×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – இந்தியாவிலுள்ள பாலியல் தொழில் மையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்டு ஆலோசனை பெற விழைகிறார்கள்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 17 November 2016 13:56 GMT

Women packaging disinfectant used to mop floors at the Gandlapenta vocational training centre run by the Rural Development Trust in Andhra Pradesh, India, November 2, 2016. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

Image Caption and Rights Information

காதிரி, (ஆந்திரா), நவ. 17 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றிலுள்ள ஆலோசனை மையத்தில் பளிச்சிடும் இளஞ்சிவப்பு நிற சேலையணிந்திருந்த அந்தப் பெண் உற்சாகத்துடன் தனது உரையாடலை துவக்குகிறார். ஆனால் பேசத் துவங்கிய பத்து நிமிடத்திற்குள்ளேயே அவரது பேச்சு அழுகையாக மாறுகிறது.

“ஒரு பாலியல் தொழில் மையத்திலிருந்து நான் தப்பித்து பத்தாண்டுகளுக்கு முன்னால் வீட்டிற்கு திரும்பி வந்தேன். இருந்தாலும் நேற்றுதான் திரும்பி வந்ததுபோலவே எனக்குத் தோன்றுகிறது” என ஆலோசகரான சகுந்தலா பயல்லாவிடம் கூறுகிறார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்பட்ட அந்த 40 வயது பெண்மணி.

“கடந்த காலத்தைப் பற்றி நினைக்கவும் கூட நான் விரும்பவில்லை. என்றாலும் திரும்பி வந்தது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. என் பெற்றோர்களும் கூட நான் ஏன் திரும்பி வந்தேன் என்றுதான் கேட்டார்கள்.”

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் காதிரி என்ற சிறு நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் மும்பை, புதுதில்லி, பூனே போன்ற பெரிய நகரங்களில் உள்ள பாலியல் தொழில் மையங்களுக்கு இவ்வாறு கடத்தப்படும்  ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவரான அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

இதற்காகவே சுற்றிக் கொண்டிருக்கும் கடத்தல் குழுக்களும், முகவர்களும் கிராமப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுமிகளின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு முன்பு, வேறு இதர நகரங்களில் நல்ல வருமானம் தருகின்ற வேலை வாங்கித் தருவதாக உறுதிமொழி தருகின்றனர் என செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அல்லது  தப்பித்து வீட்டுக்குத் திரும்பி வந்தவர்கள் தங்கள் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, நிகழ்காலத்தை எதிர்கொள்ள புதியதொரு போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.

கண்ட்லபெண்டா கிராமத்தில் ஆலோசகர் பயல்லா மட்டுமே அவர்களின் ஒரே நண்பராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார்.

“இவர்களில் பலரும் அவர்களது பெற்றோர்களாலேயே  விற்கப்பட்டவர்கள் என்பதோடு, இவ்வாறு கடத்தப்பட்ட பெண்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பணத்தை வைத்தே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்” எனவும் பயல்லா தெரிவித்தார்.

“அவர்கள் திரும்பி வரும்போது  தங்கள் தாயாலும் தந்தையாலும் நிராகரிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். அதுவே அவர்களை நம்பிக்கையற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. வாழ்வதற்கான விருப்பத்தையும் அவர்கள் இழந்து நிற்கின்றனர்.”

ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் வெளியிட்ட 2016ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணையின்படி, உலகம் முழுவதிலும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 4கோடியே 58 லட்சம் அடிமைகளில் 40 சதவீதம் பேர் இந்தியாவில் மட்டுமே இருக்கிறார்கள்.

தேசிய குற்றங்கள் குறித்த பதிவுகள் நிலையம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி 2014ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும், ஆட்களை கடத்துவதற்கும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் காணாத, ஆட்கடத்தலுக்கு எதிரான  சட்டங்களின் கீழ், கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கிட்டத்தட்ட 5,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எளிதான இலக்குகள்

கடற்கரையோர மாநிலமும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்படும் மாநிலமுமான ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமான ஆட்கடத்தலுக்கு ஆளாகும் பகுதியாக சித்தூர், கடப்பா, அனந்தபூர் மாவட்டங்கள் ஒன்று சேரும்பகுதியாக இருக்கும் காதிரி உள்ளது என சமீபத்திய அரசு ஆய்வு கண்டறிந்துள்ளது.

