×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – எக்ஸ்ரேக்களும் பாலியல் மையங்களில் கண்காணிப்பு ஏற்பாடுகளும் கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலுக்கான ஆட்கடத்தலை கட்டுப்படுத்தியுள்ளது

Sunday, 29 January 2017 06:00 GMT

A destitute girl locks a door at a school's anti-trafficking unit run by a Non-Governmental Organisation (NGO) in the eastern Indian city of Kolkata in this 2007 archive photo. REUTERS/Parth Sanyal

Image Caption and Rights Information

கொல்கத்தா, ஜன. 29 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கொல்கத்தாவில் உள்ள தெற்காசியாவின் மிகப்பெரும் சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகாச்சியின் நுழைவுப் பகுதியில் பழமையானதொரு கட்டிடத்தின் முதல் மாடியில் பாலியல் தொழிலாளிகளின் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கூட்டம் மிக மும்முரமாக நடைபெற்றது. குடும்ப விவரங்கள், முகவரி, கல்வித் தகுதி, இதற்கு முன் செய்த வேலை போன்ற அனைத்து விவரங்களையும் கொண்ட முழுமையான படிவம் நிரப்பப்பட்ட பிறகு, ‘அந்தப் பகுதியின் புதுப் பெண்’ அவரது வயதை உறுதிப்படுத்துவதற்காக எக்ஸ்ரே எடுத்து ஆய்வு செய்வதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்.

“இங்கே வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட அவள் 18 வயது நிரம்பியவளாக இருக்க வேண்டும்” என பாலியல் தொழிலாளிகளின் சுய ஒழுங்கமைப்பு குழுவின் ஓர் உறுப்பினரான கீதா கோஷ் நிபந்தனைகள் அடங்கிய புத்தகத்திலிருந்து படித்துக் காட்டுகிறார்.

“எந்தவிதமான வற்புறுத்தலோ, வலுக்கட்டாயமோ இல்லை என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் எவ்வித சந்தேகமும் ஏற்பட்டாலும் நாங்கள் அவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவோம்.”

இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலமான மேற்கு வங்கத்தின் கிராமப்புறப் பகுதிகள், நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றிலிருந்து சிறுமிகளை கடத்தி வருவதை நிறுத்துவதற்காக பத்து வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுவின் புதிய உறுப்பினர்தான் கோஷ்.

2007ஆம் ஆண்டில் தர்பார் மஹிளா சமன்வய் கமிட்டி என்ற லாப நோக்கற்ற குழுவினால் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவைப் போல் இன்று மாநிலம் முழுவதும் இது போன்ற 33 குழுக்கள் செயல்படுகின்றன.

பாலியல் தொழிலுக்குப் புதிதாக வரும் பெண்களை வடிகட்டும் அவர்களின் முயற்சிகளின் விளைவாக இவ்வாறு கடத்தி வரப்பட்ட  ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட வழிவகுத்தது.

1992க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் சோனாகாச்சி பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சிறுவயதுடையவர்களின் சதவீதம் 25 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்துள்ளது என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

 “சோனாகாச்சி பகுதியிலோ அல்லது மாநிலத்தின் வேறு எந்தப் பகுதியிலும் சிறுவயதுடையவர்களையோ அல்லது இத்தொழிலில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்களையோ பார்ப்பது இன்று மிகவும் கடினம் “என கொல்கத்தாவில் ஆட்கடத்தலுக்கு எதிரான பிரிவின் தலைவரான காவல் துறை அதிகாரி சர்பாரி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

 “ சிறுமிகள் கடத்தப்பட்டு வருகிறார்கள். என்றாலும் பாலியல் தொழிலாளிகளின் கண்காணிப்பின் விளைவாக பாலியல் தொழில் மையங்களுக்கு அல்ல. இப்போது எங்கள் செயல்பாடுகள் குடியிருப்புப் பகுதிகள், தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கு மாறியுள்ளது.”

