆழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறிச் செல்லும்படி அவர் பல குடும்பங்களுக்கு ஊக்கம் அளித்தார்.

“செங்கற்சூளை முதலாளி, முகவர், தொழிலாளி ஆகியவர்களுக்கு இடையேயான நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த தொழிலாளர்களுக்கான சந்தை உருவாகிறது. என்னால் பல குடும்பங்களை இதுகுறித்து நம்பச் செய்யவும் முடிந்தது.” என  80 வயதிற்கு மேற்பட்ட அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கான சந்தை வளர்ந்தபோது, சுனாவின் அதிர்ஷ்டமும் அதிகரித்துக் கொண்டே போனது. காலப்போக்கில் தனது குழந்தைகளுடனும், பேரக் குழந்தைகளுடனும் அவர் இப்போது வசித்து வரும் பெல்பாடாவில் இரண்டடுக்கு  வீட்டையும் கட்டினார்.

அவரது இந்த வெற்றியானது மற்றவர்களையும் தொழிலாளர்களுக்கான முகவர்களாக மாறத் தூண்டுதலாக இருந்தது.

“இந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவருமே இந்த புலம்பெயர்தலில் லாபம் பெற்றனர்” என அவரது மகனும், இப்பகுதியில் புகழ்பெற்ற பாடகருமான ருக்கு சுனா குறிப்பிட்டார்.

“தொழிலாளர்களும்கூட இதனால் பயனடைந்தனர். இப்போது ஒவ்வொரு வீட்டிலுமே மோட்டார் சைக்கிள் இருக்கிறது. தொழிலாளர்களை வெளியே அனுப்பாமல் இது சாத்தியமாகி இருக்காது. உண்மையில் யாருமே இதற்காக குறைப்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை.”

காந்தபாஞ்சியின் சிறுசிறு சந்துகளிலும் கூட சுனாவின் பெயர் மிகுந்த மரியாதையுடன் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் பப்லு கானின் பெயரோ அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிறது.

துவக்கக் காலத்தில் சுனாவின் ஆளாக இருந்த அவரது வேலை தொழிலாளர் நல ஆய்வாளர்கள், ரயில்வே போலீஸ் ஆகியோருக்கு பணம் கொடுத்து ஒதுங்கச் செய்வது, சுனா கண்டெடுத்த தொழிலாளர்கள் ‘புலம்பெயர் விரைவு வண்டி’யில் செல்வதை உறுதி செய்யும் வகையில் இதர முகவர்களுடன் போராடுவது என்பதாகவே இருந்தது.

இது பற்றிய விவரங்களை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டபிறகு. அவர் தன் தொழிலை தனியாக ஆரம்பித்தார்.

வெகுவிரைவிலேயே பப்லு கான் இந்தச் சந்தையில் மிகப்பெரும் நபராக, வேறு எந்த முகவரையும் விட அதிகமான ஆட்களை அனுப்புபவராக மாறியதோடு, காந்தபாஞ்சியில் இருந்து புலம்பெயர்வதற்கான நடைமுறை விதிகளை மாற்றவும் செய்தார்.

 “ இப்போது இந்தச் சந்தை மிகவும் கொடூரமான ஒன்றாக மாறிவிட்டது” என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மறுத்த ஒரு துணை முகவர் கூறினார். “கால்நடைகளைப் போல மக்கள் இழுத்து வரப்பட்டு ரயில் வண்டிகளில் ஏற்றி அனுப்பப்படுகின்றனர்.  இவர்களில் பலரும் இந்தப் பயணத்தைத் தாங்கிக் கொள்வதோடு, செங்கற்சூளைகளில் உள்ள துன்பங்களையும் தாங்கிக் கொள்கின்றனர். வேறு பலரால் அவ்வாறு செய்ய முடிவதில்லை.”

2013ஆம் ஆண்டில் இந்தக் கடன் அடிமைத்தனத்திலிருந்து தப்பித்துப் போக முயற்சித்த இரண்டு தொழிலாளர்களின் கைகளை முகவர்கள் வெட்டியபோது இந்தத் தொழிலின் கொடூரம் உலகம் முழுவதிலும் தலைப்புச் செய்தியாக மாறியது. இது தொடர்பான வழக்கு ஒடிசாவில் உள்ள நீதிமன்றத்தில் இன்னமும் நடந்து வருகிறது.