“குறிப்பாக லம்பாடா பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்தகைய ஆட்கடத்தலுக்கு அதிகமாக ஆளாகின்றனர்” என மாவட்டத்தின் மூத்த அலுவலரான கோனா சசிதர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“இந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மிக அழகாக இருப்பதோடு, மிகவும் ஏழ்மை நிலையிலும் உள்ளனர். எனவே ஆட்கடத்தலில்  ஈடுபடும் முகவர்களுக்கு இவர்கள் மிகவும் எளிதான இலக்குகளாக மாறுகின்றனர். இதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கியுள்ளோம்.”

வறுமையின் காரணமாகவும், இத்தகைய ஆட்கடத்தல் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதிகளில் நிலவும் வறட்சியாலும் கிட்டத்தட்ட 6,200 பெண்கள் இத்தகைய  ‘ஆட்கடத்தலுக்கு இரையாகும் வாய்ப்புள்ளவர்கள்’ என அனந்தபூர் மாவட்ட அலுவலர்கள் 2016ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

மும்பை நகருக்கு கடத்திச் செல்லப்பட்டபோது தன் கைக்குழந்தையை தாயிடம் விட்டு விட்டுச் சென்ற இளஞ்சிவப்பு சேலையணிந்த அந்தப் பெண்ணும் இத்தகைய பெண்களில் ஒருவராவார்.

தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்த ஒரு பெண் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, அதற்கு மாறாக மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுராவில் இருந்த பாலியல் தொழில் மையம் ஒன்றில் தன்னை விற்றுவிட்டதாக, வழியும் கண்ணீரை துடைத்தபடி அந்தப் பெண் பயல்லாவிடம் கூறினார்.

அந்த பாலியல் தொழில் மையத்தை நடத்தி வந்த ‘மேடம்’ பற்றியும், முதல்முறையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பற்றியும், தன் உடைகளின் இடைவெளிகளில் ஒரு சில ரூபாய்களை எப்படி ஒளித்து வைக்க முடிந்தது என்பது பற்றியும் மிக விரிவாகவே அந்தப் பெண் விவரித்தார்.

எனினும் தன் குடும்பத்தைப் பற்றி பேசத் துவங்கியபோதுதான் அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் துவங்கியது.

ஆறுதல் கூறும் வகையில் பயல்லா அவரது கைகளைப் பிடித்து கொண்டபோது அவர் சொன்னார். “ அவர்கள் மிகவும் ஏழைகள். நான் அனுப்பி வந்த பணத்தைக் கொண்டுதான் வாழ்ந்து வந்தனர். ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றாலும் அவர்களை இப்போதும் நான் பாதுகாத்தே வருகிறேன்.”

 “கெடுக்கப்பட்ட பெண்கள்”

“அறியாப் பருவத்தினராக வீட்டைவிட்டுச் சென்று முற்றிலும் மாறுபட்டவர்களாகத் திரும்பி வந்த” பெண்களின் துயரக் கதைகளை கடந்த 10 வருடங்களாக இந்த ஆலோசகர் கேட்டுக் கொண்டு வருகிறார்.

“அவர்கள் திடீரென்று நவீனமானவர்களாக, கெடுக்கப்பட்ட பெண்களாக, எங்கேயும் ஒளிந்து கொள்ள முடியாதவர்களாக” அவர்கள் காணத் துவங்குகின்றனர் என்றார் பயல்லா.

“போடும் நகப் பூச்சு, தலை அலங்காரம், உடைகள், நகரத்திற்கேயுரிய நாகரீகமான பேச்சு முறை ஆகியவை இவர்களை மிக எளிதாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. கோபத்துடனும், விரக்தியுடனும், குற்ற உணர்ச்சியுடனும்தான் அவர்கள் இந்த மையங்களுக்கு வருகிறார்கள். கடந்த பல வருடங்களாகவே அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இதில் எதுவுமே மாறவில்லை என்பதையும் நான் பார்க்கிறேன்.”