பாலியல் தொழில் மையங்களில் கண்காணிப்பு ஏற்பாடுகள்

இந்தியாவில் பாலியல் ரீதியான ஆட்கடத்தலுக்கு இரையானவர்களின் எண்ணிக்கை 30 முதல் 90 லட்சம் வரை இருக்கும் என பிரச்சாரகர்கள் மதிப்பிடுகின்றனர். எனினும் இவர்களில் பலரும்  தாங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவோம் என்ற அச்சத்தினாலும், அவர்களைக் கடத்தி வருபவர்களால் நிகழ்த்தப்படும் கொடுமைகளாலும், அல்லது காவல்துறை அவர்களின் நிலையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததன் விளைவாகவும் இது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க முன்வருவதில்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலரும் வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டி கவர்ந்து வந்து பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபட விற்கப்படுகின்றனர்.

“ வீட்டு வேலைக்காரியாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தே பதின்பருவத்தில் இருந்த என்னை இங்கே அழைத்து வந்தார்கள்” என கமிட்டி உறுப்பினரான  மம்தா நந்தி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“இந்தப் பகுதியில் உள்ள சந்துகளில் விருப்பமின்றி நுழையும் எந்தவொருவரையும் என்னால் உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். இங்கே சிக்கிக் கொள்வது எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தும் என்பதை நான் நன்றாக அறிவேன். என் விருப்பத்திற்கு மாறாக என்னை இங்கே கொண்டு வந்தபோது யாருமே என்னோடு பேசவில்லை. ஆனால் 14 வயது சிறுமி இங்கே சுரண்டலுக்கு ஆளாவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நான் நான் மற்றவர்களிடம்  பேசி வருகிறேன்.”

இங்குள்ள பாலியல் மையங்களில் வசித்து, தொழில் செய்து வரும் கண்காணிப்புக் குழுக்களின் ஒரு பகுதியாகவே கோஷ், நந்தி ஆகியோர் உள்ளனர்.

அவர்களது கண்காணிப்பு வேலை நாள் முழுவதும் நடைபெறுகிறது. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இருந்து செயல்படும் பாலியல் தொழில் மையங்களில் புதிய பெண்கள் வந்திருக்கிறார்களா? என்பதை அறிவதற்காக  தினமும் பத்து-பன்னிரண்டு மையங்களுக்குச் சென்று வரும் பொறுப்பு இக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

சோனாகாச்சியில் வாழ்க்கை

ஜனவரி மாத குளிர்காலத்தின் காலை வேளையில் சோனாகாச்சியைச் சேர்ந்த ஒரு சில பெண்கள் தங்கள் இடங்களிலிருந்து வெளியே வந்து சூரிய ஒளியில் காய்கிறார்கள். இருளடைந்த உட்பகுதியும், பாத்திரங்களும் சுத்தம் செய்யப்படும் அதே நேரத்தில், மலைமலையாக துணிகள் துவைக்கப்படுகின்றன; உணவு சமைக்கப்படுகிறது.

இத்தகைய தருணங்களில்தான் கோஷ், நந்தி ஆகியோர் பாலியல் தொழில் மையங்களை நடத்தி வரும் உரிமையாளர்களிடம் நட்புறவோடு உரையாடுகின்றனர். ஜோக்குகளையும், கிசுகிசுக்களையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு அவர்கள் புறப்படும்போது, புதிதாக வந்துள்ள பெண்களை குழுவினால் சோதிக்கப்படுவதற்காக அனுப்பி வைக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டி விட்டே செல்கிறார்கள்.

சூரியன் மறையும் நேரத்தில் இந்த வீதிகள் உயிர் பெறுகின்றன. பேசுவதற்கு இப்போது நேரமில்லை. பெண்கள் தங்கள் உதட்டுச் சாயத்தை மேலும் அழுத்தமாக பூசிக் கொண்டு, கல்லூரி மாணவர்களின் கூட்டம், வேலைக்காக இடம் மாறி வந்து தங்கியிருப்பவர்கள், மிகவும் அரிதாக வர்த்தகர்கள் அல்லது அந்த இடத்திற்குப் பொருந்தாத வகையில் டை அணிந்த கனவான் என்று வரும் தங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க உடைகளை உடுத்திக் கொள்கின்றனர்.

கண்காணிப்பில் ஈடுபடும் பெண்கள் இப்போது தங்கள் செயல்முறையை மாற்றிக் கொண்டு, குறுகிய சந்துகளில் அமைதியாக நடந்து செல்கின்றனர். புதிதாக வருபவர்கள் மீது ஒரு கண் வைத்தபடியே நடக்கும் அவர்கள் அவ்வப்போது நின்று அங்குள்ள இடைத்தரகர்களிடமும் சோனாகாச்சியின் விதிமுறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சற்றே உரையாடுகிறார்கள்.

