விபச்சாரத்தை ஒழிப்பதற்கான உலகளாவிய மாநாட்டை இந்தியாவின் பாலியல் தொழிலாளிகளின் குழுக்கள் கண்டிக்கின்றன

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 31 January 2017 13:24 GMT

Hollywood actress Ashley Judd calls for the abolition of prostitution at a conference on the sexual exploitation of women and girls in New Delhi on Jan. 30, 2017. Nita Bhalla/Thomson Reuters Foundation

Image Caption and Rights Information

புது டெல்லி, ஜன. 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவில் உள்ள பாலியல் தொழிலாளிகள் விபச்சாரத்தை ஒழிப்பதற்கான உலகளாவிய மாநாட்டினை குறை கூறினர். பாலியல் தொழிலுக்கு முடிவு கட்டவேண்டும் என்று பிரச்சாரம் செய்பவர்கள்  ஒரு சில பெண்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்கவே பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதையும், வற்புறுத்தல், ஆட்கடத்தல் அல்லது கட்டாயத்தின் பேரில் அதில் ஈடுபடவில்லை என்பதையும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் குறை கூறினர்.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற தென் ஆப்ரிக்கா, கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னாள் பாலியல் தொழிலாளிகள் உள்ளிட்டோர் பாலியல் ரீதியான அடிமைத்தனம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு, வாடிக்கையாளர்கள், இடைத்தரகர்கள், ஆட்கடத்தல்காரர்கள் ஆகியோரைத் தண்டிப்பதன் மூலம் விபச்சாரத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தனர்.

எனினும் தானாகவே முன்வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்றும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்துப் பெண்களுமே பாதிக்கப்பட்டவர்களோ அல்லது பாலியல் ரீதியான அடிமைகளாக கடத்தப்பட்டவர்களோ அல்ல என்று இந்தியாவில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் குழுக்கள் கூறுகின்றன.

“சொந்த முடிவுகளை எடுக்கக் கூடிய மனிதர்களாக எங்களை அங்கீகரிக்காத எவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என்று இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் பாலியல் தொழிலாளிகளின் கூட்டமைப்பான வேஷ்ய அன்யாய் முக்தி பரிஷத் அமைப்பினைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான கிரண் தேஷ்முக் குறிப்பிட்டார்.

 “எந்தவித முகமையும் இல்லாமல் எங்களை பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவது பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான எங்களின் மனித உரிமையை மீறுவதாகும். எங்களை ‘அழிப்பதன்’ மூலம் அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதில்லை; வேலை செய்வதற்கான எங்கள் தேவையையும், மரியாதையுடன் வாழ்வதற்காக பணம் ஈட்டுவதையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.”

உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் விபச்சாரம் சட்டவிரோதமானதாக இருந்தபோதிலும், அது எல்லா இடங்களிலும் இருந்தே வருகிறது. ஃபவுண்டேஷன் ஸ்கெல்லெஸ் என்ற ஃப்ரெஞ்சு நாட்டு அறக்கட்டளையின் 2014ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றின்படி உலகம் முழுவதும் 4 கோடி  பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வறுமையின் காரணமாகவும், வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், சமூகத்தில் பரம்பரையாகவே ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும் நிலையில் இவர்களில் பெரும்பாலோர் இடைத்தரகர்களாலும், ஆட்கடத்தல்காரர்களாலும் கவர்ந்து வரப்பட்டு, ஏமாற்றப்பட்டு அல்லது  பாலியல் ரீதியான அடிமைத்தனத்தில் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றனர் என்று இதை ஒழிக்கவேண்டும் என்று கோருபவர்கள், குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய பாலியல் தொழில் மையங்களிலும், தெரு முனைகளிலும், மசாஜ் பார்லர்களிலும், ஆடை அவிழ்ப்பு க்ளப்களிலும் அல்லது தனியார் வீடுகளிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்திய பிறகு, இந்தப் பாலியல் தொழிலாளிகள் இதை விட்டு வெளியேறுவதென்பது மிகவும் கடினமாகும் என செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர்களில் பலரும் இடைத்தரகர்களின் உடல்ரீதியான கொடுமைகளுக்குப் பயந்தே விபச்சாரத் தொழிலில் தொடர்ந்து இருக்கின்றனர். எனினும் அவர்களது குடும்பங்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், வேறெங்கும் போக முடியாத நிலையில் இவர்களில் சிலர் விரும்பியே இந்தத் தொழிலில் தொடர்ந்து இருக்கின்றனர்.