அதன்பிறகு, ஒரு 28 வயது பெண் ஆலோசனை மையத்திலிருந்த பயல்லாவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, சொந்த வீடு ஒன்றைப் பெறுவதற்கு தனக்கு உதவி செய்யுமாறு கோருகிறார்.  உயிரை விட்டுவிடலாம் என்று நினைத்ததாகவும்  அந்தப் பெண் சொன்னார்.

பயல்லா மென்மையாக அவரைக் கண்டித்தார்.

“எல்லாவற்றிற்காகவும் எல்லோருடனும் நாம் போராட வேண்டியிருக்கிறது. இது சாதாரணமான ஒன்றுதான்” என்று அவர் கூறினார்.

பயல்லாவின் இந்த ஆலோசனை மையம், கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை என்ற லாப நோக்கற்ற அமைப்பு நடத்தி வரும் ஆறு மையங்களில் ஒன்றாகும். ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரை 600க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மையங்களில் உதவி கோரி வந்துள்ளனர். இவர்களில் பலரும் ஆட்கடத்தலுக்கு, குடும்ப ரீதியான கொடுமைகளுக்கு ஆளானவர்கள் ஆவர்.

2004ஆம் ஆண்டில் அதிகமான அளவில் வெளியூர்களுக்குச் செல்பவர்களைக் கொண்டதாக கண்டறியப்பட்ட 124 கிராமங்களுக்கு பயல்லா குழுக்களை அனுப்பி வைக்கிறார். இவ்வாறு ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி, வெளியே செல்வதற்கு தயாராக உள்ளவர்களையும் இந்தக் குழுக்கள் தேடிச் செல்கின்றன.

பெண்களுக்கு ஒரு கைத்திறனை கற்றுக் கொடுத்து விட்டால் அதைக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை நட்த்துவதற்கான வருமானத்தை திரட்ட முடியும்; இதன் மூலம் இத்தகைய ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு இரையாவதும் அரிதாகி விடும் என்ற அடிப்படையிலேயே கண்ட்லபெண்டாவில் உள்ள இந்த மையம் கைத்தொழில் பயிற்சியையும் அளித்து வருகிறது.

“இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதென்பது பெரிதும் கவலைதரும்  ஒன்றாகவே உள்ளது. இந்தப் பெண்களுக்காகவே கிராமங்களில் சிறிய சுய-உதவிக் குழுக்களை உருவாக்கும் வேலைகளில் நாங்கள் இறங்கியுள்ளோம்” என சசிதர் குறிப்பிட்டார்.

“அவர்களுக்கு வங்கி வசதியும் ஏற்படுத்தித் தரப்படுகிறது. மென் திறன்  பயிற்சியும் விரைவில் தொடரும்.”

பயல்லாவிடம் செல்லும் பெண்களில் பலரும் இத்தகைய கைத்தொழில் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு சானிட்டரி பேட்கள், ஊதுவத்தி, நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கும், தையல் தொழிலிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்தகைய பயிற்சி பெற்றபிறகும் கூட ஒரு சிலர் அங்கேயே இருந்து இந்த இல்லங்களை நடத்துவதற்கென  மாதச்சம்பளமும் பெறுகின்றனர்.

ஒரு கைத்தொழிலை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு பற்றியும், அதை வைத்து வேலை செய்வது பற்றியும் பயல்லா அந்த 28 வயது பெண்ணிடம் எடுத்துக் கூறுகிறார்.  அவரும் ஆர்வத்துடன் தலையாட்டுகிறார்.

“மனவலுவுடன் இருக்கவே நான் முயற்சி செய்கிறேன். ஏனென்றால் ஒரு பெண் குழந்தையை நான் வளர்த்து ஆளாக்க வேண்டியுள்ளது.” என்று அவர் பயல்லாவிடம் சொன்னார்.

“இது மிகவும் கடினமானதுதான். என்றாலும் உங்களை சந்திப்பதையே நான் மிகவும் எதிர்பார்த்திருந்திருந்தேன். என் உணர்வுகளை  உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வலியில் கொஞ்சம் இப்போதுகுறைந்து விட்டது.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: க்ளிலியா ஓஸியல் மற்றும் கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->