இந்த ஒழுங்கமைப்புக் குழுவின் புள்ளிவிவரங்களின்படி ஒவ்வொரு மாதமும் சோனாகாச்சி பகுதிக்கு 35 புதிய பெண்கள் வரை வந்து சேர்கின்றனர்.

இதில் ஒவ்வொரு பெண்ணும் குறுகிய கால தங்குமிடத்தில்  மூன்று நாட்களுக்குத் தங்க வைக்கப்படுகின்றனர். அவரைப் பற்றிய விவரங்கள், அவர் பாலியல் தொழில் மையத்திற்கு வருவதற்கான காரணங்கள் ஆகியவை இந்த நேரத்தில் விசாரிக்கப்படுகின்றன.

அவரது வயதை மதிப்பிடுவதற்காக முன்கை, முழங்கை, இடுப்புப் பகுதி ஆகியவற்றின் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகின்றன என்று குறிப்பிடும் கோஷ், தாங்கள் 18 வயத்திற்கு மேற்பட்டவர்கள் என்று காட்டும் போலி ஆவணங்களையும் பலர் எடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

“இந்த ஏற்பாடு துவங்கி பத்தாண்டுகளுக்குப் பிறகு பார்க்கும்போது, இத்தகைய ஆட்கடத்தலுக்கு எதிரான இந்த முறை உரிய விளைவை ஏற்படுத்தியுள்ளதையும் காட்டுகிறது” என பாலியல் தொழிலாளிகளின் அகில இந்திய வலைப்பின்னலின் ஆலோசகரான ஸ்மரஜித் ஜானா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“ஆட்கட்த்தலுக்கு எதிரான இதர முயற்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தாலும் ஏற்படக் கூடிய விளைவுகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விளைவை இந்த குழுவின் தலையீடுகள் ஏற்படுத்த உதவியுள்ளன.”

நம்பிக்கையை உருவாக்குவது

ஒரு மருத்துவர், ஒரு ஆலோசகர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோரையும் உள்ளிட்டு 10 உறுப்பினர்கள் வரை கொண்ட இந்தக் குழுக்களின் வெற்றி தென்னிந்திய நகரமான மைசூருவிலும் எதிரொலிக்கிறது.

 ‘அவநம்பிக்கை, கேலி’ ஆகியவற்றுக்கு மத்தியிலும் 8,000 பெண்கள், ஆண்கள், இதர பாலினத்தவர் ஆகிய பாலியல் தொழிலாளிகளின் கூட்டமைப்பான அசோதயா சமிதி, இது போன்ற சுய ஒழுங்கமைப்புக் குழுக்களை இங்கு துவக்கியது.

“அவர்களே இத்தொழிலுக்காக ஆட்களைக் கடத்தி வருபவர்கள்தான் என்று குற்றம் சாட்டி, இந்த பாலியல் தொழிலாளிகளின் நோக்கத்தை பலரும் சந்தேகம் எழுப்பினர்” என அசோதயா சமிதியின் ஆலோசகரும் உதவி பேராசிரியருமான சுசேனா ரேஸா-பால் குறிப்பிட்டார்.

 “மைசூரு நகரத்தில் சிவப்பு விளக்குப் பகுதி என குறிப்பிட்ட இடம் எதுவும் வரையறை செய்யப்படவில்லை. எனவே இந்தக் குழுக்கள் இவ்வாறு ஆட்கடத்தலுக்கு இரையாகுவோரைக்  கண்டறிய தங்கள் விரிவான சமூக ரீதியான வலைப்பின்னலை பயன்படுத்தின.”

இவ்வாறு கடத்தி வரப்பட்ட  சிறுமிகளை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கே திருப்பி அனுப்பும்போது, பெற்றோர்களில் பலரும் அவர்களை திரும்ப ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலையில் தாங்கள் இப்போதும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“எங்களது உறுப்பினர்கள் மூலமாக நாங்கள் தொடர்ந்து இது பற்றி முயற்சி எடுத்து வருகிறோம்.” என்றார் கோஷ். “நாங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு சிறிய மாற்றத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்;ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->