×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

எல்லைப்பகுதி வழியாக ஆட்கடத்தலை நடத்தி வரும் கும்பலை ஏமாற்றி கண்டு பிடிக்க உதவிய இந்திய சிறுமிகள் விருது பெறுகின்றனர்

Monday, 16 January 2017 17:15 GMT

A young girl sells balloons by the Yamuna River in Delhi, India, September 15, 2016. REUTERS/Cathal McNaughton

Image Caption and Rights Information

டார்ஜிலிங், ஜன. 16 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணாமல் போன சிறுமிகள் பற்றிய வழக்குகளில் சந்தேகத்திற்கு ஆளாகியிருந்தவர்களை கைது செய்ய உதவும் வகையில், எல்லைப் பகுதிகள் வழியாக ஆட்கடத்தலை நடத்திக் கொண்டு வந்த கும்பலை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவியதற்காக இந்தியச் சிறுமிகள் இருவர் அடுத்த வாரம் வீரதீர துணிச்சலுக்கான தேசிய விருதைப் பெறவிருக்கின்றனர்.

17வயதுடைய ஷிவானி கோண்ட், 18 வயதுடைய தேஜஸ்வீதா பிரதான் ஆகிய இருவரும் இத்தகைய ஆட்கடத்தல்காரர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை காவல்துறை கையும் களவுமாகப் பிடிக்கும் வகையில் உளவாளிகளாக செயல்படுவதில் “மகத்தான துணிவை” வெளிப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட உள்ளனர்.

மலைப்பகுதி மாவட்டமான டார்ஜிலிங்-கைச் சேர்ந்த இந்த இரண்டு சிறுமிகளும் 2016 மே மாதத்தில் முகநூல் மூலம் இந்த ஆட்கடத்தல்காரர்களுடன் நட்பை உருவாக்கிக் கொண்டனர்.

அதன்பிறகு இந்தச் சிறுமிகள், ஆட்கடத்தல்காரர்கள் போலீசில் சிக்குவதற்கு முன்பாக, அவர்களுடன் தொலைபேசி மூலமாக நாட்கணக்கில் பேசிக் கொண்டு வந்தனர்.  தாங்கள் வீட்டிலிருந்து ஓடிவருவதற்குத் தயாராக இருப்பதாக இந்த ஆட்கடத்தல்காரர்களை அவர்கள் நம்ப வைத்தனர்.

அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2015ஆம் ஆண்டில் இவ்வாறு ‘கைப்பற்றப்பட்ட’ இளம் வயது சிறுமிகளின் எண்ணிக்கை 52.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதோடு, இத்தகைய சிறுமிகளை விற்பனை செய்வதும் 35.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் தொழிலிலோ அல்லது வீடுகளில் அடிமையாகவோ கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் சிறுமிகளை ஆட்கடத்தல்காரர்கள் கவர்ந்திழுக்கும் மாநிலங்களில் மேல்மட்டத்தில் உள்ள மூன்று மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் திகழ்கிறது.

இத்தகைய ஆட்கடத்தல்காரர்கள் கோண்ட், பிரதான் ஆகிய இரண்டு பள்ளிச் சிறுமிகளையும் இவ்வாறு கவர்ந்திழுக்கவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் காவல்துறையும் மேன் கைண்ட் இன் ஆக்‌ஷன் ஃபார் ரூரல் க்ரோத் என்ற லாபநோக்கற்ற அமைப்பும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அவர்கள் செயல்பட்டனர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

“நாங்கள் அவர்களிடம் பேசும்போது, எங்கள் விருந்தினர்களின் பாலியல் தேவைகளை நாங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கும் என அவர்கள் வெளிப்படையாகவே எங்களிடம் கூறினார்கள்” என்று கோண்ட் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“நாங்கள் அழகாக இருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் எங்கள் புகைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டார்கள். நான் கொஞ்சம் பயந்துதான் போனேன். என்றாலும் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்கள் கேட்ட அனைத்தையும் செய்தோம்.”

6 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 25 சிறுவர்-சிறுமிகளுக்கு ஆண்டுதோறும் வீர தீரச் செயலுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இந்த விருதைப் பெறுவதற்காகத் தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு பதக்கமும், சான்றிதழும், பணமுடிப்பும் வழங்கப்படும். இவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இதுவரை இத்தகைய விருதுகளை கொள்ளைகளைத் தடுப்பது, ஆயுதம் தாங்கிய திருடர்களை எதிர்த்துப் போராடுவது, நீரில் மூழ்கிக் கொண்டிருப்போரைக் காப்பாற்றுவது, பெரும் கூட்ட நெரிசலில் உயிரிழக்க வாய்ப்புள்ளவர்களைக் காப்பாற்றுவது, தீயை அணைப்பது போன்ற துணிகரச் செயல்களுக்காக சிறுவர்களும் சிறுமிகளும் பெற்று வந்தனர். ஆட்கடத்தல் வழக்கில் உதவி செய்ததற்காக விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளில் தங்கள் குழந்தைகள் ஈடுபடுவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை.

“நானும் கூட முதலில் தயங்கத்தான் செய்தேன். என்றாலும் இத்தகைய ஆட்கடத்தல்காரர்களைப் பிடிக்க இதுதான் நமக்குள்ள ஒரே வழி என்பதை நான் உணர்ந்தேன்” என பிரதானின் தாயாரும் பள்ளி ஆசிரியருமான கமலேஷ் ராய் கூறினார்.

சிறுமிகளை கொண்டு வருவதற்காக நியூ ஜல்பைகுரிக்கு பயணம் மேற்கொண்ட ஒரு பெண்ணை கைது செய்ததன் மூலம் காவல் துறைக்கு முதலில் இந்த வழக்கில் தங்கள் முதல் சிக்கலை அவிழ்க்க முடிந்தது.

அந்தப் பெண் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாளத்தில் காணாமல் போன ஒரு பெண்ணை காவல் துறையால் கண்டுபிடிக்க முடிந்ததோடு, இத்தகைய ஆட்கடத்தல்  கும்பல் ஒன்றையும், புதுதில்லியில் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரையும் இதன் மூலம் கண்டுபிடிக்கவும் முடிந்தது.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->