 ‘நாங்கள் ஒன்றும் விற்பனைச் சரக்கல்ல’

இந்தியாவில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கான தேசிய வலைப்பின்னலைச் சேர்ந்த குழுக்கள், இவ்வாறு பாலியல் தொழிலை ஒழிக்க வேண்டும் என்று கோருபவர்கள், நெறிமுறை பற்றிப் பேசுபவர்களாக, மற்றவர்களின் நடத்தை குறித்து கருத்து சொல்பவர்களாகவே உள்ளனர் என்று குறிப்பிடுகின்றன. இதைச் சட்டபூர்வமாக மாற்றுவது  இத்தொழிலை ஒழுங்குபடுத்தும் என்பதோடு, பெண்கள், சிறுமிகள் மீதான சுரண்டல் எதுவும் இத்தொழிலில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“இவர்களின் நடத்தை பற்றிய கருத்து கூறுபவர்களின் வன்முறை என்பதே பாலியல் தொழிலாளிகளின் மீது சொல்லவொண்ணாத துயரத்திற்கு வழிவகுத்தது என்பதோடு சமூகத்தில் உள்ள முறையற்ற கும்பல்கள் பாலியல் தொழிலாளிகள் மீதான வன்முறையை நியாயப்படுத்தவும் ஊக்கமூட்டியது” என பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் 20 குழுக்கள், பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள், 2000க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகள் ஆகியோர் கையெழுத்திட்டிருந்த இக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும் இந்த மாநாட்டில் பேசிய பல பேச்சாளர்களும் பெருமளவிலான பாலியல் தொழிலாளிகள் சுரண்டப்படுகின்றனர் என்றே குறிப்பிட்டனர்.

“அப்படியென்றால், சில பெண்கள் தானாகவே முன்வந்து இந்தத் தொழிலில் ஈடுபடு இருக்கிறார்களா?” என்று ஸ்பேஸ் இண்டர்நேஷனல் என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டவருமான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராச்சேல் மொரான் கேள்வி எழுப்பினார்.

“இந்த உலகத்தில் 4 கோடி பெண்களும் சிறுமிகளும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் மிகச் சிறிய ஒரு பிரிவினர் தாங்கள் சொந்த விருப்பத்துடன் முழுமையாக இத்தொழிலில் ஈடுபடுகிறோம் என்று கூறினாலும் கூட, அது இத்தொழில் குறித்த பெரும்பான்மையோரின் அனுபவத்தை மாற்றி விடாது.”

இந்த மாநாட்டில் பங்கேற்று,  விபச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வலுவாகக் குரல் எழுப்பிய ஹாலிவுட் நடிகையான ஆஷ்லி ஜூத், சரக்குகளைப் போல பெண்களும் சிறுமிகளும் விலைக்கு வாங்கப்படுகின்றனர்; விற்கப்படுகின்றனர். உலகளாவிய பாலியல் வர்த்தகத்திற்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

“இதற்கான பொறுப்பையும், அவமானத்தையும், இதைச் செய்பவர்களின் மீது - அதாவது பெண்கள், சிறுமிகள் ஆகியோரின் உடல்கள் விலைக்கு வாங்கப்படக் கூடியவை என்று நினைப்பவர்கள், அத்து மீறி நடந்து கொள்பவர்கள், இதை நடத்துபவர்கள் ஆகியோரின் மீது தான் - போட வேண்டும்.” என்று ஜூத் குறிப்பிட்டார்.

“நாங்கள் ஒன்றும் விற்பனைச் சரக்கல்ல; நாங்களும் மனிதர்கள்தான். உடல்ரீதியான நம்பகத்தன்மையும், பாலியல் ரீதியான பெருமையும், உடல் ரீதியாக அனைத்து விதமான அத்துமீறல்களிலிருந்தும் விடுதலை பெற்று சுதந்திரமாக இருப்பதற்கான உரிமையும் கொண்டவர்களாக இருப்பதற்கு நாங்கள் உரிமை படைத்தவர்கள்.”

250 அறக்கட்டளைகள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்க வாதிகள், வழக்கறிஞர்கள் என 30 நாடுகளைச் சேர்ந்தவர்களை ஒன்று திரட்டிய, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் ரீதியான சுரண்டலை அகற்றுவது குறித்த, உலக அளவிலான இந்த மூன்று நாள் காங்கிரஸ் செவ்வாய்கிழமையன்று நிறைவு பெறுகிறது.

(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.