×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தென்னிந்தியாவில் அதிரடியாக 200க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை தொடர்கிறது

Tuesday, 17 January 2017 20:48 GMT

மும்பை, ஜன. 17 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக தென்னிந்தியாவின் ஹைதராபாத் நகரில் உள்ள வளையல் உற்பத்தித் தொழிற்சாலைகளிலிருந்து கிட்டத்தட்ட 200 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் சிலர் எட்டே வயதுடையவர்களாகவும் இருந்தனர். இந்த மாத இறுதிவரையில் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என காவல் துறையினர் செவ்வாயன்று தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவர்களில் பெரும்பகுதியினர் 8 முதல் 14 வயது வரையானவர்களாக, பீகார், மேற்கு வங்கம், அசாம் போன்ற கிழக்கு ஏழை மாநிலங்களிலிருந்து வந்தவர்களாக இருந்தனர் என குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் காணாமல் போன சிறுவர்கள் ஆகிய பிரச்சனைகளை கையாளுவதற்கான தேசிய இயக்கமான ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“முதலாளிகளுக்கும் ஆட்கடத்தல்காரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என இந்த மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வந்த ஹைதராபாத் கூடுதல் கமிஷனர் ஸ்வாதி லக்ரா கூறினார்.

“பெரும்பாலான நேரங்களில் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கின்றனர். இதுவே ஆட்கடத்தல்காரர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விடுகிறது”.

இந்த மாதத் துவக்கத்தில் தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாதிலிருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்) தூரத்திலிருந்த செங்கற்சூளை ஒன்றிலிருந்து சுமார் 200 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் 14 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்களாவர்.

தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றுக்கான மையமாக மாறியுள்ளன என்று இவற்றுக்கெதிரான செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் காவல் துறை மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்கான அறக்கட்டளைகள் ஆகியவை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வரும் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக மீட்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைத்துள்ளன.

”2015ஆம் ஆண்டு முதல் ஹைதராபாதிலிருந்து மட்டுமே 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நடவடிக்கையிலுமே இந்த எண்ணிக்கை படிப்படியாகக்  குறைந்து கொண்டே வருகிறது” என ஹைதராபாத் மாவட்ட சிறுவர்கள் பாதுகாப்பு அலுவலர் முகமது இம்தியாஸ் ரஹீம் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் உள்ள 16 கோடியே 80 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களில் ஐந்து வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட இந்திய குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 57 லட்சம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவிக்கிறது.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்திலும், கால் பகுதியினர் உற்பத்தித் துறையிலும் வேலை செய்கின்றனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவிக்கிறது.

அவர்களின் மெல்லிய விரல்கள், கூர்மையான பார்வை ஆகியவற்றுக்காகவே ஹைதராபாத் நகரில் வளையல் தொழிற்சாலைகள் குழந்தைகளை வேலைக்கமர்த்த விரும்புகின்றன.  சிறப்புமிக்க வரலாற்றுச் சின்னமான சார்மினாருக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான, அரக்கினால் செய்யப்படும் வளையல்கள் மீது பளபளக்கும் சிறு கற்களை திறமையாகப் பொருத்துவதில் அவர்கள் வல்லவர்களாக உள்ளனர்.

“இத்தகைய வளையல் தொழிற்சாலைகள் பெரும்பாலும் செயல்பட்டு வரும் பழைய நகரப் பகுதியிலிருந்தே இந்தச்  சிறுவர்களில் பலரும் விடுவிக்கப்பட்டனர். அறைகலன்களை விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றிலும் சிறுவர்கள் வேலை செய்து வந்ததையும் நாங்கள் கண்டோம்” என லக்ரா கூறினார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது பாதுகாப்பு இல்லம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர். சொந்த மாநிலங்களில் உள்ள அவர்களுடைய குடும்பங்களுக்கு அவர்கள் திரும்ப அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட, 6 முதல் 14 வயதுடைய சிறுவர்கள், ஹைதராபாத் வளையல் தொழிற்சாலைகளிலிருந்து மீட்கப்பட்டனர்.  ஜன்னல் வசதி ஏதுமற்ற சிறிய அறைகளில் அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதால் மூச்சுத் தொடர்பான நோய்களுக்கு ஆளாவதாக இந்தச் சிறுவர்கள் புகார் செய்ததாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->