ரயிலடியிலிருந்து துன்பத்தை நோக்கி

க்வாஜா கரிப் நவாஸ் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மேஜையை மிகவும் சுத்தமாகவே வைத்திருக்கிறார் நிஜாம் கான். ஒரு மூலையில் இரண்டு பிஸ்கெட் டின்களும் அவரது தந்தையின் படமும் இருந்தன.

மொடமொடப்பான வெள்ளைச் சட்டையும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து வந்த அவருக்கு முன்னால் வந்த இரண்டு தடியர்கள் வெளியே ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்த ஐந்தாறு தொழிலாளர்களை அருகிலுள்ள சந்தில் போய் காத்திருக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

உள்ளே போனதும் நிஜாம் கான் தனது தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான அனுமதியையும் அவர் அனுப்பி வைத்த தொழிலாளர்கள் குறித்த பட்டியலையும் எடுத்துக் காட்டினார். எந்தத் தொழிலாளர் எங்கு அனுப்பி வைக்கப்பட்டார்? அவருக்கு வழங்கப்பட்ட முன்பணம் எவ்வளவு? போன்ற விவரங்களையும் அவை தெரிவித்தன.

“1400 தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான அனுமதியை என் தந்தை பெற்றிருந்தார். மிகுந்த கவனத்துடன் நாங்கள் அதை புதுப்பித்து வருகிறோம்.” என்று அவர் குறிப்பிட்டார். “ஒவ்வொருவருமே இப்போது முகவர்களாக மாறியுள்ளனர். ஒவ்வொருவருமே சில நூறு தொழிலாளர்களை அனுப்பி வைத்து வருகின்றனர். இங்கு இதுவே ஒரு வாழ்க்கையாகி விட்டது.”

தங்கள் பெயரை தெரிவிக்க விரும்பாத காவல் அதிகாரிகளோ, அவருக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான தொழிலாளர்களை நிஜாம் கான் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தனர். சட்டபூர்வமாக தனக்கு வழங்கப்பட்ட அளவை விட கூடுதலாக தான் அனுப்பி வைப்பதில்லை என கான் அதை மறுத்துக் கூறினார்.

இவ்வாறு புலம்பெயர்பவர்களிடமிருந்து வரும் தொகையானது இந்தப் பகுதியின் பொருளாதாரத்தின் 50 சதவீதமாக உள்ளது என காந்தபாஞ்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான ஹாஜி முகம்மத் அயூப் கான்  தெரிவித்தார்.  அவரது சகோதரர் நகரத்தின் மிகப்பெரும் தொழிலாளர் முகவர்களில் ஒருவராகும்.

“அரசின் திட்டங்கள் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களைச் சென்றடைவதில்லை. எனவே வேறெந்த வழியும் இல்லாதவர்களாக இது அவர்களை மாற்றுகிறது. இந்த புலம்பெயர்வு மட்டும் நிறுத்தப்பட்டால் மக்கள் குற்றங்களில் ஈடுபடத் துவங்கி விடுவார்கள். உயிரோடு இருப்பதற்காக அவர்கள் திருடவும் செய்வார்கள்.”

இந்தச் செயல்முறை மேலும் சிறப்பாகச் செயல்படும்வகையில் காந்தபாஞ்சியிலிருந்து செல்லும் ரயில் வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி அவர் ரயில்வே அமைச்சகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதியான கானின் சகோதரரும், தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் முகவருமான ஹரூன் கான் காந்தபாஞ்சி ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வருபவைகளை உற்றுக் கவனித்து வருபவராக இருக்கிறார்.

தனது அலுவலகத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர் “அழிந்து கொண்டு வரும் தொழில்” பற்றி பேசுவதற்கு மறுத்ததோடு, தான் அதை விட்டுவிட்டதாகவும் கூறினார்.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே , ருசியான  தேநீர் கோப்பைகளுக்கு நடுவே உரையாடியபோது, “அந்த நகரத்திற்கு வியாபாரம் வரும் ஒளிமயமான நாட்களை ” பற்றி அவர் பேசினார்.

“இங்கிருக்கும் ஹோட்டல்கள் அனைத்தும் நிரம்பியிருக்கும். செங்கற்சூளை முதலாளிகள் பணக்கட்டுகள் நிரம்பிய பெரிய பெரிய சூட்கேஸ்களை தொழிலாளர்களுக்கு முன்பணமாக வழங்குவதற்காக  எங்களிடம் கொடுப்பார்கள்.” என இருட்டிக் கொண்டே போன அந்த நேரத்தில் அவர் குறிப்பிட்டார். “ அந்த நேரத்தில் இந்த இடம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: டிமோதி லார்ஜ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->